Skip to content
Home » மறக்கப்பட்ட வரலாறு #30 – ராஜ்குமார் கடத்தல்

மறக்கப்பட்ட வரலாறு #30 – ராஜ்குமார் கடத்தல்

ராஜ்குமார் கடத்தல்

22 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தியாவின் மிகப்பெரிய கடத்தல் சம்பவம் அது. 108 நாட்கள் இரு மாநிலங்களையும் பதற்றத்தில் வைத்திருந்த நிகழ்வும்கூட. கன்னட சினிமாவிலும், கர்நாடக மக்களின் வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்துவிட்ட ‘கன்னடத்துக் கண்மணி’ என்னும் ராஜ்குமார், சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார்.

தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் காட்டில் ராஜ்குமாரும் அவரது உறவினர்களும் 108 நாட்கள் பிணையாக வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? எப்படி விடுவிக்கப்பட்டார்? விடை தெரியாத கேள்விகள் நிறைய.

எட்டாயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட அடர்ந்த காட்டில் தினமும் தன்னுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு இரு மாநில அரசுகளுக்கும் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தான், வீரப்பன். அவனை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்று காட்டுக்குள் போய் உயிர் விட்ட காவல்துறை அதிகாரிகள் ஏராளம். தமிழ்நாட்டை கர்நாடகாவுடனும் கேரளாவுடனும் இணைக்கும் அந்த அடர்ந்த காடுதான் அவனுக்கு அரணாக இருந்தது.

கொள்ளேகால் முதல் பவானி வரை, ஒகேனக்கல் முதல் ஜோல்லிபாளையம் வரை வீரப்பனின் ஆட்சிதான் நடந்தது. ஆனால், 90களின் ஆரம்பத்தில் இரு மாநிலங்களும் சேர்ந்த நடத்திய தேடுதல் வேட்டையால் வீரப்பனின் நடமாட்டம், சிறிய எல்லைக்குள் குறுக்கப்பட்டது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

ஸ்ரீநிவாஸ் என்றொரு காட்டிலாக அதிகாரியைச் சந்திக்க விரும்புவதாக வரவழைத்த வீரப்பன், அவரை வஞ்சகமாக சுட்டுக்கொன்று அவரது தலையை வெட்டியெடுத்தான். வீரப்பன் பிறந்த ஊரான கோபிநத்தம் பகுதியில் உள்ள மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர், ஸ்ரீநிவாஸ். அந்த ஊர் மக்களுக்காக மருத்துவமனையும், கோயிலையும் கட்டித் தந்தவர். மருத்துவமனையில் வீரப்பனின் சகோதரியான மாரியம்மாவைப் பணியில் அமர்த்தினார். வீரப்பனின் நடமாட்டத்தைத் தடுக்க அதே கிராமத்தில் மக்களோடு மக்களாகத் தங்கியிருந்தவர்.

வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த 50 பேரைச் சரணடைய வைத்து, கடத்தல் தொழிலிலிருந்து அவர்களை மீட்டு, கூலி வேலை வாங்கிக் கொடுத்தார். தன்னுடைய ஆதரவாளர்களை மடைமாற்றும் காட்டிலாகா அதிகாரியின் பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று வீரப்பன் சந்தேகப்பட்டதால் ஸ்ரீநிவாஸ் கொலை செய்யப்பட்டார். ஸ்ரீநிவாஸ் மரணத்திற்குப் பிறகு வீரப்பனுக்குச் சொந்த கிராமத்திலேயே ஆதரவாளர்கள் இல்லாமல் போனது. இதனால் தன்னுடைய நடமாட்டத்தைத் தமிழ்நாட்டு எல்லைக்குள் நிறுத்திக்கொண்டான்.

20 ஆண்டுகளில் வீரப்பன், 124 பேரைக் கொன்றிருக்கிறான். 25 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கடத்தியிருக்கிறான். மரம் கடத்திய வழக்கும் தொடங்கி, காவல்துறை அதிகாரிகளைச் சித்ரவதை செய்து கொலை செய்தது வரையிலான நூற்றுக்கணக்கான வழக்குகள் வீரப்பன் மீது பதிவு செய்யப்பட்டிருந்தன. பல லட்சங்களைச் செலவழித்து அவனைப் பிடிப்பதற்காக அதிரடிப்படையினர் காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். எந்தப் பலனுமில்லை.

ராஜ்குமாரைக் கடத்தியதால் வீரப்பன், தேசிய அளவில் கவனிக்கப்படும் கிரிமினலாக உயர்ந்தான். அதற்கு முன்னர் எத்தனையோ பேரைக் கடத்திச் சென்றிருக்கிறான். அவர்களும் காட்டில் அவனுடன் பத்து நாட்கள் இருந்துவிட்டு வெளியே வந்து வீரப்பன் புகழ் பாடியிருக்கிறார்கள். விளம்பரப் பிரியனான வீரப்பன், பத்திரிக்கையாளர்களும் புகைப்படக்கலைஞர்களும் சந்திக்க வந்தால் அவர்களுக்காக 150 கி.மீ தூரம் வரை நடந்து வந்து சந்தித்த நிகழ்வுகளும் உண்டு.

ராஜ்குமாரின் பண்ணை வீடு, தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் இருந்தது. வீரப்பனுக்கு நன்கு பழக்கமான பகுதிதான். ஒரு அமாவாசை நாளில், இரவு எட்டு மணிக்கு ராஜ்குமாரோடு அவரது மைத்துனர் கோவிந்தராஜ், உறவினர் நாகேஷ், இயக்குநரும் ராஜ்குமாரின் உதவியாளருமான நாகப்பா ஆகியோர்களைத் துப்பாக்கி முனையில் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் கடத்திச் சென்றார்கள். வீரப்பனின் வழக்கமான கடத்தல் நிகழ்வு என்றுதான் நினைத்தார்கள்.

கடத்தப்பட்டவரோ, கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார். ராஜ்குமாருக்குச் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் பெரிய செல்வாக்கு இருந்து வந்தது. அவருடைய ரசிகர் மன்றங்கள் மாநிலம் முழுவதும் துடிப்போடு செயல்பட்டு வந்த நேரம். ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. பெங்களூர், மைசூர் போன்ற பகுதிகளில் தமிழர்கள் வசிக்கும் இடங்களில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

வழக்கம்போல் தமிழக அரசு, வீரப்பனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. தமிழக அரசின் தூதுவராக நக்கீரன் கோபால் சத்தியமங்கலம் காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. அரசு தூதுவராக நக்கீரன் கோபால், வீரப்பனை மூன்று முறை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். ஏராளமான காஸெட் வீரப்பனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வீரப்பனும் தன்னுடைய கோரிக்கைகளைப் பட்டியலிட்டு அனுப்பியிருந்தான். தடா வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு கர்நாடக சிறைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கையாக இருந்தது. முன்பு போல் தனக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கேட்காததால் வீரப்பனின் பின்னணியில் ஒரு புதுக்கூட்டம் இருப்பது உறுதியாகிவிட்டது.

ஒரு வழியாக 100 நாள் நாடகம் நிறைவுக்கு வந்தது. 2000, நவம்பர் 14 அன்று மாலை ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். ஆனால், மறுநாள் காலை 8 மணிக்குப் பின்னரே இரு மாநில முதல்வர்களுக்கும் விஷயம் தெரிந்தது. ஈரோட்டிலிருந்து இருவரையும் தொடர்பு கொண்ட ராஜ்குமார், தான் விடுவிக்கப்பட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். அரசு தூதர்கள், அங்கீகரிக்கப்படாத தூதுவர்களெல்லாம் காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டாலும், ராஜ்குமார் எப்படி மீட்கப்பட்டார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

சத்தியமங்கலம் காட்டிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட ராஜ்குமார், ஈரோட்டிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டார். தமிழக காவல்துறைக்கோ, தமிழ்நாடு அரசு வனத்துறை அதிகாரிகளுக்கோ விஷயம் தெரியாது. ஆனால், பெங்களூரில் உள்ள ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு விஷயம் தெரிய வந்தது. அங்கிருந்து கிளம்பி, அன்றிரவே பண்ணை வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். தாடியோடு இருந்த ராஜ்குமாருக்கு முகச்சவரம் செய்யப்பட்டது. முடி திருத்தப்பட்டது. தலைமுடிக்குச் சாயம் பூசப்பட்டது.

நவம்பர் 16 அன்று பெங்களூர் வந்து சேர்ந்த நடிகர் ராஜ்குமார், தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். முன்னதாக ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவர், மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டார். அங்கிருந்து ஊர்வலமாக தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கர்நாடக முதல்வர் முன்னிலையில் 30 நிமிடங்களுக்கு ஓர் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார்.

காட்டில் இருந்தபோது வீரப்பன் தன்னை நல்ல முறையில் நடத்தியதாகப் பலமுறை குறிப்பிட்டார். பழ. நெடுமாறனை மகாயோகி என்று புகழ்ந்து பேசினார். நக்கீரன் கோபால் அடிக்கடி வந்து போனதையும், நாகப்பா காவலில் இருந்து தப்பிச் சென்றதையும் கிண்டலடித்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் தான் தங்க வைக்கப்பட்டதாகவும், 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் எந்த இடத்திலும் இல்லை. வீரப்பன் தன்னுடைய இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தன்னை மீட்டதில் பானுவுக்கு முக்கிய பங்கு இருந்ததாக ராஜ்குமார் குறிப்பிட்டிருந்தார். அரசு தூதரை அனுப்பி ராஜ்குமாரை மீட்கும் முயற்சிகள் தோற்றதால் ராஜ்குமாரின் குடும்பம், வேறு வழிகளில் முயற்சி செய்தது. பெங்களூர் இந்திரா நகரைச்சேர்ந்த தமிழரான பானு, ஒரு மருத்துவர். ராஜ்குமாரின் உடல்நிலையைப் பரிசோதிக்க காட்டுக்குள் அனுப்பப்பட்டார். அவர் மூலமாக சில கோடி பணம் பிணையத்தொகையாக வீரப்பனுக்குத் தரப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

ஏற்கெனவே ஒருமுறை காட்டுக்குள் சென்று, வீரப்பனைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய பானு, மறுபடியும் காட்டுக்குள் சென்று ராஜ்குமாரை மீட்டு வந்தார். உடல்நிலை சரியில்லாததுபோல் ராஜ்குமாரை நடிக்குமாறு சொல்லிவிட்டு வந்ததாகவும், அதன் காரணமாகவே வீரப்பன் ராஜ்குமாரை விடுவிக்க மனதளவில் தயாராகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ராஜ்குமாரின் குடும்பத்திற்கும் கர்நாடக முதல்வருக்கும் நெருக்கமானவராக இருந்த பானுவின் செயல்பாடுகள் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை.

ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகியிருந்த நிலையில் பானு, ராம்குமார், கொளத்தூர் மணி போன்றவர்கள் தந்த நம்பிக்கையினால் கர்நாடக முதல்வர் நம்பிக்கையோடு இருந்தார். நக்கீரன் கோபாலும் பழ. நெடுமாறனும் தர முடியாத நம்பிக்கையைப் பானு பெற்றுத் தந்தார். ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பின்னர் அது குறித்து முதல்வர் தந்த விளக்கத்தில் நிறையக் கோடிட்ட இடங்கள் பூர்த்தியாகாமலே இருந்தன.

‘இருள் விலகிவிட்டது. நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்த தமிழக அரசு, மத்திய அரசு தூதர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெயர் வெளியிட முடியாத, ஆனால், இவ்விஷயத்தில் பேருதவி புரிந்த வேறு சிலருக்கும் நன்றி சொல்ல வேண்டியது என்னுடைய கடமையாகிறது. நடிகர் ராஜ்குமார் விடுதலையில் மகிழ்ச்சி அடையும் நேரத்தில், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது’ என்றார், எஸ். எம். கிருஷ்ணா.

ராஜ்குமார் கடத்தலின் போது வீரப்பனை இயக்கியவர்கள் யார்? வீரப்பனுக்கு விடுதலைப்புலிகளிடம் தொடர்பு இருந்தது. தமிழ் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறான். தமிழ் தேசியக் கொடிக்கு வீரப்பன் மரியாதை செலுத்துவது போன்ற புகைப்படங்கள் நாளேடுகளில் வெளியாகியிருந்தன. முதல் கேஸட்டிலேயே வீரப்பன், தனக்குக் கிடைத்த புதிய தொடர்புகள் பற்றி விரிவாகச் சொல்லியிருந்தான்.

‘தனி மனிதனாக இருந்தேன். சரணடைய விரும்பினேன். ஆனால், இப்போது நான் ஒரு இயக்கத்தின் அங்கமாக இருக்கிறேன். யாருடைய அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. ராஜ்குமாரை விடுவிக்க எந்த அதிரடி நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம். ராஜ்குமாரைத் தேடி, காவல் துறை காட்டுக்குள் வந்தால், உடல் கூறு கூறாகத் துண்டு போடப்பட்டு விடும். ஒரு அரசு தூதரை அனுப்பி வைத்தால் என்னுடைய நிபந்தனைகளைத் தெரிவிக்கிறேன்’ என்று வீரப்பன் அதில் பேசியிருந்தான்.

கர்நாடக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தடா விசாரணைக் கைதிகளை விடுவிப்பதுதான் வீரப்பனின் பத்து நிபந்தனைகளில் பிரதானமாக இருந்தது. கூடவே காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீர் திறந்துவிடவேண்டும். காவிரிப் பிரச்னையின்போது கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும். திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் உடனே திறக்க வேண்டும். அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் இருந்தன.

கர்நாடக சிறைகளில் உள்ள தடா விசாரணைக் கைதிகளை உடனே விடுவிக்கவேண்டும் என்கிற நிபந்தனைக்கு கர்நாடகா அரசு தலையாட்டினாலும், அமலுக்குடு கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. அப்துல் கரீம் என்பவர் தடா விசாரணைக் கைதிகளை விடுதலை செய்யத் தடை விதிக்குமாறு உச்சநீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததோடு, கர்நாடக அரசின் மீது கண்டனத்தையும் பதிவு செய்தது. வேறு வழியின்றி அடுத்த கட்ட நடவடிக்கையை கர்நாடக அரசு ஆரம்பித்தது. தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

சிறப்பு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பது. இரண்டு அரசுகளும் இணைந்து பத்து கோடி ரூபாயைத் திரட்டி, தடா விசாரணைக் கைதிகளுக்குப் பொருளுதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. தேசிய மனித உரிமை கமிஷன் ஆலோசனையின் பேரில் ஒரு குழுவை உருவாக்குவது, அதன் மூலம் பணத்தைப் பட்டுவாடா செய்ய முடிவு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

தமிழகத்தில் வீரப்பனுக்கு பா.ம.கவினரின் ஆதரவும் இருந்தது. கோபிநத்தம், மேட்டூர், கோவிந்தபாடி போன்ற பகுதிகளில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவு வீரப்பனுக்கு இருந்தது. சட்டப் பேரவை தேர்தல்களில் பா.ம.கவின் வேட்பாளருக்கு வீரப்பன் பிரசாரம் செய்ததாகவும் செய்தி உண்டு. ஆனால், வீரப்பனின் கூட்டாளிகளில் யாரும் பா.ம.க. கட்சியில் இருந்ததில்லை.

வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்பதில் சில தமிழ் தேசியத் தலைவர்களும் ஈடுபட்டார்கள். தமிழக முதல்வரைத் தவிர்த்துவிட்டு, நேரடியாகக் கர்நாடக அதிகாரிகளோடு தொடர்பில் இருந்தார்கள். கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் வற்புறுத்தலின் பேரால் பழ. நெடுமாறன் காட்டுக்குச் சென்றார். காட்டிலிருந்து சிலமுறை கர்நாடக முதல்வரால் நேரடியாக வீரப்பனுடன் பேச முடிந்திருக்கிறது. கர்நாடகத்திலிருந்து கொடுத்தனுப்பிய பணம் முழுமையாகத் தனக்கு வந்து சேரவில்லை என்று வீரப்பன் குற்றம் சாட்டியதாகவும் ஒரு தகவல் உண்டு.

கர்நாடக அரசு மறுத்தாலும், ராஜ்குமாரை விடுவிப்பதற்காகப் பெரும் தொகை கைமாறியது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ராஜ்குமாரை மீட்பதற்காக 30 கோடி ரூபாய் பணம் வீரப்பனுக்குத் தரப்பட்டதாக பின்னாளில் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். ராஜ்குமார் குடும்பம் தவிரத் தமிழ் சினிமா பிரபலங்களும் கன்னட சினிமா நட்சத்திரங்களும் இணைந்து ஒரு பெரிய தொகையைத் தந்ததாகவும் சொல்லப்பட்டது.

நக்கீரன் கோபாலுடன் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களைத் தமிழ்நாடு அரசு தூதர்களாகக் காட்டுக்குள் அனுப்புவது சரியல்ல என்று காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் வரை அனைவரும் கண்டித்தார்கள். ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைத் தலைமையேற்று நடத்திய எஸ்.எம். கிருஷ்ணா, சம்பந்தப்பட்டவர்களோடு நேரடித் தொடர்பில் இருந்தார்.

பின்னாளில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற தமிழக அரசின் திரைப்பட விருது விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ராஜ்குமார் கடத்தலின் போது என்னென்னவோ நடந்துவிட்டது. 70 வயதில் காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ராஜ்குமாரைக் காப்பாற்றவேண்டும்; கர்நாடகாவில் வாழும் 40 லட்சம் தமிழர்களுக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது என்று கலைஞர் கவனமாக இருந்தார். அவரது முயற்சிகளை என்னை விட நன்றாக அறிந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசமுடியாது’ என்றார்.

ராஜ்குமாரை மீட்க, தான் காட்டுக்குக் கூடப் போகத் தயார் என்று ரஜினி அறிவித்திருந்தார். வீரப்பனுக்குத் தனியாக வேண்டுகோள் விடுத்து, ஒரு காஸெட்டை நக்கீரன் கோபால் மூலமாகவும் அனுப்பியிருந்தார். ஆனால், வீரப்பன், ரஜினி வந்து தன்னைச் சந்திப்பதை விரும்பவில்லை. வீரப்பன் பிணையிலிருந்து நாகப்பா தப்பியோடிய பின்னர் வீரப்பன் நேரடியாக கர்நாடக முதல்வருடனும், ராஜ்குமார் குடும்பத்தாருடன் பேச ஆரம்பித்துவிட்டான்.

ராஜ்குமார் கடத்தல் சம்பவம், தமிழ்நாட்டு எல்லையில் நடந்திருந்தது. அது தமிழ்நாட்டின் பிரச்னை. கடத்தல் வழக்கானது தமிழக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடத்தியவர்களும், கடத்தப்பட்டவர்களும் தமிழ்நாட்டு பகுதியில்தான் இருந்தார்கள்.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வத் தூதராக நக்கீரன் கோபால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ராஜ்குமாரை மீட்டு பிரச்னையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு, தமிழக முதல்வரிடம் இருந்தது. ஆனால், மீட்பு நடவடிக்கைகளில், மறைமுகமாக நடைபெற்ற சமாதான நடவடிக்கைகளில் பெங்களூரின் தலையீடு அதிகமாக இருந்தது.

வீரப்பன், ராஜ்குமாரை ஏன் கடத்தினான் என்பது இன்றுவரை தெரியவில்லை. கடத்தலுக்கு உதவி செய்ததாக 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, ஆதாரம் இல்லாததால் அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டார்கள். வீரப்பனிடமிருந்து யார், எப்படி ராஜ்குமாரை மீட்டார்கள் என்பது இன்றும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

0

பகிர:
ஜெ. ராம்கி

ஜெ. ராம்கி

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். ஜெயலலிதா, கருணாநிதி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறார். நரசிம்ம ராவ், ஐரோம் ஷர்மிளா, ஜெயப்பிரகாஷ் நாராயண் குறித்த நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தொடர்புக்கு : ramkij@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *