நவம்பர் 1974. காலை 9 மணி. பாட்னாவின் காந்தி மைதானம் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. கங்கைக் கரையில் 60 ஏக்கருக்கும் பரந்து விரிந்திருக்கும் பெரிய மைதானம். பிரிட்டிஷார் காலத்தில் கோல்ப் விளையாடுமிடமாக இருந்தது. இந்திய சுதந்தரப் போராட்டத்தில் காந்தி மைதானத்திற்கு தனியிடமுண்டு. பீகாரின் சம்பாரன் இயக்கம் தொடங்கி வெள்ளையனே வெளியேறு வரை ஏராளமானப் போராட்ட நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறது.
பாட்னாவின் காந்தி மைதானத்தில் ஊர்வலம் நடத்தவில்லையென்றால் அவரொரு தேசியத்தலைவரே கிடையாது என்றுகூட சொல்வார்கள். காந்தி, நேரு, ராஜேந்திர பிரசாத், சர்தார் படேல் என பல தேசியத் தலைவர்கள் பலமுறை பேசிய இடம். பல முக்கியமான அரசியல் முடிவுகளும் இங்குதான் வெளியிடப்பட்டன. அப்படியொரு வரலாற்றுப் பின்னணி கொண்ட இடத்தில்தான் சுதந்தரமடைந்து 25 ஆண்டுகள் கழித்து இன்னொரு முக்கியமான மக்கள் போராட்டமும் அரங்கேறியது.
‘பாட்னா சலோ’ என்னும் கோஷத்தோடு ஒரு மக்கள் போராட்டத்திற்குப் பீகார் முழுவதும் அழைப்பு விடப்பட்டது. அதை ஒன்றை மனிதராக முன்னெடுத்தவர், ஜெ.பி.பி. என்னும் ஜெயப்பிரகாஷ் நாராயணன். சுதந்தர போராட்டத் தியாகி, காந்தியவாதி, சிறந்த தேச பக்தர். சுதந்தரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் குறிப்பாக எழுபதுகளின் இறுதியில் ஜெ.பியின் ஊழலுக்கு எதிரான இயக்கம் நாடு முழுவதும் பரவி, அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்தியது.
ஜெ.பி, பழுத்த காங்கிரஸ்காரர் மட்டுமல்ல நேரு குடும்பத்திற்கும் நெருக்கமானவர். நேரு, படேலை விட மூத்தவர். இந்திரா காந்தியைத் தனது மகளாக நினைத்தவர். ஆனாலும், வங்கதேசத்து வெற்றிக்குப் பின்னர் இந்தியாவை ரட்சிக்க வந்த காளியாக விஸ்வரூபமெடுத்து நின்ற இந்திராவின் அரசை தனியொருவராக எதிர்க்கத் துணிந்தார்.
ஊழலை ஒழிப்போம் என்று பீகாரிலிருந்து எழுந்த ஜெ.பியின் ஒற்றைச் சொல்லுக்கு இந்திரா காந்தியே ஆடிப்போனார். ஆனால், ஜெ.பி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு முதல் எட்டு மாதங்கள் வரை அதன் தாக்கம் பீகாரைத் தாண்டி வெளியே தெரியவில்லை. இதுதான் பின்னாளில் நாடு முழுவதும் பரவி, பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பியிருக்கமாட்டார்கள்.
நவம்பர் 1974. காலை 9 மணி. காந்தி மைதானத்தில் ஊர்வலமும், அதன் முடிவில் பொதுக்கூட்டமும் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. பீகார் முழுவதும் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசு நிர்வாகங்களில் ஊழல் மலிந்து போனதை எதிர்த்து பாட்னாவை நோக்கி ஊர்வலம் வரும்படி மக்களிடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
பீகாரைப் பொறுத்தவரை ஜெ.பி. ஒரு மூத்த தலைவர். அவரது அழைப்புக்கு அர்த்தம் இருந்தது. 80 வயது நிரம்பிய ஒரு சுதந்தரப் போராட்டத் தியாகியின் போராட்டம் என்பதால் மாநிலம் முழுவதுமிருந்து காந்தியவாதிகள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது.
பாட்னா நகரத்தின் நாலாபுறமும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். நகரத்திற்குள் வருபவர்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அதையும் மீறி, மக்கள் கூட்டம் கூட்டமாக காந்தி மைதானத்தை நோக்கி நடந்து வந்தார்கள். பாட்னா நகரத்து வாசிகளும் வந்தவர்களை வரவேற்று, சப்பாத்தி கொடுத்து உபசரித்தார்கள்.
ஜெ.பியின் அழைப்பிற்கு ஆளுங்கட்சி எம்.எல். ஏக்களும் செவி சாய்த்தார்கள்.
20 ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெ.பியின் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். இதெல்லாம் இந்திய அரசியலில் அதிசயம்! அற்புதம்!
ஜெ.பிக்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து மட்டுமல்ல ஜனசங்கத்திலிருந்தும் ஆதரவு கிடைத்தது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் அவர்களும் பங்கேற்றார்கள். காந்தி மைதானத்தில் நடந்த ஊர்வலத்திற்கு எஸ்.என். மிஷ்ரா, நானாஜி தேஷ்முக் உள்ளிட்டவர்களும் ஜெ.பியுடன் உடன் வந்தார்கள். மாநிலம் தழுவிய போராட்டம் என்றாலும் எங்கே ஆரம்பித்து, எங்கே முடிப்பது என்பதில் யாரும் திட்டமிடவில்லை என்பதால் ஏகப்பட்ட குழப்பம்.
ஜெ.பி. எந்தப் பக்கமாக நடந்து வருவார் என்பது தெரியாத காவல்துறையினரும் குழம்பிப் போனார்கள். மைதானத்திற்குள் நுழைந்த ஜெ.பி. அதைச் சுற்றி நடக்க ஆரம்பித்ததும் அவர் பின்னால் ஒரு பெருங்கூட்டமே நடக்க ஆரம்பித்தது. எங்கே போவது என்று தெரியாமல் காந்தி மைதானத்தை மூன்று முறை சுற்றி வந்தார்கள். அதற்குள் கூட்டத்தில் நடந்த தள்ளுபடியில் குழப்பமாகி, மூச்சு வாங்கியபடி ஒரு மரத்தடியில் அமர்ந்தார்கள்.
மைதானத்திற்குள் திரண்டு வந்த கூட்டத்தால் நெரிசல். யாரையும் உள்ளே அனுமதிக்காமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பினார்கள். ஓய்வெடுத்த ஜெ.பி, திரும்பவும் நடக்க ஆரம்பிக்கவே, அவருடன் வந்தவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். ஆவேசமான கூட்டத்தினர் மோதலில் இறங்கினார்கள். தள்ளுமுள்ளு ஏற்படவே, ஜெ.பியும் மற்றத் தலைவர்களும் மைதானத்தின் காம்பவுண்ட் சுவரேறி குதிக்க வேண்டியிருந்தது.
கட்டுக்கடங்காத கூட்டத்தை விரட்டியடிக்க காவல்துறையினர் தடியடியில் இறங்கினார்கள். கலைந்து போகாமல் தாக்க ஆரம்பித்த தொண்டர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை வீசப்பட்டது. ஜெ.பியைப் போல் வயதான தொண்டர்கள்தான் கூட்டத்திற்கு வருவார்கள் என்று நினைத்து அசிரத்தையாக இருந்துவிட்டார்கள். வந்து குவிந்தவர்களில் நிறையப் பேர், மாணவர்கள்.
பாட்னா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த துடிப்பான மாணவர்கள் எவரும் காவல்துறையினரின் தடியடியில் கலைந்து போகவில்லை. ஏராளமான மாணவர்களுக்கு மண்டையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. போராட்டத்தை வழிநடத்திய ஜெ.பியும் தடியடியில் சிக்கிக்கொண்டார். தடியடி பட்டுக் கீழே தள்ளப்பட்டார். அவரது தோள்பட்டையிலும், முழங்காலிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
‘ஊழலுக்கு எதிராகப் போராடினால் ஏன் பதற்றமடைகிறார்கள்? அராஜகப் பாதையில் செல்லும் காங்கிரஸ் அரசை நான் சும்மா விடமாட்டேன். இதை அரசியலாக்குவது என்னுடைய வழக்கமல்ல. ஊழலுக்கு எதிராக ஒன்று திரண்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்தேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சியிலிருந்தும் தொண்டர்களும் மாணவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களைக் காவல்துறையினர் தாக்குவது எப்படிச் சரியாகும்?’ என்று உணர்ச்சிவசப்பட்ட ஜெ.பியை அவரது ஆதரவாளர்கள் அமைதிப்படுத்தினார்கள்.
மறுநாள் பாட்னா முழுவதும் பந்த் நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால், அடுத்து என்ன செய்வதென்பதில் இயக்கத்தினருக்குக் குழப்பம் இருந்தது. கண்ணீர் புகைக் குண்டு வீச்சுக்கு பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. அங்கிருந்து வெளியேற மறுத்த ஜெ.பி, நானாஜி தேஷ்முக் உள்ளிட்டவர்களைக் காவல்துறை கைது செய்தது.
ஒரு பேருந்து வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் அதில் ஏற்றப்பட்டார்கள். தொண்டர்களோடு தொண்டர்களாக ஜெ.பியும் அதில் ஏறிக்கொண்டார். அவர் கைது செய்யப்படவில்லை என்றும் அவரை இறங்குமாறும் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், ஜெ.பி. இறங்க மறுத்துவிட்டார்.
ஜெ.பிக்கு மாநிலத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு மீது கோபமில்லை. ஊழல்கள் மலிந்துவிட்டதற்கு மத்திய அரசின் செயல்பாடுகளையே குற்றம் சாட்டினார். ஆனாலும், அவர்மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படக்கூடாது என்பதில் மத்திய அரசு நிதானம் காட்டியது.
காந்தி மைதானத்தில் நடந்த தடியடிச் சம்பவத்திற்குப் பின்னரே ஜெ.பியின் பெயர் நாடு முழுவதும் போய்ச் சேர்ந்தது. அதுவரை ஊழலுக்கு எதிரான அவரது இயக்கம் பீகாரில் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. ஆரம்பத்தில் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசைக் குற்றம் சாட்டினார். பின்னர் நிலைமை மாறிவிட்டது. அதற்குக் காரணமும் இருந்தது.
மாநில முதல்வராக அப்துல் கபூர் என்பவர் பொறுப்புக்கு வந்தார். சுதந்தரப் போராட்டத் தியாகியான அப்துல் கபூர் மீது மக்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டு. அவரும் தேச பக்தர், எளிமையானவர் என்பதால் ஜெ.பி. அவர் மீது விமர்சனம் வைத்ததில்லை. பீகாரில் நடைபெறும் ஊழல்களைப்பற்றி ஜெ.பி. பேச ஆரம்பித்ததும், டெல்லி மேலிடம் கபூரை முதல்வராக நியமித்துவிட்டது.
ஜெ.பி. இயக்கத்தைக் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தது. அரசு நினைத்தால் ஊழல் செய்தவர்களைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க முடியும். இதற்கெல்லாம் எதிர்ப்பு இயக்கம் தேவையில்லை என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. இடதுசாரிகள் முன்வைத்த திட்டத்தை பீகார் அரசு ஏற்றுக்கொண்டது. ஜெ.பி. இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்யவேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கவனமாக இருந்தன.
ஜெ.பி. இயக்கத்திற்கு ஓர் எதிர் இயக்கம் ஆரம்பிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் தயாராக இருந்தன. பம்பாயில் நடந்த கூட்டத்தில் பேசிய இடதுசாரித் தலைவர் டாங்கே, இன்னும் தேர்தலுக்கு நிறைய மாதங்கள் இருக்கும்போது எதற்காக அந்த வயதான மனிதர் போராட்டத்தில் இறங்குகிறார்? தேர்தல் வரும் வரை ஏன் காத்திருக்கக்கூடாது என்று கேட்டார். ஜெ.பி. இயக்கத்தை முடக்க ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சியும் இருந்தது. அவரவர் கவலை, அவரவர்க்கு.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சோஷலிஸ்ட் கட்சியில் இருந்தாலும் ஜெ.பிக்கு காங்கிரஸ் கட்சியில் நிறைய நண்பர்கள் உண்டு. மகாத்மா காந்தியால் புகழப்பட்டவர். பத்தாண்டுகள் சர்வோதய இயக்கத்தில் பணிபுரிந்தவர். நேரு தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள நினைத்தாலும், ஜெ.பி. அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கட்சி அரசியல், அதிகார அரசியலில் எந்நாளும் ஆர்வம் இருந்ததில்லை. அவர் நினைத்திருந்தால் ஜனாதிபதியாகக் கூட வந்திருக்க முடியும்.
05பிரிட்டிஷாருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தின் பழைய வடிவத்தையே வேறு வடிவில் செயல்படுத்த வேண்டுமென்று நினைத்தார்.
மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றார் ஜெ.பி. அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டிலும் மாணவர் போராட்டங்கள் நடந்தன. பள்ளி, கல்லூரிகளில் இந்தி வகுப்புகள் புறக்கணிக்கப்பட்டன. யாரும் வழிநடத்தாமல், தன்னெழுச்சியாகவே நடந்தது. ஆனால், ஜெ,பியோ அதை ஒரு வேண்டுகோளாக முன்வைத்தார். தேர்வுகள் தள்ளிப்போனது. மார்ச் மாதம் நடக்க வேண்டிய தேர்வுகள், ஆகஸ்ட் மாதத்தில் நடந்தேறின.
ஜெ.பியின் போராட்ட வடிவம், ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டது. பீகார் அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் எதிராகs செயல்படுகிறார். இதனால் அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது. ஒரு நிழல் அமைச்சரவையை நடத்திக்கொண்டிருக்கிறார் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஆனால், ஜெ.பியின் போராட்டத்திற்குப் பாமர மக்களின் ஆதரவும் இருந்தது. அதனால்தான் அவரால் தொடர்ந்து செயல்பட முடிந்தது.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் பீகாரில் ஆரம்பித்தாலும் நாடு முழுவதும் சென்றடைய எட்டு மாதங்களாகிவிட்டன. பாட்னா சலோ நிகழ்விற்குப் பின்னர் வட இந்திய மாநிலங்களில் ஜெ.பியின் போராட்டம் ஒரு எழுச்சியாகவே மாறிவிட்டது. மாணவர்கள் கல்லூரியைப் புறக்கணித்தார்கள். வட இந்திய மாநிலங்களில் பணிபுரியும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியும், வெறுப்பும் எழுந்தது.
பீகாரைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கட்சியால் நிலைமையைச் சமாளிக்க முடிந்தது. எந்தச் சர்ச்சையிலும் சிக்காத முதல்வர் கபூர், வெளிப்படையான அரசை முன் நடத்தினார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றன. கட்சியும் கட்டுக்கோப்பாக இருந்தது. பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த சீதாராம் கேசரியின் செயல்பாடுகளும் அதற்கு முக்கியமான காரணம்.
நாடு முழுவதும் ஜெ.பியின் இயக்கத்திற்கு ஆதரவு பெருகியது. ஊழல் எதிர்ப்பு இயக்க அணி ஒன்றை ஜெ.பி. உருவாக்கினார். ஊழல் எதிர்ப்பை முன்வைத்து நாடு முழுவதும் பயணம் செய்தார். இந்திரா காந்தியோடு முரண்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெ.பியை வரவேற்றார்கள். ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இந்தியா முழுவதும் நடந்தன. அதை முறியடிக்க இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை அமலுக்குக் கொண்டு வந்தார். அதற்குப் பின்னர் நடந்தவையெல்லாம் நமக்குத் தெரிந்தவைதான்.
எமர்ஜென்ஸிக்கு முன்னர் நடந்த ஒரு முக்கியமான விஷயம், இன்று நிறைய பேருக்குத் தெரியாது. காங்கிரஸ் கட்சியின் ‘பி’ டீமாக இருந்த குட்டிக் கட்சிகளின் மாஸ்டர் பிளான் அது. ஜெ.பியின் இயக்கம் ஜனநாயக மரபுகளைச் சிதைக்கிறது. அரசாங்க நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இதனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று அதற்கு எதிராக ஒரு ஜனநாயக பாதுகாப்பு அணி ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் கம்யூனிஸ்ட் கட்சி பிரதான இடத்தைப் பெற்றிருந்தது. ஜெ.பிக்கு எதிரான அந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெற்றவர், எம்.ஜி.ஆர்!
0