1983இல் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் இலங்கையில் தீவிரமடைந்தபோது ஏராளமான தமிழர்கள் அங்கிருந்து தப்பி அகதிகளாகத் தமிழகம் வந்து சேர்ந்தார்கள். ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்த மண்டபம் முகாமிற்கு வந்து சேர்ந்த அகதிகளின் கையில் பணமில்லை.
எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்கிற நிலையில் கையில் இருந்த கடிகாரம், கழுத்தில் இருந்த சங்கிலி என அனைத்தையும் கழட்டித் தந்துவிட்டு, படகில் ஏறி வந்தார்கள். அப்படித்தான் பிரேமானந்தாவும் அவரது பக்தர்களும் தமிழகம் வந்து சேர்ந்தார்கள்.
திருச்சியில் பாத்திமா நகரில் ஓர் ஆசிரமத்தை ஆரம்பித்தவர், அதில் ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளைப் படிக்க வைத்தார். 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆசிரமம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகள் தங்கியிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை உள்நாட்டுப் போரிலிருந்து உயிர் தப்பி, தமிழகத்திற்கு அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள் அல்லது அவ்வாறு வந்து சேர்ந்தவர்களின் குழந்தைகளாக இருந்தார்கள். 80களின் இறுதியில் பிரேமானந்தாவின் ஆசிரமம், இலங்கையிலிருந்து வரும் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக இருந்திருக்கிறது.
1997. ஆசிரமத்திலேயே வளர்ந்த சுரேஷ் குமாரி, லதா ஆகிய பெண் குழந்தைகள் பிரேமானந்தாவின் ஆசிரமத்தில் தவறான விஷயங்கள் நடப்பதாக ஒரு பத்திரிக்கைக்குப் பேட்டி தந்திருந்தார்கள். சமகாலத்தில் யூடியூப் வீடியோக்களுக்கான பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யப்படும் அத்தனை தந்திரங்களும் 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்தவைதான்.
ஆசிரமம், சாமியார், பெண் குழந்தைகள்…. தமிழ்ப் பத்திரிக்கையுலகம் ஒரு சென்சேஷனல் ஸ்டோரிக்காகக் காத்திருந்தது. பிரமோனந்தாவின் கறுப்பு உருவம், அலட்சியச் சிரிப்பு, காற்றில் பறக்கும் கூந்தல், இலங்கைத் தமிழர் தொடர்பு… புலனாய்வுப் பத்திரிக்கைகள் கதை எழுதுவதற்குப் போதுமானவையாக இருந்தன.
குழந்தை இல்லாதவர்களுக்கு பிரேமானந்தா புத்திர பாக்கியம் தருகிறார்; வாயிலிருந்து லிங்கத்தைக் கக்கியபடி அருள்வாக்கு சொல்கிறார் என்றெல்லாம் செய்திகள் தொடர்ந்து வெளியாகி, பத்திரிக்கை சர்க்குலேஷனைப் பல மடங்கு உயர்த்திக் கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய செய்திகளைவிட பிரேமானந்தா பற்றிய செய்திகளே பத்திரிக்கைகளை ஆக்ரமித்திருந்தன.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பிரேமானந்தா பிரச்னையில் தலையிட்டதும் மாநில அளவில் பெரிய கவனம் கிடைத்தது. ஆசிரமத்திற்கு எதிரான போராட்டம், சிபிசிஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு எழுதப்பட்ட கடிதங்கள், தந்தி என மாதர் சங்கங்களின் போராட்டம் வீரியத்துடன் தொடர்ந்து நடந்தது.
அதன் தொடர்ச்சியாக தினமும் ஆசிரமத்தில் காவல்துறையினரின் விசாரணை நடந்தது. உள்ளூர் காவல்துறையினர் தவிர சிறப்புப் புலனாய்வுக் குழுக்களும் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன. ஆசிரமத்தில் தங்கியிருந்த பிற குழந்தைகளுக்குக் காவல் துறையினரைக் கண்டாலே பயமும், பதட்டமும் ஏற்பட்டது.
பிரேமானந்தாவின் ஆசிரமத்தில் வளர்ந்த சுரேஷ்குமாரி என்பவர், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரேமானந்தா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகப் புகார் தெரிவித்திருப்பதாகக் காவல்துறையின் முதல் கட்ட விசாரணை அறிக்கை தெரிவித்தது. அதை அடியோடு மறுத்த அவரது தாய், பிரேமானந்தாவின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பதற்காகச் சிலர் தன்னுடைய மகளைத் துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
ஆசிரமத்தில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் விசாரணை என்னும் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். பிரேமானந்தா மீது புகார் தர மறுத்தவர்கள் ஆசிரமத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஆசிரம நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. பிரேமானந்தா மீது புகார் தந்தவர்கள் மகளிர் நல்வாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.
ஆசிரமத்தில் வசித்து வந்த இரண்டு பெண் குழந்தைகளைக் கற்பழித்ததாகவும், ஒருவரைக் கொலை செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பமானது. யாரும் பிரேமானந்தாமீது நேரடியாகப் புகார் செய்யவில்லை. ஊடகங்களில் வந்த செய்திகளை வைத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பிரேமானந்தாவும் அவருக்கு நெருக்கமாக இருந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். புதுக்கோட்டை செஷன்ஸ் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. விசாரணையின் முடிவில் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை உறுதி செய்த பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கேயும் பிரேமானந்தாவுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தது.
பிரேமானந்தா மீது பாலியல் புகார் தந்த பெண்கள் பின்னாளில் பிறழ் சாட்சியானார்கள். ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தவர்கள், காவல்துறையின் சித்ரவதையின் பேரில் வேறு வழியின்றி புகார் தந்ததாகக் குறிப்பிட்டார்கள். சிறையிலிருந்த பிரேமானந்தா, சம்பந்தப்பட்ட பெண்கள் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து தருமாறு ஆசிரம நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு விசாரணை ஒருதலைப்பட்சமாக நடந்தது என்கிற விமர்சனத்தை சிலர் முன்வைத்தார்கள். ஆனாலும், பெரும்பாலான ஊடகங்கள் பிரேமானந்தாவுக்கு எதிரான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன. பிரேமானந்தாவுக்கு எடுக்கப்பட்ட டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. அதில் தவறு இருப்பதாக அவரது சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் வாதம் இருந்தது.
‘இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு உயிர் தப்பி வந்ததும் முதலில் சென்னையில் ஆறுமாத காலம் இருந்தேன். இலங்கைத் தமிழர் ஒருவரது முயற்சியால் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன். அவர் மூலமாகத்தான் எனக்கு திருச்சியில் இரண்டு ஏக்கர் நிலம் கிடைத்தது. அதில்தான் ஆசிரமம் அமைத்து இலங்கைப் போரில் பெற்றோர்களை இழந்து தவித்த ஆதரவற்றக் குழந்தைகளைப் பாதுகாத்து வந்தேன்’ என்றார், பிரேமானந்தா.
90களில் நிலைமை மாறியிருந்தது. ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த அகதிகளை தமிழ்நாட்டு மக்கள் சந்தேகக்கண் கொண்டு பார்த்தார்கள். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களை மக்கள் ஒதுக்கி வைத்திருந்தார்கள். பிரேமானந்தா ஆசிரமத்தில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளன. அவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்று பத்திரிக்கைச் செய்திகள் மக்களைப் பீதியூட்டின. பிரேமானந்தாவின் காதல் லீலைகள், வெளிநாடுகளுக்குப் பெண்களை விற்கிறார் என்று ஊடகங்களில் உலா வந்த செய்திகள் உள்ளூர் மக்களைக் கொதிப்படையச் செய்தன.
பிரேமானந்தாவுடன் அவருக்கு உதவியாக இருந்த டாக்டர் சந்திரா தேவி என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். பெண் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமையை மறைத்து அவர்களுக்குக் கருக்கலைப்பு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. பின்னாளில் ஆதாரமில்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிரேமானந்தா மீது பாலியல் குற்றம் தவிர, வெளிநாடுகளில் அனுமதியின்றி சொத்துக் குவித்தது, கொலைக்குற்றம் என ஏகப்பட்டக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. அவருடன் இருந்த இரண்டு பேர்களுக்கும் தண்டனை கிடைத்தது.
பிரேமானந்தா சிறையில் இருந்தாலும், அவரது ஆசிரமம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. உண்மையில் முன்பைவிடவும் பெரிதாக வளர்ச்சி பெற்றது. கூடுதல் கவனமும் கிடைத்தது. இலங்கை, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் என உலகம் முழுவதும் அவரது ஆசிரமத்தின் கிளைகள் செயல்பட்டன. அதை முன்னெடுத்து நடத்தியவர் அதே டாக்டர் சந்திரா தேவிதான்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பிரேமானந்தா தொடர்ந்து மறுத்து வந்தார். அவரது ஆசிரமம் இருந்த இடத்தை விலைக்குக் கேட்ட அரசியல் புள்ளிகள், அங்கே புதிதாக மருத்துவக் கல்லூரி கட்ட விரும்பினார்களாம். மறுத்துவிட்ட காரணத்தால் அவர் மீது பாலியல் புகார் தரப்பட்டது என்கிறார்கள். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்கள். ஆனால், எனக்கு ஜாமீன் கூட மறுக்கப்பட்டது என்றார்.
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களை, இந்துக்களாக மதமாற்றம் செய்ததால் ஏராளமான எதிரிகள் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்ப்ளண்ட் கிறிஸ்ட் என்பவரோடு தன்னுடைய நெருங்கிய வட்டாரத்தில் இருந்த அம்பிகானந்தா என்பவரும் சேர்ந்து தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டார். ‘இது எனக்கெதிரான சதி மட்டுமல்ல, இந்து ஆன்மீகவாதிகளுக்கு எதிரான சதி’ என்றார். ஆனால், வெகுஜன ஊடகத்தில் பிரேமானந்தாவின் குரல் எடுபடவில்லை.
17 ஆண்டுகள் சிறையில் இருந்த பிரேமானந்தா, உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர் தான் ஒரிரு மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கமுடியும் என்று தொடர்ந்து சொல்லி வந்தார். உடல்நிலை மோசமான நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்தால்தான் உயிர் பிழைப்பார் என்கிற நிலை உருவானது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோதே அவரது நினைவுகள் தப்பிவிட்டன.
முன்னதாக சிகிச்சைக்காக தன்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டாம் என்று மறுத்திருக்கிறார். சென்ற முறை ஏதோவொரு ஊசியைச் செலுத்தினார்கள். அதற்குப் பின்னர்தான் என்னுடைய உடல்நிலை மோசமாகிவிட்டது என்று சிறைத்துறையினரிடம் அழுதிருக்கிறார்.
தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு இறுதிக்காலங்களில் ஏராளமான கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதில் தன்னுடைய நிலைக்கு வெளிநாட்டு சதிதான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
‘என் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட காலகட்டத்தில் நடந்த வழக்கின் சூழல்களையும், அதன் பின்னணியில் செயல்பட்ட அரசியல் பெரும்புள்ளிகளின் தலையீடுகளையும், அதன் தொடர்ச்சியாக நடந்தேறிய சம்பவங்களும் தெரியவந்தால், வியப்பின் எல்லைக்கே போய்விடுவீர்கள்! நடக்காத கற்பழிப்புகள், இயற்கை மரணத்தையே கொலையாக மாற்றி, அவற்றை நீதிமன்றத்தில் நிரூபிக்கும் அளவுக்கு என் மீது வெறுப்போடு இருந்திருக்கிறார்கள்’ என்கிறது அவரது இன்னொரு கடிதம்.
பிரேமானந்தா இறந்தபின்பு அவரது உடல் ஒரு வார காலம் வரை திருச்சியில் அவரது ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது ஆசிரமத்தில் அவர் நட்டு வைத்திருந்த செடிகள், பெரும் மரங்களாக வளர்ந்திருந்தன. அப்படியொரு மரங்களுக்கு நடுவே அவரது உடல் பத்மாசன நிலையில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு, ‘பூமியெங்கும் நீதிப்பசி… புறப்பட்டுவிட்டான் ராஜரிஷி’ என்கிற வரிகளை எழுதிக் கொடுத்த பிரேமானந்தா, ‘இதுதான் நாம் தொடங்கவிருக்கும் பத்திரிகையின் துணைத் தலைப்பு. பத்திரிக்கையின் பேர் என்ன வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னைச் சுற்றிலும் நடந்த அரசியல் சதிகளைப் பற்றி விரிவாக எழுதப்போகிறேன்’ என்றார்.
பிரேமானந்தா அம்பலப்படுத்த நினைத்த விஷயங்கள் என்னவென்று தெரியாமலே போய்விட்டது.
0