அந்தப் படுகொலை திட்டத்திற்குக் ‘கடவுளின் சீற்றம்’ எனப் பெயரிடப்பட்டது. அவர்களிடம் சொல்லப்பட்டது இதுதான்: எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கருப்பு செப்டம்பர் தலைவர்களின் தலை உருள வேண்டும். ஆனால் இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இஸ்ரேல் இருக்கிறது என்பது மட்டும் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது.
ஐரோப்பிய மண்ணில் இஸ்ரேல் நர வேட்டை நடத்துகிறது என்று தெரிந்தால் நமது தேசத்துக்குத்தான் அவமானம். அத்துமீறல் செய்யலாம். ஆனால் அதனை ரகசியமாகs செய்ய வேண்டும். இது பாவம் செய்தவர்கள் மீது கடவுள் கொள்ளும் சினம். யாரும் தப்பிக்கக்கூடாது என்று அனுப்பி வைத்தது.
சரியாக மூனிச் படுகொலை நடந்து நான்கு மாதங்கள் கழித்துப் பழிவாங்கல் தொடங்கியது.
உண்மையில் யார் யாரெல்லாம் மூனிச் படுகொலையில் ஈடுபட்டார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அது ஒரு பிரச்னை இல்லை. யார் மீதெல்லாம் சந்தேகம் வருகிறதோ அவர்களை எல்லாம் தீர்த்துக்கட்டலாம் என முடிவு செய்தது மொஸாட்.
இப்படியாக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் வாயெல் ஸ்வைட்டர்.
இவர் கருப்பு செப்டம்பர் இயக்கத்தின் முக்கியப் புள்ளி. இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் வாழ்ந்து வந்தார். இவருக்கும் மூனிச் தாக்குதலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றுகூடத் தெரியாது. ஆனால் அல்ஜீரியாவில் இஸ்ரேலின் விமானம் ஒன்றைக் கடத்திய குற்றத்தில் இவர் சம்பந்தப்பட்டிருந்தார். இதுபோதாது? திட்டம் தீட்டியது மொஸாட்.
வழக்கம்போலக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கண்காணிப்பு. அவர் எங்கே இருக்கிறார்? எங்கே செல்கிறார்? யாரைச் சந்திக்கிறார்? என்ன பேசுகிறார்? எப்போது வீடு திரும்புவார்? அனைத்தும் சல்லடை போடப்பட்டன. அவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது. ஸ்வைட்டர் வேலையை முடித்துவிட்டு விடுதிகளுக்குச் செல்கிறார். அங்கே அரேபிய இலக்கியங்கள் பற்றிப் பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். முடித்துவிட்டு நள்ளிரவுதான் வீடு திரும்புகிறார். அங்கு வைத்து அவரைக் கொலை செய்யலாம் என்று திட்டம்.
ஸ்வைட்டர் நள்ளிரவில் தனது அபார்ட்மென்டுக்குள் நுழைந்து லிஃப்ட் பொத்தானை அழுத்திவிட்டுக் காத்திருந்தார். பின்னால் இருவர் வந்து நின்றனர். யாரோ நிற்பதை அறிந்து ஸ்வைட்டர் திரும்பினார்.
‘நீங்கள்தான் வாயெல் ஸ்வைட்டரா?’
‘ஆமாம். நீங்கள்?’
உளவாளிகள் பேசவில்லை. அவர்களுடைய துப்பாக்கிகள்தான் பேசின. சுட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள். நள்ளிரவு என்பதால் யாராலும் பிடிக்கவில்லை. முதல் பெயர், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
0
அடுத்தது மஹ்முத் ஹம்ஷரி. இவர் பாரிஸில் இருந்தார். பிரான்ஸ் நாட்டில் பி.எல்.ஓவின் பிரதிநிதியாகவும் செயல்பட்டார். ஊடகங்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார். பாலஸ்தீனப் போராட்டங்களையும், இஸ்ரேல் நிகழ்த்தும் அத்துமீறல்களையும் அந்நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்துவதைச் செவ்வனே செய்து வந்தார். இவரது வீட்டிற்குப் பத்திரிகையாளரைப்போல நுழைந்தார்கள் மொஸாட் உளவாளிகள். ஹம்ஷரியும் நேரடியாக மூனிச் கொலையில் சம்பந்தப்பட்டவரா என்று தெரியாது. ஆனால் மிகச் சிறந்த புத்திசாலி என்பதால் நிச்சயம் சம்பந்தம் இருக்கும் என்று இஸ்ரேல் நினைத்தது.
பத்திரிகையாளர்போல உள்ளே நுழைந்த மொஸாட் உளவாளி அவரது வீடு முழுவதையும் நோட்டம் விட்டார். அது பணக்காரர்கள் வசிக்கும் வீதியில் உள்ள வீடு. நினைத்த நேரத்தில் எல்லாம் யாரும் நுழைந்து சுட்டுவிட்டுத் தப்பிக்க முடியாது. ஒன்று செய்யலாம், குண்டு வைத்துவிடலாம் என முடிவெடுத்தது மொஸாட். ஆனால் எங்கே குண்டு வைப்பது? ஹம்ஷரி அடிக்கடிப் பத்திரிகைகளைத் தொலைபேசியில்தான் தொடர்புகொண்டு பேசுகிறார். அதனால் அங்கேயே வைத்துவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
பழி வாங்க அனுப்பிய படையில் வெடிகுண்டுகளைக் கையாளும் நிபுணர் ஒருவரையும் இஸ்ரேல் அனுப்பி வைத்திருந்தது. அவர் ஹம்ஷரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நுழைந்தார். தொலைபேசியைக் கழற்றி உள்ளே வெடிகுண்டை வைத்தார்.
ஹம்ஷரி தொலைபேசியில் கை வைத்தால்போதும். வெளியே சாலையிலிருந்து ரிமோட்டில் அழுத்தினால் அடுத்த நொடி அறையே அடையாளம் தெரியாத அளவுக்கு உருகுலைந்துவிடும்.
திட்டமிட்டதுபோலவே மொஸாட் உளவாளி ஒருவர் கீழிருந்து போன் செய்தார். ஹம்ஷரி போனை எடுத்தார். அடுத்த நொடி அந்த அறை முழுவதும் அவரது உடல் சிதறிக் கிடந்தது. இரண்டாவது ஆள் காலி.
0
மூன்றாவது ஆள் ஹுசைன் அல் ஷிர். சைப்பிரஸ் நாட்டைச் சேர்ந்தவர். சோவியத் நாட்டின் உளவுத்துறையான கேஜிபியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். அதனால் எந்நேரமும் அவரைச் சுற்றி உளவாளிகளின் பாதுகாப்பு வளையம் இருந்தது. ஆனால் அந்த வளையத்தை வளைத்துவிட்டு உள்ளே நுழைந்தது மொஸாட். இவருக்கும் குண்டு வைக்கப்பட்டது. தொலைபேசியில் அல்ல, படுக்கையில். ஹுசைன் அல் ஷிர் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு படுக்கச் சென்றபோது குண்டு வெடித்து அப்படியே பரலோகம் அடைந்துவிட்டார்.
நான்காவது ஆள் அல்குபைஸி. மீண்டும் பாரிஸுக்கு வந்தது மொஸாட் படை. நள்ளிரவில் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுத் தள்ளியது.
0
தொடர்ந்து அடுத்தடுத்த கொலைகள் அரங்கேறின. பாலஸ்தீன இயக்கங்கள் ஸ்தம்பித்துப்போய் நின்றன. மூனிச் படுகொலைக்கு முன்பாகவே இதுபோன்று கண்ணுக்குத் தெரியாத யுத்தம் இரு தரப்பினருக்கும் நடந்துகொண்டுதான் இருந்தது. போராளிகள் இஸ்ரேலின் முக்கியஸ்தவர்களைத் தீர்த்துக்கட்டுவதும், இஸ்ரேல் படை போராளிகளின் தலைவர்களைக் கொல்வதும் சாதாரணமாக நடக்கும். ஆனால் இந்தமுறை இறந்தவர்கள் எல்லாம் ரகசியமாக இயங்கி வந்த தலைவர்கள். அவர்களைக் கண்டுபிடித்து கொலை செய்கிறார்கள் என்றால் நிச்சயம் மொஸாட் களமிறங்கி இருக்கிறது என்று போராளிகளுக்குப் புரிந்துவிட்டது. பதிலடி கொடுக்க அவர்களும் முடிவு செய்தனர்.
மொஸாட் உளவாளிகளில் ஒருவர் பரூச் கோஹன். இவர்தான் கருப்பு செப்டம்பர் தலைவர்கள் பதுங்கியிருக்கும் இடம் குறித்து முக்கிய விவரங்களைத் திரட்டியவர். அகதிகளாக வாழும் பாலஸ்தீனக் கல்லூரி மாணவர்களுக்கு உதவி செய்வதுபோல நடித்து வேண்டிய விவரங்களைக் கறந்துகொண்டிருந்தார். இதனைக் கருப்பு செப்டம்பர் கண்டுபிடித்தது. அவர் தொடர்புகொள்ளும் மாணவர்களின் மூலமாகவே கோஹனை ஒரு மறைவிடத்திற்கு வரச்சொல்லிச் சுட்டுக் கொன்றது. அடுத்ததாக சைப்ரஸில் வைத்து சிம்ஹா கில்ஸர் எனும் மற்றொரு உளவாளி கொல்லப்பட்டார்.
உண்மையில் மொஸாட் கலங்கிவிட்டது. நாமே கில்லாடி என்றால் இவர்கள் பலே கில்லாடியாக இருக்கிறார்களே? இதற்கு மேலும் பதுங்கி இருந்து பாயக்கூடாது. நேரடியாகச் சென்று அடித்து மிரட்ட வேண்டும் என்று முடிவெடுத்தது.
இந்தமுறை மூன்று பேரை மொஸாட் குறிவைத்தது. மூன்று பேரும் கருப்பு செப்டம்பரின் பெரும் புள்ளிகள். பாலஸ்தீனத்துக்கு அருகிலேயே இருந்த லெபனானில் வசித்து வந்தார்கள். லெபனான் போராளிகளின் மற்றொரு தாயகம். லெபனான் மக்கள் ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீனப் போராளிகளுக்கு ஆழமான ஆதரவை வழங்கி வந்தார்கள். அங்கே நுழைந்து போராளிகளைக் கொல்வது என்பது இயலாத காரியம். கடலில் இறங்கி சுறாக்களை வேட்டையாடுவதற்குச் சமம்.
ஐரோப்பா என்றால் யாரும் சந்தேகிக்கப்போவதில்லை. சாவகாசமாகக் கொன்றுவிட்டு சந்தடியில் புகுந்து பின்வாங்கிவிடலாம். ஆனால் லெபானானுக்குள் வெளி நபர் நுழைந்தாலே மோப்பம் பிடித்துவிடுவார்கள். சுற்றி வளைத்துச் சுருட்டி எரிந்துவிடுவார்கள். இருப்பினும் அங்கே சென்று கொலை தாண்டவம் நிகழ்த்தினால்தான் போராளிகளுக்கு பயம் வரும். இஸ்ரேல் மீது கை வைக்க நினைத்தாலே அச்சம் வரும். அதனால் தடையை மீறி இரும்புக் கோட்டைக்குள் நுழைய முடிவெடுத்தது மொஸாட்.
0
‘பொங்கும் இளமை’ என்று அந்தத் தாக்குதலுக்குப் பெயரிட்டார்கள். உளவாளிகளின் ஒரு குழு ஏற்கெனவே பிரிட்டன் பாஸ்போர்ட்டின் துணைகொண்டு லெபனானுக்குள் நுழைந்து தலைவர்களைக் கண்காணிக்கத் தொடங்கி இருந்தது. அவர்கள் தங்கியிருக்கும் இடம், அவர்களைச் சுற்றியிருக்கும் பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை, அவர்கள் சந்தித்துக்கொள்ளும் இடம் என அனைத்தையும் வேவு பார்த்தது. இப்படியாகப் போராளிகளின் தலைவர்கள் வாரம் ஒருமுறை விடுதி ஒன்றில் சந்தித்துப் பேசுவது மொஸாடுக்குத் தெரிய வந்தது. மூன்று பேரையும் அதே இடத்தில் வைத்துக் காலி செய்ய முடிவெடுத்தது.
அவர்கள் திட்டமிட்ட தேதியில் நள்ளிரவில் மற்றொரு குழு இஸ்ரேலிலிருந்து லித்தனி ஆற்றின் வழியாகக் கள்ளத் தோணியில் லெபனானுக்குள் நுழைந்தது.
வந்திருந்த உளவாளிகளில் இரண்டு பேர் பெண் வேடமிட்டிருந்தனர். மற்றவர்கள் லெபனான் இளைஞர்களைப்போல ஆடை உடுத்தியிருந்தனர். பெண் வேடமிட்டவர்கள் விடுதிக்கு வெளியே நின்று நிலைமையைக் கண்காணிக்க, மற்றவர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்துவதற்குத் திட்டம். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் சாலையில் சுற்றித் திரிந்த சில போராளிகளுக்குச் சந்தேகம் வந்துவிட்டது.
யார் இந்தப் பெண்கள்? இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறார்கள்? பாலியல் தொழிலாளர்களா? ஓர் இளைஞன் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு என்னவென்று விசாரிக்க அவர்கள் அருகே சென்றான். இதனைக் கவனித்த ஓர் உளவாளி, அந்த இளைஞன் தன்னைச் சுடத்தான் வருகிறான் என்று எண்ணிச் சுட ஆரம்பித்துவிட்டார்.
உடனே திடுதிடுவெனப் போராளிகள் வரிசை கட்டிவிட்டனர். இரு பக்கத்தில் இருந்தும் தாக்குதல். ஆனால் உள்ளே நுழைந்த உளவாளிகள் வெளியே நடக்கும் கலவரத்தில் கவனத்தைச் சிதறவிடவில்லை. அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்ததே இதுதான்: வெளியே என்ன நடந்தாலும் சரி, உள்ளே செல்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டுத் திரும்புவது மட்டுமே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும்.
சொல்லப்பட்டதுபோலவே உளவாளிகள் உள்ளே நுழைந்தனர். அங்கேயும் பாதுகாப்புக்குச் சில போராளிகள் சூழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் யார் என்னெவென்றெல்லாம் பார்க்கவில்லை. நின்றிருந்த அத்தனை பேரையும் உளவாளிகள் சுட்டு வீசினார்கள். அந்த அறையே ரத்தம் பாய்ந்து ஈரமானது. குருதியின் குரூர வாடை மூலை முடுக்கெல்லாம் வீசியது.
எல்லோரையும் கொன்றுவிட்ட பிறகுதான் தாங்கள் தேடி வந்த ஆட்கள் அதில் இருக்கிறார்களா என்றே உளவாளிகள் தேடத் தொடங்கினார்கள். உறுதி செய்துகொள்வதற்காகப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு முகமாகத் தூக்கிப் பார்த்து உருவ ஒற்றுமையை ஆராய்ந்தார்கள்.
தலைவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்தவுடன்தான் வெளியே வந்தார்கள். வெளியே வந்தவுடன் ஒரே ஓட்டமாக லித்தானி ஆற்றாங்கரையை அடைந்தார்கள். அங்கே அவர்கள் வந்த கள்ளத் தோணி திரும்பிச் செல்வதற்குத் தயாராகக் காத்திருந்தது. அதில் ஏறிப் பறந்தது உளவாளிகள் படை.
அந்தத் தாக்குதல் மொஸாடுக்குப் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுத் தந்தது. தாக்குதலைத் தலைமை தாங்கி நடத்திய மொஸாட் உளவாளி எஹூத் பராக் மிகப்பெரிய நாயகனாகக் கொண்டாடப்பட்டார். அதன்பின்னும் மொஸாட் நிற்கவில்லை. மேலும் மூன்று போராளிகளை வெவ்வேறு இடங்களில் வைத்துக் கொன்றது.
வெறி அடங்காமல் வேட்டையாடிக் கொண்டே இருந்தது. மூனிச் படுகொலைக்குக் காரணமெனக் கருதிய பலரைக் களையெடுத்துவிட்டோம். ஆனால் இந்தக் களைகளுக்கு எல்லாம் தலைவன் ஒருவன் இருப்பான் இல்லையா? அவனைத் தூக்க வேண்டும். அவனைக் கொன்றவுடன்தான் இந்தக் கோரத் தாண்டவத்தை நிறுத்துவோம் என்று தீர்மானித்திருந்தது மொஸாட்.
ஆனால் அந்தத் தலைவன் எங்கே இருக்கிறான்? என்ன செய்துகொண்டு இருக்கிறான்?
உண்மையில் அப்படி ஒரு நபர் இருந்தார். அவரது பெயர் அலி ஹசன் சலாமே. சிவப்பு இளவரசன் என்று இஸ்ரேலியர்களால் அழைக்கப்பட்டவர். சலாமே பல்வேறு வகையில் கருப்பு செப்டம்பர் போராளிகளை வழிநடத்தி வந்தார். அவர்களுக்குப் போர் பயிற்சி அளிப்பது, திட்டம்போட்டுத் தருவது, போட்ட திட்டத்தினைக் கச்சிதமாகச் செயல்படுத்தச் சொல்லித் தருவது எனப் பலவிதச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். அவரைத்தான் முக்கியமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் வைத்திருந்தது மொஸாட். அந்தத் திமிலங்கத்தை வேட்டையாடிவிட்டுத்தான் படகைக் கரைக்குத் திரும்புவோம் எனக் காத்திருந்தது. ஆனால் சாதாரண மீன் பிடிக்கும் படகினால் திமிங்கிலத்தை வேட்டையாட முடியாது அல்லவா? அலி ஹசன் சலாமேவைப் பிடிக்க மொஸாட் செய்த முயற்சி மிகப்பெரிய அவமானத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.
(தொடரும்)