Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #19 – அக்கினிச்சட்டி

மறக்கப்பட்ட வரலாறு #19 – அக்கினிச்சட்டி

அக்கினிச்சட்டி

அக்டோபர் 1987. மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட வளைவுகள் உண்டு. இருபக்கமும் அடர்த்தியான மரங்களும் உண்டு. ஒரே வாரத்தில் பெரும்பாலான மரங்கள் காணாமல் போயிருந்தன. மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி பகுதிகளில் இருந்த மர அரவை மில் கடைகளின் வாசலில் ஏராளமான மரங்கள் குவிந்து கிடந்தன. அரவை மில் முன்பை விட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அவையெல்லாம் ஐப்பசி மழையில் சாய்ந்து போன மரங்கள் அல்ல. வடகிழக்குப் பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன்னதாக வேறு காரணத்திற்காக வெட்டித் தள்ளப்பட்ட மரங்கள். கருப்புக் கலரில் கட்டமிட்டு, பொதுப்பணித்துறையின் பொறுப்பான பராமரிப்பில் இருந்த மரங்கள். குறைந்தபட்சம் 30 ஆண்டுகளாக சாலையோரத்தில் செழிப்போடு இருந்தவை. செப்டம்பர் 17 தொடங்கி ஒரு வாரம் நீடித்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக வெட்டப்பட்டன.

1987ல் ‘வன்னியர் சங்கம்’ முன்னின்று நடத்திய சாலை மறியல் போராட்டம், தமிழ்நாட்டை உலுக்கிய போராட்டங்களில் முக்கியமானது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கென 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்டது. சமூக நீதி தவழும் திராவிட நாட்டில் ஒரு ஜாதி அமைப்பு பொங்கியெழுந்து நடத்திய அக்கினிப் போராட்டம்.

ஒரு வாரம் தொடர்ந்த சாலை மறியல் போராட்டத்தால் தமிழ்நாடு ஸ்தம்பித்தது. எதுவாக இருந்தாலும் விழுப்புரத்தைத் தாண்டி ரயிலில் மட்டுமே செல்ல முடிந்தது. இதனால் தென் தமிழ்நாட்டுப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. வட தமிழ்நாட்டின் குக்கிராமங்களின் சாலைகளில்கூட போக்குவரத்து இல்லை. தொடர் கடையடைப்புகளும், சாலை மறியல்களும் ஐப்பசி மாதத்தில் புயல் மழைக் காலங்கள்போல் வெறிச்சோடிக் கிடந்தன.

‘வன்னியர்கள்’ என்னும் வட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஜாதியைச் சேர்ந்த அமைப்பான வன்னியர் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தை அப்போது எந்தக் கட்சியும் கண்டிக்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. வன்னியர்களின் வாக்கு வங்கி செல்வாக்கானது. கடைமடை டெல்டா, கடலூர் போன்ற பகுதிகளில் எந்தக் கட்சியாக இருந்தாலும் தேர்தல்களில் வன்னியர்களையே பிரதிநிதிப்படுத்தினார்கள். சமூக நிலையில் வன்னியர்களுக்குத் தவிர்க்க முடியாத இடமுண்டு.

காலப்போக்கில் அரசியல் கட்சிகள் வன்னியர் சங்கத்தின் கோரிக்கைக்கு நெருக்கமாக வந்தன. சாலை மறியல் போராட்டத்திற்குப் பின்னாளில் பெரிய அளவு அங்கீகாரம் கிடைத்தது. தமிழகத்தை ஆண்ட பிரதானக் கட்சிகளான தி.மு.கவும், அ.தி.மு.கவும் வன்னியர் சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டன. அதன் நீட்சியாக ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தி.மு.க அரசு, 1987 போராட்டத்தில் இறந்த 21 வன்னியர்களின் நினைவாக விழுப்புரத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தவகையில் போராட்டத்தின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

‘வன்னியக் குல ஷத்திரியர்’ என்னும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் வட தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பான்மையினராக இருந்து வருகிறார்கள். குறிப்பாக செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதிகளிலும் கோயம்புத்தூர் முதல் கடைமடைப் பகுதியான பூம்புகார் வரையிலான பகுதிகளிலும் குறுக்கு நெடுக்காகப் பார்த்தாலும், பரந்துபட்ட எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள்.

1921ல் பிரிட்டிஷ் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சென்னை மாகாணத்தில் இருந்த தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 30 சதவிகிதம் பேர் வன்னியர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பகுதிகளின் மொத்த மக்கள் தொகை ஐந்து கோடி பேர் வரை இருந்திருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், வட தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வன்னியர்கள் என்னும் பொது அடையாளத்தின் பின்னால் திரண்டவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தார்கள்.

டெல்டா பகுதிகளில் ‘படையாட்சி’ என்றும், பழைய வட ஆற்காடு பகுதிகளில் ‘நாயக்கர்’ என்றும், கொங்கு மண்டலத்தில் ‘கவுண்டர்’ என்றும் (வெள்ளாள கவுண்டர் அல்ல!) குறிப்பிடப்பட்டாலும் அனைத்து உட்பிரிவுகளையும் சேர்த்து பொதுவான பெயரில் ‘வன்னியக் குல ஷத்திரியர்’ என்று அழைக்கப்படுகிறார்கள். விவசாயம்தான் பிரதானத் தொழில் என்றாலும் முடிதிருத்துவது, சலவைத் தொழில் எனப் பிற தொழிலைச் சார்ந்தவர்களும் இதில் அடக்கம்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் வன்னியர்களுக்குள் ஏராளமான உட்பிரிவுகள் இருந்திருக்கின்றன. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களும் வன்னியர்களாக இருந்திருக்கிறார்கள். இதிலும் வர்க்க பேதமுண்டு. ‘ராஜ வன்னியர்’, ‘ஷத்திரிய வன்னியர்’ போன்ற பிரிவுகள் அவர்களுக்குள் பேதங்களை உருவாக்கியிருந்தன. காலப்போக்கில் அவர்களிடமிருந்த வேறுபாடுகள் நீங்கி, ஒரே அமைப்பாகத் திரள முடிந்ததென்றால் அதற்கு ஒரே காரணம், வன்னியர் சங்கம்.

வன்னியர்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கும் பணி சென்னை மாகாணமாக இருக்கும்போதே ஆரம்பித்துவிட்டன. ஆனால், படையாட்சி, நாயக்கர் என்னும் இருவேறு பிரிவுகளாகப் பிரிந்து நின்றிருந்தார்கள். அவரவருக்கென இரண்டு முக்கியமான அரசியல் கட்சிகளும் இருந்தன. ஐம்பதுகளில் எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கரால் தொடங்கப்பட்ட காமன்வீல் கட்சி, பழைய வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றிருந்தது. திராவிட நாடு கோரிக்கையை தி.மு.க முன்வைத்தபோது, காமன்வீல் கட்சி ஆதரித்தது.

1952 தேர்தலில் காமன் வீல் கட்சி சார்பில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற பின்னர் காங்கிரஸ் பக்கம் வந்த காமன்வீல் கட்சி, நாளடைவில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது. மாணிக்க வேலு நாயக்கர், காங்கிரஸ் அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். ராஜாஜி, காமராஜர் என இருவரது அமைச்சரவையிலும் முக்கியமான அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றினார்.

அதேபோல் பழைய தென் ஆற்காடு மாவட்டப் பகுதிகளில் செல்வாக்குடன் இருந்த ராமசாமி படையாட்சி, ‘உழவர் உழைப்பாளர்’ என்னும் கட்சியை உருவாக்கியிருந்தார். 1952 தேர்தலில் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பாகப் போட்டியிட்டு, 19 பேர் வெற்றி பெற்றார்கள். இந்தக் கட்சியும் நாளடைவில் காங்கிரஸ் கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்டது. ராமசாமி படையாட்சி, காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.

80களில் ஆரம்பிக்கப்பட்ட வன்னியர் சங்கம், அரசியல் ரீதியாக இரண்டாகப் பிளவுபட்டிருந்த மக்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது. அதற்கு முன்னதாகவே வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு பற்றிய குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன. அவற்றை உரத்து வெளிப்படுத்திய வகையின் வன்னியர் சங்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

வன்னியர்கள் கடுமையான உழைப்பாளிகள். பெரும்பாலும் விவசாயக்கூலிகளாக இருந்தார்கள். 80கள் வரை பத்துச் சதவிகித வன்னியர்களுக்கே சொந்தமாக விளைநிலங்கள் இருந்தன. எஞ்சியோர் கார்கார்த்தார், சைவப்பிள்ளை, முதலியார், நாயுடு, ரெட்டியார், பிராமணர்கள் போன்றவர்களுக்குச் சொந்தமான விளைநிலங்களைச் சார்ந்தே இருந்து வந்திருக்கிறார்கள்.

இது தவிர கட்டடத் தொழிலாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். கோயில் பணியாளர்களாகவும், அனைத்து விதமான வியாபாரச் சேவைகளிலும் வன்னியர்கள் முத்திரை பதித்திருக்கிறார்கள். வன்னியர்களால் முன்னேறிய ஜாதியினர், தலித் மக்கள் என அனைத்துத் தரப்பினரோடும் நேரடியாக உறவாட முடிந்தது. இட ஒதுக்கீட்டிற்கானப் பலன்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற ஜாதிகளுக்கே கிடைக்கிறது என்பது அவர்களின் நீண்ட நாளைய மனக்குறையாக இருந்து வந்திருக்கிறது.

1969ல் தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை எடுத்த ஆய்வும் அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஏ.என். சட்டநாதன் கமிட்டியும் இட ஒதுக்கீடு விஷயத்தில் புதிய பரிந்துரையைத் தந்தார்கள். 1971ல் வெளியான சட்டநாதன் கமிட்டியின் அறிக்கைப்படி தமிழ்நாட்டிலிருந்த வன்னியர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக இருக்கலாம். அதாவது தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் வன்னியர்கள் 12.5 சதவிகிதம் இருக்கக்கூடும்.

சட்டநாதன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் என்னும் பிரிவு உருவாக்கப்பட்டது. அதில் வன்னியர்கள் இடம் பெற்றார்கள். அடுத்து வந்த 15 ஆண்டுகளுக்கு வன்னியர்களுக்கென்று தனியாக இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அவ்வப்போது ஆர்ப்பாட்டம், சாலை மறியல் தொடர்ந்தன. அதன் உச்சக்கட்டமாகத்தான் 1987 செப்டம்பரில் தமிழகம் தழுவிய அளவில் ஒருவாரம் சாலை மறியல் நடத்தப்பட்டது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்; மத்திய அரசுப் பணிகளில் 2 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் கோரிக்கை. அதற்கு முன்னர் சாதி அமைப்புகளெல்லாம் கூடி தீர்மானம் நிறைவேற்றியதுண்டு. அதிகபட்சமாக அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள். சம்பந்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடைகள், தொழிற்கூடங்கள் கூட அடைக்கப்படும். சிறிய அளவிலான ஆர்ப்பாட்டம், ஊர்வலம் கூட நடந்ததுண்டு.

ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்துத் தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்குமளவுக்கு பொதுப் போக்குவரத்து ஸ்தம்பித்ததும், முழு அளவில் கடையடைப்புகள் நடத்தப்பட்டதும் 1987 காலகட்டத்தில் நடந்தேறின. ஒரு வார காலம் வட தமிழ்நாட்டின் குக்கிராமங்களிலும் தொடர்ந்து நடந்த சாலை மறியல் போராட்டங்களில் 21 பேர் உயிரிழந்தார்கள். 30 கோடி மதிப்பிலான பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது.

வன்னியர் சங்கத்தினரின் சாலை மறியல் போராட்டத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு மூடி மறைக்கப் பார்த்தது. அப்போது உடல் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர், அமெரிக்கா சென்றிருந்தார். சாலையோரத் தடைகள் அகற்றப்பட்டுவிட்டன என்று அரசு தெரிவித்தது. சென்னைக்கு வந்து சேரவேண்டிய வாகனங்கள் எதுவும் வரவில்லை. காய்கறி, பால் முதலிய அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் சென்னைவாசிகள் திணறிப்போனார்கள். சென்னையில் காலை நேரத்தில் மட்டுமே பால் கிடைக்கும் என்று அரசு அறிவித்தது.

வட தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கையாக 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு திருச்சியில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்கள். விக்கிரவாண்டி தாண்டி ஒரு வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நாளுக்கு நாள் போராட்டம் மோசமாகி, எட்டாவது நாளன்று பெரிய அளவில் பந்த், கடையடைப்பு நடத்தப்பட்டது. அன்று நடந்த கலவரத்தையும் அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டையும் தமிழகம் என்றும் மறக்காது.

செப்டம்பர் 16, 1987. சென்னையில் தி.மு.க. சார்பாக முப்பெரும் விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட தி.மு.க தொண்டர்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். லாரி, பேருந்து, வேன் என சென்னையிலிருந்து கிளம்பியவர்களால் விழுப்புரத்தைச் சென்றடைய முடியவில்லை. செங்கல்பட்டில் ஆரம்பித்த போக்குவரத்து நெருக்கடி பல மணி நேரங்கள் நீடித்தது.

தேசிய நெடுஞ்சாலை மட்டுமல்ல தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களின் வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலை, உள்ளூர் சாலைகளை இணைக்கும் பகுதிகளில் கூட சாலையோர மரங்களை வெட்டி, குறுக்காகக் கிடத்தியிருந்தார்கள். சாலையின் நடுவே ஏராளமான சரளைக் கற்கள் கொட்டப்பட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

திண்டிவனத்திற்கும் விழுப்புரத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. முன்னேறிச் செல்லவும் முடியவில்லை. வந்த வழியே திரும்பி சென்னைக்கும் செல்ல முடியாத நிலை இருந்தது. உள்ளூர் நிர்வாகம் செய்வதறியாமல் திகைத்தது. இரவு முழுவதும் நடு ரோட்டில் காத்திருந்து வெறுத்துப்போன தி.மு.க தொண்டர்கள், சாலையைச் சரி செய்வதற்காகக் களத்தில் இறங்கினார்கள்.

சாலைகளில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கற்களை நகர்த்தியும், மரங்களை அகற்றியும் போக்குவரத்திற்குத் தடையாக இருந்தவற்றை அகற்றினார்கள். தி.மு.க தொண்டர்களுக்கு உதவுவதற்காக உள்ளூர் மக்களும் ஓடி வந்தார்கள். போராட்டக்காரர்கள் அவர்களைத் தடுத்தபோது, மோதல் ஏற்பட்டது. ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள். ஆனாலும் நிலைமை கைமீறவே, காவல்துறையினரால் தடியடி நடத்தப்பட்டது.

தடியடியில் 7 பேர் கொல்லப்பட்டதால் வட தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையால் தாக்கப்பட்டத் தகவல் கிடைத்தவுடன் போராட்டக்காரர்கள் இன்னும் பலரை அழைத்துக்கொண்டு திரும்ப வந்தார்கள். மறுபடியும் தாக்குதல் தொடர்ந்தது. காவல்துறையினர் தலையிட்டு, திண்டிவனம் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்களை அனுப்பி வைக்கும் முயற்சி செய்தார்கள். அத்தகைய முயற்சியெல்லாம் தோற்றுப்போனது. நிலைமையைச் சமாளிக்க தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் வரவழைக்கப்பட்டார்கள்.

சாலையின் குறுக்கே தடையாக இருந்த மரங்களைக் காவல்துறையினர் அகற்றுவதைக் கண்டித்து பெண்களும், குழந்தைகளும் தர்ணா செய்தார்கள். கடும் எதிர்ப்பையும் மீறி, காவல்துறையினர் மரங்களை அகற்றிவிட்டு நகர்ந்தால், போராட்டக்காரர்கள் அவற்றையெல்லாம் மீண்டும் கொண்டு வந்து அடுக்கி, சாலை மறியலைத் தொடர்ந்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அத்தனை பேரும் பங்கேற்ற போராட்டத்தைத் தமிழகம் அதற்கு முன்னர் சந்தித்ததில்லை.

சாலை மறியலின் இறுதி நாளன்று முழு கடையடைப்பு நடந்தது. கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான குடிசைகள் கொளுத்தப்பட்டன. தலித் மக்கள் தங்களது உடைமைகளை இழந்தார்கள். சாலை நடுவே தடையாக இருந்த மரங்களையும் கற்களையும் அகற்றக் காவல்துறையினருக்கு உதவி செய்த காரணத்தால் அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன. அன்று ஏற்பட்ட கசப்புணர்வு, வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் நடுவே ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. இன்றுவரை அந்த இடைவெளியை இட்டு நிரப்ப முடியாத நிலைதான் இருந்து வருகிறது.

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *