இந்த நிகழ்ச்சி நடந்தது புராண, காவிய காலத்திலோ அல்லது மானிடக்கற்பனையின் உச்சத்திலோ அல்ல. வரலாற்றின் பௌர்ணமியில் நடந்தது இது. இரண்டு பேரின் புனிதமான உறவை, ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த மரியாதையை, காவியத்தன்மை கொண்ட நட்பை அந்த நிகழ்வு உணர்த்தியது. அதை இஸ்லாத்தின் கொடை என்றும் சொல்லலாம்.
அந்த இரண்டு பேரில் ஒருவரின் பெயர் ஓயாமல் புகழப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு நாளைக்கு ஐந்து முறைகள். உலகம் முழுவதும். இருபத்து நான்கு மணி நேரமும்.
இது சாத்தியமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே. சாத்தியம்தான் என்பதைச் சொல்லுமுன், அந்த நிகழ்வைச் சொல்லிவிடுகிறேன். அந்த நிகழ்வின் பின்னால் இஸ்லாமும் அதன் வரலாறும் உள்ளது. வெறும் நட்பினால் மட்டும் அது சாத்தியப்படவில்லை. சாத்தியப்பட்டிருக்கவும் முடியாது. சத்தியம் எடுத்துரைக்கப்பட்டதனால் மட்டுமே அப்படியொரு நிகழ்வு சாத்தியமானது.
அந்த இருவரில் ஒருவர் பெயர் அபூபக்கர். உண்மையில் அதுகூட அவரது இயற்பெயரல்ல. அது ஒருவிதமான பட்டப்பெயர். அரேபியா இப்படியான பட்டப்பெயர்களின் நாடு.
அம்ர் இப்னு ஹிஷாம் என்பவனுக்கு அபூ ஜஹ்ல் (அறியாமையின் தந்தை) என்று ஒரு பட்டப்பெயர் ஏற்பட்டது. அது எந்த அளவுக்குப் புகழ்பெற்றது என்றால் அம்ர் இப்னு ஹிஷாம் என்று சொன்னால் வரலாற்று அறிஞர்களுக்குக்கூட சட்டென்று யாரென்று விளங்காது. ஆனால் அபூ ஜஹ்ல் என்று சொல்லிவிட்டால் உடனே தெரிந்துவிடும்! எவ்வளவு பிரபலமான கொடுத்துவைத்த அறியாமை!
பட்டப்பெயர்களை அரேபியாவில் ‘குன்யா’ என்றும் ‘லகப்’ என்றும் சொல்வர். ‘குன்யா’ கொஞ்சம் கௌரவமானது. பேரறிஞர், கலைஞர், கவிப்பேரரசு, இசைப்புயல் என்றெல்லாம் நாம் சிலரை அழைக்கிறோமல்லவா? அதெல்லாம் கௌரவப்பெயர்கள். அதாவது ‘குன்யா’க்கள். ஆனால் ‘ஒல்லிப்பிச்சான்’, ‘மரமண்டை’, ‘குள்ளக்கத்திரிக்கா’ போன்றதெல்லாம் கௌரவம்போக்கும் பெயர்கள்! அரேபியாவில் அவை ‘லகப்’ என்று சொல்லப்பட்டன. அபூ ஜஹ்லும் அப்படி ஒரு லகப்-தான்.
சரி, அபூபக்கருக்கு வருவோம். அவரது இயற்பெயர் அப்துல்லாஹ். ஆனால் தனது ‘குன்யா’வினால்தான் அவர் அறியப்படுகிறார். அபூபக்கர் என்றால்தான் உலகத்துக்குத் தெரியும். அப்பெயரில் உள்ள விஷேஷம் என்னவெனில் அபூபக்கர் என்றால் ‘இளம் ஒட்டகத்தின் தந்தை’ என்று அர்த்தம்!
ஒரு மனிதருக்கு எப்படி அப்படியொரு பெயர் வரமுடியும்?! தந்தை என்றால் தந்தை என்று மட்டும் அர்த்தமல்ல. ரொம்பப் பிரியம் கொண்டவர் என்ற அர்த்தமும் இருந்தது. இன்னொரு நபித்தோழருக்கு அபூ ஹுரைரா (பூனையின் தந்தை) என்று பெயர்! அவர் எப்போதும் தன் மடியில் ஒரு பூனைக்குட்டியை வைத்திருப்பார். அந்தப்பிரியத்தினால் அப்படி ஒரு பெயர் ஏற்பட்டு, அதுவே அவர் பெயராக நிலைத்துவிட்டது.
அபூபக்கர் என்ற பெயரும் அப்படித்தான். இளம் ஒட்டகங்களை அவருக்கு மிகவும் பிடிக்கும், அதனால் அப்படியொரு பெயர் ஏற்பட்டுப் பின்னர் அந்தப்பெயராலேயே அவர் அரேபியாவிலும் இஸ்லாமிய வரலாற்றிலும் அறியப்படுகிறார்.
அப்துல்லாஹ் என்பதுதான் அவருடைய பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் என்பது மறந்துபோகுமளவுக்கு அபூபக்கர் என்ற பெயர் பிரபலமாகிவிட்டது. நாமும் அவரை அப்படியே அழைப்போம். நபிகள் நாயகத்தின் மறைவுக்குப்பிறகு இஸ்லாத்தின் முதல் கலீஃபாவாக இருந்தவரும் அபூபக்கர்தான்.
அபூபக்கரின் உடனிருந்த இன்னொருவரின் பெயர் உலகம் முழுவதும் இருபத்தி நான்கு மணி நேரமும் சொல்லப்பட்டுக்கொண்டே உள்ள பெயர் என்று சொன்னேன் அல்லவா? அது யார் பெயர்? இறைவனின் இறுதித்தூதர் நபிகள் நாயகத்தின் பெயர். முஹம்மது என்ற பெயர்.
ஒரு நாளைக்கு ஐந்து வேளை தொழுகைக்கான அழைப்பொலி பள்ளிவாசல்களிலிருந்து கொடுக்கப்படுகிறது அல்லவா? அப்போது சொல்லப்படும் அரபி வாசகங்களில் ஒன்று ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ (முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்) என்பது.
உதாரணமாக ‘ஃபஜ்ர்’ எனப்படும் அதிகாலைத்தொழுகைக்கான அழைப்பொலியில் அந்த வாசகம் சொல்லப்படும்போது சென்னையில் நேரம் உதாரணமாக காலை 5.22 என்று வைத்துக்கொள்வோம். (இது நாட்கள் செல்லச்செல்லக் கொஞ்சம் மாறும்). அது லண்டனில் மாலை நேரத்தொழுகைக்கான நேரமாகவும், நியூயார்க்கில் இரவுநேரத்தொழுகைக்கான நேரமாகவும், டோக்யோவில் மறுநாளின் காலை நேரத்தொழுகை முடிந்துவிட்ட நேரமாகவும் இருக்கும்.
இப்படியே பார்த்தால் உலகம் முழுவதும் ஐந்து வேளையும் இருபத்தி நான்கு மணி நேரமும் விடாமல் ‘முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்’ என்று சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது உலக முடிவு நாள் வரையிலும் தொடர்ந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்டதொரு கௌரவம் உலகில் வேறு எந்த மனிதருக்கும் கிடைக்கவில்லை. இனி கிடைக்கப்போவதும் இல்லை.
சரி நிகழ்ச்சிக்கு வருவோம். அபூபக்கரும் முஹம்மது நபியவர்களும் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புலம் பெயர்ந்து செல்லுமுன் ஒரு இரவில் தௌர் என்ற குகையில் மறைந்திருந்தார்கள். குகை என்றால் இருட்டாக இருக்கும் என்று சொல்லத்தேவையில்லை.
அங்கே முஹம்மது நபியைத் தன் மடியில் போட்டு உறங்கச்சொல்லிவிட்டு அபூபக்கர் அமர்ந்திருந்தார். எதிரில் ஒரு ஓட்டை இருந்தது. அதன் வழியாக ஒரு பாம்பு எட்டிப்பார்த்தது. அது இறைத்தூதரைக் கொத்திவிடுமோ என்று அஞ்சினார் அபூபக்கர். இருட்டில் எப்படி பாம்பைப்பார்த்தார் என்று கேட்கக்கூடாது. அசைவு, லேசான சப்தம் இவற்றையெல்லாம் உணரமுடியும்தானே!
உடனே தன் பாதத்தால் பாம்பு எட்டிப்பார்த்த ஓட்டையை அடைத்துக்கொண்டார். காவிய அன்பு கொண்டவர் அவர். இறைவனின் இறுதித்தூதருக்காக உயிரைக்கொடுத்த பலரை இஸ்லாமிய வரலாற்றில் காணமுடிகிறது.
நபிபெருமானார்மீது அபூபக்கர் கொண்ட அன்பைப்பற்றி பாம்புக்குத் தெரியுமா என்ன? எனவே அது அவரைக்கொத்திவிட்டது. விஷம் ஏறிக்கொண்டிருந்தாலும் அபூபக்கர் பொறுத்துக்கொண்டிருந்தார். மடியில் படுத்துப் பரசுராமர் உறங்கிக்கொண்டிருந்தபோது தன் தொடையில் வண்டு துளைத்ததை கர்ணன் பொறுத்துக்கொண்ட மாதிரி. கர்ணன் செய்தது காவியத்தில். அபூபக்கர் செய்ததோ வரலாற்றின் (குகை) இருட்டில்.
பின்னர் விஷயம் தெரிந்தவுடன் முஹம்மது நபியவர்கள் தன் உமிழ்நீரைப் பாம்புகடித்த இடத்தில் தடவ விஷம் இறங்கியது. அது நபிகளார் நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று.
அப்போது மக்காவிலிருந்து சில எதிரிகள், குறைஷி ஆசாமிகள், அவர்களைத் தேடி வந்தனர். குகைக்கு மேலே வந்துவிட்டனர். கீழிருந்து அவர்களின் பாதங்கள் அபூபக்கருக்குத் தெரிந்தன. அவர்கள் குனிந்து பார்த்தால் இவர்கள் தெரிந்துவிடுவார்கள் என்ற அச்சம் அபூபக்கருக்கு ஏற்பட்டது. ‘இறைவனின் தூதர் அவர்களே, நாம் இருவர் மட்டுமே இங்கிருக்கிறோம். வெளியே பல எதிரிகள் இருக்கின்றார்களே’ என்று தன் அச்சத்தை அபூபக்கர் தெரிவித்தார்.
அதற்கு முஹம்மது நபியவர்கள் ஓர் அற்புதமான பதிலைச் சொன்னார்கள். அது என்ன தெரியுமா?
‘நாம் இருவர் இல்லை. மூன்று பேர் இருக்கிறோம். நம்மோடு இறைவன் இருக்கிறான்’ என்றார்கள்! என்ன அழகான, ஆழமான, ஆன்மிகமான பதில்! இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பது இஸ்லாம் தரும் பாடங்களில் ஒன்று. ஆனால் கஷ்டம் வரும்போது எத்தனை பேர் அப்படி உணர்கிறார்கள்? அன்று குகையிருட்டிலிருந்த இரண்டு தோழர்கள் மூலமாக அந்த உண்மையை நமக்கு இறைவன் புரிய வைக்கிறான். அன்று இருட்டில் நமக்குக்கிடைத்த ஒளி அது.
(தொடரும்)
நம்பிக்கை மிகுந்த பதில். ஆழ்ந்த பற்று
Supper