‘கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை நம்முடைய கடற்படை தடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், நாங்கள் தடுப்போம்’ என்றார்கள் இலங்கை மீனவர்கள்.
‘இந்திய மீனவர்கள் வந்தால், இலங்கைக் கடற்படை தடுத்து நிறுத்தும். அவர்களிடமிருந்து படகுகளை பறித்துவிட்டுத் திருப்பி அனுப்புவோம். படகுகளை ஏலம் விட்டு அதை நம்முடைய மீனவர்கள் பயன்படுத்தும்படிச் செய்வோம்’ என்றார் அந்த அமைச்சர்.
கூட்டம் மகிழ்ச்சியோடு கை தட்டியது. பக்கத்தில் இருந்த பத்திரிக்கையாளர், ‘அதையும் மீறி இந்திய மீனவர்கள் உள்ளே நுழைந்தால் சட்டத்தைக் கையில் எடுப்போம் என்கிறார்களே…. அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?’ என்கிறார்.
‘கடற்படை நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று அர்த்தம்’ என்று சிரித்தபடியே கிளம்புகிறார்.
அதுதான் டக்ளஸ்! டக்ளஸ் தேவானந்தா!
யாழ்ப்பாணத்தில் இவரது கொடிதான் பறக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை நாடாளுமன்றத்தின் ஒரே தமிழ்ப் பிரநிதியாக இருந்து வருகிறார். இலங்கையின் 10வது நாடாளுமன்றம் தொடங்கி, தற்போதைய 15வது நாடாளுமன்றம் வரை எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்தான் எம்.பி.
எம்.பி மட்டுமல்ல ஏதாவது ஒரு துறையின் அமைச்சராகவும் இருப்பார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர். இலங்கைத் தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாதவர்.
இலங்கைத் தமிழர் மீது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இன்றும் அனுதாபம் உண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது கசப்பும் வெறுப்பும் ஏற்பட்டிருப்பது உண்மையென்றால் அதற்கான கிரெடிட், டக்ளஸ் தேவானந்தாவுக்குத்தான் தரப்படவேண்டும்.
எந்தவொரு விஷயத்திலும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு. எதற்கும் இந்தியாவைக் காரணமாகக் குறைகூறுவது, தமிழக அரசியல்வாதிகளைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருபவர்.
‘கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. இந்தியாவுக்குத் திருப்பித் தருவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தூண்டுதலால், மீனவர்கள் எல்லை தாண்டி வந்து எங்களது மீனவர்களைத் தாக்குகிறார்கள்’… இப்படி நிறைய.
ஒரு வெளிநாட்டு அமைச்சர், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விமர்சிப்பது என்பது அபூர்வம். ஜெயலலிதாவும் கருணாநிதியும் முதல்வராக இருந்தபோதும் அவர்களை விமர்சிப்பார். டக்ளஸின் அதிரடி ஸ்டேட்மெண்ட் அனைத்தும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும். ஆனால், தமிழ்நாட்டில் டக்ளஸ் தேவானந்தாவை நிறைய பேருக்குத் தெரியாது.
டக்ளஸ், ஒரு போராளிக்குழுவின் தலைவராக இருந்தவர். 80களின் ஆரம்பத்தில் தனி ஈழம் கனவோடு ஆயுதமேந்திய போராளிக்குழுவில் முக்கியமான தளபதியாக இருந்தார். ஆனால், அவரால் முன்னணித் தலைவராக உருவெடுக்க முடிந்ததில்லை.
1980களின் ஆரம்பத்தில் இலங்கைப் போராளிக் குழுக்கள் சார்பாக பத்மநாபா, முகுந்தன், சபாரத்தினம், பிரபாகரன், பாலசிங்கம் உள்ளிட்டவர்கள் சென்னையில் தங்கியிருப்பார்கள். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரைச் சந்திக்க வருவார்கள். ஆனால், கடைசி வரை ஏனோ டக்ளஸ் தேவானந்தாவால் எம்.ஜி.ஆரைச் சந்திக்க முடிந்ததில்லை.
இலங்கை ராணுவத்திற்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் ஆயுதப் போராட்டம் நடத்தத் தயார் என்றார். நிதியுதவி கேட்டு தமிழ்நாட்டில் பல கதவுகளை தட்டிப்பார்த்தார். எதுவும் திறக்கவேயில்லை.
பிரபாகரன், பத்மநாபா, உமாமகேஸ்வரன் வரிசையில் அவரால் சேரமுடியவில்லை. அவருக்கென ஒரு ஆதரவு வட்டாரத்தை உருவாக்கினார். ‘ஈழ புரட்சிகர விடுதலை முன்னணி’ என்னும் போராளிக்குழுவில் பத்மநாபாவின் தலைமையின் கீழ் ஆயுதமேந்திய குழுவுக்குத் தளபதியாக இருந்தார்.
80களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்தபோது அகதிகளோடு அகதிகளாக டக்ளஸ், தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆரம்பத்தில் ராஜிவ் காந்தியின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இருந்தார். இன்று அமைச்சராக இருக்கும் டக்ளஸ், இலங்கையில் இனப்பிரச்னை என்பதே இல்லை என்கிறார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப்புலிகளின் ஹிட் லிஸ்ட்டில் இருந்தார். 12 முறை புலிகளின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியிருக்கிறார்.
பூனைக்குச் சாவு என்பது அபூர்வம். ஒன்பது உயிர் இருப்பதால் இறப்பைத் தவிர்த்துவிடும் என்பார்கள். பூனையைப் புனிதமான விலங்காக பௌத்தம் முன்னிறுத்துகிறது. எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டியதன் அவசியத்தை பூனை உணர்த்துவதாக நம்புகிறார்கள். பௌத்த துறவிகளின் மடாலயங்களில் பூனை வளர்ப்பதைப் பார்க்க முடியும்.
டக்ளஸ் தேவானந்தாவும் ஒரு பூனைதான். சிங்களர்களுக்கு மிகவும் பிடித்தமான பூனை. தமிழர்களைவிட சிங்கள அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர். பிரேமதாசாவும் ஜெயவர்த்தனேவும் டக்ளஸைப் பிரியத்துடன் ‘தம்பி’ என்று அழைப்பார்களாம். ரனில் விக்ரமசிங்கே ‘மச்சான்’ என்று அழைப்பாராம். சந்திரிகாவும் ராஜபக்சேவும் இவருக்கு நெருக்கமானவர்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
90களின் ஆரம்பத்தில் டக்ளஸ் தனியாக இயங்க ஆரம்பித்தார். ஆனால், தமிழக அரசியல்வாதிகளின் கருணைப்பார்வை ஏனோ இவருக்குக் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, இலங்கைக்குத் திரும்பி வந்தவரை பிரமேதாசா தடபுடலாக வரவேற்று, ஆதரித்தார்.
விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போரைத் தொடரும்போது, டக்ளஸ் தேவானந்தாவின் குழு உதவியாக இருக்கும் என்று சிங்களர்கள் நினைத்தார்கள். டக்ளஸ் எதற்கும் தயாராக இருந்தார்.
சிங்களவர்களின் ஆதரவு கிடைத்தவுடன், தன்னுடைய ஆதரவாளர்களை வரவழைத்து, கொழும்பில் செட்டிலாகிவிட்டார். பலத்த பாதுகாப்போடு கொழும்பு மையப்பகுதியில் வசித்து வந்தார். ஆனாலும், விடுதலைப்புலிகள் வெறிகொண்டு துரத்தினார்கள்.
ஒரு மாலை நேரத்தில் அத்தனைத் தடைகளையும் தாண்டி, வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த விடுதலைப்புலிகள், அவரது ஆதரவாளர்களைக் கொன்றுவிட்டு டக்ளஸைத் தேடினார்கள்.
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டாவது மாடியிலிருந்து வெளியே குதித்த டக்ளஸ், பக்கத்திலிருந்த பூங்காவில் ஒளிந்து கொண்டார்.
வெளியே வந்தால் எப்படியும் தன்னைத் தீர்த்துவிடுவார்கள் என்பதால் அன்றிரவு முழுவதும் இருட்டில் ஒளிந்திருந்தார். அதற்குள் தாக்குதல் பற்றிய செய்தி பரவி, டக்ளஸ் இறந்துவிட்டதாகவே முடிவு செய்துவிட்டார்கள்.
அதிகாலை நேரத்தில் வெளியே வந்த டக்ளஸ், அப்போது பிரதமராக இருந்த சந்திரிகாவைத் தொடர்பு கொண்டார். தான் உயிரோடு பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்தார். அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் டக்ளஸ் மட்டுமே தப்பித்தார். அவரது ஆதரவாளர்கள் அத்தனை பேரும் இறந்து போனார்கள். அடுத்து நடந்த இன்னொரு தாக்குதலில் ஒரு கண் பார்வை போய்விட்டது. ஆனாலும், பிழைத்துக் கொண்டார்.
அடுத்தடுத்து விடுதலைப்புலிகளின் கொலை முயற்சிகள் தொடர்ந்தாலும் அதிர்ஷ்டம் டக்ளஸ் பக்கமே இருந்தது.
ராஜிவ் காந்தி படுகொலையைப்போல் புலிகள் ஒரு பெண்ணை மனித வெடிகுண்டாக அனுப்பி வைத்தார்கள். அந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் அவருடன் இருந்த மூன்று பேர் இறந்து போனார்கள். அந்தப் பெண்ணின் உடல் வெடித்து, சின்னாபின்னமாகி சிதறிக் கிடந்தது. ஆனால், டக்ளஸ் மட்டும் தப்பித்துவிட்டார்.
அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன், பத்மநாபா, நீலன் திருச்செல்வம், லட்சுமண் கதிர்காமர், அருணாச்சலம் தங்கத்துரை என விடுதலைப்புலிகளால் சாய்க்கப்பட்டவர்களின் லிஸ்ட் பெரிது. தங்களுடைய அரசியல் எதிரிகளை எப்படியாவது தீர்த்துக்கட்டுவது என்பது விடுதலைப்புலிகளின் ஸ்டைல்.
தமிழரோ, சிங்களரோ அதில் எந்தப் பேதமும் பார்க்காமல் மனசாட்சியைக் கழட்டிவைத்துவிட்டு மனித வெடிகுண்டை அனுப்பித் தீர்த்துக்கட்டுவார்கள். விடுதலைப்புலிகளிடமிருந்து இதுவரை தப்பிப் பிழைத்தது இருவர் மட்டுமே. ஒருவர் டக்ளஸ், இன்னொருவர் சந்திரிகா.
டக்ளஸ்க்கு அதிர்ஷ்டமிருந்தது. அது சிங்களர்களின் வடிவில் இருந்தது. சிங்கள அரசியல் தலைவர்கள் எந்நாளும் அவரைக் கைவிடவில்லை. ஒரு போராளியாக வாழ்க்கையை ஆரம்பித்து, அரசியலுக்கு வந்து, தொடர்ந்து அமைச்சராக, எம்.பியாக உச்சத்தில் இருப்பது டக்ளஸ் தேவானந்தாவின் மிகப்பெரிய சாதனை. வேறெந்தத் தமிழ்ப் போராளிகளாலும் அதைச் செய்ய முடியவில்லை.
டக்ளஸ்க்கு தமிழ்நாடு பிடிக்காது. தமிழ்நாடு என்றாலே வேப்பங்காயாக கசக்கும். மறக்கவே முடியாத அனுபவங்களை தமிழ்நாடு அவருக்குத் தந்திருந்தது. அன்றும், இன்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆதரவு அவருக்குக் கிடைத்ததில்லை. இனி தேவையில்லை என்றும் அவர் நினைக்கக்கூடும்.
எந்நாளும் அவர் தமிழ்நாட்டிற்கு வரப்போவதில்லை. ஆம், டக்ளஸ், சென்னைக் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி.
டக்ளஸ் தமிழ்நாட்டில் இருந்த காலத்தில் ஏராளமான கொள்ளை, கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்மீது இருந்தன. வேறு எந்தவொரு போராளிக்குழுவின் தலைவர்களும் இப்படி வழக்குகளில் சிக்கிக் கொண்டதில்லை.
1986 முதல் 1989 வரை டக்ளஸ் சென்னையில் தங்கியிருந்தார். பல வழக்குகளில் சிக்கியிருந்தாலும், ஜாமீனில் வெளியே வந்திருந்தார். 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கீழ்ப்பாக்கத்தில் 10 வயதுச் சிறுவனைக் கடத்திச் சென்று 7 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இதிலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வெவ்வேறு சம்பவங்களில் டக்ளஸ் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் மீது 3 கிரிமினல் வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. அந்த மூன்று வழக்குகளில் முக்கியமானது, சூளைமேடு வழக்கு.
1986, நவம்பர் 1. தீபாவளி தினம். தமிழகமே தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருந்தது. வழக்கமான உற்சாகத்தோடு மக்கள் வெடி வெடித்து தீபாவளியைக் கொண்டாடினார்கள். அப்போது டக்ளஸ் தேவானந்தா, ஈபிஆர்எல்எப் இயக்கத்தில் இருந்தார். அதன் தலைமையகமாக இருந்த சூளைமேடு அலுவலகத்தில் தங்கியிருந்தார்.
அக்கம் பக்கத்து தீபாவளி வெடிச்சத்தம், போராளிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தி, டக்ளஸ் மற்றும் அவரது நண்பர்களின் ஓய்வைக் குலைத்திருக்கலாம். வெடி வெடித்துக் கொண்டாடியவர்கள் மீது வாக்குவாதம் எழுந்தது.
கையில் ஆயுதத்துடன் போராளிக்குழுக்கள் தாக்க வருவதைப் பார்த்த பொதுமக்கள் ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் தங்கியிருந்த அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
ஒரு பெரும் கூட்டம் சுற்றி வளைத்துத் தாக்குவதைப் பார்த்ததும், ஆவேசப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவும் அவரது ஆட்களும் பொதுமக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள்.
இதில் திருநாவுக்கரசு என்னும் இளம் வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்து, சிறையில் அடைத்தார்கள்.
ஜாமீனில் வெளியே வந்த டக்ளஸ், அதே தெருவில் சகஜமாக நடமாடிக் கொண்டிருந்தார். பின்னர் 1990 ஆரம்பத்தில் இலங்கைக்குத் தப்பிச் சென்றுவிட்டார். இதனால் ஜாமீனில் வெளிவர முடியாத அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகாலமாக அவர் ஆஜராகாததால் 1994இல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அவர் மீதான வழக்கு சென்னை 4வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்காக டக்ளஸை சென்னைக்கு அழைத்து வருவதில் நடைமுறைச் சிக்கல் தொடர்ந்து கொண்டிருந்தது.
டக்ளஸ் மீதான வழக்கை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரவிட்டது. அதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜரானார். வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஒரு வழக்கு விசாரணை நடந்தது அதுதான் முதல் முறை. விசாரணையின்போது 1986 சூளைமேடு சம்பவ இடத்தில் தான் இல்லையென்றும், எந்தத் தாக்குதலிலும் தான் சம்பந்தப்படவில்லை என்றும் தான் ஒரு அப்பாவி என்றும் சொன்னாராம்.
0