Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #10 – காட் ஒப்பந்தம்

மறக்கப்பட்ட வரலாறு #10 – காட் ஒப்பந்தம்

பிளாஸ்டிக்கில் அச்சிடப்பட்ட இந்திய தேசியக்கொடியின் உருவத்தின் பின்பக்கத்தில் மேட் இன் சைனா என்று அச்சிட முடியுமா?

முடியும்!

அதெப்படி தேசியக்கொடியில் சீனாவின் பெயரை அச்சிடலாம்? தடை செய்யச் சொல்லி உத்தரவிடமுடியுமா?

முடியாது!

இந்தியாவில் கிடைக்கும் காபியே நமக்குப் போதுமானது. எதற்காக இந்தோனேஷியா, பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்? தடை செய்துவிடலாமா?

முடியாது! அவையெல்லாம் நம்மைவிட ஆறு மடங்கு காபி உற்பத்தி செய்யும் நாடுகள். அவர்களது காபித்தூள் உலகளாவிய பிராண்ட். இந்தியாவிலும் விற்பார்கள். தடை செய்ய முடியாது. உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வாங்க வேண்டாம்!

அந்த நாட்டில் பணியாற்றும் நம்மூர் மக்கள் தாக்கப்படுகிறார்கள். ஆகவே, சம்பந்தப்பட்ட நாட்டுடன் எந்தவித ஒட்டும் உறவும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று சட்டமியற்ற வேண்டும். அங்கிருந்து எதையும் இறக்குமதி செய்யக்கூடாது; இங்கிருந்து எதையும் ஏற்றுமதி செய்யக்கூடாது என்று மத்திய அரசை நிர்பந்தம் செய்ய முடியுமா?

முடியும். ஆனால், நடக்காது!

கள்ளக்கடத்தல், தங்க பிஸ்கெட், அகதிகள், போர்க் கைதிகள், பண்டமாற்று முறைகள், எல்லையோரப் பிரச்னைகள்… இவையெல்லாம் 90களுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்குத் திரைப்படங்கள் வழியாகத்தான் பரிச்சயம் இருக்கும். அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள், மோதல்கள், உறவு நிலை, போர்ச்சூழல் பற்றியெல்லாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை.

இணையத்தின் அறிமுகம் உலகைச் சுருக்கிவிட்ட பின்பு, இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. இன்று உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எதை வேண்டுமானாலும் தருவிக்க முடியும். 90களுக்கு முன்னர் இதெல்லாம் சாத்தியமில்லை. காலம் மாறிவிட்டது. காலத்திற்கேற்பத் தேவைகளும் மாறியிருக்கின்றன. ஒரு காலத்தில் மிளகு தனித்தனி மணிகளாக எண்ணப்பட்டு, விற்கப்பட்டது என்பதையே இன்று யாரும் நம்பமாட்டார்கள்.

90களுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு இதன் பின்னணி தெரிய வாய்ப்பில்லை. ஆனால், 60களில் பிறந்து 80களில் வாழ்ந்தவர்களுக்கு தாராளமயமாக்கல் தந்த வரங்களை, அதன்மூலம் கிடைத்த பல்வேறு மாற்றங்களை நன்றாகவே உணர முடியும். எந்தவொரு மாற்றத்திற்கும் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். பொருளாதார ரீதியான மாற்றங்களை எதிர்கொள்ள ஒரு தொலைநோக்குப் பார்வையும், கூடவே ஆட்சி, அரசியல் பலமும், மக்கள் ஆதரவும் தேவை.

நரசிம்மராவுக்கு அதெல்லாம் இருந்ததாக உறுதியாகச் சொல்லிவிட முடியாது. அவரது தலைமையிலான அரசில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையை இந்தியா தயக்கத்துடன்தான் எதிர்கொண்டது. இடதுசாரிகளிடமிருந்து தொடர்ந்து கடும் எதிர்ப்பு வந்தது. பொருளாதார மாற்றங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் வலதுசாரிகளும் எதிர்த்தார்கள்.

1994, ஏப்ரல் 15 இந்தியாவின் கறுப்பு நாளாக தொழிலாளர் நல அமைப்புகளால் அனுசரிக்கப்பட்டது. அதே தினத்தில் வட ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டின் தலைநகரான மாரகேஷில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் காட் ஒப்பந்தம் (GATT) கையெழுத்திடப்பட்டது. 115 நாடுகளைச் சேர்ந்த அரசுப் பிரநிதிகள் அங்கே குழுமியிருந்தார்கள்.

இந்தியாவின் சார்பில் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார். பத்தாண்டு காலப் பயணம் அது. ராஜிவ் காந்தி தலைமையிலான ஆட்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புள்ளி, முழு சித்திரமானது. தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணத்தில் இருப்பதாக அவர் புளாங்கிதம் அடைந்தார். அதே நேரத்தில் அவரது சொந்த மாநிலமான கல்கத்தாவில் இடது சாரி அமைப்புகள் பிரணாப் முகர்ஜியின் கொடும்பாவியைக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள்.

இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்தில் தாராளமயமாக்கல் கொள்கைகளை எதிர்த்து அடையாளப் போராட்டங்கள் நடைபெற்று வந்த நேரம் அது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் காட் ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டங்கள் இருக்கத்தான் செய்தன. இடதுசாரிகளின் கோட்டையான மேற்கு வங்கத்தில் உச்சத்தில் இருந்தது. இடதுசாரிகளால் நாடெங்கிலும் உள்ள தொழிலாளர் அமைப்புகளை வெற்றிகரமாக ஒருங்கிணைக்க முடிந்தது.

காட் ஒப்பந்தத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டக்களமாக டெல்லி அமைந்தது. பேரணி, பொதுக்கூட்டம் என்று அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தேறின. பேரணிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே மக்கள் கூட்டம் டெல்லியை முற்றுகையிட்டது. சமீபத்திய விவசாயிகளின் போராட்டத்தைப் போல் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் டெல்லியை நோக்கி வர ஆரம்பித்திருந்தார்கள்.

காட் ஒப்பந்தத்திற்கு எதிராக அனைத்து விதமான போராட்ட வடிவங்களும் தொழிலாளர் நல அமைப்புகளால் மேற்கோள்ளப்பட்டன. களப்போராட்டம், உண்ணாவிரதம், பேரணி, பொதுக்கூட்டம், சட்டப் போராட்டம், மறியல் என அத்தனைப் போராட்டங்களையும் நரசிம்மராவ் அரசு எதிர்கொண்டது. ஆனால், தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

புதிய பொருளாதாரக் கொள்கைளை திரும்பப் பெறுவதில்லை என்பதில் மூன்றாண்டுகளும் முழு மூச்சுடன் இருந்தார்கள். குறைந்தபட்சம் சற்றுத் தாமதத்தோடு படிப்படியாக அமல்படுத்தலாமே என்கிற கோரிக்கைக்கும் நரசிம்மராவ் ஒப்புக்கொள்ளவில்லை.

முதலில் ஜனதா தளத்தின் ஷரத் யாதவ் தலைமையிலான எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் இறங்கினார்கள். பின்னர் காங்கிரஸ் தவிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டன. அடுத்து வந்த இரண்டு வாரங்களும் தலைநகர் டெல்லி விதவிதமான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

இடது சாரிகளின் மெகா பேரணியில் இரண்டரை லட்சம் மக்கள் பங்கேற்றார்கள். மறுநாள் பாஜகவும் தன்னுடைய பங்கிற்குத் தனியாக ஒரு பேரணியை நடத்தியது. அதற்கும் மக்கள் கூட்டம் கூடியது. இவையெல்லாம் நரசிம்மராவ் அரசுக்கு நெருக்கடியாக அமையும் என்று எதிர்பார்த்தார்கள்.

போராட்டங்களை அடக்கி, ஒடுக்க ஏனோ நரசிம்ம ராவ் அரசு நினைக்கவில்லை. சர்வதேச ஊடகங்களில் செய்தியாகவே இருக்கட்டும் என்கிற ரீதியில் இயங்கினார்கள். எந்தவொரு பேச்சுவார்த்தையோ அல்லது அறிவிப்புகளோ அரசிடமிருந்து வெளிவரவில்லை.

ராஜிவ் காட்டிய வழியாகவே காட் ஒப்பந்தத்தை நரசிம்மராவ் முன் வைத்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் ஒப்புதல்களை ராஜிவ் காந்தியின் பெயரை முன்னிறுத்தியே பெற்றுக்கொண்டார். ராஜிவ் காந்தி காலத்திலேயே காட் ஒப்பந்தத்தில் செய்யவேண்டிய மாற்றங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார்கள். டங்கல் திட்டத்தின்படி வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் தொழில் தொடங்க வருபவர்களை இந்தியாவில் உள்ள முதலீட்டாளராகவே கருத வேண்டும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கினால் முடிவெடுக்கும் இடத்தில் இந்தியர்கள் இருக்க வேண்டும் என்றொரு விதி இருந்தது. டங்கல் திட்டம் அதை மாற்றிவிட்டது. வெளிநாட்டு நிறுவனங்களிடம் உயர் பதவிகளில் இந்தியர்களை அமர்த்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. வணிகத்தின் மூலம் ஈட்டிய லாபத்தை இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்வதைத் தடுக்கவும் முடியாது என்கிற நிலை ஏற்பட்டது.

இது போதாது? புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து மூன்றாண்டுகளாகவே போராட்டம் நடத்தி வந்த இடதுசாரிகளுக்கு டங்கல் திட்டம், காட் ஒப்பந்தம் அனைத்துமே வேப்பங்காயாகக் கசந்தது. அதன் காரணமாகவே காட் ஒப்பந்தம் கையெழுத்தான தினத்தில் உச்சக்கட்ட எதிர்ப்பைக் காட்டினார்கள்.

இடது, வலது என இரு தரப்பும் காட் ஒப்பந்தத்தை எதிர்த்து நின்றாலும் அவர்களிடையே இருவேறு பார்வைகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தன. இடதுசாரிகளைப் பொறுத்தவரை விவசாயிகள், விளைநிலங்களைச் சார்ந்திருக்கும் கூலித் தொழிலாளிகள், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன் முக்கியமானது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

பாஜகவைப் பொறுத்தவரை காட் ஒப்பந்தத்தைக் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசியல் பிரச்னையாகவே எதிர்கொண்டது. எந்தவொரு மாற்றத்தையும் மறுக்கவில்லை. ஆனால், நிதானமாகச் செயல்படவேண்டும் என்றார்கள். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாற்றங்களைப் படிப்படியாக அமலுக்கு கொண்டுவரவேண்டும். அவசரப்படுவதால் தேசத்தின் நலன் பாதிக்கப்படும் என்பது அவர்களது நிலைப்பாடு.

காட் ஒப்பந்தத்திற்கு எதிரான களப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சட்டப் போராட்டமும் தொடர்ந்தது. மாநில உரிமைகளைப் பாதிக்கும் விஷயமாகப் பார்க்கப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் தங்களுடைய மாநில உரிமையைப் பாதுகாக்க, நீதிமன்றங்களை அணுகினார்கள்.

மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுகிறது. மாநில அரசுகளைக் கலந்தாலோசித்த பின்னரே காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதா, வேண்டாமா என்கிற முடிவை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மார்ச் 1994ல் கடிதம் எழுதினார். அவரைத் தொடர்ந்து ராஜஸ்தான், ஒரிசா முதல்வர்களும் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மத்திய அரசின் பொருளாதார முடிவுகளுக்கு எதிராக இருந்தது. காட் ஒப்பந்தம் குறித்த விஷயத்தில் மத்திய அரசு, மாநில அரசின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகி முறையிட்டது. ஒரிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் மத்திய அரசுக்கு எதிராக இருந்தன.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது பிரிவின் படி விவசாயம், பொதுநலன் போன்றவை மாநில அரசின் கீழ் வருபவை என்பதால் அவற்றைப் பாதிக்கும்படியான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரமுடியாத சூழல் இருந்தது. அதே நேரத்தில் அரசியலமைப்புச் சட்டம் 253 பிரிவின் படி சர்வதேச வர்த்தகம் தொடர்பான விஷயங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு, எந்த நாட்டுடனும் வணிக ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும்.

காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னர் எங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை. கடும் எதிர்ப்புகளுக்குப் பின்னர் இறங்கி வந்த மத்திய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகம் காட் ஒப்பந்தம் குறித்து மாநில அரசுகளின் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும்படிக் கேட்டுக்கொண்டது. ஆனால், முடிவுதான் ஏற்கெனவே எடுத்தாகிவிட்டதே!

மாநில உரிமைகளை நசுக்குவதாகப் பேசினாலும், சாமானிய மக்கள் மத்தியில் இருந்த கவலைகள்தான் மாநிலக் கட்சிகளை மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்க வைத்தன. இந்தியாவை அந்நிய நாட்டுக்கு அடமானம் வைக்கப்போகிறார்கள் என்கிற ரீதியில் வந்த விமர்சனங்கள் மக்களைக் கவலைக்குள்ளாக்கியிருந்தது.

எந்தவொரு சிக்கலாக இருந்தாலும் உலக வங்கி, இந்தியாவுக்குக் கடன் தந்துவிடும். எவ்வளவு கடன் என்பதெல்லாம் பட்ஜெட்டில் துண்டறிக்கையாக வந்துவிடும். ஆகவே, இந்தியாவுக்கு எத்தனை கடன், எவ்வளவு வரவு, செலவு என்கிற கவலையெல்லாம் பொதுவாக மார்ச் மாதத்தோடு முடிந்துவிடும். சாமானிய மக்களைப் பொறுத்தவரை, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்று காட் என்பதும் கடன் தரக்கூடிய அமைப்பு என்பதுதான் அவர்களது புரிதலாக இருந்தது.

ஆனால், காட் அமைப்பு எந்த நாட்டிற்கும் நிதியுதவி செய்வதில்லை. தங்கு தடையற்ற வர்த்தகத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. கறாரான விதிமுறைகள்கூட வகுக்கப்படவில்லை. பொருளாதார ரீதியாக வளர்ந்த, வளரவேண்டிய நாடுகள் நிறைய இருந்தன. ஒவ்வொரு நாட்டிற்குமான வரவு, செலவு, தேவைகள், வாழ்க்கைச் சூழல் அத்தனையும் வேறுவிதமாகவே இருந்தன.

ஆகவே, உலகெங்கும் உள்ள நாடுகளுக்குப் பொருந்துவதுபோல் பொருளாதார விதிகளை வரையறுக்க முடியாது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் 23 நாடுகள் சேர்ந்து உருவாக்கிய அமைப்புதான், காட். ஆனாலும், 50 ஆண்டுகளாக உட்கார்ந்து பேசுமிடமாக மட்டுமே இருந்து வந்தது. எந்தவொரு முடிவுக்கும் வர முடிந்ததில்லை.

90களில் நடந்த ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் காட் அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே ஒருமித்தக் கருத்து உருவானது. வாஷிங்டனும் லண்டனும் தொடர்ந்து வழிநடத்தினார்கள். மார்கரெட் தாட்சர், ரெனால்டு ரீகன், ஹெல்மட் கோல் போன்றவர்களின் முன்னெடுப்பால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியமானது.

உறுப்பு நாடுகளுக்கிடையே தடையில்லாத வர்த்தகத்தை காட் ஒப்பந்தம் உறுதி செய்கிறது. அதற்கு முன்னர் பெரும்பாலான வெளிநாட்டுப் பொருட்களுக்கு 40 சதவிகிதம் வரை இறக்குமதி வரி இருந்தது. காட் ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஏறக்குறைய 10 சதவிகிதம் வரை குறைந்தது. விலைமதிப்பான வெளிநாட்டுப் பொருட்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்கவேண்டும் என்று நினைத்த இந்தியப் பணக்காரர்களுக்கு முதலில் மகிழ்ச்சி கிட்டியது.

அடுத்ததாக வசதி படைத்த மிடில் கிளாஸ் மக்களுக்கான காலம். அவர்கள் தங்கள் வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத வெளிநாட்டுப் பொருள்கள் கைக்குக் கிடைத்தன. கலர் டிவி இந்தியா முழுவதும் பரவலானது. வாட்ச் தொடங்கி கார் வரை அதுவரை ஆடம்பரப் பொருள்களாக இருந்தவையெல்லாம் அத்தியாவசியப் பொருள்களாகிவிட்டன.

காட் ஒப்பந்தம், இந்தியப் பொருளாதாரத்தின் முகத்தை மாற்றியமைத்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியது. எங்கும் டாலர் என்பதே பேச்சாக இருந்தது. இந்தியா, அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்கிவிட்டது என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களான கூகிள், யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக் தரும் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் இன்றும் அதே விமர்சனம் உயிர்ப்போடு இருக்கிறது.

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *