ஜெய்பூர் – டெல்லி நெடுஞ்சாலையில் ஷாபூரா என்னுமிடத்திலிருந்து இடதுபுறம் திரும்பி அரை மணி நேரம் பயணித்தால் தியோராலா என்னும் கிராமத்திற்கு வந்துவிடலாம். சின்னக் கிராமம்தான் என்றாலும் அப்படியொன்றும் மோசமான நிலையில் இல்லை. பத்தாயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆங்கில மீடியமுள்ள நான்கு பள்ளிகள் உண்டு. அரசு மருத்துவமனையும் உண்டு. மின்சார வசதி, தண்ணீர் வசதி அத்தனையும் 80களில் அப்போதே உண்டு.
4 செப்டம்பர் 1987. ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்னர் உலகையே உலுக்கிய சம்பவம் மூலமாக இந்தக் கிராமத்தின் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. ரூப் கன்வர் என்னும் 18 வயதே நிரம்பிய ஒரு இளம்பெண், மதச்சடங்குகளின் பெயரால், பல்லாயிரம் பேர் கூடியிருந்த பொதுவெளியில் எரிக்கப்பட்டாள். அவளது சம்மதத்துடன் அனைத்தும் நடந்தேறியது. ஆனால், அது குறித்த குற்றவுணர்ச்சி அங்கிருந்த எவருக்கும் இல்லை என்பதுதான் சோகம்.
‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு இந்தியாவில் கடைசி பலியானவர், ரூப் கன்வர். இந்து மறுமலர்ச்சி காலத்தில் ராஜாராம் மோகன் ராய் போன்றவர்களின் முயற்சியால் சதி என்பது மூடநம்பிக்கை என்னும் விழிப்புணர்வு மெல்ல வர ஆரம்பித்தது. அதுவரை இந்தியச் சடங்குகளில் தலையிடுவதற்குத் தயங்கிய பிரிட்டிஷ் அரசு, ராஜா ராம் மோகன் ராய் போன்ற இந்து சமயச் சீர்திருத்தவாதிகளின் வலியுறுத்தலுக்குப் பின்னர் சதியைத் தடை செய்ய முன் வந்தார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் சதி தடை செய்யப்பட்டது. ஆனால், தடை என்பது பெயரளவுக்கு மட்டுமே இருந்து வந்திருக்கிறது.
தியோராலா இருக்கும் ஷேக்காவதி பகுதி, ராஜபுத்திரர்கள் அதிகமாக வசிக்கும் இடம். மூடநம்பிக்கைகள் நிறைந்த பகுதி. உடன்கட்டை ஏறுவது புனிதமான இறப்பு என்று பல நூறு ஆண்டுகளாகக் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அங்கு மட்டுமல்ல, மாநிலம் முழுவதுமே உடன்கட்டை ஏறுவதைத் தவறாகப் பார்க்கும் பழக்கம் இருந்ததில்லை. அது பெண்ணைப் புனிதமாக்கும் செயல் என்றே நினைத்து வந்தார்கள்.
உடன்கட்டை ஏறுவது என்பது ரூப் கன்வர் எடுத்த முடிவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யாருமே அவரைத் தடுக்கவில்லை. அதற்கான முயற்சிகளைக் கூட யாரும் எடுக்கவில்லை. இன்றும் அதைக் கசப்போடு கடந்து சென்றுவிடவே நினைக்கிறார்கள். ரூப் கன்வர் பற்றி யாராவது பேச்செடுத்தாலே பேச மறுக்கிறார்கள்.
ரூப் கன்வரின் கணவரான மான் சிங் ஒரு பட்டதாரி. ரூப் கன்வரோ பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தார். ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் திருமணமாகியிருந்தது. இரண்டு பேருக்குமிடையே நல்ல புரிதல் இருந்தது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
மான் சிங்கின் மரணமும் ஏதோ எதிர்பாராத விபத்தல்ல. 24 வயதான மான் சிங், நீண்ட நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். திடீரென வலி கடுமையானபோது சிகார் என்னுமிடத்தில் உள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனளிக்காமல் மறுநாளே உயிரிழந்துவிட்டார்.
இந்தியா முழுவதும் வயிற்றுவலியால் எத்தனையோ பேர் உயிரிழக்கிறார்கள். அப்படியொரு மரணமாக மறந்துவிடக்கூடிய சம்பவம் அது. ஆனால், அவரது மனைவியான ரூப் கன்வர் உடன்கட்டை ஏறுவதென்று அதிரடி முடிவெடுத்தார். மரணச் செய்தி கேட்டதும், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டவர், உடன்கட்டைக்குத் தயாராகிவிட்டார். திருமணத்தன்று அணிந்த உடைகள், நகைகள் அனைத்தையும் தேடியெடுத்து அணிந்து கொண்டார்.
ரூப் கன்வர், உடன்கட்டை ஏறத் தயாராகிவிட்டார் என்பது கிராமம் முழுவதும் தெரிந்துவிட்டது. யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை. அவரது புகுந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் சரி, பிறந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் சரி எல்லோருமே அமைதி காத்தார்கள். சதி என்பது கிராமத்தவர்களுக்குப் புதிதுமல்ல. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்கெனவே 4 பெண்கள் அதே கிராமத்தில் உடன்கட்டை ஏறியிருக்கிறார்கள்.
மான் சிங்கின் உடல், அவரது வீட்டிற்குக் கொண்டு வருவதற்கு முன்பாகவே ரூப் கன்வர், மணக்கோலத்தில் உடன்கட்டைக்குத் தயாராகிவிட்டார். இறுதி ஊர்வலம் ஆரம்பித்தபோது, கணவரின் சடலத்தோடு நடக்க ஆரம்பித்துவிட்டார். மான் சிங்கின் உடல், சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது ரூப் கன்வரும் அவரது உறவினர்களும் ஊர்வலமாகவே சென்றார்கள்.
முன்னதாக, சதி சடங்கு நடைபெறப்போகிறது என்கிற செய்தியைத் தெரிந்துகொண்ட கிராமத்தவர்கள் மட்டுமல்ல அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வந்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். ஆனால், யாரும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.
தகன மேடையில் மான் சிங்கின் சடலத்தை வைத்து, விறகுகளை அடுக்கியதும் இறுதிச் சடங்குகள் ஆரம்பமாகின. அனைத்தும் முடிந்தவுடன் தகன மேடையை நோக்கிச் சென்ற ரூப் கன்வர், மான் சிங்கின் தலைக்கு அருகே அமர்ந்தபடி அவரது தலையைத் தன் மடி மீது வைத்துக் கொண்டார். பின்னர் தன்னுடைய மைத்துனரான புஷ்பேந்திர சிங்கைப் பார்த்துத் தலையசைத்தார். சடலத்திற்குத் தீ வைக்கப்பட்டது.
சுற்றியிருந்த கூட்டம் குரல் எழுப்பியது, ‘சதி மாதா கீ ஜெய்!’
யாருக்கும் எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை. சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம், பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா முழுவதுமே இருந்து வந்திருக்கிறது. கணவன் இறந்ததும் அவனது மனைவியைப் பல்லக்கில் அமர வைத்துத் தகன மேடைக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு கணவரது உடல் எரிக்கப்பட்டு, தீ எழுந்ததும், மனைவியானவள் பல்லக்கிலிருந்து வெளியே வந்து, தீக்குள் பாய்ந்து உயிரை விடவேண்டும். அழக்கூடாது. சிரித்தபடியே தீக்குள் சென்றாக வேண்டும்.
பிரிட்டிஷ் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டாலும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் தடையை மீறி, உடன்கட்டை நிகழ்வு நடந்து வந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராணி சதிக்குத் தனிக் கோயில் இருக்கிறது. அங்கே உடன்கட்டை ஏறிய 13 பெண்மணிகளுக்குத் தனித்தனியாகக் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விழா, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரூப் கன்வரின் குடும்பம், டிரான்ஸ்போர்ட் பிஸினெஸ் நடத்திக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய மகள் உடன்கட்டை ஏறியது குறித்து அவரது தந்தைக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மாறாகப் பெருமிதம் உண்டு. என்னுடைய தங்கை செய்தது சரியான விஷயம் என்கிறார், ரூப் கன்வரின் சகோதரரான கோபால் சிங் ரத்தோர். 60 வயதாகும் கோபால் சிங் போன்றவர்கள் இன்னும் கிராமத்தில் இருக்கிறார்கள். சதிக்கு எதிரான சட்டமும் நடைமுறைகளும் அவர்களது வழிபாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.
ரூப் கன்வரின் புகுந்த வீடும் அவருடைய முடிவுக்கு எதிராக இருக்கவில்லை. அவரை நினைத்துப் பெருமைப்படும் இடத்தில் இருந்தார்கள். ஆனால், அவரது மாமனார் சுமர் சிங் அதிருப்தியோடு இருந்திருக்கிறார். ரூப் கன்வர் உடன்கட்டை ஏறியதால் ஊர் பிரபலமாகிவிட்டது. ஆனால், நான் இரண்டு குடும்ப உறுப்பினர்களை இழந்திருக்கிறேன் என்கிறார். சுமர் சிங் இன்றும் நலமுடன் இருக்கிறார். ரூப் கன்வர் சம்பவம் பற்றி யாராவது கேட்டால் பேச மறுக்கிறார்.
ரூப் கன்வர் உடன்கட்டை ஏறியது மாநில அரசின் நிர்வாகச் சீர்குலைவை வெளிக்காட்டியது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம் அனைத்தும் செயலிழந்த நிலைதான் இருந்தது. இறுதிச் சடங்குகள் காலை 11 மணிக்கு ஆரம்பமாகின. சடலத்திற்கு வைக்கப்பட்ட தீ, ஒன்றரை மணி நேரம் எரிந்து கொண்டிருந்தது. சம்பவ இடத்திலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் வருவதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டன. ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்தினர் மறுநாள் காலைதான் வந்து சேர்ந்தார்கள்.
துறை ரீதியான விசாரணைகள் ஆரம்பமாகின. பணி நிமித்தமாக வேறிடம் சென்றதாகச் சொல்லி கிராம நிர்வாக அலுவலரும் தப்பித்துக் கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்காத காரணத்தால் காவல்துறை சூப்பிரெண்ட் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். வேறு எந்தவொரு நடவடிக்கையையும் மாநில அரசு எடுக்கத் தயாராக இல்லை.
‘சுன்ரி மகோத்ஸ்வ்’ என்னும் பெயரில் கருமாதிச் சடங்கு அனுசரிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தார்கள். நான்கு மணி நேரம் நடந்த சடங்கைக் காவல்துறையினர் ஏனோ தடுக்கவில்லை. சதியை ஆராதிக்கும் விதமாக நடந்துகொண்ட கூட்டத்தைக் கலைத்திருக்க முடியும். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களைக் கைது செய்திருக்க முடியும். ஆனால், எதையும் செய்யவில்லை.
‘சுன்ரி’ என்னும் ரூப் கன்வரின் உடைமை அவரது குடும்பத்தாரால் கொண்டு வரப்பட்டது. உடன்கட்டை ஏறிய இடத்திலிருந்து அவரது புகுந்த வீடு வரை ஒரு பெரும் ஊர்வலமே நடந்தது. வழி நெடுக தேங்காய் உடைத்து ஆராதனை செய்தார்கள். அதுவொரு அமைதி ஊர்வலமாக இல்லாமல் கொண்டாட்ட நிகழ்வாகவே இருந்தது. இறந்த இடத்தில் காலையும் மாலையும் பூஜைகள் செய்யப்பட்டன.
பத்து நாள் கழித்துத்தான் ராஜஸ்தான் முதல்வர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ரூப் கண்வரின் மரணத்திற்காக அனுதாபப்படுவதாகவும் சதி என்பது தவிர்க்கப்படவேண்டியது, ஆனால், மக்களின் வழிபாட்டைத் தடுக்க முடியாது என்கிற ரீதியில் பேசியிருந்தார். ரூப் கன்வர் சம்பவத்தை வைத்து அரசியலாக்கும் முயற்சிகளும் நடந்தன. காங்கிரஸ், ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் திடீர் திடீரென்று கிராமத்திற்கு வந்து சதி ஸ்தலத்திற்குச் சென்று வழிபட்டார்கள்.
மகளிர் அமைப்புகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின. விதவைகள் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்; சுன்ரி மகோத்ஸவ் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும்; ரூப் கன்வரைக் கொண்டாடுவது நிறுத்தப்படவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. மாநில அரசு நிர்வாகம் சரிவர இயங்கவில்லை. ஒருவேளை காவல்துறையினர் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ரூப் கன்வரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றார்கள்.
மகளிர் அமைப்புகளின் நியாயத்தை உணர்ந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் வாஜ்பாய், நடைபெற்ற சம்பவத்திற்கு மாநில அரசே பொறுப்பு. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். சுன்ரி மகோத்ஸவ் நிகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு உயர்நீதிமன்றத்தை அணுகிய மகளிர் அமைப்புகள், சாதகமான உத்தரவு பெற்று வந்தன. அதுவரை மாநில காங்கிரஸ் கட்சி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை கையில் எடுத்துக்கொண்டு மகளிர் அமைப்புகள் ஜெய்ப்பூருக்கு வந்திருந்த உள்துறை அமைச்சரைச் சந்தித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மாநில அரசு சுறுசுறுப்பு காட்டாவிட்டாலும், மத்திய அரசு விஷயத்தைக் கையிலெடுத்துக் கொண்டது.
1987, அக்டோபர் 1 அன்று சதி சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. உடன்கட்டை ஏறுவது மட்டுமல்ல அதை ஆராதிப்பதும் தண்டனைக்குரிய செயலாகக் கருதப்பட்டது. ரூப் கன்வர் உடன்கட்டை ஏறியதற்குக் காரணமாக இருந்த 45 பேர் கைது செய்யப்பட்டார்கள். பின்னாளில் 25 பேர் விடுவிக்கப்பட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்தார்கள். 6 பேர் தப்பித்துவிட்டார்கள்.
ரூப் கன்வர் விஷயத்தில் மத்திய அரசு, மாநில அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில அரசில் மூன்று முறை முதல்வராக இருந்த ஹரி தேவ் ஜோஷி நிர்வாகத்தின் செயல்பாட்டை அதே காங்கிரஸ் ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் எதிர்த்து நின்று, கடுமையாக நடந்துகொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த உள்துறை அமைச்சர்தான், பின்னாளில் நிதியமைச்சரான நம்மூர் ப.சிதம்பரம்!
0
நான் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது இது நடந்தது. அப்போது இச்சம்பவம் என் மனதில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போதும் ரூப் கன்வரை அவ்வப்போது நினைத்து கொள்வேன். கூடவே சதியை எதிர்த்த தன் அமைச்சர்களுக்கு பாண்டிய தேவி அளித்த பதிலும் நினைவுக்கு வந்து துன்புறுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை