Skip to content
Home » மதம் தரும் பாடம் #8 – ஞானத்தின் காட்டுப்பாதை – 1

மதம் தரும் பாடம் #8 – ஞானத்தின் காட்டுப்பாதை – 1

ஞானிகளை உலகம் கொண்டாடுகிறது, பின்பற்றுகிறது. ஆனால் அந்த நிலைக்குச் செல்வதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கை செயல்படுத்தக்கூட யாரும் முயல்வதில்லை. அவர்களைக் கொண்டாடுவதோடு விட்டுவிடுகின்றனர்.

ஆனால் அவர்கள் வாழ்வை உன்னிப்பாக கவனிக்கும்போது நமக்கு வியப்பு உண்டாவது இயற்கை. அப்படியெல்லாம் இருப்பது சாத்தியமா என்றுகூடத் தோன்றலாம். மகான்கள் அனைவருமே தனிமையில்தான் தியானம் செய்தார்கள். தனிமையிலேயே ஞானமடைந்தார்கள். கும்பலில் ஞானமடைந்ததாக ஒருவர்கூடக் கிடையாது. அது சாத்தியமும் இல்லை.

இக்காலத்தில் நமக்கான தனிமை என்பது நம் வீட்டு அறைதான். ஆனால் அந்தக்காலத்தில் அது காடாக இருந்துள்ளது! ஆமாம். புத்தரில் தொடங்கி நபிகள் நாயகம் வரை ஞான வரலாறு அப்படித்தான் சொல்கிறது. புத்தருக்குக் காடும், கடைசியில் ஒரு மரமும். பரமஹம்சருக்குப் பஞ்சவடியும் காளி கோயிலும். நபிகள் நாயகத்துக்கு ஒரு குகை. மஹாவீரருக்கும் காடுதான்.

புத்தருக்கும் மஹாவீரருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே இளவரசர்கள். இருவருமே சமகாலத்தவர்கள். இருவருமே காட்டில் தவம் செய்தவர்கள். ஆனால் புத்தர் முப்பது ஆண்டுகள் மூத்தவர்.

மஹாவீரருக்கு மிக அழகாக வடிவமைக்கப்பட்ட உறுதியான உடல் இருந்தது. அவர் மிகவும் உயரமாக இருந்தார். கிட்டத்தட்ட ஒன்பது அடிக்கு மேல் ராட்சச உயரமாம்! மஞ்சளும் தங்கமும் கலந்த மாதிரி நிறம். எட்டு வயதாக இருக்கும்போதே மதம் கொண்ட யானையின் தும்பிக்கையைப் பிடித்து அதன் முதுகின்மீது ஏறி அதனை அடக்கிய வீரர். முப்பது ஆண்டுகள் இல்வாழ்க்கை நடத்தியவர் என்றும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

43-வது வயதில் ஞானமடைந்தார். நாற்பதுகளுக்கும் ஞானத்துக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. நாற்பதாவது வயதில்தான் முஹம்மது நபியவர்களுக்கு முதன் முதலாக இறைவனிடமிருந்து செய்தி வந்தது! அதேபோல ஞானத்துக்கும் மரத்துக்கும்கூட ஏதோ தொடர்பு உள்ளது. புத்தருக்கு போதி மரம். மகாவீரருக்கு சால மரம்.

மஹாவீரர் எப்போதும் உண்மையே பேசினார். எதற்காகவும் கோபப்பட்டதே கிடையாது. அவர் தியானத்திலிருந்தபோது ஓர் இடையன் தன் பசுக்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றான். திரும்பி வந்த இடையன் தன் பசுக்கள் அங்கு இல்லாததைக்கண்டு அவரைத் திட்டவும் அடிக்கவும் செய்தான். ஆனாலும் அவர் கோபப்படவே இல்லை.

மஹாவீரரைக் கருவுற்றபோது அவர் அன்னைக்குப் பதினாறு கனவுகள் வந்ததாகச் சொல்லப்படுகிறது. அக்கனவுகளில் நான்கு தந்தங்கள் கொண்ட யானை, வெள்ளை எருது, அழகான சிங்கம், செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவி, மந்தார மலர் மாலை, ஒளிரும் சூரியன், நிலவையொத்த பசும்பால், இரண்டு மீன்கள், சுத்தமான நீர் நிரம்பிய இரண்டு தங்கக்குவளைகள், பெரிய தாமரை, பாற்கடல், வைரத்தால் இழைக்கப்பட்ட அரியணை, காலை சூரியனைப்போன்ற தெய்வீக இருப்பிடம், கடவுளர்களின் தலைவரான ஓர் அரசர், மேரு மலையை ஒத்த அணிகலன்களின் குவியல், நெய்யூட்டப்பட்டு எரியும் பெரும் தீ ஆகியவற்றை மஹாவீரரின் அன்னை தன் கனவுகளில் கண்டதாகச் சொல்லப்படுகிறது!

மஹாவீரரின் அப்பா பெயர் சித்தார்த்தா! ஞானத்துக்கும் பெயருக்கும்தான் என்னவொரு வினோத ஒற்றுமை! விதேகம் அல்லது மகதம் என்று சொல்லப்பட்ட பகுதியிலிருந்த குண்டலபுரத்தின் அரசர் அவர். அவர் மன்னரல்ல, ஒரு பிரபுதான் என்ற கருத்தும் உண்டு. மஹாவீரரின் அம்மா பெயர் திரிசாலா.

நமது சித்தார்த்தரும் (புத்தர்) மஹாவீரரும் சமகாலத்தவர்கள்! புத்தர் கொஞ்சம் சீனியர்! மஹாவீரருக்கு ஓர் அண்ணனும் அக்காவும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

தன் முப்பதாவது வயதில் பெற்றோர் இறக்கும்வரை ஓர் இளவரசனுக்குரிய வாழ்க்கையைத்தான் மஹாவீரர் வாழ்ந்துள்ளார். ஆனாலும் அளவுக்கு மீறி எதையும் அவர் சுவைக்கவில்லை. பின்னர் அண்ணனின் அனுமதியோடு தவ வாழ்வை மேற்கொண்டுள்ளார்.

அவருக்குத் திருமணமே ஆகவில்லை என்றும், இல்லை யசோதா என்ற அழகான மனைவியும் அனோஜ்ஜா அல்லது பிரியதர்ஷனா என்று ஒரு மகளும் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

(தொடரும்)

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *