Skip to content
Home » மொஸாட் #4 – வரலாற்றை மாற்றிய உளவாளி

மொஸாட் #4 – வரலாற்றை மாற்றிய உளவாளி

ஜூன் 5, 1967.

‘சரி தாக்கலாம்’ என்ற உத்தரவு கிடைத்தவுடனேயே போர் விமானங்கள் சீறிப் பாய்ந்தன. ரேடார்களுக்குள் சிக்காமல் தாழ்ந்து பறந்த விமானங்களை எகிப்தியப் படைகள் கவனிக்கவில்லை. விளைவு, சில மணி நேரங்களிலேயே எகிப்திய விமானங்கள் நிலத்தில் வைத்தே அழிக்கப்பட்டன.

அடுத்ததாக இஸ்ரேலியப் படை சிரியாவிற்குள்ளும் நுழைந்தது. சிரியப் படைகள் கோலன் குன்றுகள் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கோலன் குன்றுகள் மலைப் பிரதேசங்கள் அடங்கிய பகுதி. கிட்டத்தட்ட இயற்கையாக உருவான கோட்டை. அக்கோட்டையைத் தாண்டி உள்ளே இருக்கும் படைகளை நெருங்குவது கடினம். எதிரிகளால் அந்தப் பாதுகாப்பு அரணை உடைக்கவே முடியாது. இப்படித்தான் சிரியா நினைத்தது.

ஆனால் இஸ்ரேலோ உள்ளே நுழைந்த அடுத்த நொடியே கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியது. எங்கெல்லாம் படைகள் நிற்கும், எங்கெல்லாம் அரண்கள் அமைக்கப்பட்டிருக்கும் என்று இஸ்ரேலுக்குச் சரியாகத் தெரிந்திருந்தது. துல்லியமான தாக்குதல். யாரோ படம் வரைந்து பாகம் குறித்ததுபோன்ற தாக்குதல். சிரியப் படைகள் சிதறி ஓடின.

வெறும் ஆறு நாட்களில் போர் முடிந்துவிட்டது. சிரியா, எகிப்து இரு நாடுகளுக்கும் பலத்த அடி. ஐநா தலையிட்டு போர் நிறுத்தம் கொண்டு வந்தது. இஸ்ரேல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கோலன் குன்றுகள் அமைந்திருந்த மாகாணத்தின் தலைநகர் குனெத்ரா போரினால் தரைமட்டமாகியிருந்தது. அப்பகுதியில் இருந்த 35,000 சிரியர்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். அதைவிட முக்கியமான விஷயம் கோலன் குன்றுகள் இப்போது இஸ்ரேலின் வசமாகியிருந்தது.

சிரியாவால் அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. கோலன் குன்றுகள் என்பது அசைக்க முடியாத கோட்டை. அதனைத் தரைமட்டமாக்கிவிட்டதே இஸ்ரேல்! எப்படி இதனைச் செய்ய முடிந்தது? யார் சொல்லியிருப்பார்கள்? கோஹனா? அவர்தான் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதே!

ஆம், கோஹன் இறந்துவிட்டார். ஆனால், கோலன் குன்றுகள் விஷயத்தில் அவர் ஊன்றிச் சென்றிருந்த விதை இரண்டு ஆண்டுகளில் விருட்சமாக விஸ்வரூபம் எடுத்து வெற்றிக் கனிகளை இஸ்ரேலுக்குப் பறித்துக்கொடுத்தது.

0

கோலன் குன்றுகளில் அமைய இருந்த நீர் திசைமாற்றத் திட்டத்தை இஸ்ரேல் சிதைத்தவுடன் சிரியர்கள் உஷாராகினர். தங்களுக்குள் கருப்பு ஆடு ஒன்று இருப்பது அப்போதுதான் அவர்களுக்கு முதன்முதலில் புரியவந்தது.

சிரியாவிற்குள் உளவாளி ஒருவன் இருப்பதை முதலில் ஊர்ஜிதம் செய்தது சிரிய உளவு அமைப்பின் பாலஸ்தீனப் பிரிவுதான். 1964களில் சிரிய அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு ரகசிய முடிவுகளும் மறுநாளே இஸ்ரேல் ரேடியோவில் ஒலிபரப்பானது. இதனால் பாலஸ்தீனத்தில் இருந்த சிரியர்கள்தான் முதலில் அதனைக் கண்டறிந்து அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தினர்.

‘உங்களுடைய உயர் மட்டத்திலேயே உளவாளி ஒருவன் இருக்கிறான். விழித்துக்கொள்ளுங்கள்’.

ஆனால் அவன் யார்? இப்போது எங்கிருக்கிறான்? அவனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதுதான் சிரியர்களுக்கு இருந்த மிகப்பெரிய கேள்வி. அதற்கான பதில் இந்தியத் தூதரகத்திலிருந்து கிடைத்தது.

மொஸாட்டால் கோஹனுக்குச் சொல்லப்பட்டிருந்த முக்கிய விதிமுறைகளில் ஒன்று, தகவல் அனுப்பும் தொலைத்தொடர்புக் கருவியை 2 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்பது. 2 நிமிடங்களுக்கு மேல் எதிரிகளின் அலைவரிசையைப் பயன்படுத்தினால் எளிதாகச் சிக்கிவிடுவோம் என்பதுதான் விஷயம். இது அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் வெற்றி மேல் வெற்றி வந்த மிதப்பில், தன்னை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்கிற அசட்டுத் தைரியத்தில் அவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த நேரத்திற்கும் மேலாகத் தகவல்களை அனுப்பத் தொடங்கியிருந்தார். இதுதான் பிரச்னையாகிப்போனது.

அடுத்ததாக, சிரியாவில் இருந்த ஒவ்வொரு நாட்டுத் தூதரகங்களும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அலைவரிசையில் தகவல்களைப் பரிமாறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்தியத் தூதரகம் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தகவல் அனுப்பும்போது இடையூறுகள் ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார் அளித்து வந்தது. இங்குதான் முதலில் சந்தேகம் எழும்பத் தொடங்கியது.

அப்போது சிரிய அரசு இந்திய அரசுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. இதனால் இந்தியாவுக்கு ஒரு பிரச்னை என்றவுடன் சிரிய அதிபர் அமின் அல் ஹபீஸ் நேரடியாகவே தலையிட்டு இந்தப் பிரச்னையைத் தீர்க்கும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்தியர்களுக்கு இடையூறு செய்யும் அலைவரிசை எங்கிருந்து ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்ததில் அது டமாஸ்கஸில் இருந்துதான் செல்கிறது என்பது உறுதியானது. மேலும் அந்தத் தகவலை ஆராய்ந்ததில் அது இஸ்ரேலுக்கானது என்பதும் ஊர்ஜிதமாகி உளவாளி சிரியத் தலைநகரில்தான் இருக்கிறான் என்பதை சிரியர்கள் கண்டுபிடித்தனர். அடுத்தாக அவன் எங்கே மறைந்திருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இதனைக் கண்டுபிடிக்க சிரியாவில் பிறந்து அப்போது ஜெர்மனியில் வசித்து வந்த ஒரு ராணுவப் பொறியாளர் உதவிக்கு வந்தார்.

அந்தப் பொறியாளர் சிரிய அரசாங்கத்திற்கு எளிமையான யோசனை ஒன்றை அளித்தார். ‘அடுத்த 24 மணி நேரத்திற்கு நாட்டில் ராணுவம் தொடர்பான அனைத்துத் தொலைத்தொடர்பையும் நிறுத்தி வையுங்கள். கருப்பு ஆடு தானாகச் சிக்குவான்’ என்றார்.

அவர் சொன்னதுபோலவே சிரியாவின் வேண்டுதலின் பெயரில் அனைத்து நாட்டுத் தூதரகங்களும் ஒருநாளைக்கு தகவல் பரிமாற்றத்தை நிறுத்தி வைத்தன. இதனால் நாடு முழுவதும் இருந்தும் எந்த ஒரு செய்தியும் ரேடியோ வாயிலாக அனுப்பப்படாமல் இருந்தது. இந்த நேரத்தில் ஒரே ஓர் இடத்தில் இருந்து மட்டும் தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. இதைவைத்து அதுதான் உளவாளிதான் என்று சிரியா கண்டுகொண்டது.

அந்தத் தகவல் தொடர்பு வரும் இடத்தைப் பின்தொடர்ந்து சென்றதில், அந்தப் பாதை கமல் அமின் தாபேவாக நடித்து வந்த கோஹனின் குடியிருப்புக்குச் சென்று முடிந்தது.

0

‘நிச்சயமாக இருக்காது’ சிரிய உளவுப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் அடித்துக் கூறினார். நிச்சயம் தாபேவாக இருக்க முடியாது. அவர் பாத் கட்சியினருக்கு நெருக்கமானவர். எல்லாத் தலைவர்களுக்கும் நண்பர். இருக்கவே இருக்காது என்றார்.

ஆனால் ஜெர்மன் பொறியாளரோ தன் கருத்தில் உறுதியாக இருந்தார். இதனால் சிரிய உளவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. ஆனால் எடுத்த எடுப்பில் தாபேவின் வீட்டிற்குள் நுழைந்து, அது கட்சித் தலைவர்களுக்குத் தெரிய வந்தால் பெரிய பிரச்னையாகிவிடும் என்று உளவுத்துறை பயந்தது. இதனால் ஆதாரங்களைத் திரட்டுவதற்காக தாபேவாக நடித்து வந்த கோஹன் தங்கியிருந்த குடியிருப்பிலேயே வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்தது.

பிறகு, வழக்கமாகத் தகவல் பரிமாற்றம் நடைபெறும் நேரத்தில் வேண்டுமென்றே கட்டடத்தின் மின்சாரத்தைத் துண்டித்து சமிஞ்சையில் ஏதாவது இடையூறுகள் ஏற்படுகிறதா என்று ஆராய்ந்தது. மூன்று முறை சோதித்ததில் அந்தத் துரோகி தாபேவேதான் என்று உறுதியானது. அடுத்த நொடி தாமதிக்காமல் அறைக் கதவை உடைத்துக்கொண்டு கோஹனின் வீட்டிற்குள் நுழைந்தது உளவுத்துறை.

அப்போதும்கூட கோஹன் உஷாராக இருந்தார். வெளியே காலடிச் சத்தம் கேட்பதை அறிந்த கோஹன், தன் செய்தி அனுப்பும் கருவியை மறைத்துவைத்துவிட்டார். உள்ளே நுழைந்த அதிகாரிகளுக்கு அவரது மேஜையில் சில காகிதங்களைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. அறை முழுவதும் தேடிப்பார்த்தும் எதுவும் அகப்படவில்லை. ஆனால் அங்கிருந்த அதிகாரி ஒருவர் எதேச்சையாக ஜன்னலருகே தொங்கிக்கொண்டிருந்த திரைச்சீலையை அவிழ்க்க, அதில் வைத்து சுருட்டிக் கட்டப்பட்டிருந்த கருவி கீழே விழுந்தது. அந்த நொடி கோஹன் சிக்கிக்கொண்டார்.

0

இப்போதும்கூட கோஹனை ஓர் இஸ்ரேலியர் என்று சிரியா சந்தேகப்படவில்லை. ஒரு அரேபியரை மொஸாட் விலைக்கு வாங்கிவிட்டது என்றே அதிகாரிகள் நம்பினர். பின் தீவிர விசாரணைக்குப் பின்தான் அவர் ஒரு சியோனிய யூதர் என்பது தெரியவந்தது.

கோஹன் பிடிபட்ட முதல் நான்கு நாட்களுக்கு யாருக்கும் விஷயம் சொல்லப்படவில்லை. அதேபோல எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. கோஹனுடன் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அதிபர் அல் ஹபீஸ் அறிய விரும்பினார். இதனால் கோஹனைச் சுதந்திரமாக நடமாட விட்டு அவரைச் சந்திக்கும் நபர்கள் யார் யார்? அவர்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்பதை வேவு பார்த்தார்.

இதன் அடிப்படையில் ராணுவத் தளபதியின் மருமகன் ஜஹரிதின் உட்பட 69 பேர் கைது செய்யப்பட்டனர். 400 பேர் சந்தேக வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இதன்பிறகுதான் சியோனிய உளவாளி ஒருவரைக் கைது செய்திருப்பதாக சிரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கோஹன் கைதான செய்தி டமாஸ்கஸில் காட்டுத்தீயைப்போலப் பரவியது. சிரியத் தலைவர்களுக்கு மூச்சே இல்லை. அப்பாவி அதிகாரிகள் எல்லாம் கோஹனுடன் என்றைக்கோ ஒருநாள் விருந்தில் கலந்துகொண்டதற்காகத் தாமும் கைது செய்யப்படுவோமா என அஞ்சி நடுங்கினர். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை.

விசாரணைக்குப் பிறகு கோஹன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்குத் தூக்கு உறுதியானது. இதில் விசித்திரம் என்னவென்றால் கோஹனை விசாரணை செய்தவர்கள், நீதிமன்றத்தில் வழக்காடியவர்கள், தண்டனை வழங்கிய நீதிபதிகள் அனைவரும் கோஹனுடன் நண்பர்களாக இருந்தவர்கள்.

இறுதியாக 18 மே, 1965 அன்று நாம் பார்த்த தூக்கு வைபோகம் நாட்டு மக்கள் முன்னிலையில் அரங்கேறியது. கோஹன் பல ஆயிரம் பேர் முன்னிலையில் உயிரை விட்டார். அப்போதுதான் சிரியாவிற்கு மூச்சே வந்தது.

ஆனாலும் தன் முட்டாள்தனத்திற்கு சிரியா மிகப்பெரிய விலையை விரைவிலேயே தர வேண்டியிருந்தது.

கோஹன் இறந்த இரண்டு ஆண்டுகள் கழித்து மூன்றாவது அரபு – இஸ்ரேல் போர் தொடங்கியது. சிரியாவும் எகிப்தும் இணைந்துகொண்டு இஸ்ரேலை மிரட்டுவதற்காகப் போர் ஆயத்தங்களில் ஈடுபடுவதைப்போலக் காட்டிக்கொண்டன. இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இஸ்ரேல், அரபு நாடுகள் தன் மீது போர் அறிவித்துள்ளதாகச் சொல்லிக்கொண்டு எகிப்து மீதும், சிரியா மீதும் தாக்குதல் நடத்தியது. இதில் இரு நாடுகளுக்கும் பலத்த சேதாரம். போர் வெறும் ஆறு நாட்களில் முடிந்துவிட்டது. ஆனால் போரின் இறுதியில் இஸ்ரேல் எதிர்பார்த்தபடி கோலன் குன்றுகள் அதன் வசமானது.

கோலன் குன்றுகளைத் தாக்குவதற்கு இஸ்ரேல் முன்னெடுத்த திட்டம் அனைத்தும் கோஹன் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருந்தது. கோஹன் ராணுவ அதிகாரிகளின் துணையுடன் கோலன் குன்றுகளின் பகுதியில் ஊடுருவி அங்கே இருந்த போர் விமானங்கள், டாங்கிகள் போன்ற போர் தளவாடங்கள் பற்றியும், அப்பகுதிகளில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஏற்கெனவே தகவல் அனுப்பியிருந்தார். இதைவிட ஒருபடி மேலே சென்று கோலன் குன்றுகளின் முக்கிய இலக்குகளை இஸ்ரேலுக்குச் சுட்டிக்காட்டும் வகையில் அங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்தார் என்றும், இதனால் இஸ்ரேல் விமானங்கள் சரியாக அந்த இடங்களைக் குறிவைத்துத் தாக்கின என்கிற தகவலும் உண்டு.

அதற்கான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை, இருப்பினும் கோஹன் அனுப்பிய ராணுவத் தளவாடங்கள் பற்றிய செய்திகள் சிரியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தன என்பதை நம்மால் மறுக்க முடியாது.

கோலன் குன்றுகளைப் பறிகொடுத்த நிகழ்வு இன்றுவரை சிரியாவின் வரலாற்றில் நீங்காக் கறையாகப் படிந்துள்ளது. கோலன் குன்றுகளைத் திருப்பித் தர வேண்டும் என்று சிரியா இப்போதுவரை மன்றாடி வருகிறது. இஸ்ரேலோ 70களிலேயே அப்பகுதியில் குடியேற்றங்களை நிறுவி, சிறப்பு நிர்வாக அமைப்புகளை உருவாக்கி ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது.

கோலன் குன்றுகளின் ஆக்கிரமிப்பு சட்டப்பூர்வமானது அல்ல என்று ஐநாவில் பல தீர்மானங்கள் நிறைவேறிவிட்டன. உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலின் அந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துவிட்டன. ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் யார் பேச்சையும் கேட்கமாட்டோம் என்று அங்கு குடியேற்றங்களைத் தொடர்ந்து வருகின்றன. கடந்த 2019 ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது இஸ்ரேல் – அமெரிக்க நட்பை அடையாளப்படுத்தும் வகையில் கோலன் குன்றுகளின் ஒரு பகுதிக்கு டிரம்ப் குன்றுகள் என்கிற பெயர் மாற்றம் எல்லாம் செய்யப்பட்டது.

1967இல் நடைபெற்ற ஆறு நாள் போர் சிரியாவின் வரலாற்றை மட்டுமல்ல, எகிப்து, ஜோர்டன், பாலஸ்தீனர்கள் எனப் பலரது வரலாற்றை மாற்றி அமைத்த நிகழ்வு. இன்றுவரை ஐநாவில் போராடி வரும் பாலஸ்தீனர்கள், தங்களுக்கு ஆறு நாள் போருக்கு முந்தைய பகுதிகளை மீட்டு வழங்கினால் போதும் என்றே குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி வரலாற்றின் போக்கையே மாற்றிய ஒரு போருக்குப் பின்னால் ஒற்றை உளவாளியான கோஹனுக்கும் முக்கிய பங்கிருக்கிறது என்பது இஸ்ரேலின் இருப்புக்கு மொஸாட்டின் இன்றியமையாத தேவையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *