ஆகஸ்ட் 2, 1984. நள்ளிரவு. ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்த அந்த சுங்கத்துறை அதிகாரியை அவரது வீட்டில் யாராலும் அடையாளம் காணமுடியவில்லை. முகமெல்லாம் கருத்து, முடியெல்லாம் கருகிப்போய் அடையாளம் தெரியாமல் ஆகியிருந்தார். அவரது பணியிடமான மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பை நேரில் பார்த்த அதிர்ச்சி அவரது முகத்தில் மிச்சமிருந்தது. சற்றுத் தொலைவில் இருந்த விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வாகனங்களின் சைரன் ஒலி அதிகாலை வரை ஒலித்துக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அதுவொரு புதிய செய்தியாக இருந்தது. இந்தியாவிலேயே அதிகபட்சப் பாதுகாப்புக் கெடுபிடிகள் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஒரு குண்டு வெடித்திருக்கிறது. அதில் 33 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 27 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். ஒரு விமான நிலையத்தில் குண்டுவெடிப்பதில் அதுதான் இந்தியாவில் முதல் முறை.
யார் குண்டு வைத்தது? சர்வதேசச் சதியா? எதுவும் தெரியவில்லை.
என்னதான் நடந்தது? வாரம் இருமுறை கொழும்புவிலிருந்து சென்னைக்கு மாலை 8 மணிக்கு வந்துவிட்டு இரவு 9 மணிக்குத் திரும்பிச் செல்லும் ஏர் லங்கா யூ எல் 22 விமானம் சரியான நேரத்தில் கிளம்பிச் சென்றுவிட்டது. ஆனால், அதில் செல்ல வேண்டிய இரண்டு சூட்கேஸ் கேட்பாரற்றுக் கிடந்தது. டிக்கெட் செக் இன் செய்து சூட்கேஸை பேக்கேஜ் செக்?ஷனுக்கு அனுப்பி வைத்த பயணி, ஏனோ விமானத்தில் ஏறவில்லை. இதனால் சூட்கேஸ் திருப்பி அனுப்பிப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக கவனிப்பாரற்றுக் கிடந்த இரண்டு சூட்கேஸ், சுங்கத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. அப்போது இரவு மணி 10.
70 கிலோ எடையுள்ள சூட்கேஸ். இரண்டையும் உரிமை கோரி யாரும் வரவில்லை என்றதும் கடத்தல் பொருள்தான் என்று சுங்கத்துறை அதிகாரிகள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். சுங்கத்துறையின் சோதனையில் மாட்டிக்கொண்டால் கடத்தல் பொருள்களை அப்படியே விட்டுவிட்டு குருவிகள் தப்பிச் சென்றுவிடுவது வழக்கம். ஆக, யாரோ எதையோ கடத்த முயற்சி செய்துவிட்டு, தப்பிவிட்டார்கள் என்றுதான் நினைத்தார்கள்.
இரவு மணி 10.15 மணிக்கு முதல் தொலைப்பேசி அழைப்பு வந்தது. விமான நிலையத்தின் அதிகாரியான லைலா சிங்கின் எண்ணைத் தொடர்பு கொண்ட ஒருவர், கொழும்பு செல்லவேண்டிய ஏர் லங்கா விமானத்தில் ஏற்ற வேண்டிய இரண்டு சூட்கேஸில் அதிக எடையுள்ள வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். வழக்கமான வெடிகுண்டுப் புரளி என்றுதான் விமானநிலைய அதிகாரியும் நினைத்துவிட்டார்.
அடுத்து 20 நிமிடங்கள் கழித்து இன்னொரு தொலைப்பேசி அழைப்பு. இம்முறை டிக்கெட் விபரங்களையும் தெரிவித்து, லக்கேஜ் டேக் உள்ளிட்ட விபரங்களையும் பகிர்ந்து கொண்டு, வெடிகுண்டு நிரப்பியுள்ள இரண்டு சூட்கேஸையும் அகற்றவில்லையென்றால் பெரும் சேதம் நிகழும் என்றார்கள். இம்முறையும் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதெல்லாம் வழக்கமாக நடைபெறுவதுதான் என்பது அவர்களுக்குத் தெரியும். கடத்தல் முயற்சி தோல்வியடைந்தால், கடத்தல்காரர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, குண்டு இருப்பதாகப் புரளி கிளப்புவார்கள். அதை நம்பி சுங்கத்துறையினரும், விமானநிலையப் பாதுகாப்புக் காவலர்களும் சோதனையிட வேண்டியிருக்கும். கடத்தல் குருவிகளில் யாரோ கோபத்தில் சொல்வதாக சுங்கத்துறை அதிகாரிகள் நினைத்து அமைதியாகிவிட்டார்கள்.
சரியாக 10.40 மணிக்கு மூன்றாவது முறையாக தொலைப்பேசி அழைப்பு வந்தபின்னர்தான் நிலைமையின் விபரீதம் புரிந்தது. ஏர்போர்ட் நிர்வாகியான லைலா சிங் விமானநிலையத்தின் பாதுகாப்புப் பிரிவுக்குத் தகவல் தெரிவித்தார். விமானநிலையத்தில் இருந்த தீயணைப்புத் துறை வரவழைக்கப்பட்டது. அறையை விட்டு வெளியே வந்து, சுங்கத்துறை அதிகாரிகள் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸையும் கண்டுபிடித்து உடனே அதை அகற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
பதறிப்போன சுங்கத்துறை அதிகாரிகள், அங்கிருந்த கடைநிலை ஊழியரை அழைத்து, சூட்கேஸை டிராலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வெளியே வரும்போது மணி சரியாக 11 மணி. பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்தது. அடுத்த சூட்கேஸைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அடுத்துப் பத்து நிமிடங்களில் இரண்டாவது சூட்கேஸ் வெடித்தது.
அப்படியொரு சத்தத்தை மீனம்பாக்கம் கேட்டதில்லை. ஜி.எஸ்.டி. ரோடு குலுங்கியது. அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள், ஏதோ பூகம்பம் என்று வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். விமான நிலையத்தின் உள்பகுதி முழுவதும் புகை மண்டலமாக இருந்தது. மேற்பகுதி உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. ராட்சஸ இரும்புத்தூண்கள் வளைந்து, நெளிந்தபடி இருந்தன. எங்குப் பார்த்தாலும் ரத்த வெள்ளமும், மனித சதைத் துணுக்குகளும் சிதறிக்கிடந்தன.
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் கட்டப்பட்ட பழைய விமான நிலையம் அது. 30 ஆண்டுகளில் சர்வதேச விமான நிலையமாக உருவெடுத்தது. அதற்கேற்ப கட்டடங்களும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டன. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஓராண்டு முன்பு வரை பல இடங்களில் விரிவாக்கம் நடந்து வந்தது. ஆனால், ஒரே இரவில் விமானநிலையத்தின் பல பகுதிகள் பலத்த சேதத்திற்குள்ளாகின.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். கொழும்புவிலிருந்து சென்னைக்கு வந்திறங்கி, மறுநாள் அதிகாலை வரும் விமானத்தில் அபுதாபி செல்வதற்காகக் காத்திருந்தார்கள். அதில் பெரும்பாலானவர்கள் ஏர் லங்கா விமானத்தில் இருந்து வந்தவர்கள். 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். இறந்து போன 33 பேரில் பத்துப் பேர் விமான நிலைய ஊழியர்கள். மற்றவர்கள் அனைவரும் சிங்களப் பயணிகள்.
படுகாயமடைந்தவர்களில் சுங்கத்துறை பகுதியில் பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் மட்டுமல்ல, பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அதிகாலையில் சென்னைக்கு வந்து சேரும் தங்கள் உறவினர்களை வரவேற்பதற்காக பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள்.
உண்மையில் தீவிரவாதிகளின் இலக்கு, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்துவது அல்ல. மாறாக, கொழும்பு செல்லும் விமானத்தில் சூட்கேஸ் மூலம் வெடிகுண்டு வைத்து அனுப்பி, அங்கே வெடிக்கும்படிச் செய்வதுதான்.
அதற்கேற்றபடி டைம்பாம் செட் செய்யப்பட்டிருந்தது. இரவு 9 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி கொழும்புக்குச் செல்லும் விமானத்தில் உள்ள சூட்கேஸை அங்கே இருவேறு விமானங்களுக்கு மாற்றுவது. அதன் மூலம் கொழும்புவில் இருந்து இரவு 11.30 மணிக்கு பாரீஸ் செல்லும் விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க முடியும். அதற்குப் பின்னர் 20 நிமிடங்கள் கழித்து லண்டனுக்குப் புறப்படும் விமானத்தில் இன்னொரு சூட்கேஸை வெடிக்கச் செய்வதுதான் திட்டம்.
ஒருவேளை இரண்டு சூட்கேஸ்களும் திட்டமிட்டபடி கொழும்பு விமானத்தில் அனுப்பப்பட்டிருந்தால், பாரீஸ் மற்றும் லண்டன் செல்லும் விமானங்களுக்குக் கணிசமான இழப்புகளை ஏற்படுத்தி இருக்கும். குறைந்தபட்சம், கொழும்பு விமானநிலையத்திற்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். இலக்கு தவறிப்போனதால் மீனம்பாக்கம் மாட்டிக்கொண்டது. ஏர் லங்கா ஊழியர்களின் உதவி இல்லாவிட்டால் இதெல்லாம் சாத்தியமேயில்லை.
யார் செய்தது? புலன் விசாரணை செய்வதற்காக டெல்லியிலிருந்தும் பூனேவில் இருந்தும் சிறப்புப் புலனாய்வுப் படைகள் வரவழைக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து செயல்படும் இலங்கைத் தமிழ் போராளிக்குழுக்களாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. கொழும்பு செல்லும் விமானத்தைக் கடத்துவது. அது முடியாவிட்டால், வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பதுதான் திட்டம் என்று நம்பப்பட்டது.
கதிரேசன் என்பவர் பெயரில் கொழும்பு விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. டெல்லியில் இருந்த ஓர் ஏஜெண்ட் வழியாக டிக்கெட் வாங்கப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட அளவான 35 கிலோவை விட சூட்கேஸ் அதிக எடையுடன் இருந்த காரணத்தால் அதற்காகக் கூடுதல் தொகை கட்டும்படி விமான நிலை ஏஜெண்ட் கேட்டுக்கொண்டார். ஆனால், கூடுதல் தொகை தருவதற்குக் கதிரேசன் மறுத்துவிட்டார்.
தன்னிடம் போதுமான தொகை இல்லையென்றும் வெளியே சென்று எடுத்து வருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார். அதுதான் சுங்கத்துறை அதிகாரிகளின் சந்தேகப்பார்வை சூட்கேஸ் மீது திரும்பக் காரணமாக இருந்தது.
இரண்டு சூட்கேஸ் உடன் விமானத்தில் பயணம் செய்து, விமானத்தைக் கடத்துவது. அதன் மூலம் உலகத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்வது அவரது நோக்கம். இல்லாவிட்டால் சூட்கேஸை மட்டும் கொழும்புவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அங்கே வெடிக்கச் செய்வதும் திட்டமாக இருக்கலாம்.
சூட்கேஸில் ஜெலாட்டீன் குச்சிகளும், சோடியம் மெட்டல், பாஸ்பரஸ், எலெக்ட்ரிக் வயர், டைம் பீஸ் மற்றும் கிளாஸ் பாட்டில் போன்றவை இருந்தன.
சுங்கத்துறையினரிடம் சூட்கேஸ் மாட்டியதும், கதிரேசனின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது. உடனே அங்கிருந்து தப்பித்து விட்டார்கள். ஆனால், குண்டு சரியான நேரத்தில் வெடித்துத் தொலைந்தால் இந்தியாவில் எந்த மூலையிலும் உயிர் வாழ முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். குண்டு வெடிப்பை எப்படியாவது தவிர்க்க தொலைப்பேசி மூலமாக தொடர்புகொண்டு மூன்று முறை முயற்சி செய்திருக்கிறார்கள்.
சிறப்புப் புலனாய்வுக் குழு, கதிரேசனைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக இறங்கியது. மதுரை பேருந்து நிலையத்தில் ஒருவரும், தாம்பரத்தில் ஒருவரும் வரிசையாக கைது செய்யப்பட்டார்கள். ஓரிரு நாட்களில் கதிரேசன் மற்றும் அவரது நண்பர்களைக் காவல்துறையினர் கஸ்டடியில் கொண்டு வந்துவிட்டார்கள். அந்த கதிரேசனின் நிஜமான பெயர், தம்பா பிள்ளை மகேஸ்வரன். அவரொரு இலங்கைத் தமிழ் போராளி. ‘தமிழீழ தேசிய இராணுவம்’ (TEA) என்னும் இயக்கத்தையும் நடத்தி வந்தவர்.
தமிழ்நாட்டில் தங்கியிருந்தபடி ராணுவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த முன்னணி இலங்கைத் தமிழர் பேராளிக்குழுக்களில் ஒன்றாக டி.ஈ.ஏ. குழு எந்நாளும் இருந்ததில்லை. டெல்லியின் ஆசீர்வாதத்தோடு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வந்த எந்தவொரு போராளி அமைப்பும் சென்னை மீனம்பாக்கத்தில் குண்டு வைக்கத் தயாராகமாட்டார்கள். அப்படியொரு முயற்சி, தற்கொலைக்குச் சமம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
தம்பாபிள்ளை மகேஸ்வரன் அமைப்பின் இலக்கும், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டுவெடிக்கச் செய்வதாக இல்லை. ஆனால், குறி தவறியதும் மிரண்டு விட்டார்கள். ஆகவேதான், மூன்று முறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்தார்கள். ஆனாலும், விமானநிலைய ஊழியர்கள், சுங்கத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சூட்கேஸை அகற்ற முடியாமல் மீனம்பாக்கம் விமானநிலையம் பாதிப்புக்குள்ளானது.
ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிங்களப் பயணிகளை முதல்வர் எம்.ஜி.ஆர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பலியான 29 பேர்களில் 7 பேர்களின் அடையாளத்தை மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது. மற்றவர்களின் உடல் சிதிலமாகி இருந்தது. அதில் ஒரு குழந்தையும் உண்டு. பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்டவை குண்டுவெடிப்பால் அழிந்து போனதால், கொழும்புவில் இருந்த அவர்களது உறவினர்களைத் தொடர்புகொள்வதில் சிரமமிருந்தது.
மறுநாள் 23 சிங்களப் பயணிகளின் உடல் அடையாளம் காணப்பட்டு, அனைத்து உடல்களும் மயிலாப்பூரில் தகனம் செய்யப்பட்டன. இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து சிறப்பு விமானம் கொழும்புவுக்கு அனுப்பப்பட்டு அவர்களது உறவினர்களில் 174 பேர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களிடம் பாஸ்போர்ட் இல்லை என்பதால் பலத்த பாதுகாப்புடன் மயிலாப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலை பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. மீனம்பாக்கம் குண்டுவெடிப்பிற்கும் இஸ்ரேல் தீவிரவாத அமைப்பான மொசாட் அமைப்பிற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றார்கள். பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு, தேசிய அவமானம் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டன. எம்.ஜி.ஆர் அரசு, ஆரம்பத்தில் தடுமாறியது. பின்னர் டெல்லியிலிருந்து வந்த அமைப்புகளுடன் இணைந்து நடத்திய விசாரணையில் கதிரேசனைப் பிடிக்க முடிந்தது.
இலங்கைத் தமிழ் போராளிக் குழுக்களின் ஏனைய தலைவர்களைப்போலவே லண்டனில் படித்து, தமிழ்நாட்டில் தங்கியிருந்தபடி தமிழ் ஈழத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தவர், கதிரேசன் என்கிற தம்பா பிள்ளை மகேஸ்வரன். லாரியில் வெடி பொருள்களை நிரப்பி, இலங்கை ராணுவ முகாம்கள் மீது மோதி, பெரிய அளவில் சேதத்தை விளைவித்தவர்.
முதன் முதலில் வெடி மருந்து நிரப்பப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தித் தாக்குவது என்பதை கதிரேசன்தான் அறிமுகப்படுத்தினார். பின்னாளில் விடுதலைப்புலிகள் அதை பரவலாக்கினார்கள்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் செழிப்பான பகுதியான காத்தகுடியில் ஒரு வங்கியைக் கொள்ளையடித்து, அதிலிருந்து மூன்று கோடி ரூபாயைப் பறித்துக் கொண்டு தமிழ்நாட்டிற்குக் கள்ளத்தோணியில் வந்து சேர்ந்தவர், தம்பா பிள்ளை மகேஸ்வரன். கொள்ளையடித்த பணத்தைத் தமிழ்நாட்டில் தாராளமாக செலவு செய்து இயக்கத்திற்கு ஆதரவு திரட்டினார். டி.ஈ.ஏ. என்னும் அமைப்பை நடத்தினார்.
தமிழ் தேசிய ராணுவம் என்னும் பெயரில் ஏராளமான போராளிகள் அமைப்புகள் இருந்து வந்த காலம். அமிர்தலிங்கத்தின் மகன், தமிழ் தேசிய ராணுவம் என்னும் இயக்கத்தை நடத்தி வந்தார். இன்னொரு குழு, தமிழீழ விடுதலை ராணுவம் என்றொரு அமைப்பை நடத்தி வந்தது. அத்தனை குழுக்களுக்கும் தமிழ்நாட்டில் ஆட்கள் இருந்தார்கள் என்பதுதான் ஆச்சர்யம்.
‘மீனம்பாக்கம் வெடி குண்டு அமெரிக்க சி.ஐ.ஏயின் சதி. தமிழக மக்களுக்கும் ஈழப் போராளிகளுக்கும் இடையே விரிசலைத் தூண்டும் முயற்சி’ என்று சென்னை முழுவதும் போஸ்டர்கள் முளைத்தன. எம்.ஜி.ஆர் அரசு திணறித்தான் போனது. ஆனாலும், தமிழக காவல்துறையின் புலனாய்வுத்துறை சிறப்பாகச் செயல்பட்டு தம்பா பிள்ளை மகேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்களைச் சுற்றி வளைத்தது.
மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு வழக்கில் தம்பா பிள்ளை மகேஸ்வரனும், எர் லங்கா அலுவலகத்தில் ஊடுருவி, அங்கே ஊழியராகச் சேர்ந்து லக்கேஜை விமானத்தில் அனுப்ப முயற்சி செய்த அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட சில நாட்களில் அத்தனைப்பேரும் ஜாமீனில் வெளியே வந்தார்கள். வெளியே வந்ததும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குத் தப்பியோடிவிட்டார்கள்.
1992ல் ஜெயலலிதா அரசு வந்தபோது, மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு வழக்கு மறுபடியும் விசாரணைக்கு வந்தது. இது சம்பந்தமாக 1998ல் 10 பேர் கைது செய்யப்பட்டார்கள். அதில் விக்னேஸ்வர ராஜா, தம்பிராஜா உள்ளிட்ட மூன்று பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சரவண பவன், லோகநாதன், விஜய்குமார், பாலசுப்ரமணியம், சந்திரகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
13 ஆண்டுகள் தமிழ்நாட்டில் சிறைவாசம் அனுபவித்த கதிரேசன் என்னும் தம்பா பிள்ளை மகேஸ்வரன், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு 2010ல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டார். இந்திய குடியுரிமை இல்லாத காரணத்தால் அவரது விருப்பத்தின் படி வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆம். அதே மீனம்பாக்கம் விமான நிலையம் வழியாகத்தான் பத்திரமாகக் கிளம்பிச் சென்றார்.
0