Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #5 – ஒரு புயலின் பூர்வ கதை

மறக்கப்பட்ட வரலாறு #5 – ஒரு புயலின் பூர்வ கதை

ஒரு புயலின் பூர்வ கதை

மத்திய டெல்லியின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகம். அதன் அருகில்தான் வடக்கு டெல்லி மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகமும் இருக்கிறது. 21 ஜனவரி 1988. கறுப்பு கோட் அணிந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருக்கிறார்கள். காவல்துறையின் பல்வேறு அராஜக நடவடிக்கைகளை எதிர்த்துக் கோஷமிட்டாலும், அவர்களுடைய கோபம் முழுவதும் கமிஷனர் மீதுதான் இருந்தது. முந்தைய நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில், வழக்கறிஞர்கள் பற்றி அவர் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தார். அதைக் கண்டித்துத்தான் அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எங்கும் பரபரப்பாக இருந்தது. அன்றைய தினத்தின் விசாரணை ஆரம்பிக்கவிருந்த நேரத்தில் அத்தனை வழக்கறிஞர்களும் நீதிமன்றங்களைப் புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் இருந்தார்கள். அவதூறாகப் பேசிய காவல்துறை ஆணையர் மன்னிப்புக் கேட்கவேண்டும்; அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!

எப்படியாவது கமிஷனர் அங்கிருந்து மாற்றப்பட வேண்டும் என்பது இரண்டு ஆண்டுகால எதிர்பார்ப்பு. ஹசாரி வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கும் அந்தத் தவிப்பு இருந்துவந்தது. அதற்குக் கமிஷனர் கொடுத்து வந்த குடைச்சல்தான் காரணம். அந்தக் கமிஷனர் கிரண்பேடி! இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி. எண்பதுகளில் இந்திய அளவில் மிகப் பிரபலமான காவல்துறை அதிகாரி.

சர்ச்சைக்கும் கிரண் பேடிக்கும் எப்போதும் சம்பந்தமுண்டு. எண்பதுகளில் டெல்லி அரசியல்வாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது கிரண் பேடியைப் போக்குவரத்துத்துறைக் கமிஷனராக நியமித்திருந்தார்கள். போக்குவரத்துத்துறை என்றாலும் தடாலடியாக இறங்கினார்.

ஓவர் ஸ்பீடு, நோ பார்க்கிங் விஷயங்களுக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்பாட் பைன் விதிக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தார். அனுமதியில்லாத இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்படியே கிரேன் வைத்துத் தூக்கிவிடும் வழக்கத்தையும் அவர்தான் ஆரம்பித்து வைத்தார். அவர் கிரண் பேடி அல்ல, கிரேன் பேடி என்றார்கள்.

பெரிய இடத்தில் பெரும் செல்வாக்குள்ள பிரபலங்களையும் அவர் விட்டு வைத்ததில்லை. இந்திரா காந்தியின் உதவியாளர் ஆர்.கே. தவான் முதல் அவரது யோகா குருவான தீரேந்திர பிரம்மச்சாரி வரை நிறைய பிரபலங்களுக்கு ஸ்பாட் பைன் விதித்திருக்கிறார். விளைவு? டெல்லியிலிருந்து கோவாவுக்கு டிரான்ஸ்பரில் அனுப்பி வைத்தார்கள். மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னரும் காத்திருப்புப் பட்டியலில் வைத்திருந்தார்கள்.

கிரண் பேடி, காவல்துறையினருக்கு மத்தியில் பெரும் செல்வாக்கோடு இருந்தார். அவர்களைப் பொறுத்தவரை அதிகாரத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நேர்மையான அதிகாரியாக, நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்த்தார்கள். ஐந்தாண்டுகள் கழித்து அவர் டெல்லிக்குத் திரும்பி வந்தபோது, ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

பதவியேற்றதும், காவல்துறையினரின் நலன்களில் அக்கறை கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தந்தார். ஒரே நாளில் 1600 பேருக்கு பதவி உயர்வு தரும் உத்தரவில் கையெழுத்திட்டார். டெல்லி மட்டுமல்ல இந்தியா முழுக்க காவல்துறையினர் அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கவும் தயாராக இருந்தார்கள்.

அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், வி.ஐ.பிக்கள் என்று பலரையும் முறைத்துக்கொண்ட கிரண் பேடி மீது, பகிரங்கமாக யாரும் குறையோ, புகாரோ சொல்ல முன்வந்ததில்லை. ஆனால், இம்முறை வழக்கறிஞர்கள் அவரது பரம விரோதியாக மாறிவிட்டார்கள். அவர் பதவியை விட்டு விலகியே ஆகவேண்டும் என்று எந்த எல்லைக்கும் சென்று போராட ஆரம்பித்தார்கள். அப்படி, என்னதான் பிரச்னை?

1988 ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் மணி பர்ஸ் காணாமல் போனது. கல்லூரி மாணவிகளின் கழிவறையில் யாரோ கரித்துண்டை வைத்து ஏதேதோ எழுதி வைத்திருந்தார்கள். நிர்வாணப் படங்களை வரைந்து, பாகம் குறித்து விளக்கமும் தந்திருந்தார்கள்.

ஒரு நாள் காலை கல்லூரி ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவிகளின் கழிவறையில் ஒருவர் வசமாக சிக்கிக் கொண்டார். விசாரணையின்போது மணி பர்ஸ் காணாமல் போவது தொடங்கி மாணவிகளின் ஆபாசப் படங்கள் வரைந்தது வரை அத்தனைக்கும் அவர்தான் காரணமென்று தெரிய வந்தது.

அவரைக் கைது செய்த கிரண் பேடி, பட்டப்பகலில் மாணவிகள் கூட்டத்தின் நடுவே கைவிலங்கிட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். வழக்கு விசாரணையின்போதுதான் அவரொரு வழக்கறிஞர் என்பதே தெரிய வந்தது. ராஜேஷ் அக்னிஹோத்ரி என்னும் அவர் திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞராக இருந்திருக்கிறார்.

விசாரணையின்போது வேறொரு பெயரைச் சொல்லியிருந்தார். அதனால் முதல் தகவல் அறிக்கை எழுதுவதில் ஏகப்பட்ட குழப்பம். அதையே நல்வாய்ப்பாகப் பயன்படுத்திய வழக்கறிஞர்களின் ஆதரவாளர்கள், காவல்துறையினர் தங்கள் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகக் கண்டித்தார்கள்.

மூன்று வாரங்களாக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் முட்டல் மோதல் தொடர்ந்தது. கிரண் பேடியின் அலுவலகத்தைச் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்கள். உள்ளிருந்து புயல்போல் வெளியே வந்த கிரண் பேடி, வழக்கறிஞர்கள்மீது தடியடிக்கு உத்தரவிட்டார். அடுத்து வந்த அரைமணி நேரத்தில் அந்த வளாகமே போர்க்களமானது.

24 வழக்கறிஞர்களின் மண்டை உடைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஏகப்பட்ட பேருக்குப் படுகாயம். செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களும் காவல்துறையினரின் தாக்குதலில் சிக்கிக் கொண்டார்கள்.

16 வழக்கறிஞர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. சம்பந்தப்பட்ட 16 பேரும் கடமையைச் செய்த காவல்துறையினரைத் தாக்கியதாகப் புகார் தரப்பட்டது. கை, கால்களில் கட்டோடு வந்த காவல்துறையினர் அவர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தார்கள். கூட்டத்தைக் கலைக்க லேசான தடியடிதான் நடத்தப்பட்டது. அங்கிருந்து கலையாமல் நின்றவர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது என்று சுவாரசியமான விளக்கவுரையும் தரப்பட்டது.

மூன்று வாரங்கள் கழித்து அதே நீதிமன்ற வளாகம். இம்முறை ஏராளமான கும்பல் உள்ளே அழைத்து வரப்பட்டார்கள். காவல்துறை அதிகாரிகளால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் இருந்து இறங்கினார்கள். எந்தவிதமான சோதனைகளும் இல்லாமல் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கறிஞர்களைக் கண்டித்து, கோஷமிட்டார்கள். கிரண் பேடியை வாழ்த்திக் கோஷமிட்டார்கள்.

வழக்கறிஞர்களுக்கு எதிராக காவல்துறையினரே இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து கொதிப்படைந்த வழக்கறிஞர்கள் மோதலில் இறங்க, தள்ளுமுள்ளு நடந்து இன்னும் சிலர் மண்டை உடைந்தது. மறுபடியும் அந்த இடம் ரண களமானது.

நூற்றுக்கணக்கான ஆட்களை திரட்டி, வழக்கறிஞர்களுக்கு எதிராக மோதலை உருவாக்கியதில் முக்கிய ஆசாமியாக ராஜேஷ் யாதவ் என்பவரை ஊடகங்கள் அடையாளம் காட்டின. பல்வேறு வாகனங்களில் வந்திறங்கிய ஆட்களின் கையில் ஹாக்கி மட்டை, இரும்பு கட்டை போன்றவை இருந்தன. கிரண் பேடிக்கு ஆதரவாகக் கோஷமிட்டவர்கள் கூடவே பிரதமர் ராஜிவ் காந்திக்கு ஆதரவாகவும் கோஷமிட்டார்கள். ராஜேஷ் யாதவ் காங்கிரஸ் பிரமுகர் என்பதுதான் அதற்குக் காரணம்.

வழக்கறிஞர்களின் சேம்பரில் உள்ளே புகுந்த கும்பல், அங்கிருந்த மேஜை, நாற்காலியை உடைத்து வெளியே எறிந்தது. வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் முன்பக்கக் கண்ணாடி உடைக்கப்பட்டது. அனைத்தையும் காவல்துறையினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னாளில் ராஜேஷ் யாதவைக் கைது செய்தார்கள். அவருக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

அடுத்து வந்த சில மாதங்களுக்கும் இதே பிரச்னை தொடர்ந்தது. வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் இறங்கினார்கள். டெல்லியில் மட்டுமல்ல உ.பி, பீகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் போராட்டம் நடந்தது. காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே இன்னும் பெரிய விரிசல் ஏற்பட்டது. இரு தரப்பிடமிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் நீதிமன்றப் பணிகளும் முடங்கிப் போயின. நீதிமன்றங்கள், காவல்துறையினர் மீதான அதிருப்தியை வெளிக்காட்ட ஆரம்பித்தன.

காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் உள்ள தொடர் மோதலையும் அதில் கிரண் பேடியின் பங்கு பற்றியும் விசாரிப்பதற்காக இரு நபர் கொண்ட வாதா கமிட்டி அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த விசாரணையின் முடிவில் ஸ்டீபன் கல்லூரியில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், கிரண் பேடி அலுவலகத்தின் வாசலில் நடந்த லத்தி சார்ஜ் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்திற்கு ஆட்கள் கொண்டு வரப்பட்டது பற்றியும் அதில் காவல்துறை அதிகாரிகளுக்கு இருந்த தொடர்பு பற்றியும் விசாரிக்கப்பட்டது.

அடிக்கு அடி, உதைக்கு உதை என்று சினிமா பாணியில் இறங்கிய காவல்துறையினரை ஊடகங்கள் கண்டித்தாலும், காவல்துறையினர் மத்தியில் உற்சாகம் தெரிந்தது. இதே பாணியை நாடு முழுவதும் தொடர்ந்திட காவல்துறையினர் ஆர்வம் காட்டினார்கள். பாத்ரூமில் வழுக்கி விழுவதெல்லாம் ரசிக்கப்பட்டது. ரவுடிகளை ஒழிக்க, ரவுடிகளாகவே மாறிய காவல்துறை அதிகாரிகளை கதாநாயகனாக்கி தமிழ், தெலுங்கு படங்கள் நிறைய வர ஆரம்பித்தன. வன்முறையைக் கையிலெடுத்து, ரவுடிகளை ஒழிக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு சினிமா ஹீரோவுக்கு இணையான மரியாதை கிடைத்தது.

இரு நபர் கமிட்டியின் இடைக்காலத் தீர்ப்பின்படி கிரண் பேடி, வடக்கு டெல்லி காவல்துறையிலிருந்து மாற்றப்பட்டார். அவரைப் போதைப் பொருள் தடுப்புத்துறையின் உதவி இயக்குநராக நியமித்தார்கள். அவரோடு பணிபுரிந்தவர்கள் பலர் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டனர். இட மாற்றம் மட்டும் போதாது, அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று போராட்டங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி டி.பி. வாதா தலைமையிலான ஒரு நபர் கமிட்டி, 65 பக்கம் எழுதப்பட்ட விசாரணை அறிக்கையை அரசுத் தரப்பிடம் சமர்ப்பித்து காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டது.

கைவிலங்கிடுவது என்பது உள்துறை அமைச்சகத்தின் வழிமுறைகளோடு நடத்தப்படுவது என்று சொன்னாலும்கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்துவிடும் வாய்ப்பு இருந்தாலொழிய கைவிலங்கு இடுவது தவறு என்று கமிட்டியின் அறிக்கை குறிப்பிட்டது. தடியடியின்போது பத்திரிக்கையாளர்களின் காமிரா உடைக்கப்பட்டது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட வகையில் காவல்துறையினர் மீது கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அரசு, நீதிமன்றம் இரண்டுமே காவல்துறை மற்றும் வழக்குறிஞர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. இந்நிலையில் இருதரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு அரசு நிர்வாகத்தையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாதிக்கிறது என்று இரு நபர் கமிட்டி தன்னுடைய ஆதங்கத்தையும் பதிவு செய்தது.

கிரண்பேடி, மிசோரமுக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போனார். அங்கே பல ஆண்டுகளாக இருந்து வந்த போதைப் பொருள் நெட்வொர்க்கை ஒழித்துவிட்டு, திரும்பவும் டெல்லிக்கு வந்தார். திகார் சிறையின் ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார்.

திகார் சிறைக்கு வந்த கிரண் பேடி, புதியவராகத் தெரிந்தார். சிறைக் கைதிகளிடம் பரிவுடன் நடந்து கொண்டார். சிறைத்துறையில் அவர் செய்த சீர்திருத்தங்களால் உலகப்புகழ் பெற்றார். திகார் சிறைச்சாலை, கிரண் பேடியின் முகத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது.

0

பகிர:
nv-author-image

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *