Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #6 – போபால் விஷவாயு விபரீதம்

மறக்கப்பட்ட வரலாறு #6 – போபால் விஷவாயு விபரீதம்

டிசம்பர் 3, 1984. போபால் அரசு மருத்துவமனை. அந்த அதிகாலை நேரத்தில் மருத்துவர்களும் உதவியாளர்களும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்து மூச்சுப்பேச்சின்றி ஆட்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். சிலருக்குக் கண்ணெரிச்சல், சிலருக்கு வாந்தி, மயக்கம்.

ஸ்ட்ரெச்சரில் கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிலர். கைகளில் ஏந்தியபடி தூக்கிவரப்பட்டவர்கள் பலர். அத்தனை பேரும் மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியாகிக் கொண்டிருந்தன. ஆம்புலன்ஸ் வண்டிகளின் சத்தம் விடாமல் கேட்டுக்கொண்டேயிருந்தது போபால் நகர மக்களைப் பீதிக்குள்ளாக்கியது.

மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டு நிரம்பி வழிந்தது. படுக்கைகள் கிடைக்காமல் நிறைய நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டார்கள். கைகளில் டிரிப்ஸ், கண்களைச் சுற்றிலும் ஈரத்துணியோடு நிறைய பேர் இருந்தார்கள். அதே வார்டின் வாசலில்தான் ரவிசங்கர் பாண்டேவும் சுருண்டுப் படுத்திருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் அவரது ஒரே மகன் படுத்திருக்கிறான்.

பாண்டேவைச் சந்திக்க அவரது உறவினர்கள் வந்திருந்தார்கள். நெருங்கி வந்து தரையில் அமர்ந்தபடி, கைகளைப் பற்றிக்கொண்டு விஷயத்தைச் சொன்னதும், அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. ஜெயப்பிரகாஷ் நகர் வீட்டில் அவரது மனைவியின் உடல் இறுதிச் சடங்கிற்காகக் காத்திருக்கிறது. இறுதிக் காரியங்களை யார் செய்வது, எப்படிச் செய்வது என்பது குறித்து பாண்டேவிடம் கேட்டார்கள்.

‘உங்களால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்யுங்கள். அவள் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கும் அதிர்ஷ்டம் கூட எனக்கில்லை. எங்களுடைய ஒரே மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். இதோ பக்கத்தில்தான் படுத்திருக்கிறான். அவன் எப்படி இருக்கிறான் என்றுகூட என்னால் பார்க்க முடியவில்லை. கண்களைத் திறக்கவே முடியவில்லை. அவனது கைகளைப் பிடித்தபடியே படுத்திருக்கிறேன். அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.’

ரவிசங்கர் பாண்டேவின் குடும்பத்திற்கு நடந்த கொடூரமான சம்பவம், வேறு யாருக்கும் கனவில்கூட நடந்திடக்கூடாது. போபாலின் தெற்குப் பகுதியில் உள்ள ஜெயப்பிரகாஷ் நகரைச் சேர்ந்தவரான பாண்டே, ஒரு சாதாரண கூலித்தொழிலாளி. யூனியன் கார்பைடு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மூன்று வாரப் போராட்டங்களுக்குப் பின்னர் அவரது மகனைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால், பாண்டேவின் கண்பார்வை முற்றிலுமாகப் பறிபோய்விட்டது. ஜெயப்பிரகாஷ் நகர் வீட்டுத் திண்ணையில் புலம்பியபடி அடுத்து வந்த பத்தாண்டுகளுக்குத் தனிமையில் உட்கார்ந்திருந்தார். இப்போது உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

35 ஆண்டுகளுக்கு முந்தைய தினத்தின் நள்ளிரவு நேரத்தில் நடந்த ஒரு சம்பவம், பாண்டேவின் குடும்பங்களைப் போல் பல குடும்பங்களை நிர்மூலமாக்கியது. இன்றும் பல தலைமுறைகளைக் கடந்தும் தொடர்ந்து நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. ஜெயப்பிரகாஷ் நகரில் இருமல் சத்தம் கேட்காத இரவுகள் இல்லை.

போபால் விஷவாயு விபரீதம்

1984ல் நடைபெற்ற போபால் விஷவாயு விபத்தை இந்தியா மட்டுமல்ல உலகாலும் மறக்கமுடியாது. அப்படியொரு மோசமான தொழிற்சாலை விபத்தை அதற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் உலகம் சந்தித்ததில்லை. ஒரு சிலரின் கவனக்குறைவால் ஏறக்குறைய 4000 பேர் பலியானார்கள். அத்தனை பேரும் அப்பாவிகள். எதற்காக இறந்து போகிறோம் என்பது தெரியாமலே, தூக்கத்திலேயே அவர்களின் உயிர் பிரிந்தது.

அடுத்து வந்த பத்தாண்டுகளுக்குப் போபால் நகரத்தின் தெற்குப் பகுதி இருண்டு கிடந்தது. கருக்கலைப்பு 530 சதவிகிதம் உயர்ந்தது. மருந்தகங்களில் மக்கள் கூட்டம் வரிசையில் நின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் கடைசிவரை இருமிக்கொண்டிருந்தார்கள். மனிதர்கள் மட்டுமல்ல ஆடு, மாடு நாய், பன்றி, ஏன் மரங்கள் கூடப் பட்டுப்போயின.

அரை மணி நேரத்தில் நடந்த விபத்தின் தாக்கம், அரை நூற்றாண்டுகளுக்குத் தொடரும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் நுரையீரல் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்தது.

யூனியன் கார்பைடு நிறுவனத்திற்குச் சொந்தமான போபால் யூனிட், ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தது. அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான யூனியன் கார்பைடு, உலகின் முதல் அணுகுண்டை தயாரித்த நிறுவனம். உலகம் முழுவதும் யூனியன் கார்பைடு தடம் பதிக்காத துறைகள் இல்லை. பெட்ரோ கெமிக்கல்ஸ், பிளாஸ்டிக், இயற்கை எரிவாயு, கார்பன் உற்பத்தி எனப் பல துறைகளில் முன்னணி நிறுவனமாக இருந்தது.

இந்தியாவில் எமர்ஜென்ஸி நெருக்கடி இருந்த காலத்தில்தான் யூனியன் கார்பைடு இந்தியாவுக்கு வந்தது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும் இந்தியாவில் துணை அமைப்பாக யூனியன் கார்பைடு நிறுவனம் போபால் நகரத்தில் ஆரம்பிக்க அனுமதி தரப்பட்டது.

இந்தியாவில் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலைக்கான அனுமதி கிடைத்ததும், தன்னுடைய முதல் யூனிட்டை போபால் நகரத்தில் ஆரம்பித்தது. அனுமதி கிடைத்த நாள் முதல் செயல்படத் துவங்கியது வரை ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியிருந்தது.

1984, டிசம்பர் 3. நள்ளிரவு ஒன்றரை மணி. விஷவாயு கசிய ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அலாரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. தொழிற்சாலையில் இரவுநேரப் பணியில் இருந்தவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு பாதுகாப்பான உடைகளை மாற்றிக்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

எரியக்கூடிய மீத்தைல் ஐசோசயனைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறியது. இது ஐசோசயனைடு குழுமத்தில் மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. கொதிகலன்களின் வழியாக வாயு வெளியேறும்போது தண்ணீர் பீய்ச்சியடிப்பது வழக்கம். வாஷிங் சோடா வழியாக வாயு செல்வதுபோல் வடிவமைத்திருப்பார்கள். அதில் தண்ணீர் பீய்ச்சடிக்கப்படும்போது வாயு வலுவிழந்துவிடும்.

அப்படியே வலுவிழக்காமல் தப்பிக்கும் நச்சு வாயு, வெளியேறும்போது தீ விபத்தை ஏற்படுத்தும். தீ ஜுவாலைகள் தொடர்ந்து எரியும். பெரும் சத்தத்துடன் கொதிகலன்கள் வெடிக்கும். ஆனால், போபால் விஷயத்தில் இவை எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

வெளியேறிய வாயு, வெண்ணிற மேகம் போல் தொழிற்சாலையின் வான் பகுதியில் அடர்த்தியாக உறைந்து நின்றது. எப்போதும் வடக்குப் பகுதியை நோக்கி வீசும் காற்று, அன்று ஏனோ தெற்குப் பக்கமாய் வீசவே வெண்ணிற மேகம் மெல்ல நகர ஆரம்பித்தது. வடக்கு நோக்கி நகர்ந்திருந்தால் கூட காடுகள் நிறைந்த பகுதியைச் சென்று சேர்ந்திருக்கும். பெரிய அளவில் சேதங்கள் இருந்திருக்காது.

வெண்ணிற மேகமோ, தெற்குப் பகுதியை நோக்கி மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர ஆரம்பித்தது. போபாலின் தெற்குப் பகுதியானது குடியிருப்புகள் நிறைந்த பகுதி. தொழிற்சாலையிலிருந்து 8 கிமீ தூரம் வரை உள்ள குடியிருப்புகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

மூச்சுவிட சிரமப்பட்டு, கண் விழித்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கண்ணெரிச்சல் இருந்தது. சைக்கிள், ஸ்கூட்டர் வைத்திருந்தவர்களால் அதில் ஏறித் தப்பிக்க முடிந்தது. ஓடக்கூட முடியாத நிலையில் இருந்த வயதானவர்கள், குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

இறந்து போனவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள். அதிலும் 80 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள். இவர்கள் பிழைப்பு தேடி, போபால் நகரத்திற்கு வந்தவர்கள். பலபேர் நேரடியாகவோ மறைமுகமாகவோ யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சார்ந்திருந்தார்கள்.

அமெரிக்காவில் இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஆண்டர்ஸன், இந்தியாவுக்கு வந்தார். நடந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்பதாக பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்தார். இரண்டாயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இருபதாயிரம் பேர் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்றார். இழப்பை எப்படிக் கணக்கிட்டார்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம்!

அரசுத் தரப்பில் பாதிப்புகள் பற்றிய செய்திகளை முடிந்தளவுக்கு முடக்கினார்கள். இந்தியாவில் நடந்த விபத்தின் காரணமாக, உலகளவில் இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புத்தன்மை பற்றிய விவாதங்கள் எழும். அது உலகளாவிய பல நிறுவனங்களுக்கு நெருக்கடியைத் தரும். தொழில் தொடங்குவதற்கு இந்தியா ஏற்ற இடமல்ல என்னும் முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்றெல்லாம் நினைத்திருக்கக்கூடும்.

ஆண்டர்ஸன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரைத் தகுந்த வசதிகளோடு வீட்டுக்காவலில் சில நாட்கள் வைத்துவிட்டு, பத்திரமாக விமானம் ஏற்றி, அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

போபால் விபத்து சம்பந்தப்பட்ட வழக்கை இந்தியாவில் நடத்துவதா அல்லது அமெரிக்காவிலா என்கிற சர்ச்சை எழுந்தது. இந்தியாவிலேயே வழக்கை நடத்தமுடியும் என்று யூனியன் கார்பைடு சார்பில் ஆஜரான நானி பல்கிவாலாவின் வாதம் ஜெயித்தது. இந்திய தண்டனைச் சட்டம் 304 பிரிவின் கீழ் ஒரு சாதாரண விபத்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

ஒருவேளை அமெரிக்க நீதிமன்றத்திற்குப் போயிருந்தால், யூனியன் கார்பைடு என்னும் நிறுவனமே திவாலாகியிருக்கும். லட்சக்கணக்கான டாலர் இழப்பீட்டை மக்களுக்குத் தர வேண்டி இருந்திருக்கும். அனைத்து பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, 500,000 பேர் நஷ்ட ஈடு பெறத் தகுதியுடையவர்கள் என நிறுவனம் பின்னாளில் அறிவித்தது. 1989 பிப்ரவரி 24ஆம் தேதி, யூனியன் கார்பைடு நிறுவனம் 470 மில்லியன் டாலர்களை இந்திய அரசிடம் ஒப்படைத்தது.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் யூனிட்டில் விஷவாயுக் கசிவு என்பது புதிதல்ல. ஏற்கெனவே இரண்டு முறை நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்கெனவே பல நஷ்டங்களைச் சந்தித்து வந்தது. யூனிட்டில் பணியாற்றியவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. விபத்து நடந்தபோது நான்கில் ஒரு பங்கு தொழிலாளர்கள்தான் பணியில் இருந்தார்கள்.

1982ல் விஷவாயுக் கசிவு ஏற்பட்டு சிறு விபத்து நடந்தபோது, மாநிலம் முழுவதும் பேசப்பட்டது. அமெரிக்காவிலிருந்து யூனியன் கார்பைடு நிறுவனம் ஒரு கமிட்டியை இந்தியாவுக்கு அனுப்பி விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், போபால் யூனிட் சரிவர நிர்வகிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

இதையெல்லாம் குறிப்பிட்டு, மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அப்போது முதல்வராக இருந்த அர்ஜுன் சிங், 1982ல் நடந்த விபத்தைத் தவிர்க்க முடியாத விபத்து என்று நியாயப்படுத்தினார். சரியாக இல்லாவிட்டால் நகர்த்தி வைப்பதற்கு இதுவொன்றும் செங்கல் அல்ல. அரசு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது என்றெல்லாம் விளக்கம் தந்தார்.

அர்ஜுன் சிங், காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவராக இருந்தவர். மத்தியப் பிரதேச முதல்வராக இரண்டு முறை பதவியில் இருந்திருக்கிறார். அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னாளில் ராஜிவ் காந்தி மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் தலைமையை ஏற்பதில் நரசிம்ம ராவுக்குக் கடுமையான போட்டியாளராக இருந்தார். சரண்சிங் போல் என்றாவது ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்கிற கனவு அவருக்கு இருந்தது.

1984ல் போபால் விஷவாயு விபத்தின்போது அர்ஜுன் சிங் மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தார். கேர்வா டேம் என்னும் பகுதியில் அரண்மனை போல் ஒரு பெரிய பங்களா கட்டியிருந்தார். விஷ வாயு விபத்து பற்றிக் கேள்விப்பட்டதும் தன்னுடைய படை, பரிவாரங்களுடன் போபால் நகரத்தை விட்டுத் தப்பித்து வந்தவர், அடுத்து வந்த மூன்று நாட்களும் தன்னுடைய பங்களாவில் தங்கி, நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

0

போபால்: அழிவின் அரசியல் புத்தகம்

போபால்: அழிவின் அரசியல், மருதன், கிழக்கு பதிப்பகம்
புத்தகம் வாங்க: Amazon | FlipKart | Dial for Books

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *