Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #7 – முத்தையாவும் மதுவிலக்கும்

மறக்கப்பட்ட வரலாறு #7 – முத்தையாவும் மதுவிலக்கும்

முத்தையாவும் மதுவிலக்கும்

ஆந்திராவில் 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்திருந்தது. பூரண மதுவிலக்கு கொண்டுவருவேன் என்றார் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி. மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் இறங்கியதால் முதல் முறையாகப் பூரண மதுவிலக்கு ஆந்திராவில் பேசுபொருளானது.

தமிழ்நாட்டைப் போல் ஆந்திராவில் மதுவிலக்கு என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். கோடிக்கணக்கான வருவாயை அரசுக்குக் கொட்டிக் கொடுக்கும் மதுவை எளிதாகத் தடை செய்துவிட முடியாது. என்.டி.ஆர் தொடங்கி சந்திரபாபு நாயுடுவரை எத்தனையோ தலைவர்கள் முயற்சிகள் எடுத்தும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாத சூழல்தான் இருந்தது.

ஆட்சிக்கு வந்ததும் ஒய்.எஸ்.ஆர். கையெழுத்திடப்போகும் முதல் உத்தரவு, பூரண மதுவிலக்கு என்றார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் கழித்து ஒய்.எஸ்.ஆர் ஒரு செயல் திட்ட வரைவை மட்டும் அறிவித்தார். மாநில அரசுக்குச் சொந்தமான ஆந்திரப் பிரதேச டிரிங்க்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மூலமாக மதுக்கடைகள் நடத்தப்படும் என்பதுதான் ஹைலைட்.

நம்மூர் டாஸ்மாக் ஸ்டைல்தான். வேறொன்றும் புதுமையில்லை. 2003இல் தமிழ்நாட்டில் நடந்த விஷயம்தான் 2019இல் தாமதமாக ஆந்திராவில் நடந்தது. இத்தகைய நடைமுறை நிறைய மாநிலங்களில் இருந்து வந்ததுதான். காந்தி பிறந்த மண் என்பதால் குஜராத்தில் மட்டும் பூரண மதுவிலக்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று ஆவேசமாகப் பேசி, ஆட்சிக்கு வந்ததும் ஆக்ரோஷம் தணிந்து, படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்போம் என்று அமைதியாகிவிடுவதுதான் ஆந்திராவிலும் நடந்தது. பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை. ஆனால், கட்டுப்பாடுகளுடன் கூடிய விற்பனைக்கு டாஸ்மாக் மாடல்தான் சிறந்தது என்கிற முடிவுக்கு நகர்ந்துவிட்டார்கள்.

டாஸ்மாக் என்னும் பெயரில் தமிழக அரசே மது விற்பனையை நடத்துவதோடு அதன் மூலமாக கணிசமான வருவாயையும் பெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட தமிழகத்தில் முதலில் திறக்கப்பட்டவை, டாஸ்மாக் கடைகள்தாம். இன்றைய நிலையில் டாஸ்மாக்கில் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருமானம் என்பது 50 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது.

பூரண மதுவிலக்கு அந்தக் காலத்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கையாக இருந்திருக்கிறது. ஆனால், இன்றைய நிலையில் உலகளவில் தோற்றுப்போன விஷயமாகவே நினைக்கிறார்கள். பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாதது மட்டுமல்ல அதன் மூலம் அரசுக்கு வரும் வருமானத்தைத் தவிர்க்க முடியாது என்பதால் பெரும்பாலான மாநிலங்கள் மதுவிலக்குப் பற்றி யோசிப்பதேயில்லை.

பூரண மதுவிலக்குக் கொண்டு வருவதில் தமிழகத்தைப் போல் முயற்சியெடுத்த மாநிலம் இந்தியாவில் வேறு எதுவுமில்லை என்று சொல்லலாம். மதுவிலக்கு என்கிற லட்சியத்தை நோக்கி தமிழகம் முதல் அடியை எடுத்து வைத்து, மிகச் சரியாக 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. பல்வேறு அரசியல் சூழலிலும் மதுவிலக்கு என்பது முக்கியமான அரசியல் பிரச்னையாகவே இருந்து வந்திருக்கிறது. 2015 வரை மதுவிலக்குப் பற்றிப் பேச்சுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அதற்குப் பின்னர் நீண்ட நெடிய அமைதி.

தமிழகத்தில் மதுவிலக்குக் குறித்த விவாதங்கள் ஏனோ 1937க்கு பிந்தைய காலகட்டத்தை மட்டுமே மையப்படுத்துகின்றன. ராஜாஜி காலம் தொடங்கி, ஜெயலலிதா காலத்தில் வந்த டாஸ்மாக் வரையிலான செய்திகள் மட்டுமே இதுவரை பேசுபொருளாகியிருக்கின்றன. பிரிட்டிஷ் இந்தியாவிலேயே மதுவிலக்குக்கு எதிரான பிரசாரங்கள் ஆரம்பித்துவிட்டன. மகாத்மா காந்தியின் பிரசாரம் ஒரு முக்கியமான காரணம். இதிலும் சென்னைதான் முன்னிலையில் இருந்தது.

சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் இதை முன்னெடுத்ததுதான் ஆச்சர்யம். மதுவிலக்கு மட்டுமல்ல, இடஒதுக்கீடு போன்ற தமிழ்நாட்டு அரசியலின் முகத்தை மாற்றியமைத்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றையெல்லாம் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சியோ, நீதிக்கட்சியோ அல்ல. அதுவொரு சுயேச்சை அரசு!

1926இல் நீதிக்கட்சி தோற்று, காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவான சுயாட்சிக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், ஆட்சியமைக்கத் தயாராக இல்லை. சுயேச்சையாகப் போட்டியிட்ட சுப்பராயன் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தந்தார்கள். சைமன் கமிஷன் சென்னைக்கு வந்தபோது சுப்பராயன் பெரியளவில் வரவேற்பு கொடுத்ததால் சுயாட்சிக் கட்சி தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டது. ஆனால், சுப்பராயனுக்கு நீதிக்கட்சி கைகொடுத்தது. நீதிக்கட்சி சார்பில் எஸ். முத்தையா முதலியார் என்பவர் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

முத்தையா, கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர். எந்தக் கட்சியையும் சேராதவர். ஆனால், நீதிக்கட்சியின் உதவியோடு அமைச்சரானதும் நாட்டிலேயே முதல்முறையாக இடஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்தார். சென்னை மாகாணத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் 12 இல் 5 பங்கு பிராமணர் அல்லாதவர்களுக்கு உறுதி செய்யப்பட்டது. அதுதான் இடஒதுக்கீட்டு வரலாற்றில் வெற்றிகரமான முதல்படி!

இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதில் அமைச்சர் முத்தையாவின் துணிச்சலான முடிவைப் பாராட்டி முத்துலெட்சுமி அம்மையார் சட்டமன்றத்தில் பேசினார். அவர் இல்லையென்றால் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகியிருக்கும். அவரொரு வகுப்புரிமைச் சிற்பி என்று முத்தையாவைக் குறிப்பிட்டார் பெரியார்.

இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டத்தில் இறங்கினார், முத்தையா. பூரண மதுவிலக்கு பற்றிப் பிரசாரம் செய்தாலும் அதை அமல்படுத்துவதில் சுயாட்சிக் கட்சியோ, நீதிக்கட்சியோ ஆர்வம் காட்டியதில்லை. சுயேச்சை அரசை நடத்திக் கொண்டிருந்த சுப்பராயன் அரசில் கல்வி மற்றும் சுங்கவரித்துறை அமைச்சராக இருந்த முத்தையாவுக்கு அதில் ஆர்வமிருந்தது. பூரண மதுவிலக்கிற்கு மக்களைத் தயார்படுத்துவதற்கு முன்னர் அது குறித்துப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு ஒரு திட்டம் தயாரானது. இதற்காக 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மாகாணம் முழுவதும் பிரசாரம் செய்ய மதுவிலக்குக் கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டன. வெறும் பிரசாரங்களின் மூலம் மக்களைக் கவர முடியாது என்பதை உணர்ந்து கொண்ட முத்தையா, மதுவின் தீமை குறித்து விளக்கி நாடகங்கள் நடத்த முடிவு செய்தார்.

1928–1930 காலகட்டங்களில் தஞ்சை மாவட்டம் முழுவதும் ஏராளமான மதுவிலக்குப் பிரசார நாடகங்கள் அரங்கேறின. ‘குடிகாரக் கிட்டு’ என்னும் நாடகம், அப்போது பிரபலமாக இருந்தது. நாடக உலகில் பிரபலமாக இருந்தவர்களும் முத்தையாவின் முயற்சிக்கு ஆதரவு தந்தார்கள். திருவாரூரில் குடிகாரக் கிட்டு நாடகம் அரங்கேறியபோது, அன்றைய நாடக உலகின் பிதாமகனான பம்மல் சம்பந்த முதலியார் தலைமை வகித்தார்.

மதுவிலக்கு பிரசாரக் கமிட்டியின் செயல்பாடுகளுக்கு மாகாணம் முழுவதும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. நீதிக்கட்சியினரோடு காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களும் கொள்கை அடிப்படையில் ஆதரித்தார்கள். ஆனால், பிரசாரக் கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் சில சர்ச்சைகள் எழுந்தன. அரசுப் பணிக்கு இணையாகக் கருதப்பட்ட மதுவிலக்கு பிரசாரகர் பணிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள நடைமுறை குறித்து நீதிக்கட்சி கேள்வி எழுப்பியது.

ஆரம்பத்தில் பெரியாரால் பாராட்டப்பட்ட முத்தையா, பின்னாளில் அவரது கடுமையான விமரிசனத்துக்கு உள்ளானார். மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டியில் பிராமணர்களின் தலையீடு அதிகமாகிவிட்டதாகவும், அமைச்சர் முத்தையா அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் பெரியார் குற்றம் சாட்டினார். பெரியாரின் கருத்தில் உண்மை இருந்தது. பிரசாரக் கமிட்டியில் பிரசாரகராக இருந்தவர்களில் ஏறக்குறைய 20 சதவிகிதம் பேர் பிராமணர்களாக இருந்தார்கள்.

இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்த முத்தையாவால் அவருடைய துறையின் கீழ் செயல்பட்ட மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டிகளில் அதை முழுமையாக அமலுக்குக் கொண்டுவர முடியாமல் போய்விட்டது. ஏராளமான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களுக்கு நடுவே சுப்பராயனின் தலைமையிலான அரசு தள்ளாடியது. ஒரு பக்கம் ராஜாஜியும் இன்னொரு பக்கம் நீதிக்கட்சியும் சுப்பராயன் அரசுக்கு நெருக்கடி தந்தார்கள். இறுதியில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

1930 இறுதியில் நடந்த தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி வென்று, முனுசாமி நாயுடு முதல்வரானார். சுப்பராயன், எதிர்க்கட்சித் தலைவரானார். முத்தையாவால் மீண்டும் அமைச்சராக முடியவில்லை. பிராமண ஆதரவாளராக முத்திரை குத்தப்பட்டார். மாகாணம் முழுவதுமிருந்த மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டிகளும் உடனடியாகக் கலைக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டிருந்தாலும், தென்னிந்தியாவின் மதுவிலக்கு வரலாற்றில் முத்தையாவுக்கு நிச்சயம் இடம் தந்தாக வேண்டும்.

முத்தையா, நீதிக்கட்சியில் சேர்ந்தார். பெரியாருடன் நெருங்கிப் பழகி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பூரண மதுவிலக்கு குறித்து நீதிக்கட்சியும் பேசவில்லை; காங்கிரஸ் கட்சியும் பேசவில்லை. பின்னாளில் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சேலம் மாவட்டத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ராஜாஜியைப் பெரியார் பாராட்டினார். இருவரோடு சேர்ந்து மக்களும் முத்தையாவை மறந்துபோனார்கள்!

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

1 thought on “மறக்கப்பட்ட வரலாறு #7 – முத்தையாவும் மதுவிலக்கும்”

  1. “பிரிட்டிஷ் இந்தியாவிலேயே மதுவிலக்குக்கு எதிரான பிரசாரங்கள் ஆரம்பித்துவிட்டன. மகாத்மா காந்தியின் பிரசாரம் ஒரு முக்கியமான காரணம்” –

    “மதுவிற்கு எதிரான பிரசாரங்கள்” ?

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *