நேருவின் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு மெகா திட்டமானது பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷண்ட் உயிர் பிழைத்துவிட்டார். ஆனால், ஆபரேஷனுக்கான செலவில் ஒரு பெரிய மருத்துவமனையைக் கட்டியிருக்கலாம் என்றால் எப்படியிருக்கும்?
வேடிக்கைதான் என்றாலும் அதுதான் உண்மை. 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய திட்டம், நிறைவேறுவதற்கு 50 ஆண்டுகளானது. முன்னர் திட்டமிட்டிருந்ததை விட 15 மடங்கு செலவு செய்யப்பட்டது. மன்மோகன் சிங் வரை சுதந்திர இந்தியாவின் அத்தனை பிரதமர்களின் மேஜையிலும் வந்து போன கோப்பு இது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
உத்தராகண்ட் மாநிலத்தில் தெஹ்ரி என்னும் பகுதியில் பாகீரதி ஆற்றின்மீது அணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. 1949ல் தீட்டப்பட்ட திட்டம், 1961ல் செயல் வடிவம் பெற்றது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கே.எல். ராவ், தெஹ்ரி பகுதியைப் பார்வையிட்டு, திட்டத்தின் சாத்தியங்களை அலசிய பின்னர் ஒப்புதல் வழங்கப்பட்டது.
600 மெகா வாட் மின்சாரத்தைப் பெறமுடியும் என்று முதலில் திட்டமிட்டார்கள். அதற்கு 500 கோடி முதலீடு செய்தாக வேண்டும். அன்றைய காலகட்டத்தில் அதுவொரு பெரிய முதலீடு. அணையின் கட்டமைப்பு குறித்து முடிவு செய்வதற்கே முழுதாக பத்தாண்டுகள் ஆகிவிட்டன. மின்சாரத் தேவைக்கு மட்டுமல்ல டெல்லியின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதும் முக்கிய நோக்கமாக இருந்தது.
தொலைநோக்குப் பார்வையுடைய திட்டமென்றாலும் ஏகப்பட்ட தடைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 60களில் 500 கோடியாக இருந்த திட்ட மதிப்பீடு, 80களில் 3000 கோடியாகிவிட்டது. 1800 கோடி முதலீடு செய்ய சோவியத் ரஷ்யா முன் வந்தது. 90களின் இறுதியில் திட்டம் நிறைவடைந்துவிடும் என்றார்கள். இன்னும் பத்தாண்டுகள் தாமதமாகி 2006ல்தான் திட்டம் முடிக்கப்பட்டது. ஏகப்பட்ட கோடிகள் நஷ்டம்.
தொழில்நுட்பச் சங்கதிகளை இறுதி செய்வதில் உள்ள சவால்கள்தான் திட்டம் தாமதமடையக் காரணமாக இருந்தது. அணையின் உயரம் என்னவென்று முடிவு செய்வதும் சவாலாக இருந்தது. திட்டத்தை வடிவமைத்த சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் ஒருவர், தெஹ்ரி அணை கட்டப்படும் இடமானது நிலநடுக்கமுள்ள பகுதி என்பதால் உயரத்தைத் துல்லியமாக முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார்.
ஐஐடி ரூர்கி பல்கலைக்கழகம், டெல்லி ஐஐடி, கனடா பொறியாளர்களுடன் இணைந்து நிலநடுக்கத்தைத் தாங்கும் சக்தி பற்றி கணக்கீடு செய்திருந்தார்கள். ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளுமளவுக்கு அணை வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தலைமைப் பொறியாளரோ தெஹ்ரி பகுதியில் 9 புள்ளிகள் வரை நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ஒருவேளை நிலநடுக்கம் வந்து, ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளைக் கடந்துவிட்டால் அணை முற்றிலுமாகச் சிதைந்து போவதற்கு வாய்ப்புகள் இருந்தன. சுற்றியிருந்த 72 கிராமங்கள் வரை நீரில் மூழ்கிப்போய்விடும். ஏகப்பட்ட உயிர்ச்சேதங்கள் நிகழும். ரிஷிகேஷ் போன்ற முக்கியமான பகுதிகள்கூடக் காணாமல் போய்விட வாய்ப்புண்டு.
நிலநடுக்க பாதிப்புகளைத் தவிர்க்க, அணைக்கட்டின் அடிப்பகுதியில் ஒன்றரை கி.மீ தூரம் ஒரு வலுவான தரைத்தளக் கட்டுமானம் இருக்க வேண்டும். ஏற்கெனவே சிறிய அளவில் கட்டப்பட்டிருந்த கட்டுமானத்தளத்தை நீட்டிக்க வேண்டும். ஆனால், இதைச் செய்து முடிக்கக் கூடுதல் நிதி தேவைப்படும். ஏற்கெனவே கட்டப்பட்ட எட்டு குகைகளும் தேவைப்படாமல் போகலாம். அதற்காகச் செலவழித்த தொகைகளும் வீணாகிவிடும்.
வேறு வழியில்லை. பாதிப்பிலிருந்து தவிர்க்க இதைச் செய்தாக வேண்டும். கட்டுமானப் பணிகள் ஆரம்பமான நேரத்தில் தொழில்நுட்பச் சிக்கல்களால் ஆறு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டபோது நிதியுதவிகளைப் பெறுவதில் சிக்கல்.
மறுபடியும் ஒரு பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. சுதந்திர இந்தியாவில் இப்படியொரு நிதி நெருக்கடியை எந்தவொரு திட்டமும் எதிர்கொண்டதில்லை. 80களில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் சுணங்கிக் கிடந்தன. குறிப்பாக 1978 முதல் 1990 வரை தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு எந்தவொரு பணியும் நடைபெறவில்லை.
தெஹ்ரி அணை கட்டுவதற்கு 7000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இடம் கையகப்படுத்தப்பட்டது. நிலங்களை இழந்த நிறைய விவசாயிகளுக்கு இழப்பீடு தரப்பட்டது. சிலருக்கு மாற்று விவசாய நிலங்கள் தரப்பட்டன. ஆனால், நிஜமான எதிர்ப்பு என்பது விவசாயிகளிடமிருந்து வரவில்லை. சுற்றுச்சூழல் போராளிகள்தான் திட்டத்திற்குப் பெரிய சவாலாக இருந்தார்கள்.
நான்கு மெகா குகைகளை உருவாக்கி, ஆற்று நீரிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. ஏராளமான பொருட்செலவிற்குப் பின்னர் திட்டம் இறுதிக்கட்டத்தில் இருந்தபோதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாகத் திட்டத்தின் இறுதிக்கட்டமான காப்பணை கட்டப்படும்போதுதான் எதிர்ப்பு வந்தது.
ஆறு மாதங்கள் தாமதமானால்கூடக் கூடுதலாக 100 கோடியைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்கிற சூழலில், அரசுக்கு நெருக்கடிகள் ஆரம்பித்தன. சுற்றுச்சூழல் போராளியும் காந்தியவாதியுமான சுந்தர்லால் பகுகுணா தலைமையில் திட்டத்தை நிறுத்தும்படி போராட்டம் நடந்தது. எங்களுக்கு அணை வேண்டாம். அணை கட்டுவது என்பது இமயமலையை அழித்துவிடும் என்றார் சுந்தர்லால் பகுகுணா.
பகுகுணாவின் போராட்டம் பெரிய தடைக்கல்லாக இருந்தது. நிலங்களைக் கையகப்படுத்துவதில் தொடங்கி, தொழில்நுட்பச் சிக்கல்களையெல்லாம் சமாளித்து மீண்ட திட்டம், சுற்றுச்சுழல் ஆர்வலர்களால் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. திட்டத்தின் இறுதிக்கட்டத்தில்தான் பகுகுணாவின் எதிர்ப்பு பூதாகரமாக எழுந்து நின்றது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 12 ஆண்டுகள் வரை பகுகுணா, தேஹ்ரி திட்டம் பற்றி எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். அவரது சிப்கோ இயக்கம் வேறு சில போராட்டங்களில் மும்முரமாக இருந்ததும் முக்கியமான காரணமாக இருந்தது.
இமயமலையில் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் மரங்களைப் பாதுகாப்பதற்காக சிப்கோ இயக்கம் துவங்கப்பட்டது. இமயமலைப் பகுதிகளில் தொடர்ந்த வெள்ளம், நிலச்சரிவுகளுக்குக் காடுகளை அழிப்பது ஆகியவற்றின் தொடர்ச்சியாக உருவானது சிப்கோ. சுந்தர்லால் பகுகுணாவால் தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கம், கனிமச் சுரங்கங்களாலும் பெரிய அணைக்கட்டுக்களாலும் ஏற்படும் சூழியல் அழிவுகளுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியது.
1991ல் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 என்று பதிவானது. பெரிய அளவில் இழப்புகள் இல்லை என்பதால் புது நம்பிக்கை பிறந்தது. ஆனாலும், பகுகுணாவின் போராட்டங்கள் தொடர்ந்தன.
பகுகுணா காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மேனகா காந்தி தலைமையில் பல்வேறுகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.
பாகீரதியின் கரையில் 45 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். உச்ச நீதிமன்றத்திலும் அணைக்கு எதிராக வழக்கு நடத்தினார். இன்னொரு பக்கம், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதற்குப் பின்னர் அவர் பற்றிய பேச்சு எழவில்லை.
தெஹ்ரி அணையின் சுற்றுச்சூழல் பற்றிய சர்ச்சையானது, சுந்தர்லால் பகுகுணாவின் போராட்டத்திற்கு முன்னரே இருந்தது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. எஸ்.கே. ராய் என்பவர் தலைமையிலான ஒரு நபர் கமிட்டி, தெஹ்ரி அணை கட்டப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
எஸ்.கே ராய், களத்தில் இறங்கினார். திட்டத்தில் பணியாற்றியவர்களைச் சந்தித்தார். சோவியத் ரஷ்யாவின் பொறியாளர்கள், ரூர்க்கி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்களிடமிருந்து பல்வேறு தகவல்களைத் திரட்டினார். இடைக்கால அறிக்கையொன்றையும் தாக்கல் செய்தார்.
எஸ்.கே. ராயின் இறுதி அறிக்கை வெளியானபோது பல விவாதங்களை ஏற்படுத்தி வைத்தது. ‘எங்களுக்குப் போதுமான தரவுகள் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்களை வைத்து ஆராய்ந்தபோது, திட்டத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கமிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியான அனுமானங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட விஷயங்களில் இருவேறு கருத்துகள் இருக்கின்றன’ என்று அறிக்கை பிரச்னையை இன்னும் குழுப்பத்தில் ஆழ்த்தியது.
எஸ்.கே. ராயின் அறிக்கை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை நீர்வளத்துறை கமிஷனுக்கு அனுப்பி வைத்தார். சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனை தரும்படிக் கேட்டுக்கொண்டார். பின்னாளில், திட்டத்தைத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர்தான், பின்னாளில் தலைமைத் தேர்தல் ஆணையராகி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். அவர்தான் டி.என். சேஷன்!
2006ல் அணை திறக்கப்பட்டது. அதுவரை 8000 கோடி செலவாகியிருந்தது. சிப்கோ இயக்கத்தை ஆரம்பித்து, பல்வேறு விழிப்புணர்வுப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியிருந்த சுந்தர்லால் பகுகுணாவின் தெஹ்ரி அணைக்கட்டுக்கு எதிரான திட்டம் தோல்வியைத் தழுவியது.
தெஹ்ரி இந்தியாவின் மிக உயரமான அணையாக உருவெடுத்தது. உலகளவில் இது 12வது பெரிய அணை. ஒப்பீட்டளவில் இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் பிளாண்ட்.
உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், டெல்லி, ஹரியானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் எனப் பெரும்பாலான வட இந்திய மாநிலங்கள் தங்களுடைய மின் தேவைக்கு தெஹ்ரி அணையைத்தான் நம்பியிருக்கின்றன.
டி.என். சேஷன் 2019ல் மறைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சுந்தர்லால் பகுகுணா, ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
0