1982 மே மாதம். பாண்டிபஜாரில் உள்ள கீதா கபேவில் நண்பருடன் அமர்ந்திருந்த உமா மகேஸ்வரன், இரவு உணவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தார். இலங்கைத் தமிழ்ப் போராளி. விடுதலைப்புலிகள் அமைப்பின் முதல் செயல் தலைவராக இருந்தவர். அதே ஹோட்டலுக்கு எதிரே பிரபாகரன் தன்னுடைய நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார். பிரபாகரன் யார் என்று அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ஆனால், அன்றைய பிரபாகரனை பாண்டிபஜாரில் யாருக்கும் தெரியாது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கிறார்கள். பிரபாகரனைக் கண்டதும் அவசர அவசரமாக உமா மகேஸ்வரன் பேண்ட் பாக்கெட்டைத் துழாவ ஆரம்பித்ததும், பிரபாகரன் முந்திக்கொண்டார். உமா மகேஸ்வரன் துப்பாக்கியை எடுத்துத் தன்னைச் சுடுவதற்கு முன், தான் சுட்டுவிட வேண்டுமென்று நினைத்தார். அடுத்தடுத்து ஆறு குண்டுகள் வெடித்தன. எதுவும், யாரையும் காயப்படுத்தவில்லை. ஜெய்சங்கர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நேரில் பார்ப்பது போல் இருந்தது.
தி.நகரின் ஜன நெருக்கடியான பாண்டி பஜாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை. ஆனால், தொடர் துப்பாக்கிக் குண்டு வெடிச்சத்தம் கேட்டு, அந்தப் பிராந்தியமே நடுங்கிப் போய்விட்டது. அருகிலிருந்த பாண்டிபஜார் காவல்நிலையத்திலிருந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டார்கள். பிரபாகரனையும் அவருடன் இருந்த அவரது நண்பரையும் சுற்றி வளைத்துப் பிடித்தார்கள். உமா மகேஸ்வரன் அங்கிருந்து எப்படியோ தப்பியோடிவிட்டார்.
பிடிபட்ட பிரபாகரன், சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு நாள் கழித்து, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த உமா மகேஸ்வரனும் கைது செய்யப்பட்டார். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அடையாறில் பிரபாகரன் தங்கியிருந்த வீடு, சோதனையிடப்பட்டது. இருவரது கைதுக்குப் பின்னர்தான் தமிழ்ப் போராளிகள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பது தெரிந்தது. அவர்களுக்கு இடையே போட்டியும் மோதலும் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்தார்கள். பிரபாகரன் மதுரையிலும் உமா மகேஸ்வரன் சென்னையிலும் தங்க வைக்கப்பட்டார்கள். இருவரும் ஒரே ஊரில் இருந்தால் திரும்பவும் மோதல், துப்பாக்கிச்சூடு நடக்கக்கூடும் என்று நினைத்தார்கள். இருவரும் தினமும் காவல்நிலையத்திற்கு வந்து கையொப்பமிடவேண்டும் என்பது நிபந்தனை.
இலங்கையில் பிரபாகரன் ஒரு தேடப்படும் குற்றவாளி என்பதால் ஜெயவர்த்தனே அரசும் பாண்டி பஜார் வழக்கு பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியது. பாண்டிபஜார் வழக்கில் பிரபாகரனை ஜாமீனில் எடுத்தவர் யார் என்பது சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சையானது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியின் அறிவுறுத்தலின்படி, தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் பிணையில் வருவதற்கு உதவி செய்ததாகச் சொல்லப்பட்டது. அது உண்மையென்றால் எம்.ஜி.ஆர். அரசு நிச்சயம் அனுமதித்திருக்காது என்பது வேறு விஷயம். போட்டி அரசியல் உச்சத்தில் இருந்த நேரம்.
தி.மு.கவினர் பிரபாகரனுக்கு உதவி செய்ததாக வந்த செய்திகளை வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மறுத்திருந்தார். உண்மையில் பழ. நெடுமாறனோடு சேர்ந்து தானும் இன்னும் சில நண்பர்களும் பிரபாகரனுக்குப் பிணை ஏற்பாடு செய்து தந்ததாகவும், பின்னர் பழ. நெடுமாறனும் அவரது நண்பர்களும் மதுரையில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, பிரபாகரனை அங்கே தங்க வைத்துக் கவனித்துக் கொண்டதாகவும் விளக்கம் தந்திருந்தார்.
அதெல்லாம் சரி, பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஏன் மோதிக்கொண்டார்கள்? ஜன நடமாட்டமுள்ள பாண்டிபஜாரில் ஒருவரையொருவர் துப்பாக்கியில் சுட்டுக்கொள்ள முயற்சி செய்ததற்கு என்னதான் காரணம்? அவர்களுக்குத் துப்பாக்கி எப்படிக் கிடைத்தது? அவர்கள் ஏன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள்? இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கு பாண்டி பஜாரில் என்ன வேலை? ஏகப்பட்ட கேள்விகள். எல்லாவற்றிற்கும் விடை தேடுவோம்.
0
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். உமா மகேஸ்வரனைத்தான் தமிழ்நாட்டில் நிறையப் பேருக்குத் தெரியாது. 1976ல் தமிழ் ஈழம் என்னும் லட்சியத்தை முன்வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது உமா மகேஸ்வரன் அதன் முதல் தலைவராக இருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரபாகரன்தான் சகல விஷயங்களையும் தீர்மானிப்பவர் என்றாலும் அரசியல் கட்சியின் பின்புலத்தோடு இருந்த உமா மகேஸ்வரனைத் தலைவராக்கிட முடிவு செய்தார். உமா மகேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவர்.
எழுபதுகளில் ஆயுதமேந்திய போராளிக்குழுக்கள் தலையெடுக்க ஆரம்பித்தபோது, உமா மகேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி ஆயுதமேந்தினார். பின்னர் பாலஸ்தீனத்தில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட உமா மகேஸ்வரன், இலங்கை திரும்பியதும் பிரபாகரனுடன் இணைந்து விடுதலைப்புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கி வந்தார். நான்கு ஆண்டுகள் இருவரும் நெருக்கமாகச் செயல்பட்டார்கள். பிரபாகரனை விடப் படித்தவர். நன்றாக ஆங்கிலம் பேசக்கூடியவர் என்பதால் உமா மகேஸ்வரன் தலைமைப் பொறுப்புக்குப் பொருத்தமாக இருந்தார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரபாகரனுக்கு எதிராக முதல் முதலில் போர்க்கொடி உயர்த்தியவர், உமா மகேஸ்வரன். அன்றைய காலகட்டத்தில் பிரபாகரனை எதிர்த்து இயக்கத்திற்குள் யாரும், எதுவும் பேசமுடியாத நிலைதான் இருந்தது. பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் செல்வாக்குடன் இருந்த உமா மகேஸ்வரன், ஒரு கட்டத்தில் இயக்கத்தை விட்டு வெளியேறவும் முடிவு செய்தார். இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசல் வந்ததற்கு ஒரு பெண் காரணமாக இருந்தார்.
சென்னையில் தண்டையார்பேட்டையில் தங்கியிருந்தபோது, உமா மகேஸ்வரனோடு பெண் விடுதலைப்புலியான ஊர்மிளா என்பவரும் தங்கியிருந்தார். இருவருக்கும் இடையே நீண்டகாலமாக நெருக்கம் இருந்து வந்தது. இது சென்னையில் இருந்தவர்களுக்கும் தெரிந்தாலும், பிரபாகரனின் கவனத்திற்கு அப்போது வந்திருக்கவில்லை. ஒருமுறை சென்னைக்கு வந்திருந்த பிரபாகரன், இதுபற்றிக் கேள்விப்பட்டதும் உமா மகேஸ்வரனிடம் விளக்கம் கேட்டார். புலிகளின் அமைப்பினர் கட்டுக்கோப்பான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அங்கே திருமணம், காதல் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தது.
பிரபாகரனின் கேள்விகளுக்கு உமா மகேஸ்வரனிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை. உமா மகேஸ்வரனைத் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். ஆனால், அவர் சம்மதிக்கவில்லை. அங்கிருந்து வெளியேறி, வேறிடத்தில் தங்கிக் கொண்டார். ஊர்மிளாவுடனான தொடர்பும் தொடர்ந்திருக்கிறது. இதனால் கடுங்கோபம் கொண்ட பிரபாகரன், சென்னை சைதாப்பேட்டையில் வைத்து உமா மகேஸ்வரனைத் தீர்த்துக் கட்ட திட்டமிட்டார். பிரபாகரனின் நலம் விரும்பிகளோ விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாமென்றார்கள்.
சைதாப்பேட்டை தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உமா மகேஸ்வரனிடம் பிரபாகரன் சார்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. உங்களைக் கொல்லப்போவதில்லை. ஆனால், இனிமேல் அரசியலில் ஈடுபடக்கூடாது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் போய்விடவேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில் உமா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பிரபாகரனைப்போல் அவர் இலங்கை அரசால் தேடப்படும் குற்றவாளி அல்ல என்பதால் அவரால் இலங்கையில் இருக்க முடிந்தது. அரசியல் தொடர்புகள், நீண்ட கால அனுபவத்தோடு, நிர்வாகத் திறமையும், நேர்மையும் இருந்தது. ஊர்மிளா விவகாரம் தவிர வேறெந்தக் குற்றச்சாட்டிலும் அவர் சிக்கிக் கொள்ளவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய சில மாதங்களில் பிளாட் என்னும் தனி அமைப்பை ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில்தான் பாண்டிபஜாரில் எதிர்பாராதவிதமாக அந்தத் திடீர் சந்திப்பு நிகழ்ந்தது. இருவரும் பரஸ்பரம் தாக்குவதில்லை என்று எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. ஆனால், அதையும் மீறி, அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்கிற அவநம்பிக்கையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களை மீறி, துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டார்கள்.
பிரபாகரன் தன்னுடைய பெயரை கரிகாலன் என்றும், உமா மகேஸ்வரன் தன்னுடைய பெயரை முகுந்தன் என்றும் சொல்லியிருந்ததால் அதே பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். முதல் முதலாக பிரபாகரனின் கைரேகையும், புகைப்படமும் ஒரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பிரபாகரன், உமா மகேஸ்வரன் பற்றியெல்லாம் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்குத் தெரிய வந்ததமைக்கு பாண்டிபஜார் சம்பவம்தான் காரணமாக இருந்தது.
அதுவரை தமிழ்நாட்டு மக்களுக்கு இலங்கைத் தமிழ் போராளிக்குழுக்களைப்பற்றி எதுவும் தெரியாது. இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் அத்தனை பேரும் ராமேஸ்வரம் வழியாகத்தான் வருகிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். அரை டஜனுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் தொடங்கி ராமேஸ்வரம் வரை கிழக்குக் கடற்கரையோரக் கிராமங்களில் ஆயுதப் பயிற்சி பெற்று வருவது நிறையப் பேருக்குத் தெரியாது.
போராளிக்குழுக்களுக்கு இடையே இருந்த அரசியல், அதிகாரப் போட்டியெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குப் புரியவில்லை. ஒரே நாடு, ஒரே இனம் என்கிற உயர்ந்த லட்சியத்தை நோக்கி நடைபோடும் துடிப்பு மிக்க இளைஞர்களாகத்தான் அவர்களைப் பார்த்தார்கள். இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்காகச் சிங்கள ராணுவத்தை எதிர்த்து நிற்கும் போராளிக் குழுக்களுக்கு உதவி செய்வதைக் கடமையாக நினைத்தார்கள். நிதியுதவி, தார்மிக ஆதரவு என எதையும் அளிப்பதற்குத் தயாராக இருந்தார்கள்.
ஆனால், போராளிக்குழுக்களின் தலைவர்களோ தனி மனித ஈகோவில் சிக்கிக்கொண்டு, போட்டி அரசியலில் இறங்கி தங்களுடைய அடையாளத்தைத் தொலைத்தார்கள். அதில் பலர் பரிதாபமாக உயிரையும் விட்டார்கள். உமா மகேஸ்வரனும் அந்தப் பட்டியலில் இடம் பெறுகிறார்.
பிளாட் அமைப்பை உலகளவில் பிரபலப்படுத்த நினைத்த உமா மகேஸ்வரன், ஒரு விஷப்பரீட்சையில் இறங்கினார். இலங்கைக்குப் பக்கத்தில் இருந்த மாலத்தீவைக் கைப்பற்ற நினைத்தார். அங்கு ஆட்சியில் இருந்த அதிபரான அப்துல் கயூம், பாகிஸ்தானுக்கு நெருக்கமானவராக இருந்தார். அவருக்கு எதிரானவர்கள் உமா மகேஸ்வரனோடு தொடர்பில் இருந்தார்கள். அப்துல் கயூமுக்கு எதிராக ஓர் உள்நாட்டுக் கலகத்தில் இறங்குவதன் மூலமாக, ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம் என்று நினைத்தார்கள்.
பிளாட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே ரகசியமாக மாலத்தீவில் ஊடுருவியிருந்தார்கள். முன்னாள் மாலத்தீவு அதிபரான இப்ராஹிம் நசீரின் ஆதரவு பிளாட் அமைப்பிற்கு இருந்தது. ஒரு கப்பலில் ஆயுதங்களுடன் உமா மகேஸ்வரன் மாலத்தீவு போய் இறங்கியபோது, அவர்களை எதிர்ப்பதற்கு ஆளில்லை. அரசுக் கட்டடங்களைச் சுற்றி வளைத்தவர்கள், அதிபர் அப்துல் கயூமைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அதற்குள் ரகசிய இடத்தில் பத்திரமாக இருந்த அப்துல் கயூம், இந்தியாவின் உதவியைக் கேட்டார்.
இந்தியாவிடமிருந்து மாலத்தீவு அதிபருக்கு ஆதரவு கிடைக்கும் என்பதை பிளாட் இயக்கத்தினர்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் அதிரடியாக 2000 இந்திய ராணுவத்தினர் மாலத்தீவில் இறங்கினார்கள். இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் காக்டஸ் ஆரம்பமானது. அடுத்து வந்த பத்து மணி நேரத்தில் பிளாட் அமைப்பினரை விரட்டியடித்து, மாலத்தீவை மீட்டார்கள். இந்திய வீரர்கள் வருவதற்குள்ளாகவே பிளாட் அமைப்பினர் அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்துவிட்டார்கள்.
மாலத்தீவு ஆட்சிக்கவிழ்ப்பு, இந்தியாவின் தலையீட்டால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ஏனோ, பிளாட் அமைப்பினரைத் துரத்திப் பிடிக்க முடியவில்லை. அதுவரை இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் நெருக்கமான நாடாக இருந்த மாலத்தீவு, இந்தியாவோடு நெருக்கமாகிவிட்டது. இந்தியாவின் ஆதரவோடுதான் பிளாட் இயக்கத்தினர் இப்படியொரு முயற்சியில் ஈடுபட்டதாக ஒரு பேச்சும் உண்டு.
எது எப்படியோ, மாலத்தீவைக் கைப்பற்றும் முயற்சியில் பிளாட் அமைப்பினருக்கு அவமானகரமான தோல்விதான் மிஞ்சியது. மாலத்தீவில் ஆட்சி மாற்றத்திற்கு உதவ நினைத்தோம். அதற்காக நாங்கள் எந்தவொரு உதவியையும் யாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்குத்தான் ஏராளமான இழப்புகள் என்றார் உமா மகேஸ்வரன். அடுத்த ஆண்டே, தன்னுடைய இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் கொழும்பில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
0