Skip to content
Home » மொஸாட் #1 – அறை எண் 203இல் ஒரு கொலை!

மொஸாட் #1 – அறை எண் 203இல் ஒரு கொலை!

ஜனவரி 20, 2010. துபாயின் அல் புஸ்தான் ரோடனா விமான நிலைய விடுதி ஊழியர்கள் 230ஆம் எண் அறைக் கதவைத் திறந்தபோது அந்த நபர் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை ஆராய்ந்த மருத்துவர்கள் இறப்புக்குக் காரணம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு என்றனர். இயற்கை மரணம்.

ஆனால் அது உண்மை கிடையாது. அது ஒரு கொலை. அப்பட்டமான கொலை. கொன்றது மொஸாட். இஸ்ரேலின் உளவுத்துறை. ஆனால் அது குறித்து யாருக்கும் அப்போது துளியும் சந்தேகம் வரவில்லை. அவ்வளவு கச்சிதமாக வேலை முடிக்கப்பட்டிருந்தது.

அதேபோல இறந்த நபரும் யார் என்று அப்போது தெரியவில்லை. பிறகுதான் விசாரணையில் தெரிய வந்தது. இறந்து கிடந்தவரின் பெயர் மஹ்மூத் அல்-மபூஹ். சாதாரணர் கிடையாது. பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் போராளி இயக்கங்களில் ஒன்றான ஹமாஸின் முக்கியப் புள்ளி. ஆயுதப் பேரங்களுக்குப் பெயர்போனவர். காஸா முனையிலிருந்து சீறி வரும் ராக்கெட்டுகளை வழி நடத்துபவர்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மனிதர் சாமானியர்களைப்போன்று மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இயற்கை மரணம் அடைவாரா? நிச்சயம் கிடையாது. கடவுளே அழைத்துக்கொள்ள முடிவு செய்திருந்தாலும் மொஸாட் விடாது. நாங்கள் கொன்ற பிறகுதான் நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கும்.

உண்மையில் மொஸாட்டுக்கு ஆயிரம் எதிரிகள் இருக்கிறார்கள். இஸ்ரேலுக்குக் கோடிகளில் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்துக் கொல்வதுதான் ஓர் உளவுத்துறையின் வேலையா? நிச்சயமாக இல்லை. ஆனால் எங்கள் மீது கைவைத்துவிட்டால் நாங்கள் உளவுத்துறை அல்ல. உயிரை எடுக்கும் துறை. இதுதான் அவர்களது கொள்கை.

மபூஹ்ஹின் உயிரும் அதேபோன்ற ஒரு காரணத்திற்காகத்தான் எடுக்கப்பட்டிருந்தது. உண்மையில் அவர் இறந்தது 2010ஆம் ஆண்டு. ஆனால் அவருக்கான தேதி முன்பே குறிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் இரு நாள் முன்பு அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்பு.

0

மஹ்மூத் அல்-மபூஹ் பாலஸ்தீனத்தின் காஸா முனையில் உள்ள ஹபாலியா அகதிகள் முகாமில் 1960இல் பிறந்தவர். இளம் வயதிலேயே பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தும் அடக்குமுறையின் காரணமாக இஸ்லாமிய இயக்கங்களில் இணைந்துகொண்டார்.

1980ஆம் ஆண்டு காஸாவிற்கு ரகசியமாகச் சில பொருட்களைக் கடத்த முயன்று இஸ்ரேலியப் படையினரிடம் சிக்கிச் சிறை சென்றார். சிறையில் கொடூரமான சித்ரவதைகளுக்கு உள்ளானார்.

வெளியே வந்த மபூஹ், ஹமாஸில் இணைந்துகொண்டு ராணுவப் பிரிவைச் செழுமைப்படுத்தத் தொடங்கினார். அப்போது பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய மக்கள் போராட்டமான முதலாம் இண்டிஃபாதா தொடங்கியிருந்தது. பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துக் கற்களை வீசிக்கொண்டிருந்த நேரத்தில் மபூஹ் குண்டுகளை வீசத் தயாரானார்.

1989ஆம் ஆண்டு மஹ்மூத் இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்று, கொன்று வீசினார். பின் அரபுத் தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி, தானே அந்தக் கொலைகளைச் செய்ததாகப் பகிரங்கமாக அறிவித்தார். அப்போதுதான் மொஸாட் முதன் முதலில் அவருக்குக் கட்டம் கட்டியது. அந்தப் பேட்டியில் மபூஹ்ஹும் முகம் மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய குரலை மொஸாட் உளவாளிகள் கவனித்துக் கொண்டனர்.

‘சிவப்புப் பக்கம்’ என்பது மொஸாட்டிடம் ஒருவரைக் கொல்வதற்காக வழங்கப்படும் பட்டியல். அந்தப் பட்டியலில் இடம்பெறும் பெயர்களை இஸ்ரேலியப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் சேர்ந்து உருவாக்குவது வழக்கம். இந்தச் சிவப்புப் பக்கத்தில் இடம்பெறும் பெயர்களை உடனே நீக்க வேண்டும் என்று அவசியமல்ல. ஆனால் நீக்கியாக வேண்டும். பெயர்களை மட்டுமல்ல. அந்தப் பெயர்களைச் சுமந்துகொண்டிருக்கும் நபர்களையும்.

ஒருவரது பெயர் சிவப்புப் பக்கத்தில் இடம்பெற்றுவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, எத்தனை தூரம் சென்றாலும் சரி, அவரைத் தீர்த்துக் கட்டுவது மொஸாட்டின் கடமை. இடையில் எத்தனை ஆட்சிகள் மாறினாலும், எத்தனை காட்சிகள் மாறினாலும் மொஸாட் அதனைச் செய்து முடிக்கும். முத்திரை குத்தப்பட்ட நபர் ஒன்று தானாக இறக்க வேண்டும், அல்லது கொல்லப்பட வேண்டும். அதுவரை அந்த உத்தரவு செல்லும். இதில் பெரும்பாலும் இரண்டாவது வகை மரணத்திற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.

அத்தகைய சிவப்புப் பக்கத்தில்தான் மபூஹின் பெயரும் இடம்பெற்றது.

இதனை அறிந்துகொண்ட மபூஹ் உடனே தப்பித்து எகிப்துக்குச் சென்றார். பிறகு அங்கிருந்து லிபியாவிற்குப் பறந்தார். அதைத் தொடர்ந்து ஜோர்டன். நாளடைவில் இதுவே அவரது வழக்கமாகிப்போனது. ஒவ்வொரு நாட்டுக்கும் பறந்து அந்தந்த ஊர் முக்கியஸ்தர்களைச் சந்தித்து ஹமாஸ் இயக்கத்திற்கு ஆயுதங்கள் வாங்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். பிறகு இஸ்லாமிய நாடுகள் அனைவரிடமும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு நிதி வசூலித்து ஹமாஸிற்கு வழங்கினார்.

மபூஹின் முயற்சியால் ஹமாஸ் அசுர வளர்ச்சி கண்டது. சாதாரண குண்டுகளைப் பயன்படுத்தி வந்த ஹமாஸ் போராளிகள் நீண்ட தூரம் சென்று இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளுக்கு முன்னேறியது. மேலும் வளர்ந்தால் நல்லது அல்ல என்று இஸ்ரேல் புரிந்துகொண்டது. உடனே தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்து மொஸாட்டிற்கு ஆணை பிறப்பித்தது.

0

மபூஹ் தொடர்ந்து சீனா, ஈரான், சிரியா, சூடான், ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவற்றுக்கு இடையே பறந்துகொண்டிருப்பார். இதனை மொஸாட் குறித்துக்கொண்டது. அவரை வெளிநாட்டிலேயே வைத்துத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தது. இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்தான் துபாய்.

துபாயில் இரண்டு சாதகங்கள் இருந்தன. ஒன்று, அதிகம் சுற்றுலாப் பயணிகள் வரும் நாடு. குறிப்பாக ஜனவரி மாதத்தில் குளிரில் சிக்கி உழலும் மேற்கத்தியர்கள் துபாயின் வெதுவெதுப்பு தரும் விடுதிகளில் வந்து அடங்கிக்கொள்வர். அந்தக் காலகட்டத்தில் துபாய் நகரங்கள் முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும். புதிதாக யார் வந்தாலும் சந்தேகம் ஏற்படாது. இரண்டாவது, துபாய் அதிகம் தொழில் முனைவோர்கள் செல்லும் நாடு. மேற்கத்திய நாடுகளின் பாஸ்போர்டை வைத்துக்கொண்டு எளிதாக உள்ளே நுழைந்துவிடலாம். இதுதான் மொஸாட்டிற்குத் தேவை.

இதைப் பயன்படுத்தித்தான் மொஸாட் உளவாளிகள் உள்ளே நுழைந்தனர்.

0

ஜனவரி 18, 2010 அன்று துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் சுமார் ஒரு லட்சம் பயணிகள் வருகை புரிந்தனர். அதில் ஐரோப்பாவில் இருந்து வந்திருந்த அந்த இருபத்தி ஏழு பயணிகள் துபாயைச் சுற்றிப்பார்க்க வரவில்லை. மபூஹ்ஹை இறுதியாக வழியனுப்புவதற்காக வந்திருந்தனர். வந்தவர்கள் ஒரே நாட்டிலிருந்து வரவில்லை. பன்னிரண்டு பேர் பிரிட்டன், ஆறு பேர் அயர்லாந்து, நான்கு பேர் பிரான்ஸ், நான்கு பேர் ஆஸ்திரேலியா, ஒருவர் மட்டும் ஜெர்மனி. அந்த இருபத்தி ஏழு பேரும் மபூஹ்ஹின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

இந்தத் திட்டம் சில மாதங்களாகவே செயல்பட்டு வந்தது. அங்கு வந்திருந்த உளவாளிகளில் சிலர் ஏற்கெனவே பலமுறை துபாய்க்கு வந்திருந்தனர். இந்தமுறை அவர்களுக்கு ஒரு நெருக்கடி இருந்தது. கொலை செய்வது கடினம் அல்ல. ஆனால் சரியான நபரைக் கொலை செய்ய வேண்டும். கடந்த முறைபோல தவறான நபரைக் கொன்றால் முடிந்தது கதை. 1973ஆம் ஆண்டு நடைபெற்றது நினைவு இருக்கிறதா? இந்தமுறை ஒழுங்காகப் பார்த்துச் செய்யுங்கள் என்று மேலிடம் அவர்களுக்குச் சொல்லி அனுப்பி இருந்தது.

அதனால் இந்தமுறை ஆள் மாறிவிடக்கூடாது என்பதற்காக ஏற்கெனவே துபாய் வந்து, ஒவ்வொரு இடமாகச் சுற்றி, அங்கு இருந்த ஒவ்வொரு விடுதியையும் தெரிந்துகொண்டு, ஒவ்வொன்றின் அறைகளையும் நோட்டம்விட்டு, அந்த அறைகளின் கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் பூட்டின் வடிவம் முதற்கொண்டு அனைத்தையும் தெரிந்துகொண்டுதான் களமிறங்கக் காத்திருந்தனர்.

இப்போது எல்லாமே தயாராகிவிட்டது. ஒன்றே ஒன்றுதான் பாக்கி. மபூஹ் துபாய்க்கு வர வேண்டும். அவ்வளவுதான்.

0

சொல்லி வைத்ததுபோல ஜனவரி 19ஆம் தேதி டமாஸ்கஸில் உள்ள விமான நிலையத்திற்கு வந்திறங்கினார் மபூஹ். அவர் ஒரு முக்கியஸ்தர் என்பதால் பொதுமக்கள் செல்லும் வழியில் செல்லவில்லை. பணக்காரர்கள் செல்வதற்கு என விமான நிலையத்தில் பின் நுழைவு வாயில் ஒன்று இருந்தது. அந்தப் பக்கமாக அவர் சென்றார். இது மொஸாட் உளவாளிகளுக்கு வேலையைச் சுலபமாக்கியது. அவர்கள் மபூஹ்ஹைப் பின் தொடரத் தொடங்கினர்.

தாற்காலிகப் பயணமாக துபாய் வருபவர்களுக்கு அல் புஸ்டன் சிறந்த விடுதி. ஓர் அரண்மனையைப்போல இருக்கும். வேண்டிய அனைத்துச் சொகுசு சம்பிரதாயங்களும் கிடைக்கும். அதனால் மபூஹ் வழக்கமாக அங்கே தங்குவதுதான் வழக்கம். இதைத் தெரிந்துகொண்ட மொஸாட் குழு ஏற்கெனவே உள்ளே மாறுவேடத்தில் நுழைந்திருந்தது. மபூஹ் அறையைப் பதிவு செய்துவிட்டு லிப்டில் ஏறியபோது டென்னிஸ் வீரர்களைப்போல உடையணிந்த இரண்டு பேர் அவருடன் இணைந்துகொண்டனர். அவர்களிடம் மபூஹ் மெல்லிய புன்முறுவலை உதிர்த்தார். அவர்களும் திரும்பிப் புன்னகைத்தனர்.

மஹ்மூத் தனது அறையில் நுழைந்தபோது அவருடன் வந்த இருவரும் அறையின் எண்ணைக் குறித்துக்கொண்டனர். அதை மற்ற உளவாளிகளுக்கும் தெரியப்படுத்தினர். உடனேயே விடுதிக்கு வந்த மற்றொரு மொஸாட் உளவாளி சரியாக மபூஹ் தங்கியிருந்த 230 எண் அறைக்கு நேரெதிராக இருந்த 237 எண் கொண்ட அறையை முன்பதிவு செய்தார். அத்துடன் அனைவரும் திரும்பிச் செல்வதற்கான விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்துகொண்டார்.

ஒரே ஒரு வேலைதான் பாக்கி. மபூஹ்ஹைப் போட்டுத் தள்ள வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது. மபூஹ் துபாய்க்கு வந்தது ஒரு சிறிய சந்திப்பிற்காக. அடுத்த நான்கு மணி நேரத்தில் அவர் சீனா கிளம்ப வேண்டும். அங்கிருந்து சூடான். பிறகு ஈரான். இன்றைக்கு விடுதியிலிருந்து மபூஹ் வெளியேறிவிட்டால் மீண்டும் அவரைப் பிடிப்பது கடினம். இருப்பது வெறும் நான்கு மணி நேரம்.

0

சரியாக மாலை 6.34க்குத் தன் சந்திப்பின் பொருட்டு மபூஹ் விடுதியிலிருந்து வெளியேறினார். அதே சமயத்தில் மொஸாட்டின் கொலைகாரப் படை விடுதியில் நுழைந்தது. மொத்தம் நான்கு பேர். ஷாப்பிங் செய்துவிட்டு வந்ததைப்போன்ற தோற்றத்தில் இருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் கண்காணிப்புக்கு இருந்த உளவாளிகள் வெளியேறினர்.

அதன்பிறகு மேலும் இரண்டு பேர் வந்து கொலைகாரப் படையுடன் இணைந்துகொண்டனர். இப்போது மொத்தம் ஆறு பேர். விடுதியின் இரண்டாவது தளத்தில் மபூஹ் இருக்கும் அறையின் வெளியே இருந்தனர். உளவாளிகளில் ஒருவர் வேகவேகமாக 230 எண் அறையின் பூட்டை அகற்றினார். அது சாதாரணப் பூட்டு அல்ல. எலக்ட்ரானிக் பூட்டு. திறப்பதற்குச் சிரமம். ஆனால் அவர்களிடம் எதிர் அறையின் சாவி இருந்தது அல்லவா? அதைப் பயன்படுத்தித் திறந்துவிட்டார். அதற்காகத்தான் அந்த அறையையும் முன்பதிவு செய்திருந்தனர்.

இப்போது மபூஹ்ஹின் அறையில் இரண்டு பேர் நுழைய, மற்ற இருவர் இரண்டாம் தளத்தின் இரண்டு மூலையிலும் நின்றுகொண்டனர். மேலும் இருவர் அந்த விடுதியின் ஊழியர்கள் பயன்படுத்தும் உடுப்பை எங்கிருந்தோ திருடி அணிந்துகொண்டு பணியாளர்களைப்போல அறைக்கு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார்.

சரியாக இரவு 8.24க்கு மபூஹ் விடுதிக்குத் திரும்பினார். கையில் ஒரு பை மட்டும் அவரிடம் இருந்தது. பாதுகாப்பிற்குத் துப்பாக்கியோ, வேறு எந்த ஆயுதங்களோ அவரிடம் இல்லை. இதனை உளவாளிகள் ஏற்கெனவே நன்கு அறிந்திருந்தனர். இரண்டாம் தளத்திற்குள் நுழைந்த அவருக்கு அங்கு நின்றிருப்பவர்கள் யார் மீதும் சந்தேகம் வரவில்லை. நேராக அவர் தம் அறைக்குள் நுழைந்துவிட்டார். அவ்வளவுதான்.

அதன்பின் உள்ளே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. உள்ளே இருந்த கொலைகாரர்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. மபூஹ்ஹைக் கொன்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியேறிவிட்டனர். எந்தத் தடயமும் இல்லை. அந்த அறையில் இருந்த கட்டில் மட்டும் சற்றே உடைந்திருந்தது. அந்த உடைந்த துண்டுகளும் மெத்தைக்குக் கீழே மறைக்கப்பட்டிருந்தது.

மபூஹ்ஹைக் கொலை செய்யத் திட்டமிடும்போதே அது இயற்கை மரணத்தைப்போன்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அதனால் மூளையில் ரத்தக் கசிவு போன்ற தோற்றத்தை இவர்களே உருவாக்கினார்கள்.

மருத்துவர்கள் குழு மபூஹ்ஹை ஆராய்ந்தபோது Succinylcholine எனும் மருந்தைக் கொடுத்து, முகத்தில் தலையணையை அழுத்திக் கொன்றிருக்கலாம் என்று சொன்னது. உளவாளிகள் அவர் உடலில் மின்சாரத்தைச் செலுத்தி விசாரணை நடத்தியதாகவும் ஓர் அறிக்கை சொல்கிறது. ஆனால் உண்மையில் இப்போது வரை அந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது புரியாத புதிர்.

மருந்தைச் செலுத்தியிருந்தால் அது உடலில் புலப்பட்டிருக்கும். ஊசியைக் குத்திய இடமும் தெரிந்திருக்கும். முகத்தை அழுத்தியிருந்தால் அதற்கான தடயங்கள் இருந்திருக்கும். கண்களில் உள்ள ரத்த நாளங்கள் தெரித்து, உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் இது எதுவுமே இல்லாத ஒரு கொலை. தெளிவான, சுத்தமான கொலை.

கொலை முடிந்து வெறும் இருபது நிமிடங்களில் மொஸாட் குழு விடுதியிலிருந்து வெளியேறிவிட்டது. விடுதியின் அருகிலேயே விமான நிலையம் இருந்ததால் ஒருவேளை மாட்டினாலும் போலீஸ் வருவதற்குள் தப்பிவிடலாம் என்பதுதான் திட்டம். ஆனால் எந்தச் சிரமம் அவர்களுக்கு இருக்கவில்லை.

அடுத்த சில மணி நேரங்களில் சில உளவாளிகள் பாரிஸுக்கும் சிலர் தென் ஆப்ரிக்காவுக்கும் தப்பினர். அவர்கள் அந்தந்த நாடுகளில் சென்று தரையிறங்கும் வரை ஹமாஸ் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் துபாயில் அனாதையாகக் கொல்லப்பட்டு 230 எண் அறையில் கிடக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது.

0

ஹமாஸின் தலைமைக்கு இரண்டு நாட்கள் ஆகித்தான் சந்தேகம் கிளம்பியது. துபாய் சென்ற மபூஹ்ஹிடம் இருந்து எந்தத் தகவலும் வராதது குறித்து அவர்கள் கவலை கொள்ளத் தொடங்கினர். உடனே சிலர் துபாய்க்குக் கிளம்பிச் சென்று போலீஸை அணுகியபோதுதான் மபூஹ் விடுதியில் இறந்தது தெரிந்தது. அதன்பிறகு நடைபெற்ற விசாரணையில்தான் கொன்றது மொஸாட் என்றும் புரிந்தது.

தங்களுக்குத் தெரியாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைந்து கொன்ற மொஸாட்டைக் கண்டு துபாய் அரசாங்கம் ஆத்திரத்தில் குதித்தது. மொஸாட்டின் தலைவரையும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவையும் கைது செய்ய வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இஸ்ரேல் அரசோ தாங்கள்தான் கொலை செய்தோம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அதேசமயம் மறுத்துப் பேசவும் இல்லை.

இதுதான் இஸ்ரேல். இதுதான் மொஸாட்.

ஓர் உளவு அமைப்பு என்னவெல்லாம் செய்யும்? தம் நாட்டுப் பாதுகாப்பைக் கண்காணிக்கும், எதிரிகளை ரகசியமாகப் பின் தொடர்ந்து அவர்களுடைய திட்டங்களை அறிந்துகொள்ளும், வரப்போகும் ஆபத்துகளை முன்பே கணித்து முறியடிக்கும். ஆனால் ஓர் உளவு அமைப்பு கொலைகளைச் செய்யுமா? போர்க்களத்தில் அல்ல, தனிநபர்களை? அதுவும் அவரது வீடுகளில்? ஓர் உளவு அமைப்பு பழி வாங்குமா? காத்திருந்து வஞ்சம் தீர்க்குமா? மொஸாட் செய்தது. ஒருமுறை, இருமுறை அல்ல, பல முறை.

மொஸாட்டால் இதையெல்லாம் எப்படிச் செய்ய முடிகிறது? உள்நாட்டில் என்ன வேண்டுமானாலும் ஆடலாம் சரி. ஆனால் வெளிநாட்டிற்குள் நுழைந்து எப்படித் திருவிளையாடல்களை நிகழ்த்த முடிகிறது? மொஸாட் வீரர்கள் எப்படி எதிரி நாடுகளில் எல்லாம் நிழலைப்போல நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள்?

சொல்லுக்குச் சொல். செயலுக்குச் செயல். எங்கள் மீது கைவைத்தால் யாராக இருந்தாலும் போட்டுத் தள்ளுவோம். இதுதான் மொஸாட்டின் நெறி. எங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் எந்த நாட்டின் விவகாரங்களிலும் தலையிடுவோம். எங்களுக்குச் சரி என்று பட்டால் எவ்வளவு அநீதிகளை வேண்டுமானாலும் கட்டவிழித்துவிடுவோம். இதுதான் மொஸாட்.

மொஸாட் செய்வது சரியா? மொஸாட்டைக் கேள்வி கேட்க ஆளே இல்லையா? மொஸாட் எனும் அமைப்பு ஒரு காவல் தெய்வமா? அல்லது கொலைகாரப் பூதமா? அதைத்தான் வரும் அத்தியாயங்களில் அலசப்போகிறோம்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

1 thought on “மொஸாட் #1 – அறை எண் 203இல் ஒரு கொலை!”

  1. பொ.சங்கர்

    தங்களின் நடை வாசிக்கத் தூண்டுகிறது. வாழ்த்தும் மகிழ்ச்சியும் பாராட்டும்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *