முன்தலை வழுக்கையுடன் பென்ஸ் கார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறி வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த நபர் மீது யார் கவனம் சென்றாலும் இரக்கம்தான் தோன்றும். ஒடிந்த தேகம், சோர்ந்த நடை, பார்ப்பதற்கே அம்மாஞ்சி தோற்றம்.
‘ஒரு நிமிடம் அன்பரே’ என்று யாரோ தம்மை பின்னால் இருந்து விளிப்பதைக் கேட்டுத் திரும்பிய அவர் மீது திடுதிடுவென மூன்று நபர்கள் தாவிக் குதித்தனர்.
ஒருவர் அவரது கால்களைப் கயிற்றால் கட்ட, மற்றொருவர் வாயில் துணியை வைத்து அடைத்தார். இன்னொருவர் அவர் திமிறாதபடி உடல்மீதேறி அமர்ந்துகொண்டார். இப்போது மூவரும் அவரை அலேக்காகத் தூக்கிக்கொண்டு சென்று காருக்குள் கிடத்தினர். அடுத்தாக அவர்மீது கம்பளம் விரிக்கப்பட்டது. பார்ப்பதற்கு யாரும் உள்ளே இருப்பது தெரியாதபடி செட்டப் செய்யப்பட்டு, அந்தக் கார் விமான நிலையம் நோக்கி வேகம் எடுத்தது.
0
வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய ஆள் கடத்தல் சம்பவம் அது. கடத்தலைத் திட்டமிட்டது மொஸாட். செய்து முடித்தது உளவாளிகள். அப்படியென்றால் கடத்தப்பட்ட நபர் சாதாரண ஆளாக இருக்க முடியுமா என்ன?
மே 11, 1960 அன்று அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸில் இருந்து கடத்தப்பட்ட அந்த நபர் உலகின் மிக முக்கிய போர்க் குற்றவாளி எனத் தேடப்பட்டு வந்த அடோஃல்ப் ஐக்மேன். நாஜி ஜெர்மனியில் சுமார் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த சூத்திரதாரி.
அடோஃல்ப் ஹிட்லரைத் தெரிந்த பலருக்கு அடோஃல்ப் ஐக்மேனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஹிட்லருக்கு மிகவும் வேண்டப்பட்ட நபர்களில் ஒருவர். இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியில் கொத்துக் கொத்தாக யூதர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர். சரித்திரம் வியக்கும் சம்பவங்களைச் செய்துவிட்டு சமர்த்தாக 15 ஆண்டுகள் யார் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்ந்தவர். அவரைத்தான் மொஸாட் உளவாளிகள் தேடிப்பிடித்துத் தூக்கி வந்தனர்.
‘ஐக்மேன் கடத்தல்’ என்று அறியப்படும் இந்தச் சம்பவம் வரலாற்றில் எந்த ஓர் உளவு அமைப்பும் நிகழ்த்த முடியாத மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. வெறும் ஓரிரு நிமிடங்களில் நிகழ்ந்த இந்தக் கடத்தலுக்குப் பின் பல மாதங்கள் ரகசியத் திட்டமிடல் இருந்திருக்கிறது. யாருக்கும் சந்தேகம் வராத நோட்டமிடுதல் இருந்திருக்கிறது. குறிப்பாக ஐக்மேனின் கடத்தலுக்குப் பின் பலரும் அறியாத ரத்த வாடை வீசும் வரலாறு மறைந்திருக்கிறது.
0
ஐக்மேன் ஜெர்மனியில் 1906ஆம் ஆண்டு பிறந்தவர். தம் இளம் வயதில் ஹிட்லரால் ஈர்க்கப்பட்டு ஆஸ்திரிய நாஜிக் கட்சியில் சேர்ந்தார்.
ஐக்மேனிடம் ஹிட்லர் விரும்பிய இரண்டு சிறப்பம்சங்கள் இருந்தன. ஒன்று அவர் தேர்ந்த அதிகாரி. முறையான திட்டமிடலும், அதனைச் சரியாகச் செயல்படுத்தும் திறனும் அவரிடம் இருந்தன. இரண்டாவது யூதர்களை அடியோடு வெறுக்கும் இனவெறி குணம் அவர் ரத்தத்தில் ஊறிப்போயிருந்தது. போதாது? கடகடவென அதிகாரப்படியில் ஏறி நாஜிக் கட்சியின் உயர் அதிகாரிகளில் ஒருவரானார்.
அப்போது ஹிட்லருக்கு மிகப்பெரிய கேள்வி ஒன்று இருந்தது. யூதர்களை என்ன செய்யலாம்? கரையானைப்போலச் சமூகத்தை அரித்துக்கொண்டிருக்கிறார்கள். கிருமிகளைப்போல ஜெர்மனியில் பரவிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது. என்ன செய்யலாம்?
விரட்டிவிடலாம் என்றனர் அதிகாரிகள். கொன்றுவிடலாம் என்றார் ஐக்மேன். கொலைத் தாண்டவத்திற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வாங்கிக்கொண்டு நிதானமாக விடைபெற்றுக்கொண்டார். அவ்வளவுதான். கோரத்தாண்டவம் ஆரம்பமானது. ஆஸ்விட்ச் வதைமுகாமில் லட்சக்கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தேசம் முழுவதையும் ஆறு மண்டலங்களாகப் பிரித்து சுமார் 6.50 லட்சம் யூதர்களை வெறும் நான்கு மாதங்களில் மேலோகம் அனுப்பி வைத்தார்.
உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தபோதும், உலக நாடுகள் ஜெர்மனியிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்தபோதும் தான் எடுத்துக்கொண்ட வேலைக்கு எந்தச் சுணக்கமும் ஏற்படாதபடி கவனமுடன் பார்த்துக்கொண்டார்.
ஆனால் ஒருகட்டத்தில் ஜெர்மனியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். அவரைப் பின்பற்றிப் பல தொண்டர்களும் பரலோகம் அடைந்தனர். ஆனால் சாக விரும்பாத சில நாஜி அதிகாரிகள் ஜெர்மனியிலிருந்து தப்பித்துத் தலைமறைவாகினர்.
பாதிக்கப்பட்ட யூதர்கள் குற்றவாளிகளைப் பழிதீர்க்க முடிவு செய்தனர். பிரிட்டன் ராணுவத்தில் இருந்த யூதர்களின் பிரிவு ஒன்று தம்மை நாக்மின் என்று அறிவித்துக்கொண்டு நாஜிக்களுக்கு எதிரான போரைத் தொடங்கியது. நாக்மின் என்றால் பழிவாங்கும் தேவதைகள் என அர்த்தம்.
நாக்மின்களின் ஒரே வேலை தப்பிச் சென்ற நாஜிக் குற்றவாளிகளைக் தேடிப் பிடித்து தண்டனை பெற்றுத்தருவது. நாக்மின் படையினர் வதைமுகாம்களில் இருந்த யூதர்களிடம் எல்லாம் விவரம் சேகரித்துக்கொண்டு நாஜிக் குற்றவாளிகளைத் தேடி அலைந்தனர். ஹிட்லருக்குக் கீழே பணிபுரிந்த முக்கிய புள்ளிகள் யார் யார்? அவர்கள் எப்படி இருப்பார்கள்? இப்போது எங்கு இருக்கிறார்கள் என்றெல்லாம் கவனமாகத் துப்புத் துலக்க ஆரம்பித்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தப்பிய நாஜிக்கள் பிடிபடத் தொடங்கினர். நாக்மின்கள் சிலரைத் தாங்களே கைது செய்தனர். சிலரை நேச நாடுகளின் ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தனர். ஆனால் சிக்கிய கொலை பாதகர்கள் தண்டனை எதுவும் அனுபவிக்காமல் அனிச்சையாக தப்பித்து வெளிவந்தனர். போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருந்த நேரம். அமெரிக்கா ஜெர்மனியைப் பங்குபோடுவதில்தான் குறியாக இருந்தது. குற்றவாளிகள் அவர்கள் கவனத்திலேயே இல்லை.
இதனால் நாக்மின் படை ஒரு முடிவுக்கு வந்தது. இனி குற்றவாளிகளைப் பிடித்தால் மட்டும் போதாது. உடனே போட்டுத் தள்ள வேண்டும். யாருடைய அனுமதியும் நமக்குத் தேவையில்லை. சுற்றிவளைப்போம், சுட்டுத்தள்ளுவோம் எனக் கிளம்பியது. இதன்பின் ஏகப்பட்ட நாஜி அதிகாரிகள் நாக்மின் படையினரால் கொல்லப்பட்டனர். நாஜிக்கட்சியில் உயர் மட்ட அதிகாரிகளாக இருந்த பலரும் உயிரிழந்தனர். பட்டியல் வைத்துக்கொண்டு நாக்மின்கள் வேட்டையாடினர். பெரும்பான்மை அதிகாரிகள் இதில் கொல்லப்பட்டனர்.
ஆனாலும் இதிலும் சிலர் நைச்சியமாகத் தப்பித்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தஞ்சம் புகுந்தனர். பெயர்களையும் அடையாளங்களையும் மாற்றிக்கொண்டு யாரும் கண்டுபிடிக்காதபடி புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினர். இவ்வாறு தப்பிய நாஜிக்களில் ஒருவராக ஐக்மேனும் இருந்தார்.
குற்றவாளிகளுக்கு மத்தியில் ஐக்மேன் ஒரு திமிங்கிலம். அவர் இழைத்த குற்றங்களுக்கு முன்னால் மற்றவர்களின் கொலை எல்லாம் தூசுக்குச் சமானம். அதனால் அவரை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு தேடியது யூதப் படை. ஆனால் அவரோ யார் கண்ணிலும் படாமல் காற்றில் மறைந்துபோனார். அவரை எங்கு தேடியும் அகப்படவில்லை. யூதர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டனர். அவர் எங்கே சென்றிருப்பார்?
உண்மையில் ஐக்மேன் மிகச் சிறந்த தந்திரக்காரராக இருந்தார். பாதுகாப்புத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். உளவாளிகளை வழிநடத்தியவர். அவருக்குத் தெரியாதா எப்படியும் தாம் வேட்டையாடப்படுவோம் என்று! அதனால் சோவியத் படைகள் ஜெர்மனிக்குள் நுழைந்தபோதே ஐக்மேன் ஹங்கேரிக்குத் தப்பியிருந்தார். அங்கு வைத்து அவரை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. ஆனால் அவர்களுக்கும் தண்ணி காட்டிவிட்டு மீண்டும் ஜெர்மனிக்குள் நுழைந்த அவர், அடுத்த சில ஆண்டுகள் அங்கேயே தலைமறைவாக இருந்தார். பின் 1950ஆம் ஆண்டு இத்தாலிக்குச் சென்று அங்கு சர்வதேச அமைப்புகள் சிலவற்றின் உதவியைப் பெற்று அர்ஜெண்டினாவுக்குப் பறந்தார்.
அர்ஜெண்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் குடியேறிய அவர், ரிக்கார்ட்டோ கிளெமென்ட் எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டு, ஒரு சாமானியனைப்போலக் கிடைக்கும் வேலைகளைச் செய்துகொண்டு யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராதபடி குடும்பம் குட்டிகளுடன் அமைதியாக வாழத் தொடங்கினார்.
0
1948இல் யூதர்களுக்கு எனத் தனி நாடு உதயமானது. அப்போது அவர்களுடைய பிரச்னைகளும் நாஜிக்கள் என்பதைத் தாண்டி அரேபியர்கள், பாலஸ்தீனர்கள் எனப் புது பரிமாணம் எடுத்திருந்தது.
நாஜிக்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் போர் முடிந்த தொடக்க ஆண்டுகளில் போர் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் வேலையைச் சுபிட்சமாகச் செய்து வந்தன. ஆனால் 50களில் அவர்களுடைய ஆர்வம் மங்கத் தொடங்கியது. உலகத்தின் கவனம் அப்போது நடைபெற்று வந்த அமெரிக்காவுக்கும் சோவியத்தும் இடையேயான பனிப்போரின் பக்கம் சென்றிருந்தது. நாஜிக்கள் கடந்த காலமாகியிருந்தனர்.
எத்தனை நாட்களுக்குத்தான் கடந்த காலத்தையே நினைத்துக் குமுறுவது? இனி எதிர்காலத்தைப் பார்க்கலாம். கொலைக்கு நேரடிக் காரணமாக இருந்த குற்றவாளிகள் பலரும் தண்டிக்கப்பட்டுவிட்டனர். இப்போது எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு பேரும் உத்தரவுகளைப் பின்பற்றியவர்கள்தான். அவர்களுக்குச் சிறைத் தண்டனையே போதும் என்று முடிவுக்கு வந்தனர்.
அப்போது இஸ்ரேலும் தமது வாழ்வாதாரத்திற்காக ஜெர்மனி அனுப்பிவந்த நிதி உதவியைத்தான் நம்பி இருந்தது இருந்தது. அதனால் அதன் அதிபர் பென் குரியன் நாஜிக் குற்றவாளிகள் குறித்த ஜெர்மனியின் போக்கைக் கண்டிக்கவில்லை. இவ்வளவு ஏன் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று அழுத்தம்கூடக் கொடுக்கவில்லை.
இதற்கு மேலும் அவர்கள் ஐக்மேனை தேடிக்கொண்டிருப்பார்களா என்ன? எப்படியும் அவர் இறந்துபோயிருப்பார். உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் நமது கண்களில் அகப்படாமல் இருந்திருப்பாரா? இனியும் அவரைத் தேடிக்கொண்டிருப்பதில் பயனில்லை? விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டனர். அதனால் உலகமும் ஐக்மேனின் மீதான கவனத்தை விலக்கிக்கொண்டது.
இப்படியாக அவர் எல்லோர் நினைவில் இருந்தும் மறைந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கனவாகிக்கொண்டிருந்த நேரத்தில்தான் இஸ்ரேலுக்கு அந்தக் கடிதம் வந்தது.
‘ஐக்மேன் உயிருடன் இருக்கிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்!’
அவ்வளவுதான் மொஸாட் விழித்துக்கொண்டது.
(தொடரும்)