Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #9 – ஒரு மோதல் கடிதம்

மறக்கப்பட்ட வரலாறு #9 – ஒரு மோதல் கடிதம்

Zail Singh - Rajiv

‘ஆளுநர் மாளிகையா, அரசியல் மாளிகையா?’

‘ஆளுநர் அரசியல் பேசலாமா?’

இதெல்லாம் தமிழக ஊடக உலகில் சென்ற மாதம் நடைபெற்ற குழாயடிச் சண்டைகளுக்கான தலைப்புகள். ஓர் அரசுப் பிரதிநிதி, எப்படித் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதியாக நடந்து கொள்ளலாம் என்பதில் தொடங்கி ஆட்டுக்கு ஏன் தாடி என்னும் வழக்கமான வம்படி வரை ஏகப்பட்ட விவாதங்கள், சர்ச்சைகள், விமர்சனங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வருக்கும் இடையே நடைபெறும் முட்டல், மோதல், அதிகாரப் போட்டிகள் புதிதல்ல. தமிழகம் பலமுறை சந்தித்த நிகழ்வுதான். பிற மாநிலங்களிலும் நடைபெற்று வந்தவைதான். சுதந்திர இந்தியாவில் ஆளுநர் – முதல்வர் அதிகாரப் போட்டியைச் சந்திக்காத மாநிலங்களே இல்லையென்று சொல்லிவிடலாம்.

ஆனால், குடியரசுத்தலைவர் – பிரதமர் மோதல் கேள்விப்பட்டதுண்டா? அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆனால், ஒரு முறை நடந்தே விட்டது. மிகச் சரியாக 35 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, நாட்டின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையெல்லாம் எழுப்பிய சம்பவத்தை விரிவாகப் பார்ப்போம்.

சுதந்திர இந்தியாவின் 40 ஆண்டுகால கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேசநலன் பற்றிப் பிரதமர் ராஜிவ் காந்தி உற்சாகமாகப் பேசியிருந்தார். எதிர்க்கட்சிகள் கூட அமைதியாகத்தான் இருந்தன. ஆனால், குடியரசுத் தலைவரோ பொறுமையின் எல்லைக்குப் போய்விட்டார்.

அதுவரை சுதந்திர இந்தியா கண்டிராத ஒரு விசித்திரத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. பிரதமர் ராஜிவ் காந்தியின் செயல்பாடுகளை விமர்சித்து, குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில் சிங் கடிதம் எழுதியிருந்தார். அது லீக்காகிவிட்டது!

ஜெயில் சிங்கிற்கும் ராஜிவ் காந்திக்கும் இடையேயான தனிப்பட்ட மோதல் போக்கு பல மாதங்களாகவே இருந்து வந்தது. ஜெயில் சிங், இந்திரா காந்தி காலத்து ஆசாமி. இந்திராவால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். அகாலி தளத்தின் எழுச்சிக்குப் பின்னர் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கை நழுவிக் கொண்டிருந்த நேரத்தில் இந்திரா காந்திக்கு ஆபத்பாந்தவனாக இருந்தவர் ஜெயில் சிங்.

அரசியலில் மட்டுமல்ல அரசு நிர்வாகத்திலும் ஜெயில் சிங் கெட்டிக்காரர். 30 ஆண்டுகளுக்கும் மேலான அரசு நிர்வாக அனுபவத்தைப் பெற்றிருந்தார். அரசியல் மட்டுமல்ல நிர்வாகத்திலும் கெட்டிக்காரராக இருந்த ஜெயில் சிங், இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்தார்.

இந்திராவால் டெல்லி அரசியலுக்கு வந்து சேர்ந்தார். பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர், பத்தாண்டுகளில் இந்தியாவின் உள்துறை அமைச்சராக பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். குறுகிய காலத்தில் அவரது வளர்ச்சிக்கு இந்திரா காந்திதான் காரணமாக இருந்தார். ஜெயில் சிங், அவரது விசுவாசமிக்க தோழராக இருந்தார்.

1982ல் ஜெயில் சிங் குடியரசுத் தலைவரானார். அது அவரே எதிர்பாராதது. குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை முன்னிறுத்தலாம் என்கிற குழப்பத்தில் இந்திரா காந்தி இருந்தார். அவரது கையில் ஐந்து முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் பற்றிய கோப்புகள் இருந்தன. ஆனால், அவருக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை.

எமர்ஜென்ஸி காலத்தில் நிகழ்ந்ததுபோல ஓர் அதிகாரப் போட்டியோ குழப்பமோ வந்து ஆட்சியும், கட்சியும் தன்னுடைய கைகளை மீறிச் சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆகவே, ஐந்து காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களையும் அடித்துவிட்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஜெயில் சிங்கின் பெயரை எழுதி வைத்தார்.

ஆங்கிலம் தெரியாத ஜெயில் சிங்கிற்குத் தயக்கம் இருந்தது. வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும்போது என்ன செய்வது என்றெல்லாம் யோசித்தார். பாஸ் இந்திரா காந்தியிடமிருந்து உத்தரவு வந்தபின்னர் அதைத் தட்டிக் கழிக்க முடியாது. ஆகவே, வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார். முதல் முறையாக ஒரு சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர் இந்தியாவின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திரா காந்தி உயிரோடு இருக்கும்வரை ஜெயில் சிங்கின் காலம் பொற்காலமாகத்தான் இருந்தது. பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததும் ஜெயில் சிங் தளர்ந்து போனார். சீக்கியர்களின் மனதில் இருந்த தீரா காயத்தை ஆற்றிவிடுவதற்காக அவரும் முடிந்தவரை முயன்றார். இறுதிவரை இந்திரா காந்திக்குத் துணையாக நின்றார். அவருக்குக் கிடைத்தவையெல்லாம் அவமானங்கள் மட்டுமே. எந்தவொரு சீக்கியருக்கும் கிடைக்காத உயர் பதவியில் இருந்தாலும் அவர் சார்ந்த சீக்கிய சமூகத்தினரால் வெறுத்து, ஒதுக்கப்பட்டார்.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் டெல்லியில் நடந்த கலவரங்களில் சீக்கியர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். பலர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்கள். அதே டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் எதையும் தடுக்கமுடியாத பரிதாப நிலையில் ஜெயில் சிங் சூழ்நிலைக் கைதியாக இருந்தார். இந்திரா காந்தியின் சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்த வந்தபோது, அவரது கார் மீது செருப்பு வீசப்பட்டது.

ஜெயில் சிங், தீவிரமான காங்கிரஸ் கட்சி செயற்பாட்டாளர். இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதி. ஆனாலும் ராஜிவ் காந்தி காலத்தில் மேலிடமும், கட்சித் தொண்டர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினார்கள். அவரை சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள். தன்னுடைய சொந்த மாநிலமான பஞ்சாப் வாழ் சீக்கியர்களின் நம்பிக்கையை இழந்திருந்த ஜெயில் சிங், அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டிருந்தார்.

ஜெயில் சிங்கிற்கும் ராஜிவ் காந்திக்குமான உறவு, மோசமான கட்டத்தை அடைந்தது. அரசு நடைமுறைகளில் கூட ஜெயில் சிங்கை ராஜிவ் காந்தி தலைமையிலான ஆட்சியாளர்கள் கவனமாகத் தவிர்த்தார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்புகள்கூட நிகழவில்லை. பொதுவெளியில் புன்னகை தவழ, போட்டோவுக்கு போஸ் தருவதோடு நிறுத்திக் கொண்டார்கள். ஜெயில் சிங்குடன் சேர்ந்து நடக்க நேர்ந்தால் கூட நாலடி தள்ளியே நடந்தார் ராஜிவ்.

இருவருக்குமிடையேயான மோதல் என்பது தனிப்பட்ட காரணங்கள் என்பதையெல்லாம் தாண்டி அரசியல் பிரச்னையாகவும், குறிப்பாக இனவாதம் தொடர்பான பிரச்னையாகவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான விஷயமாகவும் பார்க்கப்பட்டது. 1984 இறுதியில் அதிகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ராஜிவ் காந்தி, கட்சியிலும் ஆட்சியிலும் இந்திரா காந்தி ஆதரவாளர்களை ஓரங்கட்டி வைத்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவரைத் தொடர்பு கொண்டு நாட்டு நிலவரங்களை விவரிக்க வேண்டியது மரபு. நேரு தொடங்கி, இந்திரா காந்தி காலம் வரை தொடர்ந்து கொண்டிருந்தது. ஏனோ, ராஜிவ் காந்தி பிரதமரானதும் அதைத் தொடரவில்லை அல்லது முக்கியத்துவம் தரத் தயாராக இல்லை.

சீக்கியர்களுக்கெதிரான விஷயங்கள், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்னை, தொடரும் சீக்கிய தீவிரவாதத் தாக்குதல் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ஜெயில் சிங்கிடம் பேசுவதற்கு ராஜிவ் தயாராக இல்லை என்று டெல்லி வட்டாரம் தொடர்ந்து செய்திகளைக் கசிய விட்டுக்கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் ஜெயில் சிங், ராஜிவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்திய அரசியலில் அதுவொரு பெரிய சர்ச்சையையும், மரபுகளை பேணிக்காப்பது குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியது. இருவரும் நாட்டில் தலைநகரத்தில்தான் இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் மாளிகை எந்நேரமும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள முடியும். பிரதமருக்குக் கடிதம் எழுத வேண்டிய அவசியமேயில்லை. குடியரசுத் தலைவர் தன்னுடைய ஆலோசனையை, அதிருப்தியை தொலைபேசியிலோ நேரடியாகவோ பிரதமரிடம் தெரிவிக்கலாம்.

குடியரசுத் தலைவரின் ஆலோசனை, கருத்துகளை பிரதமர் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவருக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமிருக்கிறது. குடியரசுத் தலைவரும் கடிதம் எழுதியிருக்க வேண்டியதில்லை, தவிர்த்திருக்கலாம். ஜனாதிபதி மாளிகை மூலமாக யாராவது பிரதிதியை அனுப்பி வைத்திருக்கலாம் என்றெல்லாம் விவாதம் எழுந்தது.

குடியரசுத் தலைவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் லீக் செய்யப்பட்டது. கடிதத்தின் சில பகுதிகள் 1987 மார்ச் மாதம் 13ம் தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் இடம் பெற்றன.

தேசநலன் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜிவ் பேசியதில் இருந்த முரண்களை கடிதத்தில் ஜெயில் சிங் சுட்டிக்காட்டியிருந்தார். வெளிநாட்டுப் பிரநிதிகளுடன் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், வெளிப்படையான தன்மை, பரஸ்பர புரிந்துணர்வு உள்ளிட்ட விஷயங்களில் பின்பற்றப்படவேண்டிய மரபுகள் எதுவும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் குறை கூறியிருந்தார்.

பிரதமர் வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன்னரும், வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின்னரும் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பயண விபரங்களைத் தெரிவிக்க வேண்டியது மரபு. ஆனால், நீங்கள் அதைச் செய்ததில்லை. அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டு பின்னர் திரும்பும் வழியில் மாஸ்கோ சென்று பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறீர்கள். உலகத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் இந்தியா திரும்பி வந்த பின்னர் கூட எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பெங்களூரில் நடந்த சார்க் மாநாட்டில் பிரதமர் என்ன பேசினார் என்பதும் எனக்கு விளக்கப்படவில்லை. தெற்காசியாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்தோ, அதில் இந்திய வெளியுறத்துறையின் நிலைப்பாடு பற்றியோ யாரும் என்னிடம் தெரிவித்ததில்லை. உள்நாட்டில் நடைபெறும் முக்கியமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் பற்றிக் கூட பிரதமர் என்னிடம் விவாதித்ததில்லை.

அசாம், பஞ்சாப், மிசோரம் போன்ற மாநிலங்களில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு நிலவரங்கள் குறித்து பல முறை நினைவூட்டியும் விளக்கம் வந்ததில்லை. ஜம்மு காஷ்மீர் சென்றுவிட்டுத் திரும்ப வந்ததும், பிரதமரை நேரில் வந்து சந்திக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதற்கும் பதிலில்லை.

நேபாளம் போய்விட்டுத் திரும்பி வந்தபோதும் கிரீஸ், போலந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு திரும்ப வந்தபோதும் பிரதமர் என்னிடம் பேசியதில்லை. ஆனாலும் என்னுடைய வெளிநாட்டு விஜயம் குறித்தும் சந்திப்புகள் குறித்தும் பல்வேறு குறிப்புகளைப் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறேன்.

குடியரசுத் தலைவருக்கு அவசியம் அனுப்ப வேண்டிய அறிக்கைகள்கூட வந்து சேர்ந்ததில்லை. பல்வேறு விசாரணைக் கமிஷன்களின் அறிக்கைகள் பிரதமரால் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், அது குறித்து எந்தவொரு விளக்கமும் எனக்குக் கிடைத்ததில்லை.

உள்துறை அமைச்சர் வந்து என்னைச் சந்தித்துவிட்டுச் சென்றார். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் அதிகார வரம்புகள் குறித்து சில கேள்விகளைக் கேட்டேன். எழுத்துப் பூர்வமான விளக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், இதுவரை எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.

குடியரசுத் தலைவர் மாளிகை, எதிர்க்கட்சிகளால் அரசியல் மாளிகையாக்கப்படுகிறது என்று தவறாக பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். பிரதமரின் செயல்பாடுகளைக் குறை கூற வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனால், குடியரசுத் தலைவருக்கும் பிரதருக்கும் இடையயான உறவு சுமூகமாக இருக்கவேண்டும். வீண் வதந்திகளுக்கு இடம் தந்துவிடக்கூடாது என்பதற்காகவே இதை எழுத வேண்டியிருக்கிறது.

பரஸ்பர புரிந்துணர்வு, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே இரு தரப்பிலும் நம்பிக்கை ஏற்படும். தேச நலன் கருதி இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கடிதத்தை முடித்திருந்தார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கியெழுந்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். குடியரசுத் தலைவர் மாளிகையை மத்திய அரசின் உளவுத்துறையினர் ஒட்டுக்கேட்பதாக வந்த செய்திகள் அவரை கோபப்படுத்தியிருக்கலாம். பிரதமரின் முதன்மைத் தனிச்செயலராக இருந்த பி.சி. அலெக்ஸாண்டரின் செயல்பாடுகளில் ஜெயில் சிங் அதிருப்தி கொண்டிருந்தார்.

ராஜிவ் காந்தி தரப்பும் ஜெயில் சிங் மீது கோபத்தில் இருந்தது. பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட இந்திரா காந்தி ஆதரவாளர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜெயில் சிங் சந்தித்ததை யாரும் ரசிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் ராஜிவ் காந்திக்கு எதிராக ஒரு கோஷ்டி உருவாகியிருந்தது. அதிருப்தி கோஷ்டியின் தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்தார். 29 எம்.பிக்கள் அதிருப்தி காங்கிரஸ் கோஷ்டியில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. பிரதமராக இருந்த ராஜிவ் காந்திக்குக் கோபம் வராவிட்டால்தான் ஆச்சர்யப்பட வேண்டும்.

இந்திரா காந்தியோ ஆறு குடியரசுத் தலைவர்களோடு பணியாற்ற வேண்டியிருந்தது. அவர்களில் நிறைய பேர் முரண்பட்டு நின்றார்கள். ஆனால், பொதுவெளிக்கு வந்ததில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து தன்னுடைய ஆதரவாளரான வி.வி. கிரியை நிறுத்தினார். அன்று சஞ்சீவ ரெட்டி தோற்கடிக்கப்பட்டாலும் பின்னர் வந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் சஞ்சீவ ரெட்டியே குடியரசுத் தலைவராக வந்தபோது, இந்திராவுக்கு சங்கடமாகத்தான் இருந்தது.

அரசியலமைப்புச் சட்டம் 78வது விதிகளின்படி, பிரதமர் குடியரசுத் தலைவருக்கு விளக்கம் தரவேண்டும். ஆனால், ராஜிவ் காந்தி அதற்குத் தயாராக இல்லை. ஜெயில் சிங்கோடு சமரசத்திற்கு அவர் கடைசி வரை தயாராக இல்லை. அது தேவையில்லை என்று நினைத்தார்.

ஜெயில் சிங்கின் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவடைய மூன்று மாதமே இருந்தது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் டெல்லியில் நடைபெற்ற கலவரங்கள் பற்றிய ரங்கநாத் மிஷ்ராவின் கமிஷன் அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அது பற்றிய விவரங்கள் தன்னிடம் பகிர்ந்து கொள்ளப்படும் என்று ஜெயில் சிங் நினைத்தார்.

கமிஷனின் அறிக்கையை முன்வைத்து, தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால் மட்டுமே தன்னுடைய மன உளைச்சல் தீரும் என்கிற நிலையில் இருந்தார். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், சீக்கிய மக்களின் நன்மதிப்பைத் திரும்பப் பெற்று அரசியலிலிருந்து அமைதியாக ஒதுங்கிவிடலாம் என்று நினைத்தார். அவரது கணக்கு, தப்புக் கணக்காகவே முடிந்தது.

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *