Skip to content
Home » மதம் தரும் பாடம் #12 – அங்குலிமாலா

மதம் தரும் பாடம் #12 – அங்குலிமாலா

முன்னொரு காலத்தில் ஒரு கொடூரன் வாழ்ந்து வந்தான். என்னவோ தெரியவில்லை, அவனுக்கு அவன் வாழ்ந்த சமுதாயத்தையே பிடிக்கவில்லை. அது அவனுக்கு அநியாயம் செய்துவிட்டதாக நினைத்தான். அதனால் சமுதாயத்தைப் பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்ற வெறி அவனுக்குள் ஒரு விபரீத ஆசையை ஏற்படுத்தியது. அது என்ன ஆசை?

ஒரு மாலை போட்டுக்கொள்ளவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. மாலை போட்டுக்கொள்வதென்ன விபரீத ஆசையா என்று நீங்கள் கேட்கலாம். சாலையோரத்தில் கட்சி தொடங்குபவர்கள்கூட மாலையை விட்டுவிடுவதில்லை. மாலை கலாசாரம் நம் நெஞ்சோடு இணைந்தது.

ஆனால் இவன் மாலை போட்டுக்கொள்ள நினைத்தது பூக்களால் அல்ல. மனிதர்களின் விரல்களால்! ஏன்? என்னவோ சமுதாயத்திலிருந்த ஒவ்வொருவரையும் தன் எதிரியாக அவன் பார்த்தான். தனக்கு வாக்களிக்காமல் போனவர்களுக்கு இந்த மாதிரி தண்டனை கொடுக்கலாம் என்று இன்று இருந்தால் எப்படி இருக்கும்? விரல் வெட்டும் கட்சிகளை விரல்விட்டு எண்ண முடியாமல் போய்விடலாம்.

சரி, இவன் ஏன் அப்படி நினைத்தான்? குறிப்பாக என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் சமுதாயம் தனக்கு ஏதோ துரோகம் இழைத்துவிட்டது என்று அவன் நினைத்தான். பழிக்குப்பழி வாங்கத்துடித்தான். தான் எதிரியாக நினைப்பவரின் விரல்களில் ஒன்றை வெட்டித் தன் கழுத்து மாலையில் மணியைப்போலச் சேர்த்துவிடுவான். ’லேட்டரல் திங்கிங்’.

ஆனால் அதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் எத்தனை பேரின் விரல்களை வெட்டவேண்டும் என்று ஒரு கணக்கு வைத்திருந்தான். மிகச்சரியாக 101 விரல்களை மட்டும்தான் வெட்டி மாலையாகக் கழுத்தில் போட்டுக்கொள்ளவேண்டும். ரொம்ப சமயப்பற்றுள்ளவன் போலும்.

அவன் ஒரு காட்டில் வாழ்ந்தபோதும் ஊருக்குள் செல்ல அதுதான் மிகமுக்கியமான பாதையாக இருந்தது. அந்த வழியாகச் சென்ற பலருடைய விரல்களை அவன் வெட்டிவிட்டதால் அவ்வழியாகச் செல்ல மக்களுக்கு அச்சமாக இருந்தது. பின்னே இருக்காதா? அவனுடைய உண்மையான பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் விரல்விட்டு எண்ண முடியாத பலரால் அவனுக்கு ஒரு பெயர் வைக்கப்பட்டிருந்தது. அங்குலிமாலா என்பதுதான் அது. அங்குலி அல்லது உங்க்லி என்றால் விரல் என்று பொருள். மாலா என்பது மாலை. விரல்களாலான மாலையணிந்தவன்.

இதுவரை அவன் நூறு விரல்களை வெட்டி மாலையாக அணிந்திருந்தான். இன்னும் ஒரு விரல்தான் பாக்கி. அவன் விரல்தம், மன்னிக்கவும், விரதம் முடிய. அடடா, ஒற்றைப்படை தெய்விகமானது என்று ஒரு கொலைகாரனுக்குக்கூடத் தெரிந்துள்ளது.

ஒருநாள் அந்த வழியாக புத்தர் வந்தார். அவனிருக்கும் திசையை நோக்கி அவர் செல்வதைப் பார்த்த மக்கள், போகவேண்டாம் என்று சொல்லி அவனைப்பற்றிய விபரங்களைக் கூறினார்கள். அதையெல்லாம் கேட்ட புத்தர், ‘அப்படியானால் நிச்சயமாக நான் போயாகவேண்டும். நான் போகாவிட்டால் அவன் ஆசை எப்படி நிறைவேறும்?’ என்று கேட்டார். அவரது விபரீத முடிவு அவர்களை ஆச்சரியப்படுத்தியது. இவர் ஆன்மிக மகானா அறிவற்றவரா என்று அவர்கள் குழம்பினார்கள். ஆனாலும் சொன்னபடி புத்தர் சென்றார்.

அங்குலிமாலா ஒரு பாறையின் மேல் அமர்ந்திருந்தான். புத்தர் அமைதியாக அவன் பக்கமாக நடந்து சென்றார். அவன் சிங்கம்போல கர்ஜித்தான். ‘உன் முடிவை நோக்கி நீ வந்துவிட்டாய்’ என்று அதற்கு அர்த்தம். ஆனால் புத்தர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. ஞானப்புன்னகை. அது அவனுக்கு வியப்பைக் கொடுத்தது.

இவர் என்ன சித்தம் கலங்கியவரா? கொல்லப்போகிறேன் என்று தெரிந்தும் சிரிக்கிறாரே? அவன் கொஞ்சம் குழம்பினான். அதுவரை அவன் வாழ்வில் அப்படியொரு நபரை அவன் சந்தித்ததே இல்லை. பாறையிலிருந்து குதித்து புத்தர் முன்னே போய் நின்றான். அடடா, அப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைக்காமல் போய்விட்டதே. அங்குலிமாலா கொடுத்து வைத்தவன்.

‘யார் நீ? நான் யாரென்று தெரியுமா?’ என்று உறுமினான்.

‘கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு புத்தர் பாட்டுக்கு அமைதியாக மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

‘நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். கேட்காமல் போய்க்கொண்டே இருக்கிறீரே? நான் யாரென்று பாரும்’ என்று சொல்லி மனிதவிரல்களால் ஆன மாலையைக் காட்டினான்.

‘நான் எங்கேயும் போகவில்லை. என் பயணம் முடிந்துவிட்டது. நான் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர்ந்துவிட்டேன். நீதான் இன்னும் போய்க்கொண்டிருக்கிறாய்’ என்றார் புத்தர்.

அங்குலிமாலா சிரித்தான்: ‘நான் இங்கே நின்றுகொண்டிருக்கிறேன். நான் போய்க்கொண்டிருப்பதாக சொல்கிறீரே? நீவிர் நடந்துகொண்டிருக்கிறீர். ஆனால் போய்ச்சேர்ந்துவிட்டதாகச் சொல்கிறீரே? சித்தம் கலங்கிவிட்டதா?’ என்று கேட்டான்.

‘நான் போகவேண்டிய இடத்துக்கு எப்போதோ போய்ச்சேர்ந்துவிட்டேன். இப்போது நான் எங்கும் போகவில்லை. நீதான் எங்கோ போக முயற்சி செய்துகொண்டிருக்கிறாய். ஆனால் அங்கே எப்படிப் போவதென்று உனக்குத் தெரியவில்லை. நீ விரல்களால் மாலை செய்துகொண்டிருக்கிறாய். இன்னும் ஒரு விரல்தேவை உனக்கு. என் விரல் வேண்டுமா தலை வேண்டுமா? தலையைக் கொய்து இந்த மாலையில் சேர்த்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். உன் விருப்பப்படி செய்துகொள்’ என்றார்.

கொலை செய்வதில் உள்ள சந்தோஷமே கொல்லப்பட இருப்பவரின் பயம்தான். சந்தோஷமாகச் சாவதற்கு ஒருவர் தயாராக இருந்தால் எப்படிக்கொல்ல மனம் வரும்? இவரைக் கொன்றாலும் 101 கணக்கு வராது. ஏனெனில் கொலை செய்வதன் சந்தோஷத்தையே இந்த மனிதர் கெடுத்துவிட்டார்.

‘இல்லை, நான் போய்ச்சேர்ந்துவிட்டேன். நீதான் போய்க்கொண்டிருக்கிறாய் என்று நீங்கள் சொன்னது எனக்குப் புரியவில்லை. அதை முதலில் விளக்குங்கள்’ என்றான். குரலில் பணிவு வந்திருந்தது.

‘101 என்ற லட்சியத்தை நோக்கி நீ போய்க்கொண்டிருக்கிறாய். ஆனால் நான் எங்கே போகவேண்டுமோ அங்கே போய்ச்சேர்ந்துவிட்டேன். இதுதான் வித்தியாசம். என் உயிரை எடுப்பதன் மூலம் நீயும் போய்ச்சேரமுடியுமெனில் எடுத்துக்கொள்’ என்றார் புத்தர்.

அவ்வளவுதான். அதன்பின்னர் அங்குலிமாலா புத்தரின் சீடராகிப்போனான். ஒரு மஞ்சள் துணியையும் ஒரு பிக்ஷைப் பாத்திரத்தையும் அவனிடம் கொடுத்து, ’இனி நீ எங்கள் பிக்குகளில் ஒருவர். ஊருக்குள்ளே போய் பிக்ஷை கேள்’ என்று சொல்லியனுப்பினார்.

அவனும் சென்றான். அவனைப் பார்த்ததும் மக்களெல்லாம் பயந்து ஒளிந்துகொண்டனர். ஆனால், அவன் யாசகம் கேட்டான். அதைப்பார்த்த மக்கள் கற்களைக்கொண்டு அவனை அடித்தனர். ஏனெனில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரை அவன் கொன்றிருந்தான். கல்லடியும் சொல்லடியும் கடுமையாகப்பட்டு அங்குலிமாலாவின் உடல் முழுக்க ரத்தத்தால் நனைந்தது. இனியும் அடிக்கப்பட்டால் அவன் செத்துவிடுவான் என்ற நேரத்தில் புத்தர் அங்கே வந்தார்.

‘நிறுத்துங்கள், நீங்கள் என்னைத்தான் கல்லால் அடிக்கிறீர்கள். இவர் இவருக்கான ஞானத்தை உணர்ந்துவிட்டார். இவரைக் கொல்வது தவறு. இவர் ஞானப் பாதையில் செல்லத் தொடங்கியிருக்கிறார்’ என்று புத்தர் சொன்னதும் கல்லடி நின்றது. புத்தரின் பிரதான சீடர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார் அங்குலிமாலா.

0

படம்: Akuppa John Wigham

பகிர:
நாகூர் ரூமி

நாகூர் ரூமி

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்ற நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. ஆம்பூரில் மஸ்ஹரூல் உலூம் கல்லூரியின் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். ஹோமர் எழுதிய 'இலியட்' எனும் மாபெரும் கிரேக்க காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *