Skip to content
Home » நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

நான் கண்ட இந்தியா #4 – நான் கண்ட தில்லி

நினைவுச் சின்னங்களை காணுதல்

தில்லி ஒரு வெண்மையான நகரம். பொதுவாக ஒரு நாட்டின் தலைநகரம் போர் தந்திரம் சார்ந்தோ பொருளாதாரத் தேவை சார்ந்தோ தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால் அறிந்தோ அறியாமலோ அதில் சமூகத் தாக்கங்களும் இடம்பெறுகின்றன. ஒரு தலைநகரின் இடத்தேர்வுக்கு இவையெல்லாம் தனித்தனி காரணிகளாக விளங்குகின்றன. பாரிஸ் நகரின் பளபளப்பான வெண்மைத்தன்மையும், பிராக் நகரின் காற்றில் மிதக்கும் மெல்லிய ஊதாப் பூ நிறக் கோடுகளும், சாம்பல் புகை நிறத்தைப் போன்ற லண்டன் வீதிகளும், பளீரென ஒளிர்விடும் நியூயார்க் நகர மாடங்களும் இந்த நகரங்களுக்கு எல்லையில்லாத அழகைச் சேர்க்கின்றன. இஸ்தான்புல்லின் அழகுக்கு இந்த உலகில் எதுவுமே ஈடு இல்லை.

பாரிஸின் வெண்மையும் தில்லியின் வெண்மையும் அப்படியே நேர்மாறானவை. ஆனாலும்கூட தில்லியின் அழகு மேற்கத்திய தலைநகரங்களைப் போல் தெளிவாகவும் எடுப்பாகவும் இருக்கிறது. இந்தியாவின் வேறு சில நகரங்களைப் போல் தெளிவற்ற மங்கலான தோற்றம் தில்லியில் இல்லை.

புது தில்லியின் நகர்புறக் கட்டடப்பாணி பெரிதும் மகிழ்ச்சி கொள்ளும்படியாக இருக்கிறது. அதன் தாழ் வட்டமான, நேர்த்தியான கட்டடங்களும், சுற்றியுள்ள வண்ணமயமான தோட்டங்களும் பழைய குடியிருப்பைக் காட்டிலும் தில்லிக்கு பெரிதும் பொருந்துகின்றன. பழைய தில்லியின் காட்சிக்கு அப்பாற்பட்டு, கீழைத்தேய நாட்டின் கடைகள் பஜாரில் நிறைந்திருக்கின்றன. பழைய நினைவுச் சின்னங்களின் பின்னணியில் அழகிய புது பங்களாக்களைக் காண்பது நடைமுறைப் பார்வையிலும் அழகியல் பார்வையிலும் சரியெனப்படுகிறது. இங்கிருக்கும் ஆடம்பரமான, அழுக்குப் பீடித்த, பாழடைந்து போன பழைய கட்டடங்களை எந்தவொரு இழப்புமின்றி தரைமட்டம் ஆக்கமுடியும்.

பழைய நினைவுச் சின்னங்களைப் பார்வையிட முதலில் எனக்கு ஆர்வமில்லை. ராஜ உரிமை பூண்ட அரண்மனைகளும், வெற்றுக் கோட்டைகளும் என்னை வலிமை இழக்க வைத்தன. குழப்பம் தரக்கூடிய முரண்பாடான விமர்சனங்கள் தோன்றின. நினைவுச் சின்னங்களின் அழகும் எல்லையும் ஈடு இணையற்றது எனச் சிலர் சொல்கிறார்கள். அவை பாரசீக, இந்து மற்றும் அரேபிய பாணியின் கூட்டுக் கலவை என்கிறார்கள் இன்னும் சிலர். வேறு சிலரோ அவை நேர்த்தியானவை என்றாலும் வீழ்ச்சியின் ஆரம்பம் என்கிறார்கள்.

இருப்பினும், கோட்டை வாயிலில் உள்ள படை வீரர்களின் குடியிருப்பைத் தாண்டி இருந்த அழகான தோட்டங்கள் என்னை மகிழ்ச்சிகொள்ள வைக்கின்றன. உடன் வந்த நண்பர்கள், நினைவுச் சின்னங்களின் மேல் கர்சன் பிரபுக்கு இருந்த கரிசனத்தைப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஓர் ஆண்டின் 12 மாதங்களைப் பிரதிபலிக்கும் படியான 12 அங்க மாளிகை ஒன்று தோட்டத்தின் எழில் கொஞ்சுமிடத்தில் கண்ணைக் கவர்கிறது. அதன் வெளிப்புறத்தில் தீவிர கற்பனை இருந்தபோதிலும், தன் சொந்த குணாதிசயங்களால் அந்தக் கட்டடம் மிளிர்கிறது. நவீனர்கள் எதிர்க்கும் முழுமையும் நேர்த்தியும் மேற்பரப்பில் மட்டுமே உள்ளன. அவர்களின் கட்டடக் கலை திறமையை விரிவான அலங்காரத்தால் மறைக்க முடியாது. திவான் அறையில் இருந்த பாரசீகக் கல்வெட்டு ஒன்றில், ‘பூமியில் சொர்க்கம் படைக்கப்பட்டிருந்தால், அது இங்குதான் இருந்திருக்கும்’ என எழுதியிருந்தது. அந்த வார்த்தைகளில் வீண் பெருமை துளியும் இல்லை.

இது எங்கள் நாட்டின் ப்ரூசா கட்டடங்களை நினைவுப்படுத்துகிறது. ப்ரூசா சின்னங்கள் முதிர்ச்சி அடையாத காலகட்டத்தின் இளமையையும் படைப்புத் திறனையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் தில்லியில் நாம் காணும் படைப்புகள் நவீன காலத்தைச் சார்ந்தவை. இன்னும், இந்தக் கற்களில் செதுக்கப்பட்ட மங்கலான கூம்பு வடிவ பூக்களும் இனிமையான மணமுடைய பூக்களும் உயிரோட்டமாகக் காட்சியளிக்கின்றன. அதைக் காணும்போது உள்ளம் பூரிக்கின்றது. மத்திய ஆசியாவின் பரந்த புல்வெளி பரப்பில் தோன்றிய அதன் கலை நளினம், தில்லி முகலாய கலைஞர்களின் அதிநவீன கட்டடக்கலையால் முற்றிலும் பாழடையவில்லை.

தூரத்திலிருக்கும் மாடியில் நின்றுகொண்டு யமுனை நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.‌ ஒரு காலத்தில் நாங்கள் நின்றுகொண்டிருக்கும் கட்டடத்தின் அடியில் யமுனை ஓடியது. சீமான்களும் சீமாட்டிகளும் கட்டியெழுப்பிய நினைவுச் சின்னங்களால், ஏழை மக்களின் உழைப்பும் வரிவிதிப்பும் என்ன கதியில் இருந்தன என்று நான் உரக்கச் சிந்தித்திருக்க வேண்டும்.

‘சீமான்களும் சீமாட்டிகளும் வேலையில்லாத் தீண்டாட்டத்தை நிறுத்தினார்கள். இதன்மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைத்தது. மக்களும் சம்பளமாகப் பெற்றதைக் கொண்டு வரிச் சுமையை குறைத்திருப்பார்கள்’ என்று உடன் வந்த நண்பர் சொன்னார்.

ஆக எல்லா காலத்திலும் குடிமக்களிடம் ஏதோவொரு வேலையை ஒப்படைத்து, வயிற்றுக்கு உணவிடுவதை எதேச்சதிகாரப் போக்கு செய்து வந்திருக்கிறது. இன்றும்கூட நம் காலத்திய சர்வாதிகாரிகள், பெரு அளவிலான பொதுக் கட்டடங்களை கட்டியெழுப்பி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கி வருகிறார்கள். யூதர்களை வேலைவாங்கி பிரமிடுகளைக் கட்டிக்கொண்ட ஃபாரோ மன்னர்கள் உட்பட, இவர்கள் எல்லோருக்கும் நாம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள வேண்டும்: அடிமைப்படுத்தி வேலை வாங்குவதை இவர்கள் நிறுத்திக்கொள்ளாவிட்டால், அதிகாரப் போக்கை எதிர்த்து பெரும் கிளர்ச்சி ஏற்படும்.

நான் பார்த்தவரை தில்லியில் என்னை மிகவும் கவர்ந்த இடம், துக்ளக்கின் சமாதி. அதன் அசலான பிம்பமும், ஒப்பில்லாத புத்திசாலித்தனமும், தைரியம் பொருந்திய வெளித்தோற்றமும் வடிவமைப்பில் இருந்த முதிர்ச்சியைக் காட்டுகின்றன. எந்தவொரு செயற்கையான குறியீட்டையும் ஏற்காத மனிதர் இங்கு இருந்தார். அவர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். ஆனால் நேர்மையானவர். ஓரளவு முரட்டுத்தனமான உறுதியோடு இருந்தார். ஒரு வீரனுக்கு போர் பாசறையில் எடுக்கப்படும் கூடாரத்தைப் போல், காட்சிக்கு எளிமையாய் உயிரோட்டத்துடன் இருந்தது அந்தக் கல்லறை. திரைச்சீலையும் பட்டாடையும் விரிக்கப்படாத, பழுப்பு நிறக் கற்களால் ஆன பெரிய கூடாரம் அது.

ஆக்ரா செல்லும் வழியில் கிராம மக்கள் சிலர் கூட்டமாக அங்குமிங்கும் போய்க்கொண்டு இருந்தார்கள். நிலா ஒளியில் ‘தாஜ் மஹாலை’ காண்பதாகத் திட்டம். ஒரு பார்வையாளராக தாஜ் மஹாலைக் காண இதுவே நேர்த்தியாக இருக்கும்.

விவசாயக் கூலியாக இருந்தாலும் சரி, நாட்டை ஆளும் மகாராணியாக இருந்தாலும் சரி, ஒரு பழங்காலப் பானையில் வரையப்பட்ட பெண்ணின் உருவம் போல எல்லோருமே கருணையுடன் இருந்தார்கள். வழிநெடுகிலும் ஓலை வேய்ந்த, மண்ணால் கட்டப்பட்ட குடிசைகளே பெரும்பாலான கிராமங்களில் இருந்தன. தரை அழுக்காக இருந்தது. நமது கிராமங்களைக் காட்டிலும் பெரிய வித்தியாசம் இல்லை. பெண்களைவிட ஆண்கள் உடல்நலம் குன்றி இருந்தார்கள். சிலருக்கு மலேரியா என்று நினைக்கிறேன், வீதியில் இருந்த உயரமான பலகையின்மேல் படுத்திருந்தனர்.

பெண்கள் இதற்கு மாறாக உறுதியோடு இருந்தார்கள். வாழ்வின் துயரத்தையும், பட்டினி பாடங்களையும், குழந்தைப் பிறப்பு வலிகளையும் கடந்து வந்தவர்களுக்கு இயல்பாகவே எதிர்ப்புச் சக்தி அதிகமாய் இருக்கிறது.

வழியில் கிணறுகளைப் பார்த்தோம். எருதுகளைக் கொண்டு நீர் இறைக்கிறார்கள். நமது பழங்கால வழக்கத்தையும்விடவும் இந்த முறை பழமையானது. ‘ஆரம்பக் காலக்கட்டத்தில்’ என்று நாம் சொல்வோமே, அதுதான் இந்தக் கிராமங்களின் ஜீவனாக இருக்கிறது.

பரிதாபகரமான அழுக்குப் பீடித்த குடியிருப்புகளின் வழியாகத்தான் ஒருவர் ஆக்ராவில் நுழைகிறார். இது தேங்கிப்போய் மடிந்துகொண்டிருக்கும் கிழக்கின் கலாசாரத்தைக் காட்டுகிறது. எந்தவொரு கிழக்குவாசிக்கும் இந்தப் பாதை குறித்த வருத்தம் ஏற்படாது. ஒருவேளை கவர்ச்சியைத் தேடிவரும் மேற்கின் எழுத்தாளர்கள் வேண்டுமானால் கவலைப்படலாம். தங்களின் பூர்விக அழகியலை அன்றாட வாழ்வின் அங்கத்தோடு ஒன்றிணைத்து, அதனைக் காப்பாற்றாமல் போனால் வெகு சீக்கிரத்தில் அழிந்துவிடும்.

சுகாதாரம் குறித்து இந்தியப் பெருந்திரளை நியாயப்படுத்த விரும்பினால், ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம். அவர்களின் குடிசை எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதை மறைக்கும் கந்தல் துணிகள் எத்தனை அழுக்குப் படிந்திருந்தாலும், மேற்கின் மிகக் கீழான ஏழையைவிட தங்கள் உடலைச் சுகாதாரமாய் பார்த்துக் கொள்கிறார்கள். எப்படிப்பட்ட தண்ணீராக இருந்தாலும் அதில் முஸ்லிம்களும் இந்துக்களும் சேர்ந்து குளிக்கிறார்கள். தங்கள் அந்தரங்க உறுப்புகளைச் சுத்தம் செய்கிறார்கள்.

ஐரோப்பிய சினிமாவில் காண்பதைப்போல், கால்விரல்களின் விரும்பத்தகாத வாசனையும் அருவருப்பான உடல் உறுப்புகளும் இந்தியர்களை எந்தப் பாதகமும் செய்வதில்லை. அடிக்கடி எச்சில் துப்பி மூக்கைத் துடைக்கும் பழக்கும் எல்லோருக்கும் இருக்கிறது. பல இடங்களில், இன்னும் குறிப்பாகக் கிராமங்களில் சாக்கடை வசதி கிடையாது என்பது துர்நாற்றமான உண்மை. ஆனால் அந்த நாற்றம் அவர்கள் உடம்பிலிருந்து வருவதில்லை.

எப்போதும் போல், அழுக்கடைந்த கிராமங்களும் வளம் பொருந்திய நகரங்களும் வெகு தொலைவில் இல்லை. கிராமத்துக்கும் நகரத்துக்கும் மத்தியில் பொருளாதார ரீதியாய் இடைப்பட்ட வகுப்பு என்று எதுவும் கிடையாது. நான் இதை வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். இந்தியாவில் மிக நொடிந்த ஏழைகளும் பல்கிப் பெருகிய பணக்காரர்களுமே வசிக்கிறார்கள்.

நாங்கள் ஒரு முற்போக்கான இந்தியரின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தோம். விருந்தோம்பியவர் ஒரு பிரபல மருத்துவர். அவரின் மனைவி புர்கா அணிவதைத் தவிர்த்த முதல் இஸ்லாமியப் பெண்ணாக அடையாளம் காட்டப்பட்டார். குறைந்தபட்சம் ஆக்ரா அளவிலாவது அவர் அப்படியான முதல் பெண்ணாக இருக்கலாம்.

ஏனென்றால் மற்ற நகரத்திலும் இதே நிலைக்கு முன்னேறி வந்த சில பெண்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எண்ணிக்கையில் அவர்கள் மிகவும் சொச்சம். உண்ணும்போது மட்டும் புர்கா அணிவதைத் தவிர்க்கிறார்கள்.

இரவு சாப்பாடு உண்ணும்போது ஆங்கிலேயருடன் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுகூடி அமர்ந்தார்கள். எதையெதையோ பேசிக்கொண்டு இருக்கும்போது வெல்லிங்டன் பிரபுவின் மகன் – மருமகள் குறித்து சட்டென்று மடைமாறியது பேச்சு. இங்குள்ள சில பிரபலமான ராஜாக்களுடன் சேர்ந்து அவர்கள் வேட்டைக்குப் போயிருக்கிறார்கள். அங்கு புலி, சிங்கம் உட்பட ஏழு காட்டு மிருகங்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

எனக்கு அருகில் இருந்தவர், ராஜாக்கள் ஒருவித செயற்கையான காடு வைத்திருப்பதாகவும், அதில் புலிகளையும் சிங்கங்களையும் குடியேற்றி வைத்து, காட்டு விலங்குகளுக்கு மருந்து கொடுத்து ஒருவித மயக்கநிலையில் வைத்திருப்பார்கள் என்றும் சொன்னார். அப்போது இந்த வீரமிக்க வேட்டைக்காரர்கள், பயப்படாமலும் தவறவிடாமலும் சுட்டு வீழ்த்தலாம் அல்லவா?

தொல்லியல் துறையின் தலைமை அதிகாரி டாக்டர். அன்சாரி (எனது விருந்தோம்புனர் என குழப்பிக்கொள்ள வேண்டாம்) அங்குள்ள நினைவுச் சின்னங்களின் கட்டடப் பாணியை விளக்கினார். தொன்மை வாய்ந்த இந்தியக் கட்டடக்கலைப் பற்றி சில புத்தகங்களை அவர் எழுதியிருந்தார். மேலும் அவர், தாஜ் மஹாலின் கட்டடக் கலைஞர் ‘சினான்’ என்ற கலைஞரின் மாணவர் என்றும், சினான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற துருக்கிய நாட்டு கட்டடக் கலைஞர் என்றும் சொன்னார்.

நாங்கள் இருந்த அரண்மனையின் மாடியில் இருந்து தாஜ்மஹாலைப் பார்க்கும் போது, ஒரு நீல நிற வெற்றிடத்தில் முத்துக்கள் ஒளிவிடும் சோப்புக் குமிழ்களின் குவியல் போல இருந்தது.

நாங்கள் ‘தாஜை’ அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. கற்பனை தீட்டி அலங்கரித்த சுவையை அரிதாகவே சுவைத்தோம். அருகிலிருந்த சைப்ரஸ் மரங்களுக்கு நடுவே, பளிங்கு மேடையிட்ட மேசையின் மீது ஏறி உட்கார்ந்தேன். தாஜின் வெண்ணிறமான வட்டக் கூரையின் மேல் மெல்லமாக நிலா உதித்தது. வெண்மையான கட்டடத்துக்கு மயிலிறகால் நிவாரணம் தருவதுபோல், நிலாவின் ஒளி பட்டும் படாமல் மென்மையாய் படர்ந்தது.

கல்லறைக் கதவுகள் திறந்திருந்தன. அலுவலக உதவியாளர் முன்னும் பின்னும் ஓடிக் கொண்டிருந்தார். மேற்கூரையில் தொங்கிக் கொண்டிருந்த விளக்கின் வசீகரமான ஒளி, அறை முழுதும் வெளிச்சம் நிரப்பிக் கொண்டிருந்தது.

ஓர் ஆண், பெண்மீது கொண்ட காதலை அடையாளப்படுத்த இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும், உலகம் அதிசயமாய் இந்தக் கட்டடம் நீடித்திருப்பதை காணும்போது வியந்துபோகிறேன். இந்த நித்தியமான நினைவுச் சின்னத்தை, ஒரு பெண்ணுக்காகக் கட்டியெழுப்பியவர் முஸ்லிம் என்பது மேற்கத்திய உலகுக்கு எத்தனை முரணான விஷயம்!

ஆனால் நான் ஆச்சரியப்படவில்லை. இது எனக்கு நிம்மதி அளிக்கிறது. இனம், மதம் மற்றும் கலை சார்ந்த பார்வைகளில் சமூகத்தின் புரிதலை நான் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. என் பார்வை மாறுபாடுகிறது. அது அறிவார்ந்த புரிதலையும் தாண்டி, உணர்ச்சிக்கு அப்பாற்பட்டது. இதைக் கட்டியவரின் தேசம் துருக்கியோ ஃபுளோரண்டைனோ, எதுவாய் இருந்தால் என்ன? இதை உருவாக்கிய மன்னர் தனது மூதாதையர் வீட்டை உறுதியான இடத்திலோ, ரணக் கொடூர வெப்பத்திலோ எங்குக் கட்டியிருந்தால் என்ன? எப்படியிருந்தாலும் இது இந்தியத் தேசத்தின் தலைசிறந்த படைப்பு.

வரலாற்றின் காலவெளியில் நின்று பார்க்கும்போது, ஆற்றொழுக்கான தொடர்ச்சி அறுந்து கிடப்பதைக் காணமுடிகிறது. ஒன்றுக்கு மற்றொன்று அடிப்படையாய், கால யுகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இனமோ, நம்பிக்கையோ, யுகங்களுக்கு கொடுக்கப்பட்ட பெயரோ எதுவும் இனி முக்கியமில்லை. முகலாய ஆட்சியின் உச்சபட்சமாக ‘தாஜ்’ பார்க்கப்படுகிறது. அவர்கள் செய்த எல்லாவித நன்மை – தீமைக்கும் ‘தாஜ் மஹால்’ மட்டுமே தனித்த அடையாளமாக நினைவில் நிற்கும்.

முகலாயர்கள் செல்வத்தைத் தேடி வந்தார்களா ஆட்சி அதிகாரத்தை நோக்கி வந்தார்களா என்ற விவாதம் எனக்கு முக்கியமல்ல.‌ ஏகாதிபத்திய காரணத்துக்காக வந்தவர்கள் எனில், பிற தனி மனித ஆசாபாசங்களுக்கும் இடம் இருந்திருக்கும். அவர்கள் ஒருபோதும் லட்சியவாதியாகவோ, பொருள்முதல்வாதியாகவோ இருக்கவில்லை. அவர்களின் வரலாற்றுச் சூழலை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், குழப்பம் படிந்த பிம்பம் தோன்றுகிறது. தாஜ்ஜை முன்னிறுத்தி நான் கருதும் விஷயம் இதுதான், இந்தியாவின் சிம்பொனிக் குழுவில் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் நாதம் ‘தாஜ் மஹால்’.

இந்தியாவெங்கும் வசிக்கும் ஐம்பதாயிரம் ஏழை எளிய மக்கள் மாதந்தோறும் வந்து தாஜ் மஹாலைக் கண்டுகளிப்பதைக் கருத்தில் கொண்டு, அந்த மக்களின் மதிப்பு உணர்வுக்கும் நான் தலை வணங்க வேண்டியுள்ளது.

அதிகாலை மூன்று மணி வாக்கில் தாஜ் மஹாலை விட்டு வெளியே வந்தோம். அன்று மதியம் வைஸ்ராய் மாளிகையில் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏதுமறியாத வரலாற்று மாணவியாக நான் இன்னும் அதே தனித்துவிடப்பட்ட சோகத்தில் இருந்தேன். வைஸ்ராய் மாளிகைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் என் சக விருந்தினர்கள் உற்சாகத்தின் எல்லையில் இருந்ததும் கவனிக்கத்தக்கது.

நாடாளுமன்றக் கட்டடம், வைஸ்ராய் மாளிகை உட்பட அங்கிருக்கும் பல கட்டடங்கள் புது தில்லியின் கட்டட பாணிக்கு பொருத்தமாக இருந்தாலும், அவை ஒருபோதும் பழைய நினைவுச் சின்னங்களோடு போட்டியிட முடியாது. கற்பனைக்கு எட்டும் காலம் வரை, இந்தியாவில் பிரிட்டிஷார் கட்டிய நினைவுச் சின்னங்களைப் பார்வையிட ஒருவரும் செல்ல மாட்டார்கள். அவர்களின் பங்களிப்பைக் காண வேறு புலத்துக்குத்தான் செல்ல வேண்டும். மாளிகையின் ஜன்னல் வழியே தெரியும் ‘முகலாயத் தோட்டம்’ மட்டுமே வியக்கும்படி இருக்கிறது.

நான் இன்னும் குறைந்த சம்பிரதாயங்களுடன் வெல்லிங்டன் பிரபுவைச் சந்தித்திருக்கலாம். ஒரு வகையில் மிகவும் பரிச்சயமான தோற்றத்தில் இருந்தார். துருக்கிய ஏகாதிபத்திய காலத்தில், ஒரு பெரிய மாகாணத்தின் கடைசி நல்ல மனிதர்களில் ஒருவராக இவர் இருந்திருக்கலாம்.

அங்குள்ள பிரபுகளுக்கே உண்டான அதே நடை; நல்ல ரசனை; மரியாதையான குணம்; நகைச்சுவை ததும்பும் பேச்சு. எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தவொரு சூழலிலும் பகட்டாகக் காட்டிக்கொள்ளும்படி சர்வ வலிமை பொருந்திய அதிகாரம் இருந்தது.

இரவு உணவை முடித்ததும் மாளிகையைச் சுற்றி நடந்தோம். இந்திய ஜனநாயகத்தில் பிரிட்டிஷார் செய்து வரும் பரிசோதனைகளைப் பற்றி வைஸ்ராய் சொன்னார். நான் ‘இந்திய ஆளுமைகள்’ என்ற பெயரில் இந்தியா பற்றியொரு புத்தகம் எழுதும் ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினேன். மெள்ள முறுவல் பூத்து, தனக்கும் அந்த ஆசையிருப்பதாகச் சொன்னார்.

நான் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னர், தன்னுடைய மருமகள் மேற்கொண்ட புலி வேட்டைப் பற்றி நகைச்சுவை மிக்க கருத்தொன்றை சொன்னார். இதன் விவகாரமாய் ஆக்ராவில் சொல்லப்பட்ட நகைச்சுவையை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவர் சொன்னதை இங்கு சொல்லாமல் விடுவது உசிதம்.

வைஸ்ராய் மாளிகையைச் சுற்றியுள்ள கட்டடங்களைப் வெறித்துப் பார்க்கும்போது, இந்தக் கட்டடங்கள் அழகியல் ரீதியாக முக்கியத்துவம் பெறாவிட்டாலும் அதற்குள் ஆழமான அர்த்தம் பொதிந்திருப்பதை உணர்ந்தேன். இன்றைய இந்தியா, முஸ்லிம் ஆட்சிக்கு முற்பட்டதைப் போல இல்லை. அதே மாதிரி பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தையும் இனி நாம் ஒருபோதும் அடைய முடியாது.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *