அன்று அவர் கலிலி ஏரியின் பக்கமாக நடந்துகொண்டிருந்தார். அது கடலைப்போன்ற பெரிய ஏரி. உலகில் உள்ள மிகக்குறைவான நல்ல தண்ணீர் ஏரிகளில் அதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 141 அடிகள் ஆழம் கொண்டது. அதற்கான தண்ணீர் பிரதானமாக ஜோர்டான் நதியிலிருந்துதான் வந்தது. அதல்லாமல் பூமிக்குக்கீழிருக்கும் ஊற்றுகளிலிருந்தும் தண்ணீர் கிடைத்தது. புனித பைபிளில் அது ‘கலிலியின் கடல்’ என்றே குறிப்பிடப்படுகிறது.
அந்த ஏரிக்கரையில்தான் இயேசுபிரான் பெரும்பாலும் தன் சீடர்களுக்கு உபதேசங்களைச் செய்தார். பல நேரங்களில் படகுகளில் சென்றபோது உபதேசம் செய்தார். அந்த ஏரிப்பக்கம்தான் அவர் அடிக்கடி உலா சென்றார். அவர் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது அந்த ஏரி. மலைப்பிரசங்கம் மாதிரி நதிப்பிரசங்கமும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருந்தது.
அப்படி ஒருநாள் அவர் வந்தபோது சில மீன்பிடிப்படகுகள் கரைக்கு வந்துகொண்டிருந்தன. அதில் ஒரு படகு சைமன், ஆண்ட்ரூ ஆகிய சகோதரர்களுக்குச் சொந்தமானது. அவர்களோடு பேசுவதற்காக அவர் காத்திருந்தார்.
பின்னர் சைமனின் படகில் இயேசு ஏறிக்கொண்டார். கொஞ்ச தூரம் சென்று வரலாமா என்று கேட்டார். அல்லது சென்று வரலாம் என்று சொன்னார். ஆனால் அப்படிச் சொல்வதற்குள் அவர் வேறொரு வேலை செய்தார். அந்தப்படகில் ஏறி உட்கார்ந்துகொண்டு அங்கு வந்திருந்த மக்களை நோக்கிக் கொஞ்சநேரம் பேசினார். இறைவனைப்பற்றியும் அவனது எல்லாம் வல்லமை பற்றியும் கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அவர் பேசியதையெல்லாம் அங்கிருந்த மக்கள் கேட்டனர். உபதேசங்களையெல்லாம் கேட்டுவிட்டு மக்கள் தத்தம் வீடுகளை நோக்கிச் சென்றனர்.
அதன்பின் சைமனைப் பார்த்து, ‘கொஞ்ச தூரம் ஏரிக்குள் சென்று வரலாமா?’ என்று கேட்டார் இயேசு.
‘இல்லை ஐயா, அதனால் ஒரு பயனும் இல்லை. இரவு பூராவும் வலைபோட்டு அலசித்தேடிவிட்டோம். ஒரு மீன்கூட அகப்படவில்லை’ என்று சொன்னார் சைமன் என்ற பீட்டர்.
இருந்தாலும் இயேசு சொன்னதற்காக அவர்கள் மீண்டும் கொஞ்சதூரம் படகில் சென்றார்கள். ஏற்கனவே அவரைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கவேண்டும். இல்லையெனில் புதிதாக ஒருவர் வந்து கொஞ்சதூரம் படகில் போகலாம் என்றால் எந்த மீனவர் ஒத்துக்கொள்வார்? எனவே இயேசுவுக்கு ஏற்கனவே மக்கள் மரியாதை கொடுத்தனர் என்பது இந்நிகழ்வின் பின்னால் இருக்கும் உட்குறிப்பாக உள்ளது. ஏற்கனவே அவர் நிகழ்த்திய அற்புதங்களுக்கு அவர்கள் சாட்சியாக இருந்திருக்கலாம்.
இயேசு சொன்னபடி சகோதரர்கள் வலையை வீசினார்கள். என்ன அற்புதம்! அவர்களது வலைகள் பூராவும் மீன்கள் குவிந்தன! மீன் பிடிக்க வலை வீசப்பட்டது என்று சொல்வதைவிட வலையில் சிக்க மீன்கள் வீசப்பட்டன என்றுதான் சொல்லவேண்டும். கூட்டம் கூட்டமாக எண்ணிலடங்கா மீன்கள் வலையில் வந்து விழுந்தன!
அதுவரை அவ்வளவு மீன்கள் பிடிபட்டதே இல்லை. வந்து விழுந்த மீன்களின் கனத்தால் வலைகளில் ஒன்று அறுந்தே போனது. வலைகளை இழுத்து மேலே தூக்குவதற்குக்கூட அவர்களால் முடியவில்லை. அவ்வளவு கனம்! வேறு சிலரின் உதவி தேவைப்பட்டது. வேறொரு படகிலிருந்த நண்பர்களைக் கூப்பிட்டு வலைகளை இழுக்க உதவும்படிக் கேட்டுக்கொண்டார்கள்.
சைமன், ஆண்ட்ரூ சகோதரர்களுக்குத் தம் கண்களையே நம்ப முடியவில்லை. அன்றைய மீன்பிடிப்பு அவர்கள் வாழ்நாள் சாதனை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அது இயேசு பிரான் செய்த அற்புதம் என்பது மட்டும் புரிந்தது. மண்டியிட்டு இயேசுவுக்குத் தம் மரியாதையைச் செலுத்தினர்.
மீன்பிடித்தொழில்தான் கலிலியின் ஏரியைச் சுற்றி நடந்துகொண்டிருந்த பிரதான தொழிலாக இருந்தது. இரவில் தம் படகுகளில் சென்று வலைவீசும் அவர்கள் காலையில்தான் திரும்புவார்கள். ஆனால் அடிக்கடி அந்த ஏரியில் புயலடிக்கும்.
‘என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். மீன்களுக்கு பதிலாக மனிதர்களைப் பிடிப்பது எப்படி என்று உங்களுக்குச் சொல்லித்தருகிறேன். நீங்கள் என் சீடர்களாக இருங்கள். இறைவனின் செய்தியை நான் பரப்ப எனக்கு உதவுங்கள்’ என்று இயேசு சொன்னார்.
‘சீடர்’ என்ற சொல்லை இயேசு பயன்படுத்தினாரா என்பது சந்தேகத்துக்குரியது. புனித பைபிள் அப்படித்தான் சொல்கிறது என்றாலும்.
அன்றிலிருந்து அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அவரது பன்னிரண்டு சீடர்களில் ஒருவராக ஆனார் சைமன் என்ற பீட்டர்.
ஆனால் இதே பீட்டர்தான் பின்னாளில் ‘இயேசுவா, அப்படி யாரையும் எனக்குத்தெரியாதே’ என்று மூன்று முறை மறுதலித்தார். இறுதி இரவு உணவை அவர்கள் உண்ணக்கூடியபோது சேவல் கூவுமுன் பீட்டர் தன்னை மூன்றுமுறை மறுதலிப்பார் என்று இயேசு முன்னறிவித்திருந்தார். ஆனால் அப்படியெல்லாம் நான் செய்யமாட்டேன் என்று அப்போது பீட்டர் சொன்னார்.
ரோமானிய அதிகாரிகள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனபிறகு, ஒரு சின்னப்பெண் பீட்டரைப் பார்த்துவிட்டு, இவரையும் நான் அவரோடு (இயேசுவோடு) பார்த்திருக்கிறேன் என்று சொன்னாள். அதைக்கேட்டு பயந்துபோன பீட்டர், ‘இயேசுவா, அப்படி யாரையும் எனக்குத்தெரியாது’ என்று மூன்றாவது முறையாகச் சொன்னார். அப்போது இயேசு முன்னறிவித்தபடி சேவல் கூவியது!
திருக்குர்’ஆனில் குறிப்பிடப்படும் முக்கிய இறைத்தூதர்களில் ஒருவர் இயேசு. இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகத்துக்காக சில நபித்தோழர்கள் உயிரைக்கொடுத்தது இஸ்லாமிய வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஆனால் இயேசுவின் சீடர்களோ உயிருக்கு பயந்து தன் குருவையே யாரென்று தெரியாது என்று சொல்லிவிட்டனர். வரலாற்றிலும் பரிசுத்த வேதத்திலும் பதிவாகியுள்ளது இந்த அசுத்த துரோக வடு!
(தொடரும்)