அவன் பெயர் அம்ர் இப்னு ஹிஷாம். ஆனால் அரேபிய வரலாற்றில் அபூ ஜஹ்ல் என்று அவன் அறியப்படுகிறான். அபூ ஜஹ்ல் என்றால் ‘அறியாமையின் தந்தை’ என்று அர்த்தம்! ஆனால் உண்மையில் அவன் முட்டாள் அல்ல. சொல்லப்போனால் அவனுக்கு ‘அயோக்கியனத்தனத்தின் தந்தை’ என்றுதான் பட்டம் கொடுத்திருக்கவேண்டும்!
அரேபியாவில் அந்தக் காலத்தில் ஒருவருக்குப் பட்டம் கொடுப்பதாக இருந்தால் இதன் தந்தை அதன் தந்தை என்றுதான் கொடுப்பார்கள். போற்றுவதானாலும் சரி, தூற்றுவதானாலும் சரி. உதாரணமாக நபிகள் நாயகத்தின் உற்ற தோழராகவும், மாமனாராகவும், இஸ்லாமிய ஆட்சியின் முதல் கலீஃபாவாகவுமாக இருந்தவரின் பெயர் அபூ பக்கர், அதன் பொருள் ‘இளம் ஒட்டகத்தின் தந்தை’! ஒரு பிரபலமான நபித்தோழரின் பெயர் அபூ ஹூரைரா. அதன் அர்த்தம் ‘பூனையின் தந்தை’! ஒட்டகக் குட்டிகளின்மீது கொண்ட பிரியத்தினாலும், ஒரு பூனையின்மீது கொண்ட பிரியத்தினாலும் அவர்களின் இயற்பெயர்கள் என்னவென்றே தெரியாத அளவுக்கு அப்பட்டப்பெயர்கள் புகழ்சேர்த்தன.
மக்காவிலிருந்த பனூ மக்தூம் என்ற கோத்திரத்தைச் சேர்ந்த குறைஷி குலத் தலைவர்களில் ஒருவனாகவும் நபிகள் நாயகத்தின் பரம விரோதிகளில் முக்கியமானவனாகவும் இருந்தவன் அபூ ஜஹ்ல். ஒருமுறை நபிகள் நாயகம் அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது அவர்கள் தலையில் கல்லைப்போட்டுக் கொலைசெய்ய முயன்றான். கல்லைத் தூக்கியவன் கீழே வைத்துவிட்டான். ஏன் என்று கேட்டபோது அச்சத்தால் அவன் முகம் வெளிறி இருந்தது.
‘ஒரு ராட்சச ஒட்டகம் என் முன்னே வாயைப்பிளந்துகொண்டு வந்தது. நான் மட்டும் அந்தக் கல்லைப்போட்டிருந்தால் அது என்னை அங்கேயே விழுங்கியிருக்கும்’ என்று சொன்னான். அந்த அற்புத நிகழ்ச்சிக்குப் பிறகாவது அவனுக்கு புத்தி வந்ததா என்றால் அதுதான் இல்லை. அவன்தான் ‘அறியாமையின் தந்தை’ ஆயிற்றே.
இஸ்லாத்தில் இணைபவர்களையெல்லாம் அவன் கடுமையாக எதிர்த்து வந்தான். புதிதாக முஸ்லிமானவர்கள் பணக்கார அரேபியர்களாக இருந்தால் அவர்களைக் கடுமையாகத் திட்டினான். அவர்கள் வியாபாரிகளாக இருந்தால், உன் வாணிபத்தை முடக்குவேன் என்று மிரட்டினான்.
ஆனால் அவர்கள் தனது அடிமைகளாக இருந்தால் ஈவு இரக்கமின்றி அவர்களைச் சித்ரவதை செய்து கொலை செய்தான். முஸ்லிமாகிவிட்டார் என்பதற்காக அடிமையாக இருந்த சுமய்யா என்ற வயதான தாயை நிர்வாணமாக்கி அடிமைகளாக இருந்த அவரது கணவர் மற்றும் மகன் முன்னிலையில் சுமய்யாவின் பெண் குறியில் ஈட்டியைச் சொருகிக்கொன்றான். பின்னர் சுமய்யாவின் கணவரையும் அவரது சகோதரரையும் கொன்றான்.
உலக வரலாற்றில் இப்படிப்பட்ட கொலைகள் வேறு எங்காவது நடந்ததுண்டா? ஹிட்லர்கூட இப்படிச் செய்யவில்லை. நாம் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத அளவு வன்மமும் வெறியும் கொண்ட மிருகமாக அபூ ஜஹ்ல் இருந்துள்ளான். நமது காலத்திலும் அபூ ஜஹ்ல்கள் உண்டு. வேண்டாம் நமக்கெதுக்கு அராஜக அரசியல்.
ஒருமுறை ஒரு விருந்தில் கீழே விழுந்ததில் அபூஹஜ்லின் முட்டியில் அடிபட்டது. அந்த வடு நிரந்தரமாக அவனது அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போனது. அதுகூட நபிகள் நாயகத்தோடு அவன் இடித்துக்கொண்டதால் ஏற்பட்ட காயம் என்று சொல்லப்படுகிறது. பத்ர் போர்க்களத்தில் இறந்துகிடந்த அவனை அந்தக் காயத்தை வைத்தே அடையாளம் கண்டுகொண்டனர்.
நபி பெருமானாரின் குடும்பத்தினருக்கும் அபூஜஹ்லின் குடும்பத்தினருக்கும் பலவிதமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. க’அபாவை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது, அதன் சாவியை வைத்துக்கொள்வது, ஜம்ஜம் கிணற்றின் தண்ணீருக்குப் பொறுப்பாளராக இருப்பது, புனிதப்பயணிகளின் உடை, உணவு முதலியவற்றை கவனித்துக்கொள்வது இப்படி. எல்லாமே சமமாக இருந்தது.
ஆனால் திடீரென்று நான் இறைவனின் தூதர் என்று பெருமானார் சொன்னதால், அபூஜஹ்லுக்கு ஒரு ‘தொழில்நுட்ப’ப் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது! தனது கோத்திரத்தில் அப்படி யாரும் இல்லாமல் போகும்போது ஒரு படி தன் கோத்திரம் கீழே இறங்கிவிடாதா?! இப்படிச் சென்றது அவன் மனம்!
இந்த அகந்தையை என்னவென்று சொல்வது? அந்த அகந்தை அவன் இறக்கும்வரை, அவன் உயிர் போய்க்கொண்டிருந்த அந்தக்கணம் வரை தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அதைத்தான் பார்க்க இருக்கிறோம்.
பத்ர் என்ற இடத்தில் மதினாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் மக்காவின் குறைஷிகளுக்கும் ஒரு போர் நடந்தது. பெரும்பான்மையை சிறுபான்மை வென்ற யுத்த வரலாறு அது. முஸ்லிம்கள் 313 பேர். எதிரிகளோ 700 பேர் வரை இருந்தனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் போரில் பெரும்பான்மை குறைஷிகள் கடுமையான தோல்வியடைந்தனர். கடுமையான, அவமானகரமான தோல்வி அது. முஸ்லிம்களுக்கு அது வரலாறு கூறும் வெற்றியாக அமைந்தது. அந்தப்போர் ஏற்பட முக்கியகாரண கர்த்தாவாக இருந்தவர்களில் ஒருவன் அபூஜஹ்ல்!
இரண்டு சிறுவர்கள். அல்லது இளைஞர்களாகிக்கொண்டிருந்தவர்கள். முஅவ்வித் இப்னு அஃப்ரா, முஆத் இப்னு அம்ர். இருவரும் துடித்துக்கொண்டிருந்தனர். எதற்கு? அபூ ஜஹ்லைக் கொல்லவேண்டும் என்று. ஆனால் அவன் யார் என்று அவர்களுக்குத் தெரியாது. நபிகள் நாயகத்தின் பரமவைரி என்று மட்டும் தெரியும்.
இருவரும் வாளை எடுத்துக்கொண்டு போர்க்களத்துக்குச் சென்றனர். வழியில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் என்ற நபித்தோழரைப் பார்த்து அபூஜஹ்லைத் தெரியுமா, நாங்கள் அவனைக் கொல்லும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லினர். அப்போது அபூஜஹ்ல் அந்தப் பக்கமாகப் போனான். அவனை தோழர் அவ்ஃப் அடையாளம் காட்டவும், பாய்ந்து சென்ற அவர்கள் அவனை கடுமையாக வெட்டிக் காயப்படுத்தினர்.
ஆனால் உயிர் போகவில்லை. குற்றுயிராகக் கீழே விழுந்துகிடந்தான். அந்த சண்டையில் அந்த இருவரில் ஒரு இளைஞனின் கரம் வெட்டுப்பட்டு தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. தொடர்ந்து போர்செய்ய அது தொந்தரவாக இருந்ததால் அதைத் தன் காலால் மிதித்து பிய்த்துப்போட்டுவிட்டு அவன் சண்டையிட்டான்.
அபூஜஹ்ல் இறந்துவிட்டானா என்று பார்த்துவரச்சொல்லி நபிபெருமானார் அப்துல்லாஹ் இப்னு மசூத் என்ற தோழரை அனுப்பினார்கள். குற்றுயிரும் கொலையுயிருமாக அவன் கிடந்ததை அவர் பார்த்தார். அவன் கழுத்தில் தன் காலை இப்னு மசூத் வைத்தார்.
அப்போது அபூஜஹ்ல் மசூத் அவர்களைப்பார்த்து, ’ஏ ஆடுமேய்ப்பவனே, என்னை வெட்டத்தானே போகிறாய்? ஒன்று செய், என் தலையை மட்டும் வெட்டாதே. கழுத்துக்குக்கிழே முழுமையாக வெட்டு. அப்போதுதான் மற்ற தலைகளைவிட என் தலை நீளமாகவும் உயரமாகவும் இருக்கும்’ என்று கூறினான்.
அவன் தலை வெட்டப்பட்டு, நபிபெருமானாரிடம் கொண்டுபோய் காட்டப்பட்டதெல்லாம் வேறு விஷயங்கள். ஹிட்லர்கூட கடைசியில் இனி முடியாது என்று தெரிந்தபிறகு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்தான். அதில் அகந்தை இருக்கவில்லை. அது தோல்வியின் வெளிப்பாடாக மட்டுமே இருந்தது.
ஆனால் தன் தலையை வெட்ட வந்தவரிடம் இப்படி யாராவது சொல்லியிருக்கிறார்களா? இப்படியொரு அகந்தையை உலக வரலாற்றில் வேறு எங்காவது காண முடியுமா?
(தொடரும்)