சமீபத்திய குடியரசுத் தலைவர் தேர்தல்களில் எவ்விதத் திடுக்கிடும் திருப்பமோ சுவாரசியமோ இல்லையென்றாலும் சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் சுவாரசியத்திற்குக் குறைவிருந்ததில்லை. வி.வி. கிரி தேர்வு தொடங்கி எத்தனையோமுறை குடியரசுத் தலைவர் தேர்தல் அரசியல்மயமாக்கப்பட்டு பல அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதுண்டு.
ஆர். வெங்கட்ராமன், குடியரசுத் தலைவரான கதையும் அதுபோலவே சுவாரசியமானதுதான். இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர்களில் பெரிய அளவில் பிரபலமாக இருந்தவர் அப்துல் கலாம் என்பதில் சந்தேகமில்லை. அப்துல் கலாமிற்கு முன்பாகப் பிரபலமான குடியரசுத் தலைவராக இருந்தவர் ஆர். வெங்கட்ராமன். இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்த ஆர். வெங்கட்ராமன், திருச்சியில் படித்துவிட்டு சென்னை சட்டக்கல்லூரியில் சட்டமும் படித்து முடித்தவர். சென்னை மாகாணத்தின் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்திருக்கிறார். ஐம்பதுகளில் உச்சநீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரது போட்டியாளராக எதிர்கொள்ள வேண்டியிருந்தவரும் அவரது நெருங்கிய நண்பர்தான். இருவரும் சம வயதுடையவர்கள். ஆம், வெங்கட்ராமனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பாகப் போட்டியிட்டவர், பாலக்காட்டில் பிறந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வீ. ஆர். கிருஷ்ணய்யர்!
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்த ஆர். வெங்கட்ராமன், இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக இருந்தார். காமராஜருக்குப் பின்னர் தமிழகத்தில் இருந்த மிகவும் சொற்பமான காங்கிரஸ் தலைவர்களில் வெங்கட்ராமனும் ஒருவர். எண்பதுகளின் ஆரம்பத்தில் நிதியமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்திருக்கிறார். பின்னர் இந்திரா காந்தியின் வேண்டுகோளின்படி அமைச்சரவையிலிருந்து விலகி, குடியரசு துணைத்தலைவரானார்.
துணை குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்று வெற்றி பெறுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராகும்போது இருந்த அரசியல் சூழல் வேறு விதமாக இருந்தது. அரசியல் நெருக்கடியால் ராஜிவ் காந்தி தடுமாற்றத்தில் இருந்தார். அரசியல் ரீதியாக அவருக்கு விடப்பட்டிருந்த சவால்கள் அவரை யோசிக்க வைத்தன.
அரசியல் கூட்டல் கணக்குகளில் எந்தச் சிக்கலுமில்லை. காங்கிரஸ் சார்பாக யாரை நிறுத்தினாலும் வெற்றி பெற்றுவிடும் நிலைதான் இருந்து வந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றிருந்தது. மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் இருந்தன.
யாரை நிறுத்துவது என்பதில்தான் பிரதமராக இருந்த ராஜிவ் காந்திக்கு குழப்பம் இருந்தது. முதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பேசினார். ஒருவேளை துணை குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனை ஆதரிப்பதாக ஒப்புக்கொண்டால், உடனே அறிவித்துவிடலாம் என்று நினைத்தார். இந்திரா காந்தியைப் போல் அரசியல் பிரச்னையாக்குவதில் அவருக்கு விருப்பமில்லை.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஹிதயதுல்லாவை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கடிதம் கொடுத்திருந்த போதிலும் அதை ஏற்றுக்கொள்ள இந்திரா காந்தி மறுத்துவிட்டார். காங்கிரஸ் சார்பாக ஜெயில் சிங்கை நிறுத்தினார்.
ராஜிவ் காந்தி, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செல்ல முடிவெடுத்திருந்தார். இந்தியா முழுவதும் அறிமுகமான ஒருவரை நிறுத்துவது, அவருக்குக் காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெறுவது என்பதுதான் அவரது திட்டம். குடியரசுத் தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஆர். வெங்கட்ராமன் இயல்பான தேர்வாக இருந்தாலும் இன்னும் இரண்டு தென்னிந்தியப் பிரபலங்களும் ராஜிவ் காந்தியின் தேர்வாக இருந்தனர். அந்த இருவர் மரகதம் சந்திர சேகர், பி.வி. நரசிம்ம ராவ்.
குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில் சிங்கிற்கும் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் ஏற்கெனவே மோதல் இருந்து வந்தது. ஜெயில் சிங் ஒருவேளை மீண்டும் குடியரசுத் தலைவராக விரும்பினால், அவரை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் தயாராகவே இருந்தார்கள். ஒருவேளை ஜெயில் சிங் போட்டியிட்டால், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும் பிரிந்து, கணிசமான வாக்குகள் அவருக்குக் கிடைக்கும் என்று அவர் நம்பவில்லை என்றாலும் எதிர்க்கட்சிகள் நம்பியிருந்தன.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் டெல்லி அரசியல் பரபரப்பாகிவிட்டது. ஏற்கெனவே குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கிற்கும் பிரதமருக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து, நாடாளுமன்ற விவாதங்கள் ஏராளமான அரசியல் யூகங்களை முன்வைத்தன. போபர்ஸ் ஆயுத பேரம் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். அதைக் காரணம் காட்டி, ராஜிவ் காந்தியின் அமைச்சரவை கலைக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
வேட்பு மனுத்தாக்கலுக்கான இறுதி நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் வேட்பாளர் யாரென்பதை ராஜிவ் காந்தி முடிவு செய்து அறிவித்தார். ஆளுங்கட்சி முதலில் அறிவிக்கட்டும் என்று காத்திருந்த எதிர்க்கட்சிகள் திணறிப்போயின. எப்படியும் ஜெயில் சிங், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படப்போவதில்லை. அவர் ஒப்புக்கொண்டால் எதிர்க்கட்சிகள் சார்பாக அவரையே நிறுத்திவிடலாம் என்பது திட்டம். ஆனால், கடைசி நேரத்தில் ஏனோ ஜெயில் சிங் மௌனமாகிவிட்டார்.
வேறு வழியின்றி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யரைப் போட்டி வேட்பாளராக அறிவித்தார்கள். கேரளாவின் பாலக்காட்டில் பிறந்த வைத்தியநாதபுரம் ராமா கிருஷ்ணய்யர், சென்னையில் சட்டப்படிப்பை முடித்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். சென்னை மாகாணத்தின் சட்டமன்ற மேலவையிலும் உறுப்பினராக இருந்தார். பின்னர் கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரள அமைச்சரவையிலும் பணியாற்றினார்.
நம்பூதிரிபாட்டின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கிருஷ்ணய்யர், சிறைத்துறைச் சீர்திருத்தங்களுக்குப் பெயர் பெற்றவர். மனித உரிமைப் போராளியாக அறியப்பட்டவர். கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இருந்தபோது, கேரள மாநிலத்தின் நீர்வளத்தைத் திறம்பட நிர்வகிப்பதற்கான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினார். பின்னர் நேரடி அரசியலில் இருந்து விலகி, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 7 ஆண்டுகாலம் பணியாற்றினார்.
வி.ஆர். கிருஷ்ணய்யரைப்போல் ஆர். வெங்கட்ராமனும் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர். இருவரும் ஒரே காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். கிருஷ்ணய்யர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். வெங்கட்ராமனோ காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அறுபதுகளில் இருவரும் அவரவர் கட்சிகளில் முக்கியமான முகங்களாக இருந்தாலும், கிருஷ்ணய்யர் போல் வெங்கட்ராமன் தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டதில்லை.
தமிழக அரசியல் சூழலும் வெங்கட்ராமனுக்குச் சாதகமாக இருந்ததில்லை. காமராஜர், இந்திரா காந்தி போன்ற அதிகாரமிக்க தலைவர்களுக்கு மத்தியில் அடக்கமான தலைவராகவே தன்னைக் காட்டிக்கொண்டார். அதுவே அரசியலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்குத் தடையாக இருந்தது. அதே நேரத்தில் டெல்லியிலும் மாநிலத்திலும் அனைவரையும் அனுசரித்துச் செல்வதில் கெட்டிக்காரராக இருந்தார்.
நேருவின் ஆட்சியில் இந்து திருமணச் சட்டத்தில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு வெங்கட்ராமன் காரணமாக இருந்தார். இந்து திருமணங்கள் பற்றிய விஷயத்தில் நேருவின் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இந்து திருமணச் சட்டத்தில் எந்தவொரு திருத்தத்தையும் செய்யக்கூடாது என்பது பல மூத்த காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், நேருவோ புதிய சீர்திருத்தங்களை செய்யவேண்டும் என்றார்.
சிறப்புத் திருமணச் சட்டம், வெங்கட்ராமனின் பரிந்துரையின் பெயரில் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் உயர்மட்டக் கமிட்டியில் இது குறித்துப் பேசி, அனைவரது சம்மதத்தையும் பெற்றுத் தந்தார். விவாகரத்து குறித்த நடைமுறைகளை எளிமைப்படுத்தினார். பெண்ணின் திருமண வயதும், ஆணின் திருமண வயதையும் 18 ஆக உயர்த்திடுவதில் இவருக்குப் பெரிய பங்குண்டு.
நாடாளுமன்றத்தில் வெங்கட்ராமன் காங்கிரஸ் எம்.பியாக இருந்த காலத்தில், நேருவிடம் பேசி காமராஜர் அவரை தமிழக அரசியலுக்குக் கொண்டு வந்தார். காமராஜர் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சரானார். சேலத்தில் இரும்புத் தொழிற்சாலைகள், திருப்பூரில் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், மோட்டார் பாகங்கள் தயாரிப்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தினார். சென்னையில் அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி தொழிற்சாலைகளைக் கட்டமைத்தார்.
தி.மு.கவும் காங்கிரஸ் கட்சியும் அரசியல் ரீதியாக முரண்பட்டிருந்த காலத்தில், குறிப்பாக எமர்ஜென்ஸிக்குப் பிந்தைய சூழலில் ஒரு கூட்டணி உருவாகக் காரணமாக இருந்தார். ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்ற கோஷத்தோடு களமிறங்கிய தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியில் வெங்கட்ராமனுக்கு முக்கியப் பங்குண்டு. அதுதான் அவரை டெல்லி அரசியலுக்குக் கொண்டு சேர்ந்தது.
நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி என நான்கு பிரதமர்களுடன் வெங்கட்ராமன் பணியாற்றினார். குடியரசு துணைத்தலைவராகவும் பின்னர் குடியரசுத் தலைவராகவும் இருந்த காலத்தில் ஏராளமான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. 80களின் பிற்பாதியில் எழுந்த பல்வேறு அரசியல் நெருக்கடிகளை வெங்கட்ராமன் திறமையாகக் கையாண்டார்.
இலங்கைப் பிரச்னை, போபர்ஸ் ஊழல், மந்திர் – மண்டல் சர்ச்சைகள், வி.பி.சிங், சந்திரசேகர் அரசுகள், ராஜிவ் காந்தி படுகொலை, பங்குச் சந்தை ஊழல், தாராளமயமாக்கல் கொள்கை எனப் பல்வேறு விஷயங்களில் தன்னுடைய பணியைச் சிறப்பாகச் செய்தார். அவரது சட்ட நிபுணத்துவமும், அனுபவமும் பெரிதும் கைகொடுத்தன. கடைசிவரை எந்தச் சர்ச்சையிலும் அவர் சிக்கிக் கொள்ளவில்லை. தமிழனாகவும், இந்தியனாகவும் இருந்து மறைந்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கட்ராமனிடம் தோற்றுப்போன வி.ஆர். கிருஷ்ணய்யர், மனித உரிமைப் போராளியாகத் தொடர்ந்தார். கூடவே கேரள மக்களின் குரலாகவும் இருந்தார். முல்லைப் பெரியார் விஷயத்தில் கேரளாவின் பக்கம் நின்றார். அணையின் வலு குறித்து சந்தேகங்கள் தொடரும்போது, அணையை இடிப்பதுதான் நல்லது என்றார். இறுதிவரை மலையாளியாகவே இருந்து மறைந்தார்.
0