Skip to content
Home » மொஸாட் #6 – காதல் டு கடத்தல்

மொஸாட் #6 – காதல் டு கடத்தல்

அந்தப் பெண்ணின் பெயர் சில்வியா. நல்ல அழகி. அந்த அழகியை இளைஞன் ஒருவன் துரத்தித் துரத்திக் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனின் பெயர் கிளாஸ்.

கிளாஸ் பெரிய அழகன் எல்லாம் கிடையாது. பணக்காரனும் இல்லை. ஆனால் தன் காதலியைப் பிரமிப்பில் ஆழ்த்துவதற்கு ஏதாவது அருமை பெருமைகளைச் சொல்லவேண்டும் அல்லவா? அதனால் அவன் தன் குடும்பக் கதைகளைப் பற்றிப் பேசி வந்தான்.

கிளாஸ், தன் தந்தை இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்றதைப் பற்றிப் பேசுவான். ஹிட்லரின் பல கரங்களில் ஒன்றாகத் அவர் திகழ்ந்ததைப் பெருமைகொள்வான். எதிரிகளை அவர் சித்திரவதை செய்து கொன்ற கதைகளைச் சொல்வான். அந்த எதிரிகள் யார் என்று கேட்டால் யூதர்கள் என்பான். நாஜிக்கள் யூதர்களை மொத்தமாக அழித்தொழிக்காமல் விட்டதைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருப்பான். சில்வியா இந்தக் கதைகளை எல்லாம் கேட்டு வந்து தன் குடும்பத்திடம் பகிர்வாள்.

சில்வியாவின் தாய் யூதர் கிடையாது. ஆனால் தந்தை ஒரு யூதர். பெயர் லோதர் ஹெர்மென். ஜெர்மனியில் பிறந்தவர். ஹெர்மெனுக்கு ஒரு கண்ணில் பார்வை கிடையாது. நாஜிக்கள் அவரை வதைமுகாமில் வைத்துச் சித்திரவதை செய்ததில் ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. அவர் அங்கிருந்து எப்படியோ தப்பித்து அர்ஜெண்டினா வந்து அகதியாக வாழ்ந்துகொண்டிருந்தார். ஹெர்மென், சில்வியா சொல்லும் கதைகளைக் கேட்டு கிளாஸிடம் இருந்து விலகியே இருக்கும்படி எச்சரிப்பார்.

கிளாஸ் அடிக்கடி சில்வியாவைப் பார்க்க அவளது வீட்டிற்கும் வருவான். அப்போது ஒருமுறை ஹெர்மெனையும் சந்திக்க நேர்ந்தது. ஹெர்மென் எதேச்சையாக அவனிடம் முழுப் பெயரைக் கேட்டபோது கிளாஸ் ஐக்மேன் என்றான். ஹெர்மெனுக்கு லேசாக மண்டைக்குள் பொறிதட்டியதுபோல இருந்தது.

இந்தப் பெயரை எங்கோ கேட்டதுபோல இருக்கிறது, ஆனால் எங்கே என்று சரியாக விளங்கவில்லையே என்று யோசித்துக்கொண்டே இருந்தார். பார்வையுடன் சேர்த்து அவருக்கு ஞாபகங்களும் போய்கொண்டிருந்தன. அதனால் அவரால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அந்தப் பெயர் அவரது மனதில் எதையோ ஒன்றைச் சொல்ல வருவது மட்டும் புரிந்தது.

ஐக்மேன் ஜெர்மனியிலிருந்து தப்பித்து அர்ஜெண்டினா வந்து தன் ஆள் அடையாளங்கள் அனைத்தையும் மாற்றிக்கொண்டாலும் தனது குடும்பப் பெயரை மட்டும் விடுவதற்கு மனம் வரவில்லை. தன்னால் முடியாவிட்டாலும் தன் மகன்களாவது அந்தப் பெயரைச் சுமக்கட்டும் என்று அவர்களுக்கு வைத்துவிட்டார். அதுதான் இப்போது வினையாகிப்போனது.

கிளாஸிடம் பல முறை அவனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்படி சில்வியா கேட்பாள். ஆனால் அதற்கு மட்டும் சம்மதிக்க மாட்டான். இதுவும் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியது. ஒருகட்டத்தில் கிளாஸ் யூத வெறுப்பு மொழிகளைத் தொடர்ந்து பேசுவதை அனுமதிக்க முடியாமல் தன் மகளை அழைத்துக்கொண்டு அவர்கள் இருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர்கள் கடந்து வந்துவிட்டார் ஹெர்மென்.

0

அன்று காலை வழக்கம்போலவே விடிந்தது. ஹெர்மென் எழுந்து காபி கலந்துகொண்டு கையில் செய்தித்தாளுடன் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். தனது ஒற்றைக் கண்ணால் எழுத்துக்கூட்டிப் படிக்கச் சிரமப்பட்டுக்கொண்டே அவர் பக்கங்களைத் திருப்பியபோது அதில் இடம்பெற்றிருந்த ஒரு செய்தி அவரைத் திடுக்கிட வைத்தது.

‘ஜெர்மனியில் நாஜிக்கள் மீதான வழக்குகள் முடிவுக்கு வர இருக்கின்றன. பெரும்பான்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்திருக்கிறோம். அடோல்ஃப் ஐக்மேன் உட்படச் சிலரை மட்டும் தேடிக்கொண்டிருக்கிறோம்…’

அவ்வளவுதான், ஹெர்மெனுக்குப் புரிந்துவிட்டது. இதுதான். இந்தப் பெயரேதான். யூதர்கள் மறக்கக்கூடிய பெயரா அது? நான் எப்படி மறந்தேன்? அவன் இன்னும் தண்டிக்கப்படாமல் இருக்கிறானா? சட்டென்று அவருக்கு கிளாஸின் முகம் நினைவுக்கு வந்தது. ஏன் ஒருவேளை கிளாஸின் குடும்பம் இந்த அடோல்ஃப் ஐக்மேனுடையதாக இருக்கக்கூடாது? நேராக அவர் தன் மகளிடம் சென்று விசாரித்தார்.

‘கிளாஸின் தந்தை பெயர் தெரியுமா?’

‘கிளெமென்ட் என்று ஏதோ சொன்னதாக ஞாபகம்.’

‘நிச்சயமாக இருக்க முடியாது. அது எப்படித் தந்தை ஒரு குடும்பப் பெயரையும், மகன் வேறொரு குடும்பப் பெயரையும் சுமந்துகொண்டிருக்க முடியும்? இதில் வேறு ஏதோ வில்லங்கம் இருக்கிறது.’

வேக வேகமாகக் காகிதத்தை எடுத்து நாஜிக்களுக்கு எதிரான வழக்குகளை நடத்தி வந்த ஃபிராங்க்பர்ட் நீதிமன்றத்திற்கு ஒரு கடிதத்தை எழுதினார். ‘நீங்கள் சொல்லும் விவரங்கள் எல்லாம் சரியாகப் பொருந்திப்போகும் நபர் இங்கு அர்ஜெண்டினாவில் இருக்கிறார். அவர்தான் ஐக்மேன் என நான் சந்தேகிக்கிறேன். உடனே கிளம்பி வாருங்கள்.’

ஹெர்மெனுக்கு அந்தச் சமயத்தில் எப்படியாவது தன்னைப் போன்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்தாக வேண்டும் என்கிற ஒரே விஷயம் மட்டுமே மனதில் இருந்தது. அதனால் யோசிக்காமல் அவர் ஐக்மேனைப் பிடிக்க முன்வந்தார்.

0

ஹெர்மென் எழுதிய கடிதம் ஃபிராங்க்பர்ட் நீதிமன்றத்தை அடைந்தது. அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தவர், அப்போதைய அரசு வழக்கறிஞராக இருந்த ஃப்ரிட்ஸ் பாவர் (Fritz Bauer). பாவரும் ஒரு யூதர்தான். நாஜிக்களால் பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர். அதனால் இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பிறகு நாஜிக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதையே தன் வாழ்நாள் நோக்கமாக எண்ணி இயங்கி வந்தார். குறிப்பாக ஆஸ்விட்ச் வழக்குகள் அனைத்தையும் அவர்தான் பார்த்துவந்தார். அவரது கைகளுக்குச் சரியாக அந்தக் கடிதம் வந்து சேர்ந்தது.

பாவரால் அதனை நம்பவே முடியவில்லை. யாரோ ஒரு முன்பின் தெரியாத நபர், எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு சாதாரணர் அர்ஜெண்டினாவில் இருந்து ஐக்மேனைத் தெரியும் என்று கடிதம் அனுப்பியிருக்கிறார். ஐக்மேன் அங்குதான் பியூனஸ் அயர்ஸில் ஒளிந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். இதை நம்பலாமா? நம்பக்கூடாதா? இதற்குப் பின் வேறு ஏதாவது விவகாரம் இருக்குமா? பலவாறு யோசித்தார்.

இருந்தும் அந்தக் கடிதத்தை முழுமையாக உதாசினப்படுத்தவும் முடியவில்லை. அதனால் எதற்கும் உறுதி செய்துகொள்வோம் என்று நினைத்து ஹெர்மெனுக்கு அவர் பதில் கடிதம் ஒன்றை எழுதினார். ‘நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் முக்கிய குற்றவாளி ஒருவரைப் பிடிப்பதற்கு நீங்கள் கொடுத்த விவரங்கள் போதுமானதாக இல்லை. உங்களால் நேரில் சென்று அவர் பற்றிய தகவல்களைத் திரட்டி எனக்கு அனுப்ப முடியுமா?’

அடுத்த நாளே ஹெர்மென் தன் மகளை அழைத்துக்கொண்டு பியூனஸ் அயர்ஸுக்குக் கிளம்பினார். ஹெர்மெனுக்கு அப்போது பார்வை முழுதாகப் போயிருந்தது. ஆனால் ஐக்மேனை எப்படியாவது பிடித்துக் கொடுக்கவேண்டும் என்கிற தீவிரம் அவரிடம் இருந்தது.

கிளாஸ் ஏற்கெனவே தான் தங்கியிருக்கும் இடம் பற்றி சில்வியாவிடம் சொல்லியிருந்தான். அதை வைத்துக்கொண்டு வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டாள். நேராகச் சென்று கதவைத் தட்டினாள்.

கதவைத் திறந்தது கிளாஸின் தாய்.

‘யார் வேண்டும் உங்களுக்கு?’

‘இது ஐக்மேனின் வீடா?’ சில்வியா விசாரித்துக்கொண்டே உள்ளே நோட்டமிட்டாள். அப்போது சரியாக, கண்ணாடி அணிந்த அந்த மெலிந்த தேகம் கொண்ட நபர் கதவருகே வந்தார். பார்த்தவுடனேயே சில்வியாவிற்குப் புரிந்துவிட்டது. இதுதான் நிச்சயம் ஐக்மேனாக இருக்க வேண்டும்.

‘நான் கிளாஸைத் தேடி வந்திருக்கிறேன். அவன் என் நண்பன். நீங்கள்தான் அவன் தந்தையா?’

அந்த மனிதர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. மென்மையாகப் புன்னகையை உதிர்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். ஆனால் சில்வியாவிற்கு ஊர்ஜிதமானது. இவர்தான் ஐக்மேன். இப்போதே தந்தையிடம் சொல்லியாக வேண்டும். உடனே அங்கிருந்து கிளம்பி தன் தந்தையிடம் ஓடினாள்.

ஹெர்மென் அடுத்த கடிதத்தை எழுதினார். அதில் ஐக்மேன் தங்கியிருக்கும் விலாசம், அவரது தோற்றம், அவர் குறித்து கிளாஸ் சொன்ன தகவல்கள் அனைத்தையும் இணைத்துப் பாவருக்கு அனுப்பினார்.

கடிதத்தைப் படித்தவுடனேயே பாவருக்கு வியர்த்துவிட்டது. கொலை பாதகா? அத்தனை பேரை கொன்று குவித்துவிட்டு அமைதியாக அர்ஜெண்டினாவில் சென்று ஒளிந்திருக்கிறாயா? உடனே வருகிறேன்.

ஆனால் ஒரு சிக்கல் இருந்தது. ஐக்மேன் இப்போது பதுங்கியிருக்கும் இடம் பாவருக்குத் தெரிந்துவிட்டாலும் அதை அவரால் பகிரங்கமாக அறிவிக்க முடியவில்லை. காரணம், அப்போதும் ஜெர்மனியில் நாஜி அனுதாபிகள் எல்லா இடங்களிலும் பரவி இருந்தனர். ஜெர்மனி அப்போது நாஜிக்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும் அரசுத் துறைகள் அனைத்திலும் நாஜிக்கள் வேறு சில ரூபங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஜெர்மன் நீதித்துறையிலுமேகூட ஒருசில நீதிபதிகள், வழக்கறிஞர்களைத் தவிர மற்ற அனைவரும் நாஜி கொள்கைகளை மறைமுகமாக ஆதரிப்பவர்களாகவே இருந்தனர். அதனால் ஐக்மேன் போன்ற ஒரு பராக்கிரமர் மறைந்திருக்கும் இடத்தை அவர்களிடம் சொன்னால் அரசே மறைமுகமாகத் தலையிட்டு ஐக்மேனைத் தப்ப வைத்துவிடும். அதனால் சொல்ல வேண்டாம் என்று தயங்கினார்.

ஆனால் இதை இப்படியே விட்டுவிடவும் முடியாது. நமக்கு நேரம் கிடையாது. தன்னை நோட்டமிடுவதை ஐக்மேன் எப்படியோ மோப்பம் பிடித்து வேறு இடத்திற்குத் தப்பித்துவிட்டால்? உடனே நடவடிக்கை எடுத்தாக வேண்டும். என்ன செய்யலாம்?

அவருக்கு ஒரே ஒரே வழிதான் இருந்தது. நன்கு யோசித்தும் வேறு பாதை இருப்பதாகத் தெரியவில்லை. இறுதியாக முடிவு செய்துவிட்டு, நேராகத் தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். மேஜையிலிருந்து ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்தார். பேனாவின் மூடியைக் கழற்றி எழுதத் தொடங்கினார்.

‘இஸ்ரேல் அரசுக்கு… மரியாதைக்குரிய பென் குரியன் அவர்களே, நான் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு யூத வழக்கறிஞர். எனக்கு நாஜிக் குற்றவாளி ஐக்மேன் பதுங்கியிருக்கும் இடம் தெரியும். மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்’.

முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, கடித்ததை மடித்து ரகசியமாகச் சட்டைப் பையில் சொருகிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

(தொடரும்)

படம்: சில்வியா மற்றும் லோதர் ஹெர்மென்

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *