Skip to content
Home » நான் கண்ட இந்தியா #1 – இந்தியா பற்றிய பார்வைகள்

நான் கண்ட இந்தியா #1 – இந்தியா பற்றிய பார்வைகள்

இந்திய மாலுமிகள்

ஹாலித் எடிப்

இந்தியா பற்றிய பயணப் பதிவுகளில் வரலாற்று ரீதியிலும் சமூகவியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்று கருதப்படும் ‘Inside India‘ முதல் முதலில் 1937ஆம் ஆண்டு வெளிவந்தபோது இங்கே அதிகம் கவனிக்கப்படவில்லை. அதன்பின்னரும்கூட விரிவாக வாசிக்கப்பட்டதற்கோ விவாதிக்கப்பட்டதற்கோ சான்றுகள் இல்லை. காலம் செல்லச் செல்லதான் அதன் அருமையை இந்தியா உணர்ந்துகொண்டது. 2002ஆம் ஆண்டு வரலாற்றாய்வாளர் முஷிருல் ஹஸன் ஒரு விரிவான அறிமுகத்தை வழங்கி இந்நூலை மறுபதிப்பு (ஆக்ஸ்ஃபோர்ட்) செய்தார்.

1935ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்து இரண்டாண்டுகள் இங்கே தங்கி, பல இடங்களில் சுற்றியலைந்து, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, ஏராளமானவற்றைக் கண்டும் உணர்ந்தும் இந்நூலை எழுதியிருந்தார் ஹாலித் எடிப். ஒரு துருக்கியப் பெண் எழுத்தாளரின் பார்வையில் 1930களின் இந்தியா இந்நூலில் விரிகிறது. நவீன இந்தியா உருபெற்றுக்கொண்டிருந்த முக்கியமான தருணத்தை, சாத்தியமான அனைத்துப் பரிமாணங்களோடும் படம் பிடித்திருக்கிறார் ஹாலித் எடிப். அதனால்தான் இந்தியா குறித்தும் இந்தியர்கள் குறித்தும் முன்வைக்கப்பட்ட நேர்மையான சித்திரமாக இது நீடிக்கிறது.

ஹாலித் எடிப்
ஹாலித் எடிப்

இந்தியா என்பது என்ன? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர்த்திருக்கும் இந்நிலத்தை எப்படிப் புரிந்துகொள்வது? வானம் போல் நீண்டு படர்ந்திருக்கும் இந்நிலத்தில் எது இந்தியா? இங்குள்ளவர்களில் யார் இந்தியர்? ஒரு பக்கம் செழுமை, மற்றொரு பக்கம் வறுமை. ஒரு பக்கம் பழமை, இன்னொரு பக்கம் புதுமை. ஒரு பக்கம் அமைதி, இன்னொரு பக்கம் போர். எது இந்தியாவின் நிஜ முகம்?

அறிவுத் தேடலோடு இந்தியாவை நுணுக்கமாக ஆராய்கிறார் ஹாலித் எடிப். காந்தி, நேரு, சரோஜினி நாயுடு, கான் அப்துல் கப்பார் கான் என்று தொடங்கி பல முக்கியமான ஆளுமைகளைச் சந்திக்கிறார். டெல்லி, பம்பாய், ஹைதராபாத், லக்னோ, லாகூர், கல்கத்தா, பெஷாவர், அலிகர் என்று பல இடங்களைக் காண்கிறார். அக்காலத்து அரசியல் நிகழ்வுகளுக்கு அளிக்கும் அதே கவனத்தைச் சாமனியர்களின் வாழ்வியலுக்கும் அளிக்கிறார். ஒரு தேசத்தின் வரலாற்றை அதன் பெரும் தலைவர்கள் மட்டுமா உருவாக்குகிறார்கள்?

ஹாலித் எடிப் அடிவார் (1884-1964) புகழ்பெற்ற துருக்கிய எழுத்தாளர், அரசியல் தலைவர், செயற்பாட்டாளர், ஆசிரியர், பெண்ணியவாதி, அறிவுஜீவி. சுதந்தரமற்ற வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நேடியாகக் கண்டுணர்ந்தவர் ஹாலித் எடிப். அவர் வளர்ந்த காலத்தில் துருக்கி சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருந்தது. ஒரு பெண்ணாக அவரிடமிருந்து அவர் தேசம் எதிர்பார்த்தது ஒன்றைத்தான். உன் வீடுதான் உன் உலகம். அதைவிட்டு வெளியில் வராதே. அரிதாக வரவேண்டுமென்றால் முழு உடலையும் மறைத்துக்கொண்டு வா! இந்தக் கட்டுப்பாட்டை மட்டுமல்ல, அவர்மீதும் அவர் தேசத்தின்மீதும் சுமத்தப்பட்டிருந்த ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் உடைத்துக்கொண்டு ஆரம்ப காலத்திலேயே வெளியில் வந்துவிட்டார் எடிப்.

மதமல்ல, அரசியலே எனக்குப் பிரதானம் என்று முழங்கினார். அரசியல் நடவடிக்கைகளிலும் புரட்சிகரச் செயல்பாடுகளிலும் நேரடியாகப் பங்கேற்றார். அவர் காலத்தில் அவருடைய கிராமத்திலிருந்து கல்லூரிக்குச் சென்று பட்டப்படிப்பு படித்து முடித்த முதல் துருக்கியப் பெண் அவர்தான். இளம் வயதிலேயே ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய பெரும்பாலான படைப்புகளை ஆங்கிலத்திலேயே எழுதினார்.

நவீன துருக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் முஸ்தபா கமால் அடாடர்க்கோடு இணைந்து தேச விடுதலைப் போராட்டங்களில் (1920-21) பங்கேற்றார். வெறும் ஆதரவாளராக இருக்கப் பிடிக்கவில்லை, என்னைப் போர்க்களத்துக்கு அனுப்புங்கள் என்று அடாடர்க்குக்கு கடிதம் எழுதி, அவர் அனுமதி பெற்று களத்தில் நின்றார். சர்வாதிகாரம் முறியடிக்கப்பட்டு அடாடர்க் பதவியில் அமர்ந்ததும் அவர் செல்லும் பாதை பிடிக்காததால் அவரிடமிருந்தும் விலகிக்கொண்டார்.

ஹடிப் எழுதிய முதல் நாவல் 1912ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன்பின் அவர் எழுதிய பல நாவல்கள் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. தேசியவாதம், சுதந்தரம், பெண் விடுதலை போன்றவற்றை அவர் படைப்புகள் வலியுறுத்தின. தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதையே பல பெண்கள் உணராமல் இருக்கிறார்களே என்று வருத்தப்பட்டிருக்கிறார். துருக்கிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றது குறித்து அவர் எழுதிய அனுபவப் பதிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. துருக்கிய வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது அவர் குரல்.

ஜார்ஜ் ஆலென் அண்ட் அன்வின் லிமிடெட் வெளியிட்ட ‘Inside India’ (1937) எனும் நூலின் தமிழாக்கம் ‘நான் கண்ட இந்தியா’ எனும் தலைப்பில் முதல் முறையாக இப்போது வெளிவருகிறது.

***

முன்னுரை

மூன்று விதமாகக் கதைகளைத் தொடங்குவது, எங்கள் நாட்டின் வழக்கம்:

‘முன்பொரு காலத்தில்…’ என்று தொடங்குவது ஒட்டுமொத்த உலகுக்கும் பரிச்சயமான ஒன்று. ஆனால் இந்தியாவைப் பற்றி நான் சொல்ல விரும்புவதை இப்படித் தொடங்க முடியாது. இந்தியா ‘இருந்தது’ என்ற கடந்தகாலக் கதை அல்ல; ‘இருக்கிறது’ எனும் நிகழ்கால நிஜம்.

‘ஆரம்பக் காலத்தில்’ என்றோ, ‘இறுதித் தருவாயில்’ என்றோ தொடங்குவதுதான் சரியாக இருக்கும். இது ஐன்ஸ்டீனையும் அவரது சார்பியல் கோட்பாட்டையும் இடைமறித்துத் தடுக்கலாம். திரும்பிச் செல்ல முடியாத தொலைதூர கடந்த காலமோ – கனவு காண முடியாத நெடுந்தூர எதிர்காலமோ, அந்த நிகழ்வின் எந்தக் கரையில் நின்று நாம் வேடிக்கைப் பார்க்கிறோம் என்பதில்தான் ஒட்டுமொத்த சங்கதியும் அடங்கியிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் கடந்த கால மரபுகள், இனி வரவிருக்கும் ஆயிரம் ஆண்டு மனிதகுல வரலாற்றுக்கும் வழித்துணையாய் இருக்கும். நிகழ்காலத்தில் இயங்கும் அதன் சில யோசனைகள், ஆதி மனித இனம் தோன்றிய காட்டுப்பகுதியில் உதித்த எண்ணங்களாக இருக்கும்.

‘ஒருகாலத்தில் இருந்தது, மற்றொரு காலத்தில் அது இல்லை’ என்றுதான் நம் குழந்தைப் பருவ கதையாடிகள், இந்தியாவை நமக்கு அறிமுகம் செய்தார்கள். அது பாதி அளவே உண்மை. தொடக்கக்கால இயற்பியலில் திட அணுக்களாகச் சொல்லப்பட்டவை, இப்போது நவீன இயற்பியலில் எலக்ட்ரான்களாகத் தெரிகிறது இல்லையா? அந்தமாதிரி. அவை ஒருகாலத்தில் இருந்தன. ஆனால் அவை இப்போது?

இந்தியாவின் பண்டையத் தன்மையை உணர்ந்து கொண்டவர்களுக்கு, அதன் வரலாற்றுப் பாதையில் உள்ள ஒளிக்கீற்றுகளே கண்ணில் படுகின்றன. இங்குள்ள தத்துவஞானிகள், மடாதிபதிகள், ஆட்சியாளர்களின் ஆழ்ந்த அறிவைக் காட்டிலும் ஆட்சி அதிகாரத்தைச் சுமந்து செல்லும் கண்ணுக்குப் புலப்படாத இதன் மாய சக்தி தெரியவில்லை. இந்தியக் குழந்தைகளின் விதியை இந்தச் சக்திதான் நிர்ணயிக்கிறது. இன்று அவை அணுக்களைப் போல வெற்று ஒளித்தடயங்களாய் தோன்றுகின்றன.

இதுவே இந்தியாவைப் பற்றிய என் முதல் பார்வையாக இருந்தது.

பின்னர் நான் ஓர் ஆங்கிலேயப் பெண்மணியை சந்தித்தேன். அவர் ஓர் ஆசிரியை; அவர் கணவர் தேயிலைத் தோட்டக்காரர். நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்த இந்தியாவைப் பற்றி அவர் என்னிடம் சொன்னார். தன்னுடைய முப்பது ஆண்டுகளை இந்தியாவில் கழித்திருக்கிறார். அவர் வர்ணித்த இந்தியக் காட்சியில், நான் சொன்ன எந்தவித மாய சக்தியின் தாக்கமும் இல்லை. இந்தியா ஏகாதிபத்திய போட்டியின் போர்க்களமாக மாறி இருந்தது. கிரேக்கத்தை ஆட்சி செய்த ஒலிம்பியக் கடவுளர்களைப் போல், அவர்கள் இந்தியாவை ஆண்டார்கள். யானை மேல் சவாரி செய்தார்கள். புலி உட்பட வனத்தில் உள்ள எல்லா விலங்குகளையும் வேட்டையாடினார்கள். ஆங்கிலேயர்களில் மிகவும் அடக்கமானவர்கள்கூட சர்வ வல்லமை படைத்த செங்கிஸ்கானைப் போல் காட்சி அளித்தார்கள்.

இதன் பின்னணியில்தான் இந்தியர்கள் இருந்தார்கள். அந்தக் காலத்தில் நான் பார்த்தவர்களுள் இரண்டு பேர் மட்டுமே நினைவில் மிஞ்சியிருக்கிறார்கள். ஆளும் வெள்ளையின வர்க்கத்துக்கு இரவு முழுவதும் கவரி வீசும் ஒருவன்‌; தன் வயிற்றுச் சாப்பாட்டுக்காகக் குப்பைக் குவியலைத் தோண்டித் துலக்கும் தீண்டத்தகாத பிரிவைச் சார்ந்த மற்றொருவன். அழுகிப்போன விலங்கின் சதையைப் பொறுமையாக கிழித்தெடுத்து மின்னல் வேகத்தில் ஓடினான் அவன். நிழல் கூட சாலையில் படாதபடி வெகுமாயத்தில் மறைந்து போனான். இப்படியாக களத்தின் முன்பகுதியில் ஆங்கிலேயர்களும், பிற்பகுதியில் தீண்டத்தகாதவர்களும் நிறைந்திருந்தார்கள்.

இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட மக்கள் சற்றே மங்கலாக, சிக்கலான முறையில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். அந்த வரிசை கொஞ்சம் கொஞ்சமாக சீர் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனித அடுக்குமுறை ஒருபோதும் மாறவே இல்லை. இந்த அமைப்பு சாதியின் பெயரால் வலுவாக வேரூன்றி இருந்தது. சாதி எல்லைகள் நிரந்தரமானவை. மீறிச் சென்றவர்கள் இரக்கமின்றி வதைக்கப்பட்டார்கள்.

ஆங்கிலேயர்களின் முதுகுத்தண்டு யாருக்கும் வளைந்து கொடுக்காது என அந்த ஆசிரியை சொன்னது சரிதான். கறுப்பின மக்கள் மட்டுமல்ல, பலம் பொருந்திய காட்டு மிருகங்களும் ஆங்கிலேய அரசாட்சிக்கு முன்னால் அடிபணிந்தன. கண்ணுக்குப் புலப்படாத மாய சக்தி ஆட்சி செய்த இந்தியாவில் அவர்கள் மட்டுமே அழிக்க முடியாதவர்களாய் இருந்தார்கள். தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக்கொண்டு, அதன் எல்லை நோக்கி நடந்தார்கள்.

ஒரே ஒருமுறை மட்டும் கவனம் குறைந்துபோனதால், பெரும் அசம்பாவிதம் நடந்துவிட்டதென திருமதி பெர்சி குறிப்பிட்டார். அதை அவர் ‘கலகம்’ என்றார். அப்போது மட்டுமே மனித அடுக்குமுறை மாற்றம் கண்டது. தங்கள் ராட்சச அதிகாரத்தை எதிர்த்து, இடைப்பட்ட சாதியினர் வெள்ளம் போல் அணி திரண்டனர். ஆசிரியை பெர்சி சொன்ன விளக்கம் பைபிளின் பழைய ஏற்பாட்டில் இருந்தது என நினைக்கிறேன். இந்தக் ‘கலகத்துக்கு’ அவர் சொன்ன காரணம் விநோதமாய் இருந்தது.

பன்றி இறைச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த சில இந்தியர்களின் போக்குத்தான், இத்தனைப் பெரும் எழுச்சிக்குக் காரணமாம். மக்கள் தங்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராகவோ, கொடுங்கோன்மைக்கு எதிராகவோ புரட்சி செய்யவில்லை. தாங்கள் அருவருக்கும் பன்றி இறைச்சியைத் தீண்ட நேர்ந்ததே என நொந்து கொண்டார்களாம்.

இதன் முடிவு, அவர் சொன்ன தொடக்கத்தைப் போலவே அதிர்ச்சிகரமாய் இருந்தது. தங்கள் எல்லா ஆற்றலையும் மூட்டைகட்டிக் கொண்டு, கலகக்காரர்கள் மீண்டும் பூமிக்குள் சென்று சுருண்டு படுத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான்.

இந்தியா பற்றிய என் இரண்டாவது பார்வை இப்படித்தான் இருந்தது.

இந்தியா பற்றிய புனைவு எழுத்துகளுக்கு அதன்பிறகுதான் அறிமுகமானேன். அந்த வரிசை ருட்யார்ட் கிப்ளிங்கிடமிருந்து தொடங்குகிறது. மிருகங்களின் யதார்த்த வாழ்க்கையை, இத்தனை வேடிக்கையாய் எவரொருவராலும் படம்பிடித்துக் காட்ட முடியாது. பழங்காலமோ நவீனமோ, விலங்குகளுக்கென்று இப்படியோர் இடத்தை எவராலும் காண முடியாது‌. விலங்குகள் எப்படி வாழுமோ அப்படித்தான் அவருடைய கதைகள் வாழ்ந்தன. அதே நேரம் உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்பதை உணர்த்துபவையாகவும் அந்தக் கதைகள் இருந்தன.

இந்திய மனிதர்கள் பற்றி அப்துல்-ஹக்-ஹமீத்தின் படைப்புகள் மூலம் அறிந்து கொண்டேன். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய, துருக்கிய நாட்டு நாடகக் கலைஞர் அவர். தன் பெருவாரியான கதாபாத்திரங்களில் காதலை முன்னிறுத்தியவர். 1908இல் அவர் அரங்கேற்றிய ‘லேடி ஃபிண்டன்’ என்ற துருக்கிய நாடகம், உயர்குடியில் பிறந்த ஓர் ஆங்கிலேயப் பெண்ணுக்கும் அவள் காதலன் – டவலகிரோவுக்கும் இந்து பணியாளுக்கும் இடையான ஒரு மும்முனைக் கதை.

ஒரு மெலிந்த அர்மேனிய நாட்டுப் பெண் ‘லேடி ஃபிண்டன்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிறீச்சிடும் குரலில் நக்கலான உடல்மொழியில் ஆங்கிலேயப் பெண்மணிக்குப் பொருத்தமாக இருந்தார். துருக்கிய நடிகர் ஒருவர், டவலகிரோ கதாபாத்திரத்தின் வேடம் ஏற்றிருந்தார். சிகப்பு நிற டர்பனில் பார்க்கும்போது ஓரளவு வடமேற்கு எல்லைப்புற இந்தியன் என்று நம்ப முடிந்தது. அவன் கொஞ்சம் பயங்கரமானவன். கப்பல் போன்ற தோற்றமளித்த ஒன்றில் புயல் காற்றின் நடுவே தோன்றினான். தன் காதலியோடு கைக்கோர்க்கும் பொருட்டு நெடுந் தூரம் பயணித்தான். நீண்ட கைகளை அசைத்து கர்ஜித்தான்:

‘என் கல்லறைக் கற்கள் கொண்டு பாதையை வழிமறித்தாலும் கொண்ட கொள்கையில் மாறுபாடு கொள்ளாமல் இலக்கு நோக்கிப் பயணிப்பேன். நுரை போர்த்திய அலைகளோ, நெருப்பு உமிழும் முகில்களோ என் பயணத்தை எதுகொண்டும் தடுக்க முடியாது. எரிமலை பொங்கி அச்சுறுத்தினாலும் நான் இலக்கிலிருந்து மாறமாட்டேன்…’

கப்பல் போன்ற கப்பல் மேலும் கீழுமாக ஆடியது. செயற்கையில் இடி மின்னல்கள் தோன்றின. டவலகிரோ மீண்டும் மீண்டும் காட்டுத்தனமாகக் கத்தினான்:

‘யானைகள் கீழே விழுகின்றன, எறும்புகள் மேலெழுந்து புலம்புகின்றன; புலிகளும் சிங்கங்களும் குன்றின் உச்சியிலிருந்து மலையுச்சிக்குத் தாவுகின்றன..‌. வெள்ள நீரைப் போல் நான் அழிவையும் மரணத்தையும் பொழிகிறேன்! அழிவு சக்தியின் காட்டாற்று வெள்ளம் என் கண்ணீர்! என் பெருமூச்சும் முணுமுணுப்பும் கட்டுக்கடங்காத சூறாவளிப் பெருங்காற்று.. உங்கள் இரவின் இருளை இரண்டாகக் கிழித்து, விடியலில் நான் கண் விழிக்கிறேன். உங்கள் மின்னலின் அச்சுறுத்தலுக்கு நான் பலியாக மாட்டேன்…’

இது இந்தியக் குரல் அல்ல எனத் தோன்றியது. இதுவரையிலான என் பார்வையில் தன்னுடைய விதியைத் தானே தீர்மானிக்கும் பொருட்டு இயற்கையையும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளையும் எதிர்த்துக்கொண்டு இலக்கை நோக்கிப் புறப்பட்ட எந்தவொரு இந்தியனையும் நான் கண்டதில்லை. அதுவே உண்மையென நம்பிவந்தேன். ஆனால் தனது விருப்பத்தின் பொருட்டு, தன் இலக்கை அடைய இருளைக் கிழித்துப் பயணப்பட்டான் இந்தக் கூலிக்காரன்.

இதுவே இந்தியா பற்றிய என்‌ மூன்றாவது பார்வையாக இருந்தது.

ஒருநாட்டின் புதல்வர்களை நீங்கள் அந்நிய தேசத்தில் மட்டுமே சந்தித்திருந்தீர்கள் என்றால், அந்த நாட்டைப் பற்றிக் கருத்து சொல்வதில் கவனமாக இருங்கள். உங்களுக்கு மிக நல்ல அபிப்பிராயமும் தோன்றலாம் அல்லது முற்றிலும் சம்பந்தமில்லாத பார்வையிலும் வழிநடத்தப்படலாம். பின்னணி இல்லாத ஒரு மனிதன் நீரில் மிதக்கும் செடியைப் போன்றவன். அவனை அடையாளம் காண்பது மிகச் சிக்கலானது. உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தோன்றும் எண்ணங்கள், ஒட்டுமொத்த தேசமே இப்படித்தான் என்றொரு பிம்பத்தை ஏற்படுத்தும்; ஒட்டுமொத்த தேசத்தின் பிம்பமும் ஒரு தனி மனிதரின் செய்கையால், மாற்றி உள்வாங்கப்படும்.

இந்தியா ஒரு மகத்தான நாடு. அதன் கலாசாரம் சிக்கலானது. நல்ல அனுபவமும் கல்வியறிவும் கொண்ட இரண்டு இந்தியர்களிடமிருந்து நீங்கள் பெறும் தகவல், மிகச் சரியானதாக இருந்தாலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இரண்டுக்கும் உள்ள முக்கியத்துவத்தை அடையாளம் கண்டு இனம் காண்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒருமித்த கருத்தை எட்டுவது சுலபத்தில் முடியாது.

1909ஆம் ஆண்டு சேட் துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாக லண்டன் செல்லும்போதுதான் முதல்முறையாக இந்தியர்களைச் சந்தித்தேன். பயணிகளைக் காட்டிலும், கப்பலில் பணிசெய்யும் இந்தியர்களும் மாலுமிகளும் என்னை வெகுவாக ஈர்த்தனர். அழகிய தோற்றத்தோடு, சில விஷேச அம்சங்களும் பொருந்தியிருந்தனர். வாய்ப்பகுதி மிக நுட்பமாய் வரையப்பட்டது போல், உணர்ச்சிமிக்கதாய் காட்சி தந்தது.

வாழ்க்கையில் துயரம் கொண்டவர்களுக்கு ஏற்ப, துறவறத்தில் ஆசை கொண்ட ஆண்மகன் போல் அவர்கள் உதடுகள் மிளிர்ந்தன. அவர்கள் எல்லோரும் இந்து மதத்தினர் என ஒருவர் சொல்லக் கேட்டிருந்தேன். உண்மையில் நான் கண்ட எந்தவித அம்சமும் குறிப்பும் உணர்த்துவது போல், அவர்கள் நிஜத்தில் இல்லை. தங்கள் முன்னோர்களின் முகமுடி அணிந்து வழக்கத்துக்கு மாறான சாந்தமும் தூய்மையும் போர்த்தி நடமாடி வந்தனர்.

கப்பலின் மேல்தளத்தை வருடும் காற்றுபோல, தங்களின் மென்மையான கால்களால் அங்கும் இங்கும் ஓடி வேலைசெய்துகொண்டிருந்தனர். இதுவரை இப்படியான பாதங்களை நான் பார்த்ததே இல்லை. கால்விரல்கள் அனைத்தும் சீராக, கொஞ்சம் அகன்று காற்றாடிபோல் இருந்தன.

அங்கிருந்த மாலுமிகள் தனிப்பட்டமுறையில் தங்கள் கால்விரல்களால் தையல் நூற்கிறார்கள் என்றோ எம்பிராய்டரி செய்கிறார்கள் என்றோ என்னிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் நம்பியிருப்பேன். அந்தக் கால்களின் சொந்தக்காரர்களுக்கு எப்போதும் ஒரு சொல்லொணா அச்சம் உண்டு. அந்த நடையில் ஒரு ரகசியமும் திருட்டுத்தனமும் இருந்தது.

இந்தியர்களுக்கு பயம் ஒரு சராசரி பழக்கமாக இருக்கும் என்று நினைத்தேன். எனக்கு அப்போது குரானில் உள்ள, ‘அல்லாவே! மனத்தில் தோன்றும்‌ சந்தேகத்திலிருந்தும், ஜின்களிடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் எம்மை காப்பாயாக’ என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

1 thought on “நான் கண்ட இந்தியா #1 – இந்தியா பற்றிய பார்வைகள்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *