பரிசுத்த வேதாகமத்தின்படி இஸ்ரவேலர்கள் என்று சொல்லப்படும் யூதர்களின் முதல் அரசராக சால் என்பவர் இருந்தார். இஸ்லாமிய வரலாறு இவரை தாலூத் என்று சொல்கிறது. இஸ்ரவேலர்களைப்பற்றி பரிசுத்த வேதாகமமும் திருக்குர்’ஆனும் குறிப்பிடுகின்றன.
சிதறிக்கிடந்த யூதர்களை ஒருங்கிணைத்த பெருமையும் சாலுக்கு உண்டு. அவரைப் பதவியில் முறைப்படி அமர வைத்தவர் ஷம்மில் என்றும் சாமுவேல் என்றும் அறியப்படும் இறைத்தூதர் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் காலம் செல்லச்செல்ல சால் அரசர் அகந்தையின் காரணமாகக் கடவுளுக்கு மரியாதை கொடுப்பதைக் குறைத்துக்கொண்டார். அல்லது நிறுத்திவிட்டார். கடவுளின் உத்தரவுகளை அசட்டை செய்தார்.
எனவே ‘பெத்லஹமுக்குப்போ. அங்கே ஜெஸ் என்று ஒருவர் இருப்பார். அவருக்கு எட்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர்தான் அடுத்த மன்னராகவேண்டும்’ என்று இறைவன் சாமுவேலிடம் சொன்னார்.
கடவுள் சொன்னபடி சாமுவேல் பெத்லஹமுக்குச் சென்று முதலில் ஜெஸ்ஸின் மூத்த மகனைப்பார்த்தார். இறைவனால் குறிப்பிடப்பட்டவன் இவனாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தார்.
ஆனால், ‘உருவத்தைப்பார்க்காதே. உள்ளத்தைப்பார். இவனல்ல அவன்’ என்று இறைவனிடமிருந்து செய்தி வந்தது. ஒவ்வொரு மகனாகப் பார்த்துக்கொண்டே வந்தார். ஆனால் பார்க்கப்பட்ட எந்த மகனையும் கடவுள் அங்கீகரிக்கவில்லை.
‘நான் உங்கள் எல்லா மகன்களையும் பார்த்துவிட்டேனா?’ என்று ஜெஸ்ஸிடம் கேட்டார்.
‘இல்லை. என் கடைசி மகன் டேவிட் இருக்கிறான். ஆனால் அவன் சின்னப்பையன். ஆடுகளை கவனிக்கச் சென்றுள்ளான்’ என்று அப்பா சொன்னார். இஸ்லாமிய வரலாற்றில் இறைத்தூதர்களின் வரிசையில் டேவிட் என்று அறியப்படும் தாவூதும் ஒருவர்.
டேவிட்டை சாமுவேல் பார்த்ததுமே ‘இவர்தான் அவர்’ என்று இறைவன் செய்தி அனுப்பினான். எனவே அவர் தலையில் எண்ணையைத் தேய்த்து விட்டார் சாமுவேல். அடுத்த தலைவர், அடுத்த ராஜா, அவர்தான் என்பதற்கான ஒரு குறியீட்டுச் செயல்பாடு அது. திருநெய்யாட்டுதல் என்றும் அது அறியப்படுகிறது. கிறிஸ்தவக் குழந்தைகளுக்கு தேவாலயங்களில் இப்படிப்பட்ட எண்ணெய் தேய்க்கப்பட்டே பெயரிடப்படுகிறது. அன்றிலிருந்து ஆண்டவனின் ஆற்றல் டேவிடுக்குக் கிடைத்து வந்தது.
முன்பெல்லாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துவிடப்பட்டு குளித்து ராஜாவாகும் பாக்கியம் நமக்கெல்லாம்கூட இருந்தது! இனிவரும் நாட்களில் குளியலே ஒரு சிறப்பு அனுபவமாக ஆகிவிடும்போலுள்ளது!
தொடர்ந்து அப்பாவின் ஆடுகளை நன்கு கவனித்துக்கொண்டிருந்தார் டேவிட். இயேசு மட்டுமல்ல, எல்லா இறைத்தூதர்களுமே நல்ல மேய்ப்பர்களாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு கால் மிருகங்களை அடக்கி ஆளுமுன்னர் நான்கு கால் மிருகங்களை அடக்கி, பயிற்சி பெற வேண்டியிருந்துள்ளது. ஆனால் இப்போதெல்லாம் ஓநாய்களே ஏய்ப்பர்களாக, மன்னிக்கவும், மேய்ப்பர்களாக்கப் பட்டுவிடுகின்றன!
மன்னர் சால், அவர் ஆண்ட மக்கள், டேவிட் எல்லாருமே இஸ்ரவேலர்கள் அல்லது யூதர்கள். இஸ்ரவேலர்களுக்கும் ஃபிலிஸ்டைன் மக்களுக்கும் எப்போதுமே ஆகாது. அவர்கள் விஷயத்தில் இஸ்ரவேலர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. ஃபிலிஸ்டைன் மக்களில் பலர் ஆஜானுபாகுவான அரக்கர்களாக இருந்தனர். அதனால்தானோ என்னவோ ஆங்கிலத்தில் ‘ஃபிலிஸ்டைன்’ என்ற சொல்லுக்கு இலக்கியம், கலை, இசை போன்ற மென்மையான எதையுமே புரிந்துகொள்ளாத மரமண்டைகள் என்று அர்த்தமுள்ளது போலும்!
ஃபிலிஸ்டைன் அரக்கர்களின் கதாநாயகன்போல இருந்தவன் பெயர் கோலியாத் அல்லது ஜாலூத். அவன் ஒன்பதடிக்கு மேல் உயரமாக இருந்தான். ஏதாவது வீட்டுக்குள் போகவேண்டுமெனில் ரொம்பக்கஷ்டப்பட்டு, கூனிக்குறுகி அவன் செல்லவேண்டியிருந்தது!
அதோடு அவன் எப்போதுமே கவச உடை அணிந்துகொண்டு கையில் ஒரு பெரிய ஈட்டியையும் வைத்தவண்ணம் இருந்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் ‘டேய் இஸ்ரேலிய பொடிப்பசங்களா. என்னோடு எவனாவது சண்டைக்கு வரமுடியுமா? என்னை ஜெயித்தால் நாங்கள் உங்கள் அடிமை. இல்லையெனில் நீங்களெல்லாம் எங்கள் அடிமை’ என்று சொல்லிக் கடுப்பேற்றிக்கொண்டே இருந்தான்.
அந்த ராட்சசப் பிரகடனத்தைக் கேட்டு மன்னர் சாலுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அப்புசாமி கதை எழுதிய பாக்கியம் ராமஸ்வாமி சொல்வதைப்போல ‘வயிற்றுக்குள் வத்தக்குழம்பு’ அனுபவம் ஏற்பட்டது! இந்த அசுரப்பிரச்சனை எப்போது தீரும் என்று அவர்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில், ‘அவனோடு நான் சண்டையிடுகிறேன்’ என்று டேவிட் சொன்னார். ‘நீ சின்னப்பையன். அவன் ராட்சசன். அவனோடெல்லாம் நீ சண்டைபோட முடியாது’ என்று சால் சொன்னார்.
‘இல்லை. அப்பாவின் ஆடுகளைக் காப்பாற்ற நான் கரடி, சிங்கத்தோடெல்லாம் சண்டையிட்டு அவைகளைக் கொன்றுள்ளேன். அப்போது எனக்கு உதவிய இறைவன் கோலியாத்தைக் கொல்லவும் உதவுவான்’ என்றார் டேவிட். என்ன அழகான வார்த்தைகள்! என் திறமையால் நான் ஜெயிப்பேன் என்று சொல்லவில்லை. இறைவனை முன்வைத்தே அவர் பதில் சொன்னதைக் கவனிக்க வேண்டும். நம் வாழ்வில் நாம் பின்பற்றவேண்டிய நல்ல செய்தி அது.
அதன்பிறகு டேவிடுக்கு உறுதியானதொரு கவச உடையை அரசர் அணிவித்தார். ஆனால் டேவிட் அதைக்கழற்றிவிட்டார். கவச உடையின் கனத்தைச் சுமந்துகொண்டு சுதந்திரமாக இயங்க முடியாது என்று அவர் மிகச்சரியாக நினைத்தார். சரி அப்படியானால் ராட்சசனை வீழ்த்தும் ஆயுதம்தான் எது?
அது ஒரு கவண்! ஆமாம். தன் பைக்குள் கவணுக்கான மூன்று கற்களை அவர் போட்டு வைத்திருந்தார். அது ஓர் அற்புதம் நிகழ்த்த இருந்தது யாருக்கும் தெரியாது.
டேவிடைப்பார்த்த கோலியாத் என்னோடு சண்டையிட ஒரு சின்னப் பையனா என்று நகைத்தான். ஆனால் டேவிடோ, ‘நீ வாளோடு வந்திருக்கிறாய். நான் இறைவனோடு வந்திருக்கிறேன்’ என்று சொன்னார்.
சண்டை தொடங்கியது. பைக்குள்ளிருந்த ஒரு கல்லைக் கவணில் வைத்து மின்னல் வேகத்தில் கோலியாத்தின் நெற்றியைக் குறிவைத்து விட்டார் டேவிட். ‘(இறைத்தூதர்கள்) இப்ராஹீம், இஸ்ஹாக், யாகூப் ஆகியோரின் இறைவன்மீது ஆணையாக’ என்று சொல்லி மூன்று கற்களையும் விட்டதாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. நெற்றியில் பட்ட முதல் கல்லிலேயே கோலியாத் பிணமாகக் குப்புற விழுந்தான் என்று புனித பைபிள் கூறுகிறது.
வல்லவனுக்குப் புல்லும், நம்பிக்கையாளர்களுக்குக் கவண் கல்லும் ஆயுதம்! கொஞ்சம் அறிவும் இறைவனின் அருளும் இருந்தால் போதும், மனிதர்களால் அசுர சாதனை செய்யமுடியும் என்பதற்கு டேவிட் என்ற தாவூதின் வரலாறு சான்றாக உள்ளது.
(தொடரும்)