நம் தேசத்துக்கு இந்து மதம் கொடுத்த பொக்கிஷங்கள் இரண்டு. ஒன்று மஹாபாரதம். ஒன்று இராமாயணம். இதில் எது காலத்தால் முந்தியது என்று தெரியவில்லை. மஹாபாரதமாகத்தான் இருக்கவேண்டும்.
ஆனால் ராமர் இங்கேதான் பிறந்தார், அங்கேதான் விளையாடினார் என்று அவை அரசியலாக்கப்படுகின்றனவே தவிர அவற்றின் ஊடாகக்கிடைக்கும் செய்திகள், வழிகாட்டல்கள், நியதிகள், நீதிகள் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. சரி, நாம் கதைக்கு வருவோம்.
விஷ்ரவன் என்று ஒரு முனிவர். அல்லது மகான். ஆனால் அவரது மனைவி கைகாஷி அல்லது புஷ்போத்கதா என்பவள் ஒரு ராட்சசி. அவளுக்கு ரொம்பப் பிடித்ததெல்லாம் இரண்டு விஷயங்கள்தான். ஒன்று தங்கம்; இன்னொன்று ரத்தம்.
புராண காலத்திலிருந்தே பெண்களுக்குத் தங்கம் பிடிக்கும் என்று தெரிகிறது. அட்சயத்திருதை காலம் அப்போதே தொடங்கிவிட்டதுபோலும். தங்கம் சரி. ஆனால் ரத்தம்? ரத்தத்தைப் பார்த்தாலே நம்மில் பலருக்கு மயக்கம் வந்துவிடும். ஆனால் கைகாஷிக்கோ ரத்தத்தைப் பார்க்காவிட்டால்தான் மயக்கம் வரும். அப்படியொரு ரத்த பந்தம்.
அதிருக்கட்டும், ஒரு முனிவர் அல்லது மகான் ஏன் ஒரு ராட்சசியைத் திருமணம் செய்துகொண்டார். கணவராக இருப்பவரெல்லாம் மகான்கள், மனைவிகளெல்லாம் ராட்சசிகள் என்று சொல்ல வருகிறார்களோ?!
அவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை பார்க்கவே பயங்கரமாக இருந்தது. பத்து கழுத்துகள்! அதாவது பத்துத் தலைகள். குழந்தையின் அப்பா மகனுக்கு தசக்ரீவன் என்று பெயர் வைத்தார். ’ ‘பத்துத்தலைகள் கொண்டவன்’ என்று அர்த்தம்.
பின்னாளில் தசக்ரீவனே ராவணன் என்று அழைக்கப்பட்டான். ராவணன் என்றால் சிங்கம்போல கர்ஜிப்பவன் என்று பொருள். அவன் பிறந்தபோது வானம் ரத்தமழை பெய்தது! அடடா என்ன அழகான கற்பனை.
வரலாற்றில் பல இறைத்தூதர்கள் பிறக்கும்முன் தம் மடியில் நிலவு விழுவதாக அவர்களின் அன்னையர் கனவு கண்டுள்ளனர். இயேசுபிரான் பிறக்கும் முன் மரியமுக்கு அப்படியொரு கனவு வந்தது. பல ஞானிகள் பிறப்பதற்கு முன் அவர்களின் அன்னையர்க்கு இத்தகைய கனவுகள் வந்துள்ளதை வரலாறு கூறுகிறது. பௌர்ணமி நிலவுக்கும் புத்தருக்கும் தொடர்பு உண்டு. அவர் ஒரு பௌர்ணமியில்தான் பிறந்தார். ரட்கருக்கு நிலவு, ராட்சசனுக்கு ரத்தம்! கணக்கு சரிதான்.
நரிகள் ஊளையிட்டன. கொடிய மிருகங்களெல்லாம் அம்மாவைச் சுற்றியும் பிள்ளையைச் சுற்றியும் வட்டமிட்டன. இப்படிப்பட்ட பொருத்தமான சங்கீத, மன்னிக்கவும், சங்கேத நிமித்தங்கள் நம் வாழ்க்கையிலும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம்தான் அவற்றை கவனிக்கத் தவறிவிடுகிறோம். புராணங்களும் வரலாறுகளும் அவற்றை நமக்குச் சுட்டிக்காட்டுவதைக் கவனிக்கவேண்டும்.
ராவணனுக்குப் பிறகு கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை என்று மூன்று ராட்சசக் குழந்தைகள் விஷ்ரவனுக்குப் பிறந்தனர்.
ராவணன், பிரம்மனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான். ‘தேவர்கள், நாகர்கள், கந்தர்வர்கள் என்று யாராலும் வெல்ல முடியாத வீரனாக நான் ஆகவேண்டும்’ என்று நோன்பிருந்து பிரார்த்தனைசெய்தான்.
எத்தனை ஆண்டுகள் தெரியுமா? பத்தாயிரம் ஆண்டுகள். அதுவும் வெறுமனே அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் பத்துத் தலையில் ஒன்றை வெட்டித் தியாகம் செய்து!
பத்தாவது தலையை வெட்ட இருந்தபோது பிரம்மன் தோன்றினார். ஏன் அப்படி? ஏழாவது அல்லது ஒன்பதாவது தலையை வெட்டும்போது தோன்றியிருக்கக்கூடாதா? ம்ஹும், கடவுள் அப்படிச் செய்யமாட்டார். இறுதிவரை போகிறாயா, எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, கடவுள் மட்டுமே கதி என்று நினைக்கிறாயா என்று பார்ப்பார். தெய்வத்தின் தொழில்தர்மம் அது!
கடைசித்தலையை வெட்டித்தியாகம் செய்யுமுன் அவன் முன் தோன்றிய பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அப்போதுதான் தன் வேண்டுகோளை அவரிடம் ராவணன் சொன்னான். அந்த வேண்டுகோளில் மனிதர்களால் வெல்ல முடியாதவனாக இருக்கவேண்டும் என்று அவன் கேட்கவில்லை.
அங்கேதான் ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தவறு நடந்துள்ளது. மனிதர்கள் என்றால் கீழானவர்கள், பலவீனமானவர்கள் என்று அந்த முட்டாள் அசுரனான ராவணன் நினைத்துவிட்டான்.
எந்தக் கொசுவும் என்னை வென்றுவிடக்கூடாது என்று நாம் ஒரு பிரார்த்தனையை கடவுளிடம் வைக்கமாட்டோம் அல்லவா? அதைப்போலத்தான் தான் யாராலும் வெல்லப்படக்கூடாது என்று பிரம்மனிடம் ராவணன் கேட்ட ‘லிஸ்ட்’டில் மனிதர்களைச் சேர்க்கவில்லை!
அங்கேதான் ராவணனின் பிரார்த்தனையில் ஒரு காவியத்தவறு நடந்துவிட்டது. திருமாலின் அவதாரமான ராமன் மனித உருவில் வந்து அவனை வென்றுவிட்டார்.
பிரம்மனும் தன் கொப்பூழில் வைத்திருந்த சாகா வரம் கொடுக்கும் அமுதப்பானையை ராவணனுக்குக் கொடுத்து அவனது பிரார்த்தனையை அங்கீகரித்தார். அதோடு தனக்காக வெட்டப்பட ராவணனின் ஒன்பது தலைகளையும் மீண்டும் பொருத்தினார்.
இந்த விஷயத்தில் நாமும் ராவணன் மாதிரிதான். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது; இதெல்லாம் முக்கியமில்லை; அதெல்லாம் பெரிய விஷயமில்லை என்று நினைத்து பல முக்கியமான எதிரிகளை, செயல்பாடுகளை அசட்டை செய்துவிடுகிறோம். ஆனால் பின்னர் அந்த அசட்டையாலேயே நாம் தோல்வியைத் தழுவுகிறோம். அதுதான் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் அசுரத்தவறு.
(தொடரும்)