Skip to content
Home » மொஸாட் #2 – சூப்பர் உளவாளி

மொஸாட் #2 – சூப்பர் உளவாளி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் மத்தியில் அமைந்துள்ளது மார்ஜே சதுக்கம். ஓட்டோமான்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தச் சதுக்கத்திற்கு தியாகிகள் சதுக்கம் என்றொரு பெயரும் உண்டு. முதல் உலகப்போர் காலகட்டத்தில் ஓட்டோமான்களுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபட்ட அரபுப் போராளிகள் இந்தச் சதுக்கத்தின் முன்னால்தான் தூக்கிலிடப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் வகையில்தான் தியாகிகள் சதுக்கம் என்ற பெயர் வந்தது. ஓட்டோமான்களுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த பிரெஞ்சு காலனியவாதிகளும் அந்த இடத்தைத் தூக்கு வைபோகத்திற்குத்தான் பயன்படுத்தி வந்தனர்.

அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் மே 18, 1965 அன்று மற்றொரு தூக்கு நாடகமும் அரங்கேற இருந்தது. அந்த நாடகத்தைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடிநின்றனர். தொலைக்காட்சி கேமராக்கள் அந்தச் சதுக்கத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த தூக்கு மேடையையே நோட்டமிட்டன. எல்லோர் முகத்தில் எதிர்பார்ப்பு. அந்த நபர் எப்படி இருப்பார்? ஒல்லியாகவா, குண்டாகவா? நிழலைப்போல அவர் இருப்பதாகச் சொன்னார்களே? அவருக்கு உருவம் என்ற ஒன்று இருக்குமா? உருவமற்ற ஒருவரை எப்படித் தூக்கிலிட முடியும்?

இந்தமுறை உயிர்விடப்போவது போராளியல்ல, ஓர் உளவாளி. அந்த உளவாளியைக் காண்பதற்காகத்தான் இத்தனை கூட்டம். அத்தனை ஆர்வம்.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த உளவாளி மேடை ஏற்றப்பட்டார். அவரது கையில் பெரிய தாள் கொடுக்கப்பட்டது. அந்தத் தாளில் அவர் செய்த குற்றங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருந்தன. இறுதி வாக்கியமாக, சிரியாவிடம் வாலாட்டினால் இப்படித்தான் நடு வீதியில் கேட்க நாதியில்லாமல் தொங்கவிடுவோம் என்று எச்சரிக்கையும் இடம்பெற்றிருந்தது. சரியாக மாலை 5 மணி அளவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிரிய அரசு உளவாளியின் முகத்தைக்கூடத் துணியால் மறைக்கவில்லை. அத்தனை பேரும் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம். பார்த்தால்தான் பயம் வரும். பயம் வந்தால்தான் யாரும் துணிய மாட்டார்கள்.

இறந்த உடலை சிரிய அரசாங்கம் மூன்றாகப் பிரித்து வெவ்வேறு இடங்களில் புதைத்தது. எதிரிகளுக்கு அவரது உடல் இருக்கும் இடம்கூட தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.

இப்படிக் கொலை செய்யப்பட்டு உடலை மறைத்து வைத்துத் தண்டிக்கும் அளவிற்கு அந்த உளவாளி என்ன செய்தார்? கொலை செய்தாரா? கொள்ளையடித்தாரா? அல்லது பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதால் அரபு நாடுகளில் வழங்கப்படும் இத்தகைய தண்டனைகளுக்கு ஆளானாரா? எதுவும் கிடையாது.

அவர் சில தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கினார். அந்தத் தகவல்கள் சிரியாவிற்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டன. அதுதான் அவர் செய்த குற்றம். அதற்காகத்தான் இந்தக் குரூர தண்டனை.

அந்தக் குரூரத் தண்டனைக்கு ஆளானவரின் பெயர் எலியாஹு கோஹன். மொஸாடின் சூப்பர் உளவாளி என அழைக்கப்பட்டு ஒரு கதாநாயகனைப்போலக் கொண்டாடப்படுபவர். கோஹனுக்கு ஏஜெண்ட் 88 என்கிற ரகசியப் பெயரும் உண்டு. ஏஜேண்ட் 88இன் கதை எகிப்தில் இருந்து தொடங்குகிறது.

0

1958 ஆண்டு எகிப்தின் அதிபராக இருந்தவர் கமால் நாசர். நாசர் ஒரு தேசியவாதி. அரபு நாடுகளை எல்லாம் ஒன்றிணைத்து ஐக்கிய அரபு தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று கனவில் இருந்தார். அதன் முதல் முயற்சியாக சிரியாவுடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி சிரியாவும் எகிப்தும் இணைந்து இனி ஐக்கிய அரபு குடியரசு என்ற பெயரில் இயங்கும். இதன்மூலம் இரு நாடுகளின் பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட அனைத்தும் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் என்று சூளுரைத்தார். நாசரின் இந்த முன்னெடுப்பால் அரபு மக்கள் ஆனந்தக் கூத்தாடினர். மேற்கத்திய நாடுகளால் சுரண்டப்படும் அரபு நாடுகள் இனி சுதந்திர பாதையில் செல்ல இந்த இணைப்பு வழிவகுக்கும் என்று கூக்குரலிட்டனர். மத்தியக் கிழக்கு எங்கும் மகிழ்ச்சி அலை வீசியது. ஒரே ஒரு நாடு மட்டும் கவலைகொண்டது. அதுதான் இஸ்ரேல்.

இஸ்ரேலுக்கு சிரியா, எகிப்து இரண்டுமே எல்லையில் உள்ள தேசங்கள். பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அங்கு ஒரு புதிய தேசத்தை சியோனிய யூதர்கள் உருவாக்கியபோது அதை எதிர்த்த தேசங்கள். இன்று இரண்டும் கைகோர்த்துள்ளன. இந்த ஒருங்கிணைப்பு மற்ற அரபு நாடுகளையும் உள்ளிழுத்தால் தம் நிலைமை என்னவாகும்? இதுதான் இஸ்ரேலுக்கு இருந்த பயம்.

அப்போது இஸ்ரேல் உருவாகி பத்தாண்டுகள் கழிந்திருந்தது. உருவான முதல் நாளில் இருந்தே பிரச்னை. இப்போது பிரச்னை பூதாகரமாகிவிட்டதாக இஸ்ரேல் கருதியது. ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தில் முதல் அரபு போரில் வென்றாகிவிட்டது. இந்தமுறை அது நடக்காது. எகிப்தும் சிரியாவும் மிக வலுவாக இருக்கின்றன. கைவைத்தால் ரத்தக்களரியாகிவிடும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இரு நாடுகளுக்கு உள்ளேயும் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். வரப்போகும் ஆபத்தை வருமுன்னே கண்டறிந்தால்தான் தடுத்து நிறுத்த முடியும். இதற்கு ராணுவத்தை மட்டும் நம்பியிருந்தால் போதாது. உளவாளிகளையும் களத்தில் இறக்க வேண்டும். அதுதான் அவசியம் என்று முடிவு செய்தது இஸ்ரேல்.

ஏற்கெனவே இரு நாடுகளிலும் இஸ்ரேல் ராணுவத்தின் உளவுப் பிரிவு ஊடுருவி இருந்தது. ஆனால் அதுவெல்லாம் போதாது என்று இஸ்ரேல் கருதியது. நம்பகமான சில உளவாளிகள் உள்ளே புகுந்து அக்கு வேர் ஆணி வேறாக நிலைமையை அலச வேண்டும். பொது மக்களிலிருந்து புரட்சியாளர்கள் வரை ஒருவர் விடாமல் கண்காணிக்க வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் தகவல்களை வைத்துத்தான் தேசத்தின் பாதுகாப்பைக் கட்டமைக்க முடியும் என்று இஸ்ரேல் நினைத்தது. இதற்காக மொஸாடை அழைத்துச் சில உளவாளிகளை இரு தேசங்களுக்கும் அனுப்பி வைத்தது. அதில் ஒருவராக சிரியாவிற்குள் சென்றவர்தான் எலியாஹு கோஹன்.

0

கோஹன் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியாவில் பிறந்தவர். சில காரணங்களுக்காக இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தவர். இஸ்ரேல் அரசு துறையின் கீழ் பணியாற்றி வந்த அவரை மொஸாட் தனது வேலைத்திட்டத்திற்காக அணுகியது.

கோஹன் ஏற்கெனவே உளவாளியாக முயற்சி செய்து தோல்வி அடைந்திருந்தார். தேர்ச்சிபெறாதவர்களின் பட்டியலில் கிடந்த அவரது பெயரைத் தேடியெடுத்து பணிக்கு அமர்த்தியது மொஸாட். மொஸாட் ஒருவரை உளவாளியாகத் தேர்ந்தெடுக்கிறது என்றால் முதலில் அவருக்கு கடுமையான உடல் வலுவும், மன வலுவும் இருக்க வேண்டும். ஊர் சுற்றுவதில், சாகசங்களில் ஈடுபடுவதில் ஆர்வம் திகழ வேண்டும். இது எதுவுமே கோஹனுக்குக் கிடையாது. அவர் ஒரு சாதாரணர். ஆனால் அவர்தான் சிரியாவிற்குச் செல்வதற்குச் சரியான ஆள் என்று முடிவு செய்திருந்தது மொஸாட்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது அவர் தீவிர சியோனியவாதி. இரண்டாவது கோஹன் பல மொழிகளில் வித்தகர். குறிப்பாக அரபு மொழியை சிரியர்கள் சாயலில் அப்படியே பேசுவார். பார்ப்பவர்கள் அவரை யூதர் என்று யூகிக்கவே முடியாது. இதுதான் மொஸாட்டிற்குத் தேவை.

கோஹனுக்கு முதல் ஆறு மாதங்கள் கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து வெடிகுண்டுகள் செய்வது எப்படி? ஆயுதங்கள் இல்லாமல் சண்டையிடுவது எப்படி? பூட்டிய வீட்டிற்குள் மாட்டிக்கொள்ளாமல் நுழைவது எப்படி? இப்படிப் பல பயிற்சிகள். அதில் ஒன்றாக ரேடியோவைப் பயன்படுத்தி ரகசியச் சமிக்ஞைகளை அனுப்பும் பயிற்சியும் வழங்கப்பட்டது.

அடுத்ததாக கோஹனின் அடையாளத்தை மாற்றும் பணிகள் தொடங்கின. எந்த உளவாளியாக இருந்தாலும் உண்மையான பெயரில் சுற்றித் திரிய முடியாது அல்லவா? அதற்காகப் போலி அடையாளங்கள் உருவாக்கப்பட்டன. கோஹனுக்கு கமல் ஹமின் தாபே என்ற அரபு பெயர் சூட்டப்பட்டது. அவர் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் என்பதுபோன்ற அடையாளங்கள் உருவாக்கப்பட்டன. புதிய அடையாளத்தின்படி கமல் தாபே ஒரு தொழிலதிபர். வியாபார விஷயமாக சிரியாவிற்குச் செல்ல விரும்புகிறார்.

ஆனால் அர்ஜெண்டினா என்று ஒரு நாட்டின் பெயரைச் சொன்னால் மட்டும் போதுமா? யாராவது அர்ஜெண்டினாவில் எந்தத் தெருவில் வசித்தீர்கள் என்று கேட்டுவிட்டால் கதை முடிந்தது அல்லவா? அதற்காக அவரை அர்ஜெண்டினாவில் தலைநகரான பியூனஸ் அயர்ஸைக்கு அழைத்துச் சென்று ஆறு மாதங்கள் தங்க வைத்து இண்டு இடுக்கெல்லாம் சுற்றிக்காட்டியது மொஸாட். இந்த வீதியில் இந்த எண் கொண்ட வீட்டில் வசிப்பவரின் மருமகள் பெயர் என்ன என்று கேட்டால்கூட சரியாகச் சொல்லிவிடும் அளவிற்கு கோஹனுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அர்ஜெண்டினாவில் ஏற்கெனவே பணி நிமித்தமாகச் சென்ற சிரிய சமூகம் ஒன்று வசித்து வந்தது. அங்குதான் முதலில் சென்று கோஹன் தம்மை இணைத்துக்கொண்டார். அந்த அரேபியர்கள் செல்லும் விடுதிகளுக்கு எல்லாம் சென்று நோட்டமிடத் தொடங்கி, அவர் சந்தித்த ஒருவர்தான் அப்துல் லதிஃப் அல்-கெஷன்.

அப்போது அரபு உலகம் எனும் பிரபலப் பத்திரிகை ஒன்று அர்ஜெண்டினாவில் இருந்து இயங்கி வந்தது. அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்தான் அல்கெஷன். பத்திரிகையாளர் என்றால் அரசியல் மட்டத்தில் நிச்சயம் தொடர்பு இருக்கும் அல்லவா? அவரிடம் தம்மை அறிமுகம் செய்துகொண்ட கோஹன், தாம் வியாபாரம் நிமித்தமாக பல்வேறு நாட்டு அரசியல்வாதிகளைச் சந்தித்து வருவதாகவும். அதன் ஒருபகுதியாகச் சிரியாவுக்குச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார். சிறிது நாட்களில் அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்திருந்த அல்கெஷன், கோஹன் சொல்வதை உண்மை என நம்பி டமாஸ்கஸில் வசிக்கும் தமது மகனின் முகவரியையும் அத்துடன் சிரியாவில் தனக்குத் தெரிந்த சில அரசு அதிகாரிகளுக்குச் சிபாரிசு கடித்ததையும் வழங்கிவிட்டார். இதுபோதாது? கோஹன் உடனே சிரியாவிற்குப் புறப்பட்டார்.

1962ஆம் ஆண்டு சிரியாவிற்குச் சென்ற கோஹன் டமாஸ்கஸில் அபு ருமானே என்ற பகுதியில் தங்கினார். கோஹன் அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இருந்தது. அப்பகுதியில்தான் சிரியாவின் பல முக்கியஸ்தர்களின் வீடுகள் இருந்தன. உள்ளூர் அரசியல்வாதிகளில் தொடங்கி வெளிநாட்டு தூதகர்கள், அரசு ஊழியர்கள், ராணுவ அதிகாரிகள் எனப் பலரும் அங்கு வசித்தனர்.

அத்துடன் சிரியர்கள் ராணுவம் தொடர்பான பல ரகசியச் செய்திகளை ரேடியோ அலைகள் மூலம் அந்நகரத்திலிருந்துதான் அனுப்பி வந்தனர். அதே இடத்திலிருந்து தாமும் தங்கி ரகசியங்களை அனுப்பினால் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம் என்பது கோஹனின் எண்ணம்.

சிரியாவிற்குச் சென்று சேர்ந்த கோஹனிடம் இஸ்ரேல் அரசு மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தச் சொல்லியிருந்தது. முதலாவது, சிரியாவில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விஷயங்களைக் கோஹன் தினசரி தெரிவிக்க வேண்டும். சிரியாவில் அப்போது கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியிருந்தது. எப்போது வேண்டுமானாலும் புரட்சி நடக்கலாம், புதிய ஆட்சி அமையலாம், அந்த ஆட்சி கவிழலாம் என்கிற நிலைமை. இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டது.

இரண்டாவது அரசியல் நடவடிக்கைகள். அரசியலில் யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது? யாரை மக்கள் வெறுக்கிறார்கள்? உள்ளூர் தலைவர்கள் யார் யார்? அவர்கள் நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து வதந்திகளைக்கூட விடாமல் சேகரிக்கச் சொன்னது இஸ்ரேல். மூன்றாவது பொருளாதாரம். சிரியாவின் பொருளாதாரச் சூழல் என்ன என்பதைத் தெளிவாக அறிந்துகொண்டால் அதற்கு ஏற்றவாறு எதிர்நடவடிக்கைகளைத் திட்டமிடலாம் என்பது இஸ்ரேலின் எண்ணம். இது மூன்றிலும் கவனம் செலுத்தினால் போதும் என்று இஸ்ரேல் அரசு கோஹனிடம் சொல்லியிருந்தது.

ஆனால் கோஹனுக்கு வெறும் தகவல்களைச் சேகரிப்பதில் எல்லாம் விருப்பம் இருக்கவில்லை. அவர் சிரியாவின் ராணுவத்திற்குள் ஊடுருவ விரும்பினார். வெளியே இருந்து விஷயங்களை அவதானிக்காமல் ஆழம் சென்று முடிச்சுகளை அவிழ்க்க முனைந்தார்.

அர்ஜெண்டினாவில் பத்திரிகையாளர் நண்பரிடம் பெற்ற சிபாரிசு கடிதத்தைப் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அப்போதைய சிரியாவின் ராணுவத் தளபதியின் மருமகனான மாஜி ஜஹரித்தின் நட்பைப் பெறும் வரை முன்னேறிவிட்டார்.

அந்த நட்பு கோஹனுக்கு சிரியாவின் பல ராணுவ ரகசியங்களைத் திறந்து காட்டியது. அந்த நேரத்தில்தான் சிரியாவும் எகிப்தும் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போர் முயற்சிகளைத் தொடங்கி இருந்தன. அப்போது கோஹன் ஜஹரித்தின் மூலம் சேகரித்த சில செய்திகள் சிரியாவின் தலையெழுத்தையே மாற்றி எழுதின.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

1 thought on “மொஸாட் #2 – சூப்பர் உளவாளி”

  1. பொ.சங்கர்

    அழகிய நடையில் பல சுவாரஸ்யமான தரவுகளை இந்தக் கட்டுரை பேசுகிறது. வாழ்த்தும் மகிழ்ச்சியும்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *