தனது 30வது வயதில் ஒரு நாள் தியானம் செய்துகொண்டிருந்தபோது, தான் வாழப்போவது 72 ஆண்டுகள்தான் என்ற உண்மையை மஹாவீரர் தெரிந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னரே துறவு பூண வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வலுவானது. அப்போது அவருடைய பெற்றோர்கள் இருந்தனர் என்றும் அவர் துறவு பூணுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்றும் சொல்லப்படுகிறது. எந்தப்பெற்றோருக்குத்தான் அந்த விருப்பமிருக்கும்? அதுவும் ஒரு இளவரசனின் பெற்றோருக்கு!
‘வர்த்தமானா, உன் உடல்மீது வெயில் படக்கூட நாங்கள் அனுமதித்தது இல்லை. இப்படி இருக்கும்போது நீ எப்படி வெயிலிலும் மழையிலும் வாடும் துறவு வாழ்க்கை வாழமுடியும்?’ என்று அம்மா கேட்டதற்கு பல விளக்கங்களைச்சொல்லி அம்மாவை மஹாவீரர் சம்மதிக்க வைத்துவிட்டார்! எனவே தன் 30-வது வயதில் அரண்மனையை விட்டு துறவறம் பூண வெளியேறினார்.
அவரது 28-வது வயதில் பெற்றோர் இறந்து போனதாகவும், அண்ணன் கேட்டுக்கொண்டதன் பேரில் மேலும் இரண்டு ஆண்டுகள் அவரோடு இருந்ததாகவும் 30-வது வயதில் துறவு பூண்டதாகவும் சொல்லப்படுகிறது.
துறவு பூணும் முடிவு எடுத்தபிறகு தன்னுடைய சொத்துக்களையெல்லாம் மஹாவீரர் தர்மம் செய்தார். அவை பணமாக 388 கோடி என்றும், தங்கக்கட்டிகளாக எண்பது லட்சம் என்று சொல்லப்பட்டுள்ளது! வீட்டை விட்டு வெளியேறு முன் இரண்டரை நாள் நோன்பிருந்தார்.
சந்திரபிரபா என்ற பல்லக்கில் அவரை அழைத்துச்சென்றனர். அதைத்தூக்க ஆயிரம் பேர் தேவைப்பட்டதாம்! அவ்வளவு பெரிய, கனமான பல்லக்கு அது! பல்லக்கின் பின்னாலும் பலர் அவரைப் புகழ்ந்துகொண்டே சென்றனர். இப்படியொரு துறவறம் செல்லக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
சாந்தவனம் என்ற தோட்டத்தில் பல்லக்கு இறக்கி வைக்கப்பட்டது. அங்கேதான் மஹாவீரர் தன் தவவாழ்வைத் துவங்கினார். அதுவும் எப்படித் தெரியுமா? அவருக்காக அங்கே பாண்டுசீலம் என்ற பெயர்கொண்ட ஐந்தடுக்கு அரியணை உருவாக்கப்பட்டது. அதன் மேலே குடைபோல ஒரு சந்தன அல்லது அசோக மரம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அம்மரத்தின் அடியில் போடப்பட்ட அரியணையில் மஹாவீரர் அமர்ந்தார். தன் ஆபரணங்களையெல்லாம் கழற்றிக்கொடுத்தார். அதன்பின்னர் நிலம், வீடு, சொத்து, சுகம், பயிர், ஊழியர்கள், வீட்டு மிருகங்கள், படுக்கைகள், இருக்கைகள், துணிமணிகள், பாண்டங்கள் என 24 பரிக்கிரகங்களையும் (சொத்து சுகங்களையும்) அவர் துறந்தார் என்று சொல்லப்படுகிறது.
அதன் பின்னர் கேசலோச்சனா என்ற கடுமையான காரியம் நடந்தேறியது. அதாவது தலையை மொட்டையடிக்க வேண்டும். ஆனால் கத்திரிக்கோல், கத்தி முதலியவற்றைக்கொண்டல்ல. தலை முடியை இரண்டு கை விரல்களாலும் கொத்தாகப் பிடுங்கிப்பிடுங்கியே தலையை மொட்டையாக்க வேண்டும்! நாமாக இருந்தால் அம்மாடி, ஞானமே வேண்டாம், தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடி வந்திருப்போம்!
பின்னர் அங்கிருந்து ஊர் ஊராக ஆண்டின் எட்டு மாதங்களுக்கு, கோடைக்காலம், குளிர்காலம் எல்லாவற்றிலும், பயணப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இவ்விதமாகப் பன்னிரண்டு ஆண்டுகள் கடும் தவத்தில் இருந்தார் மஹாவீரர்.
நான்கு மாதம் மழைக்காலத்தில் மட்டும் எங்கும் போகக்கூடாது, மழைக்கு அஞ்சி அல்ல. மழைக்காலத்துப் பூச்சிகள் எதுவும் கால்பட்டு செத்துவிடக்கூடாது என்பதற்காக!
தியானம் செய்யும்போது மஹாவீரரின் உடலில் எந்த அசைவுமிருக்காது. செத்துவிட்டார் என்று நினைக்கும் விதத்தில் சிலை மாதிரி இருப்பார். கல்பூரா என்ற நகருக்கு அவர் சென்றபோது அந்நகரின் ராஜாவாக இருந்த குலதீபன் வந்து பார்த்து மஹாவீரருக்கு உணவு கொடுத்தார். ஆறு மாதங்கள் நோன்பிருந்த பிறகு அவர் உண்ட முதல் உணவு அதுதான்!
ஆனால் ஆறு மாதங்கள் ஒருவரால் எதுவுமே உண்ணாமல் இருக்கமுடியுமா? சோறு உண்ணாமல் இருந்திருப்பார். இலை தழைகளைச் சாப்பிட்டிருக்கலாம். நதி நீர் அல்லது மழை நீரைக் குடித்திருக்கலாம்.
தசபூரம் என்ற ஊருக்கு அவர் சென்றபோது அப்பகுதியின் மன்னன் குலன் என்பவன் மஹாவீரரை மூன்று முறை சுற்றிவந்து அவர் காலைக்கழுவி, காலை உணவாக அவருக்குப் பாலும் சோறும் கொடுத்தான்.
மஹாவீரர் பன்னிரண்டு விதமான ஆன்மிகப்பயிற்சிகளை மேற்கொண்டார் என்றும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மௌனம் அனுஷ்டித்தார் என்றும் அதனால் அவருக்கு எட்டுவிதமான சித்திகள் கிடைத்தன என்றும் சொல்லப்படுகிறது. நம்மால் பன்னிரண்டு நிமிடம்கூட மௌனமாக இருக்க முடியுமா?!
அவர் ஞானமடைந்தபோது அவருக்கு வயது நாற்பத்து நான்கு என்று சொல்லப்படுகிறது. நாற்பதுகளில்தான் ஞானமே வரும்போலுள்ளது. நபிகள் நாயகத்துக்கு இறைவனின் செய்தி கிடைத்தபோது அவர்களுக்கு வயது நாற்பதுதான்.
0
துறவறம் பூண்ட பிறகு ஒரு ஆண்டும் ஒரு மாதமும் மட்டும்தான் அவர் ஆடை அணிந்திருந்தார். அதன் பின்னர் ஒரு குழந்தையைப் போலத்தான் எல்லா இடங்களுக்கும் சென்றார். பன்னிரண்டு ஆண்டுகள் மௌனம் அனுஷ்டித்தார்.
முப்பது ஆண்டுகள் மக்களுக்கு ஞானம் பெறும் வழியை போதித்துக்கொண்டு பயணத்திலேயே இருந்தார்.
மஹாவீரரின் முதல் மாணவர் பெயர் கௌதம இந்திரபூதி. முப்பது ஆண்டுகள் மஹாவீரரோடு அவர் தொடர்ந்து பயணம் செய்தார், மஹாவீரர் இறந்த அன்று அவர் ஞானமடைந்தார்.
ஷ்ரேனிகா என்ற மன்னர் மஹாவீரரைப் பார்த்து 60,000 கேள்விகளைக் கேட்டார். அத்தனைக்கும் மஹாவீரரின் அனுமதியின் பேரில் இந்திரபூதி பதிலளித்தார். ஆனால் அந்தக் கேள்வி பதில்கள் எதுவுமே பதிவாகவில்லை என்பது நம் துரதிருஷ்டமே.
மஹாவீரர் எங்கே சென்றாலும் 14000 சீடர்களோடு செல்வாராம். அவர் சென்று தங்கிய இடமெல்லாம் ஒரு பெரிய மண்டபம் கட்டி அதன் நடுவில் வைக்கப்படும் அரியணையில்தான் மஹாவீரர் அமருவாராம்.
மகதம், பீஹார், பிரயாக், கௌசாம்பி, சம்பபுரி போன்ற வட இந்தியாவின் பல பகுதிகளை ஜைனத்துக்கு மஹாவீரர் கொண்டு வந்தார். மகதத்தின் தலைநகராக விளங்கிய ராஜகிரஹத்தின் மக்கள் அவரை மிகவும் நேசித்தனர்.
மஹாவீரர் ஒருவரைச்சீடராக ஏற்றுக்கொள்ள ஜாதி மதமெல்லாம் பார்ப்பதில்லை. எல்லா மதத்தினரும், ஜாதியினரும் அவரோடு சேர்ந்து கொண்டனர். அவரது பிரதான சீடரான இந்திரபூதி ஒரு பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.
முப்பது ஆண்டுகள் பயணத்திலும் தன் ஞானத்தைப் பரப்புவதிலும் மஹாவீரர் கழித்தார். பீஹாரிலிருந்து ஏழு மைல் தூரத்தில் இருந்த பவபுரி என்ற ஊரில் அவர் காலமானார்.
அங்கே அவர் போதிப்பதற்காகச் சென்றிருந்தார். அவர் அமர்ந்து சொற்பொழிவாற்றுவதற்காக வைரத்தால் இழைக்கப்பட்ட அரியணை ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் அமர்ந்து அவர் சொற்பொழிவாற்றினார்.
அரசனிலிருந்து ஆண்டிவரை அங்கே அமர்ந்திருந்தனர். அந்த இரவு ரொம்ப இருளாக இருந்ததால் நிறைய விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. இரவு முழுவதும் மஹாவீரர் பேசிக்கொண்டே இருந்தார். இரவின் நாலாவது பகுதியில் அனைவரும் உறங்கிப்போயினர். ஞானத்தை உறக்கம் மிகைத்தது.
தான் இவ்வுலகை விட்டுப் போகவேண்டிய தருணம் வந்துவிட்டதை உணர்ந்த மஹாவீரர் சம்பர்யங்கா என்று சொல்லப்படும் நிலையில் அமர்ந்து கொண்டார். வைகறை நேரம் இவ்வுலகை நீத்தார்.
காலையில் மக்கள் உண்மையறிந்து புலம்பினார்கள். பிரதம சீடர் கௌதமர் அவர்களை அமைதிப்படுத்தினார். மிகுந்த விமரிசையாக மஹாவீரர் தீயிலிடப்பட்டார். அந்த நிகழ்விலிருந்துதான் தீபாவளி கொண்டாடப் படுவதாகவும் கூறப்படுகிறது. மஹாவீரர் இறந்த அந்த தருணத்தில்தான் இந்திரபூதி ஞானமடைந்தார்.
கிமு 06-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் மஹாவீரர். ஞானமடைந்த ஒருவர் குழந்தையைப்போல ஆகிவிடுகிறார் என்பதைக் குறிப்பதற்காகவோ என்னவோ கர்நாடகாவில் ஷ்ரவணபெலகொலாவில் மஹாவீரரின் 57 அடி உயர நிர்வாணச்சிலை உள்ளது!
(தொடரும்)