Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #11 – பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

மறக்கப்பட்ட வரலாறு #11 – பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

பொன்பரப்பி வங்கிக் கொள்ளை

2019 ஏப்ரல் 18. தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரிய அளவில் மோதல்களோ வன்முறைச் சம்பவங்களோ இல்லையென்று டிவியில் செய்தி வாசிப்பாளர் செய்தியறிக்கை வாசித்து முடித்த அடுத்த நிமிடமே பிளாஷ் செய்தி ஓடத் தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையேயான மோதலில் வீடுகள் கல் வீசி தாக்கப்பட்டன. வீடுகளிலிருந்த பொருள்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இரு தரப்பினர் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அது பாமகவினருக்கும் விடுதலைச் சிறுத்தைக் கட்சிகளுக்கும் இடையேயான மோதல் என்பது சாமானியருக்கும் புரியும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் பொன்பரப்பி வருகிறது. வாக்குச்சாவடி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பானை உடைக்கப்பட்டதாலும், ஒரு தலித் முதியவரைச் சிலர் வாக்களிக்க விடாமல் தகராறு செய்ததாலும் எழுந்த மோதல், பின்னர் கல்வீச்சு, கலவரத்தில் முடிந்தாகச் சொல்லப்படுகிறது. வழக்கு விசாரணை முடிந்த பின்னர் உண்மை நிலவரம் தெரிய வரும்.

தலித் மக்கள் பிரதானமாக வசிக்கும் பகுதியான பொன்பரப்பிக்கு வேறொரு முகம் உண்டு. அது எண்பதுகளில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த முகம். பொன்பரப்பி மக்களின் வீர, தீரத்தைக் கண்டு இந்திய மக்கள் பிரமித்துப்போனார்கள். பொன்பரப்பியின் வெள்ளந்தி மனிதர்கள் வாழ்த்து மழையில் நனைந்தார்கள். அதுவொரு முக்கியமான தருணம். தமிழ்நாட்டு மக்கள் பெருமைப்படத்தக்க தருணம் அது!

செப்டம்பர் 1, 1987. செவ்வாய் கிழமை. பொன்பரப்பி கிராமம். நெருக்கடியான ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் நிறைந்த பகுதியில் சற்று உள்ளடங்கியே இருந்தது அந்தச் சின்னக் கட்டடம். அந்தப் பகுதியில் இருந்த ஒரே கான்கிரீட் கட்டடம்.

அங்குதான் பொன்பரப்பியின் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை செயல்பட்டு வந்தது. வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் எளிய மக்கள். விவசாயத் தொழிலாளர்களும் கூலித் தொழிலாளர்களும் வங்கிக் கணக்கு வைத்திருந்தார்கள்.

சரியாக காலை 11.30 மணி. நான்கு பேர் வேகமாக சைக்கிள் ஓட்டியபடி வங்கியின் வாசலில் வந்து இறங்கினார்கள். அத்தனை பேரிடமும் முதுகில் துப்பாக்கி இருந்தது. கைகளில் கையெறிக் குண்டும் இருந்தது.

சைக்கிளில் இருந்து இறங்கியதும் ஸ்டென் கன் துப்பாக்கியை எடுத்துச் சுட்டபடியே கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்தார்கள். துப்பாக்கித் தோட்டாக்கள் நான்கு பக்கமும் சிதறித் தெறித்தன. துப்பாக்கிச் சத்தமும், வங்கிக்குள் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் அலறல் சத்தமும் அந்தப் பகுதியையே உலுக்கியது.

கொள்ளைக் கும்பலின் தலைவன் போல் இருந்தவன், கேஷியர் இருந்த அறையை நோக்கிக் கையில் துப்பாக்கியோடு ஓடினான். 27 வயதான நந்தகுமார் என்பவர்தான் வங்கியின் கேஷியராக இருந்தார். கண்ணாடியிலான அறையை உள்பக்கமாகத் தாழிட்டிருந்தார்.

ஒரே ஒரு துப்பாக்கித் தோட்டாவில் கண்ணாடி சிதைந்து விழுந்து, கதவு திறந்து கொண்டது. கும்பலின் தலைவன் உள்ளே நுழைந்து துப்பாக்கி நீட்டியதும் அதை நந்தகுமார் தட்டிவிட்டிருக்கிறார். அதற்குள் தோளில் குண்டு பாய்ந்துவிட்டது.

நந்தகுமாரிடமிருந்த லாக்கர் சாவி, பணம் அனைத்தையும் அள்ளி ஒருவன் பைக்குள் திணிக்க ஆரம்பித்தான். அதற்குள் சுதாரித்து, அங்கிருந்து மேனேஜர் அறையை நோக்கி ஓட ஆரம்பித்த நந்தகுமாரின் முதுகில் சுட்டதில் அவர் அங்கேயே சரிந்து விழுந்தார்.

கண்முன்னே ஓர் உயிர் பலி. வங்கியில் இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

அடுத்து வந்த பத்து நிமிடங்களில் ஒட்டுமொத்த கட்டடமும் கொள்ளையர் வசம் வந்துவிட்டது. வங்கியின் மேனேஜரை அவரது அறையில் துப்பாக்கி முனையில் உட்கார வைத்திருந்தார்கள். அவருக்குப் பின்புறம் இருந்த இரும்பு பீரோ துப்பாக்கித் தோட்டாக்களால் உருகுலைந்திருந்தது.

வங்கியின் லாக்கர் ரூமை மேனேஜர் திறந்ததும், வந்திருந்தவர்களில் நான்கு பேர் உள்ளே நுழைந்தார்கள். கையோடு கொண்டு வந்திருந்த பைகளில் பணத்தையும் நகைகளையும் நிதானமாக நிரப்ப ஆரம்பித்தார்கள். லாக்கர் ரூமுக்கு வெளியே துப்பாக்கி ஏந்தியபடி ஒருவன் காவலுக்கு நின்றான்.

அடுத்து வந்த அரைமணி நேரத்தில் லாக்கரிலிருந்த ஒட்டுமொத்த பணமும், நகைகளும் பேக் செய்யப்பட்டுவிட்டன. கேஷியர் கண்முன் கொல்லப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பின்னர் யாரும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. உயிர் பிழைத்தால் போதுமென்று மூலையில் ஒடுங்கிவிட்டார்கள்.

திட்டமிட்டபடிக் கொள்ளைச் சம்பவத்தை வெற்றிகரமாக நடத்திவிட்டு, முகம் நிறைய மகிழ்ச்சியோடும் முதுகில் கட்டிய பண மூட்டையோடும் அந்த ஐந்து பேரும் வங்கியை விட்டு வெளியே வந்தார்கள். அங்குதான் அவர்களுக்கோர் அதிர்ச்சி காத்திருந்தது.

கையில் கல், கழி, கட்டை, இரும்பு பைப் சகிதம் ஏராளமான பொதுமக்கள் வங்கியின் வாசலில் கொள்ளையர்களுக்காகக் காத்திருந்தார்கள். வங்கியில் துப்பாக்கி வெடித்த சத்தத்தைக் கேட்டதும் ஊர் ஒன்றுகூடி விட்டது. அக்கம் பக்கத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து வாசலில் குவிந்திருந்தார்கள்.

வங்கிக்குள் நடப்பது என்னவென்பதை ஊகித்துக் கொண்ட ஊர் மக்கள், கொள்ளையர்களை ஒரு கை பார்க்க முடிவெடுத்து, திரண்டு வந்திருந்தார்கள். கொள்ளையர்களின் கையில் ஸ்டென் கன் இருப்பதும் அவர்களுக்குத் தெரியும். தெரிந்தும் கூடியிருந்தார்கள்.

கஷ்டப்பட்டு வியர்வை சிந்திச் சம்பாதித்தப் பணத்தைக் குருவிபோல் சேர்த்து வைத்தால் எவனோ வந்து கொள்ளையடித்துப் போவான். அதைப் பார்த்துவிட்டுச் சும்மா இருப்பதா? என்னுடைய பணம், என்னுடைய நகை. போனால் வராது. எங்களுடைய ஊருக்குள் வந்து, பட்டப்பகலில் எங்கள் கண்முன்னே பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிப்பதா? விடவே மாட்டோம் என்று வெறியோடு கோபத்தின் உச்சத்தில் மக்கள் குமுறியபடி வெளியே நின்றிருந்தார்கள்.

கூட்டத்தினரிடம் சிக்கினால் உயிரோடு தப்பிக்க முடியாது என்பதைக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் புரிந்து கொண்டான். இனி சாமர்த்தியமாகச் செயல்பட்டால் மட்டுமே தப்பிக்க முடியும். பொதுமக்களுக்கு நம்மீது பயம் வந்தாக வேண்டும் என்று கருதியவன், ‘எங்களைப் போகவிடவில்லையென்றால் உங்கள் எல்லோரையும் சுட்டுத் தள்ளிவிடுவோம்’ என்றான்.

மக்கள் அசரவில்லை. நகரவும் இல்லை. கூட வந்திருந்த இரண்டு கொள்ளையர் துப்பாக்கியை உயர்த்தி, வானை நோக்கிச் சுட்டார்கள்.

பொதுமக்களைப் பயமுறுத்துவதற்காக அந்தக் கொள்ளையர்கள் செய்த விஷயம், வினையானது. பொதுமக்களுக்குச் சட்டென்று கோபம் தலைக்கேறிவிட்டது. அங்கே கட்டடத்தின் தரைத்தள வேலைக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த செங்கல் துண்டுகளைக் கையில் எடுத்தார்கள். சரமாரியாகக் கொள்ளையர்கள் மீது எறிய ஆரம்பித்தார்கள்.

கொள்ளையர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. வானை நோக்கிச் சுட்டதும் கூட்டம் பயந்து போய்க் கலைந்து சென்றுவிடும் என்று நினைத்திருந்தார்கள். ஆனால், மக்கள் கூட்டமோ எதற்கும் தயாராக வந்திருந்தது.

கொள்ளையர்கள் துப்பாக்கியை இயக்குவதற்குள் சர்ரென்று கற்கள் பறந்து வந்து நெற்றியைப் பதம் பார்த்தன. ஐந்து பேரும் நிலை குலைந்து போனார்கள். அதிரடியான கல்வீச்சை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

கிராமத்தின் மக்கள் கூட்டத்திடமிருந்து எப்படியாவது தப்பித்தாக வேண்டும். செருப்பைக் கழட்டி கூட்டத்தினரை நோக்கி எறிந்தார்கள். அது ஊர்மக்களை இன்னும் கோபப்படுத்தியது. ஐவரையும் சுற்றி வளைத்துத் துரத்த ஆரம்பித்தார்கள்.

கொள்ளையர்கள் ஓடும்போது சட்டைப்பையில் இருந்த கையெறிக் குண்டுகளை கூட்டத்தினரை நோக்கி எறிந்தார்கள். அவர்களுக்கு துரதிர்ஷ்டம், மக்களுக்கோ அதிர்ஷ்டம்! குண்டுகள் வெடிக்கவில்லை.

கற்களால் தாக்கப்பட்டதில் கை, கால், தலை, நெற்றி என அத்தனை இடங்களிலும் அடிபட்டு ரத்தம் கசிந்தாலும், கொள்ளையர் ஐவரும் ஓடுவதை நிறுத்தவில்லை. உயிர் பிழைத்தாக வேண்டும்! ஆனால், எவனையும் உயிரோடு விடவே கூடாது என்கிற வெறியோடு பொதுமக்கள் அவர்களைத் துரத்திக் கொண்டிருந்தார்கள்.

கையெறி குண்டுகளுக்கும், துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் பயப்படாத பொதுமக்களை வேறு எப்படிச் சமாளிக்கலாம்? கொள்ளைக் கூட்டத் தலைவன் ஒரு நிமிடம் நின்று யோசித்துவிட்டு, பையில் இருந்த கரன்ஸி நோட்டுகளை எடுத்துக் காற்றில் வீசினான். கீழே விழும் பணத்தைப் பொதுமக்கள் பொறுக்க ஆரம்பிப்பார்கள். அதற்குள் தப்பித்துவிடலாம் என்பது அவனுடைய கணக்கு.

ஆனால், பொதுமக்களோ கீழே விழுந்த பணத்தை மிதித்துவிட்டு, இன்னும் வேகமாகத் துரத்தினார்கள். ஒருவழியாக மக்கள் ஐவரையும் சுற்றி வளைத்து, தரையில் இட்டு அமுக்கி, கை, கால்களைக் கட்டிக் குப்புறப் படுக்க வைத்தார்கள்.

பொன்பரப்பியில் காவல் நிலையம் இல்லை. பக்கத்திலிருந்த செந்துறையில் இருந்து வந்தாக வேண்டும். பொதுமக்களில் சிலர் காவல்துறையினருக்காகக் காத்திருக்கலாம் என்றார்கள். ஆனால், நிறைய பேருக்குக் கட்டுக்கடங்காத கோபம் இருந்தது.

கை, கால்கள் கட்டப்பட்டுக் கிடந்தவர்களை எட்டி உதைக்க ஆரம்பித்தார்கள். பொதுமக்களின் கோபத்திற்கு அவர்களது சைக்கிளும் தப்பவில்லை. அடுத்தடுத்து உதையும் அடியும் தொடர்ந்து கொண்டிருந்தது. வலி தாங்க முடியாத கொள்ளையர்கள் கெஞ்சிக் கதறி அழ ஆரம்பித்தார்கள்.

சில நிமிடங்களுக்குள் செந்துறையிலிருந்து காவல்துறையினர் வந்துவிட்டார்கள். ஆனால் அதற்குள் கொள்ளையருள் மூன்று பேர் இறந்திருந்தார்கள். எஞ்சிய இருவரைக் காவல்துறையினர் காப்பாற்றி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த இருவரும்கூட இறந்துவிட்டார்கள்.

இறந்த போன கேஷியர் நந்தகுமாரின் நிலைதான் பரிதாபம். அவரது இளம் மனைவி, கையில் ஆறு மாதப் பெண் குழந்தையோடு பொன்பரப்பி கிராமத்திலேயே வசித்து வந்தவர், திருச்சிக்கு மாற்றல் கிடைத்தும் போகாமல் அங்கேயே இருந்ததால் கிராமத்து மக்களுக்கு அவர்மீது கூடுதல் பாசமுண்டு. செந்துறையில் ஈமச்சடங்கு நடந்தபோது இறுதி மரியாதை செலுத்துவதற்கு ஊரே திரண்டு வந்தது.

திருச்சியிலிருந்து ஸ்பெஷல் டீம் விசாரணையில் இறங்கியது. அதற்குப் பின்னர்தான் இறந்து போனவர்கள் சாதாரணக் கொள்ளையர்கள் அல்ல; தமிழ்நாடு விடுதலைப்படை என்னும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன்தான், தமிழ்நாடு விடுதலைப்படையின் தலைவன் தமிழரசன் என்பதெல்லாம் அதன் பிறகே பொன்பரப்பி மக்களுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அளித்தது.

திருச்சியிலிருந்து வந்த டிஐஜி தலைமையிலான டீம் விசாரணையை ஆரம்பித்தது. ஐந்து பேர்களின் அடையாளமும் தெரிந்தது. கல்லடியால் அங்கேயே இறந்த தமிழரசன், தர்மலிங்கம், ஜெகந்நாதன் மூவர் மட்டுமல்ல பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த அன்பழகன், பழனிவேலு என அத்தனை பேருமே தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

கோவையில் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தவனான தமிழரசன், வட தமிழ்நாட்டின் பிரபலமான கொள்ளைக்காரன். பல கொலை, கொள்ளைச் சம்பவங்களின் தொடர்புடைய 43 வயதான தமிழரசனைத் தமிழ்நாடு காவல்துறை ஆறு ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தது. பொன்பரப்பி போல் இன்னும் பல வங்கிக் கொள்ளைச் சம்பவங்களிலும் தமிழரசனுக்குத் தொடர்பு உண்டு.

ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தமிழரசன் கொள்ளையடித்திருக்கிறான். தமிழக அரசு அதிகாரியைக் கொன்று அவரிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்திருக்கிறான். வட தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக அரியலூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம், கடலூர் போன்ற பகுதிகளில் பெரிய ரவுடியாக உலா வந்து கொண்டிருந்த தமிழரசனை தமிழ் தேசியவாதியாக நிறைய பேருக்குத் தெரியும்.

சாலைகளில் கண்ணி வெடிகளைப் பதுக்கி வைத்து, வெடிக்க வைப்பதில் தமிழரசன் கெட்டிக்காரன். பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, திருவையாறு பகுதியில் சுற்றுப் பயணம் வந்தபோது தஞ்சாவூர் குடமுருட்டி ஆற்றுப் பாலத்தில் வெடிகுண்டு வைத்துக் கொல்ல முயற்சி செய்ததாக ஒரு வழக்கு நிலுவையில் இருந்தது. ஸ்டென் கன், கையெறி குண்டுகளோடு ஜெயங்கொண்டம் பகுதியை வலம் வந்து கொண்டிருந்த தமிழரசனை எதிர்கொள்ள காவல்துறை தயங்கியது என்னவோ நிஜம்தான்.

இந்தப் பொன்பரப்பி வங்கிக் கொள்ளைக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் செல்லும் பாதையில் தமிழரசன் வைத்த வெடிகுண்டு வெடித்து, 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். அதற்குப் பின்னர் தமிழரசனைத் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தார்கள்.

பொதுமக்கள் மத்தியிலும் தமிழரசன் குறித்துப் பீதியும், வெறுப்புணர்வும் இருந்து வந்தது. பொன்பரப்பி வங்கிக் கொள்ளைக்குப் பின்னர் கல்லடிப்பட்டு, மன்னிப்புக் கேட்டு மன்றாடியும் பொதுமக்கள் விட்டுவிடவில்லை. அவன் தமிழரசன் என்று அப்போது தெரிய வந்திருந்தாலும் விட்டு வைத்திருக்கவா போகிறார்கள்?

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *