Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #26 – பிரசார் பாரதி உபேந்திரா

மறக்கப்பட்ட வரலாறு #26 – பிரசார் பாரதி உபேந்திரா

உபேந்திரா

‘இத்துடன் மண்டல ஒளிபரப்பு நிறைவடைந்தது. டெல்லி அஞ்சல்’ என்னும் குரலைக் கேட்டதுண்டா? 70களில் பிறந்து 80, 90களில் வளர்ந்தவர்களுக்கு தூர்தர்ஷன் அனுபவம் கிடைத்திருக்கும்.

தினமும் இரவு 9 மணிக்கு மேல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தமிழில் நிகழ்ச்சிகள் கிடையாது. தேசிய ஒளிபரப்பில் ஹிந்தி நிகழ்ச்சிகள் தொடரும். மறுநாள் மாலைவரை டிவியை அணைத்து வைப்பதைத் தவிர வேறு வழி இருந்ததில்லை.

மண்டல ஒளிபரப்பில் நிலைமை அப்படித்தான் இருந்து வந்தது. ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குக் கண்மணி பூங்கா தொடங்கி, இரவு 8.40 செய்தித் தொகுப்புவரை மட்டுமே மண்டல ஒளிபரப்பு அனுமதிக்கப்பட்டது. தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் அப்போதுதான் ஒளிபரப்பாகும். 1990ல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்கு வரும்வரை அப்படித்தான் இருந்தது.

பிரசார் பாரதி, மாற்றத்தை ஆரம்பித்து வைத்தது. வி.பி.சிங் அரசு கவிழ்ந்து போனாலும் அடுத்தடுத்து வந்த சந்திரசேகர், நரசிம்மராவ் போன்றவர்கள் பிரசார் பாரதியை முன்னெடுத்தார்கள். அடுத்து வந்த 5 ஆண்டுகளில் பிரசார் பாரதி தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஏராளமான புதிய சேனல்கள் அறிமுகமாகின. செகண்ட் சானல் என்னும் இரண்டாவது அலைவரிசை உருவாக்கப்பட்டது.

சென்னை போன்ற மாநகரங்களில் ஒளிபரப்பான செகண்ட் சானலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆண்டெனாவை உயரத்தில் தூக்கி வைத்துக் கட்டினால் இரவு நேரங்களில் இரைச்சலோடு செகண்ட் சேனல் டெல்டா வரை கிடைத்தது. அதற்குப் பின்னர் வந்த தனியார் சேட்டிலைட் சானல்களின் கிடுகிடு வளர்ச்சியைப் பற்றி எல்லோர்க்கும் தெரிந்த விஷயம்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு மாநிலக் கட்சிகளின் தொகுப்பான தேசிய முன்னணி ஓரணியில் நின்று பிரசாரம் செய்தபோதே, பிரசார் பாரதி பெரிய அளவில் பேசப்பட்டது. தேர்தல் வாக்குறுதியாகவும் அதை முன்வைத்தது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆகாஷ்வாணி, தூர்தர்ஷனுக்குத் தன்னாட்சி தருவோம்; சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்போம் என்றார்கள்.

ஆகாஷ்வாணி, தூர்தர்ஷன் அமைப்புகளுக்குத் தன்னாட்சி என்பதே புரட்சிகரமான திட்டம்தான். உலகளவில் பனிப்போர் இருந்த காலம். எந்த நாட்டின் உளவுத்துறை எங்கிருக்குமோ என்கிற சந்தேகம் எப்போதும் இருந்து வந்தது. உள்நாட்டுப் பாதுகாப்பை முன்னிட்டு, தகவல் தொடர்பு அமைப்புகளை எல்லா நாடுகளும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்பின.

முதலாளித்துவத்தை முன்னிலைப்படுத்தும் நாடுகள்முதல் கம்யூனிஸ்ட் கொடி பறக்கும் நாடுகள்வரை தொலைக்காட்சி, வானொலி சேவைகளைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டன. கடுமையான சென்ஸார் முறை நடைமுறையில் இருந்தது. இந்தியா போன்று ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாடுகள், தங்களுடைய அதிகாரப்பூர்வச் செய்தி ஒலிபரப்பு அமைப்புகளுக்குத் தன்னாட்சி தருவதைப் பற்றிப் பேச ஆரம்பித்ததே வியப்புக்குரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது.

1990 வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் போன்றவை பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தன. ஆளுங்கட்சியின் முழு நேர பிரசாரப் பீரங்கியாகவே செயல்பட்டு வந்தன. பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், அவர்களுக்கு நெருக்கமாக இருந்த தகவல் தொடர்புத்துறை அமைச்சக அதிகாரிகளும் அவைகளைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.

தேர்தல் காலங்களில், அதிகாரிகளின் தலையீடும், கெடுபிடியும் அதிகமாக இருந்தது. எந்தச் செய்தி, எப்போது இடம்பெற வேண்டும். யாரெல்லாம் டி.வியில் தலைகாட்ட அனுமதிக்கப்படவேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்தார்கள். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவுகளை தூர்தர்ஷன் தலைமையகமும், ஆகாஷ்வாணி பவன் அதிகாரிகளும் கேட்டுக்கொண்டு அதன்படி நடந்தாக வேண்டும்.

அன்றாடம் ஒளிபரப்பாகும் செய்தியறிக்கைள் மட்டுமல்ல, அரசியல் தவிர்த்த மற்ற நிகழ்ச்சிகளிலும் அதிகாரிகளின் தலையீடு தொடர்ந்து கொண்டிருந்தது. வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் யார் பங்கேற்க வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்தார்கள். மண்டல ஒளிபரப்புகளில் வரும் ஒரு மணி நேர நாடகங்கள் தொடங்கி, திரைப்படப்பாடல்கள் வரை அனைத்தும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தன.

ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் தூர்தர்ஷனில் என்ன படம் ஒளிபரப்ப வேண்டும், யார் விளம்பரதாரர்கள் என்பதையும் அவர்களே தீர்மானித்தார்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இல்லாதவர்களின் படங்களோ, சினிமாப் பாடல்களோ தூர்தர்ஷனில் ஒளிபரப்பாவதில்லை. பின்னாளில் ஒலியும் ஒளியும் தனியார் நிகழ்ச்சியாக உருவெடுத்த காலத்திலும் அதிகாரிகளின் தலையீடு இருந்தது. ஆளுங்கட்சிக்கு நெருக்கமான பேச்சாளர்கள், சினிமா கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று அறிஞர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும்.

சர்ச்சைக்குரிய விஷயங்களைச் செய்தித் தொகுப்பில் இடம்பெற வைத்த காரணத்திற்காக அதிகாரிகளும் ஊழியர்களும் பணிமாற்றம் செய்யப்பட்டதுண்டு. எமர்ஜென்ஸி நேரத்தில் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட கடுமையான சென்ஸார், கெடுபிடிகள் பற்றி நிறைய எழுதலாம். பின்னாளில் ஜனதா அரசு பதவியேற்றபோது எல்லாம் மாறிவிடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், எதுவும் மாறவில்லை. முன்பு இருந்த நிலையைவிட மோசமாகிவிட்டது. ஜனதா அரசு பொறுப்பேற்றபோது பா.ஜ.கவின் எல்.கே. அத்வானி, தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கைதான் என்றாலும் இப்படியொரு வெளிப்படையான போக்கை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை.

ஜனதா அரசு கவிழ்ந்து இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும், பின்னாளில் ராஜிவ் காந்தி பிரதமரானபோதும் நிலைமையில் மாற்றம் இல்லை. தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்த பின்னரும் பிரசார் பாரதியை முழுமையாக அமலுக்குக் கொண்டு வரமுடியவில்லை. உள்ளிருந்தே எதிர்ப்பு வரும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

பிரசார் பாரதி, புதியதாக சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. ஏற்கெனவே உள்ள தடைகள் போதாது என்று கூடுதலாகச் சில தடைகள். 15 பேர் கொண்ட உயர்மட்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஆகாஷ்வாணி, தூர்தர்ஷன் நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்க கமிட்டிக்கு முழு அதிகாரம் தரப்பட்டது. கூடவே 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கண்காணிப்புக் கமிட்டியும் அமைக்கப்பட்டது.

யார், என்னென்ன நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடியும் என்பதை உயர்மட்ட கமிட்டி முடிவு செய்தது. ஏராளமான தனியார்களுக்கு வாய்ப்பு கிடைத்தன. புதிய நிகழ்ச்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், தேர்ந்தெடுக்கும் முறையோ குழப்பமாக இருந்தது. ஒரு சிலருக்கு மட்டும் அடிக்கடி நிகழ்ச்சிகளைத் தயாரிக்க அனுமதி கிடைத்தது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தகவல் ஒளிபரப்புச்சட்டத்தில் உள்ள நெறிமுறைகளெல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டன.

பிற நாடுகளை விமர்சிக்கக்கூடாது. பாலியல், வன்முறை சார்ந்த காட்சிகள், மதம் சார்ந்த மோதல் காட்சிகள் கூடாது. அரசியல் கட்சிகளைப் பெயர் குறிப்பிட்டு விமர்சனம் செய்யக்கூடாது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கக் கூடாது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செய்திகளை வெளியிடக்கூடாது என்றெல்லாம் முன்னர் இருந்த கட்டுப்பாடுகள் குறைய ஆரம்பித்துவிட்டன.

இன்னொரு பக்கம் பிரதமர் அலுவலகத்தின் அழுத்தமும் தொடர்ந்து கொண்டிருந்தது. பிரதமராக இருந்த வி.பி.சிங், நமீபியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்ற செய்தியைத் தூர்தர்ஷன் ஒளிபரப்புச் செய்யாதது குறித்து சர்ச்சை ஏற்பட்டது. பிரதமர் ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவருடன் இருந்த ஆந்திர முதல்வர் சென்னா ரெட்டி செய்திகளில் இடம்பெறவில்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் என்பதால் இருட்டடிப்பு செய்யப்பட்டார்.

அதற்குக் காரணமாக இருந்தவர், மத்திய அமைச்சர் உபேந்திரா. இன்று உபேந்திரா என்றால் பிரபலக் கன்னட நடிகர்தான் நினைவுக்கு வருவார். ஆனால், 80களில் டெல்லி வட்டாரத்தில் ஆந்திராவின் முக்கியமான அரசியல்வாதியாகக் கருதப்பட்டவர், உபேந்திரா.

பிரசார் பாரதி மசோதாவை அறிமுகப்படுத்தி, இரு அவைகளிலும் விவாதத்தை நடத்தி, அதைச் சட்டமாக்கியவர் உபேந்திரா. ஆந்திராவில் பிறந்து, டெல்லி அரசியலில் முத்திரை பதித்தவர். அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் பிரசார் பாரதியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார்.

மத்திய ரயில்வேத்துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்த உபேந்திரா, ஜனதா கட்சியைச் சேர்ந்த மது தண்டவதே ரயில்வே அமைச்சராக இருந்தபோது அவரது நேர்முக உதவியாளராக இருந்திருக்கிறார். பின்னர் என்.டி. ராமராவ் மீதிருந்த ஈடுபாட்டால், அரசியலுக்கு வந்தார். தெலுங்கு தேசம் கட்சியை என்.டி.ஆர். ஆரம்பித்தபோது அதில் சேர்ந்து கொண்டார்.

அடுத்த ஆண்டே கட்சி சார்பாக ராஜ்ய சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்குச் சென்றார். தெலுங்கு தேசக் கட்சியின் டெல்லி முகமாக இருந்த உபேந்திராவுக்கு தேசிய அளவில் நல்ல அறிமுகம் கிடைத்தது. தேசிய முன்னணி உருவானபோது அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். பின்னாளில் வி.பி.சிங் தலைமையிலான அரசு அமைந்தபோது தெலுங்கு தேசக்கட்சியின் சார்பாக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

பிரசார் பாரதியை உபேந்திரா பாரதி என்று சொல்வார்கள். ஆல் இந்தியா ரேடியோவை உயிர்ப்பித்த ஒரு மசோதா. இந்திய தகவல்தொடர்பு வரலாற்றில் பிரசார் பாரதி ஒரு முக்கியமான மைல் கல். உயர் தொழில்நுட்பத்துடன், துல்லியமாக, சுதந்திரமாக செயல்படக்கூடிய செய்தி ஒலிபரப்புத்துறையை உருவாக்க வேண்டும் என்பதே உபேந்திராவின் லட்சியமாக இருந்தது.

அதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருந்தன. பிரசார் பாரதி, தூர்தர்ஷனுக்குப் புதிய சுமையாக இருந்தது. ஆனாலும், உலக அளவில் பிபிஸியின் செய்திச் சேவையைப்போல் நம்முடைய தூர்தர்ஷன் செய்திச் சேவையும் பேசப்படவேண்டும் என்பது உபேந்திராவின் விருப்பமாக இருந்தது.

வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்ததும், உபேந்திரா மாநில அரசியலுக்குத் திரும்பினார். தெலுங்கு தேசம் கட்சியின் நம்பர் டூவாக இருந்த சந்திரபாபு நாயுடுவுடன் மோதல் போக்கு ஏற்பட்டது. ஆகவே, உபேந்திரா கட்சியிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

வி.பி.சிங் ஆட்சி கலைக்கப்பட்டதால் பா.ஜ.க. மீது அவருக்குக் கோபம் இருந்தது. என்.டி.ஆரிடமிருந்து சந்திரபாபு நாயுடுவின் கைப்பிடியில் இருந்த தெலுங்கு தேசத்திற்கு எதிராகவும் அவரது அரசியல் இருந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பிடிக்காமல் போய்விட்டது. நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோது, அவரது கட்சியில் இணைந்து கொண்டார். பின்னாளில் சிரஞ்சீவி, தன்னுடைய கட்சியைக் காங்கிரஸ் கட்சியில் கரைத்தபோது உபேந்திராவும் காணாமல் போய்விட்டார்.

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *