Skip to content
Home » நான் கண்ட இந்தியா #5 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #1

நான் கண்ட இந்தியா #5 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #1

சரோஜினி நாயுடு

என்னைத் தவிர்த்து இன்னும் இரண்டு பெண்கள் சலாம் இல்லத்தில் விருந்தினர்களாய் தங்கியிருந்தார்கள். ஆண்களின் எண்ணிக்கை எப்போதும்போல அதிகமாய் இருந்தது. அந்த வீடு ஒரு கேரவன்செராய் (கேரவன்செராய் என்பது நமது நாட்டு சத்திரங்களைப் போன்று நீண்டிருக்கும் விடுதிகள். ஆசிய, வட ஆப்பிரிக்க மற்றும் தென் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் வணிகர்கள் தங்குமிடமாக இவை இருந்தன) என்பதால், யார் வேண்டுமானாலும் எளிதில் வந்து தங்கலாம். ஆனால் படுக்கை வசதிகளை அவரவர் பார்த்துக் கொள்ளவேண்டும்.

அதில் ஓர் ஆங்கிலேயப் பெண்மணிக்கு சோஷியலிஸ்ட் சித்தாந்தத்தில் ஈடுபாடு இருந்தது. இந்தியா மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இன்னொரு பெண்மணி நாமெல்லோரும் அறிந்த சரோஜினி நாயுடு. இந்திய அரசியலின் மிக முக்கிய முகமாக இருப்பவர்.

தன் அன்றாட சமூக வேலைகளை முடித்துவிட்டு மாலை நேரத்தில் சலாம் இல்லத்துக்குத் திரும்பும் சரோஜினியிடம், ‘இன்றைக்கு என்ன செய்தி அக்கா’ என்று அன்சாரி அன்பொழுக விசாரிப்பார். துருக்கியில் பயன்படுத்தும் ‘ஆப்லா’ என்று சொல்லுக்கு இணையான பதம் இது. இங்குள்ள கணிசமான காங்கிரஸ் தலைவர்கள் ‘அக்கா’ என்றே இவரை அழைக்கிறார்கள்.

மூத்த விடுதலை வீரராகவும், புரட்சியாளராகவும் தன் வாழ்க்கை முழுதும் இதற்கே அர்ப்பணித்திருந்தார். இதற்காகச் சிறைக்கு செல்லவும் அவர் தயங்கவில்லை. இந்திய நாடாளுமன்றத்தை இவர் தலைமை தாங்கி நடத்திய போது, கிழக்கின் பெண்களுக்கு மெய்சிலிர்த்த அந்த நொடியை இன்னும் நான் மறக்கவில்லை. அரசியலில் திருமதி. சன் யாட் சன்னோடு நினைவுகூரப்படும் கிழக்கின் மிக முக்கிய பெண் ஆளுமை இவர்.

நான் பார்த்தவரை, அரசியல் முக்கியத்துவத்தில் இருக்கும் ஆர்வத்தைக் காட்டிலும் தன்மேல் அதிக ஈடுபாட்டோடு இருக்கிறார். அவரால் எந்த சமூகத்திலும், எந்தவொரு சூழலிலும் தாக்குப்பிடித்திருக்க முடியும். தான் விரும்பியதை அடைய, அவருக்கு எந்தக் காலத்திலும் பாலினம் ஒரு தடையாக இருந்ததில்லை. பண்டைய இந்தியாவில் வாழ்ந்திருந்தால், பெருமதிப்புக்குரிய அரசிளங்குமரியாய் ஜொலித்திருப்பார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் 1935ஆம் ஆண்டு என்பதால், இந்திய நிழல் அமைச்சரவையின் உறுப்பினராக இருந்தார்.

ஒருமுறை விரிவுரை ஆற்ற நியூ யார்க் சென்றபோது சரோஜினியை அங்கு சந்தித்திருக்கிறேன். இன்னொரு நேரம் இங்கிலாந்தில் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் எங்களுக்குள் பெரிய அளவில் தொடர்பு இல்லை. கலாசார உடையில் பார்க்கும்போது, சராசரியான இந்தியப் பெண்ணைப் போலவே தெரிகிறார். ஆங்கிலத்தில் நல்ல புலமை இருக்கிறது. கிழக்கு மற்றும் ஆங்கிலோ – சாக்சன் கலாசாரத்தின் வெளிப்பாடு இவரைத் தொற்றிக் கொண்டிருக்கிறது.

‘இந்தியா ஒரு சாந்தமான, அடிப்பணியும் மனப்பான்மை கொண்ட நாடு என எப்போதும் நான் நம்பினேன். ஆனால் சரோஜினி அந்த எண்ணத்தைச் சுக்குநூறாக்கிவிட்டார்’ என்று சிகாகோ மன்றத் தலைவர் என்னிடம் சொல்லியிருந்தார். பொதுமைப்படுத்தி சிந்திப்பது என்றைக்குமே ஆபத்தானது என்று அவருக்குச் சொன்னேன். இந்த மாறிவரும் உலகில், காலநிலை கூட முன்பு இருந்ததைப் போல நிலையாக இருப்பதில்லை. மனித மனமும் அப்படிப்பட்டதென உணரவேண்டும்.

சரோஜினி ஒரு கவிஞர். ஆனால் நான் அவர் கவிதைகளைப் படிக்காததால், என்னால் அப்படிச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. தன் பேச்சுக்களால் உலக அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அயல்நாட்டில் அவர் உரைகளைக் கேட்டிராததால் இதையும் என் இந்திய வருகைதான் அறிய வைத்தது.

சலாம் இல்லத்தில் அவரது எண்ணிலடங்கா உணர்ச்சி மாற்றங்களைத் தெரிந்து கொள்ளமுடிந்தது. துளியும் அளவிடமுடியாதபடி அவரின் உணர்ச்சிகள் மாறிக்கொண்டேயிருந்தன. என்ன இவர் இத்தனைக் கொடூரமாய் இருக்கிறார் என்று நினைத்தால், சட்டென்று சாந்த சொரூபி ஆகிவிடுவார். அவரின் தேசியவாதப்போக்கு குறுகலாய், முரட்டுத்தனமாய் இருக்கிறதென்று உணரும் பட்சத்தில், பரந்துபட்ட உலக நன்மையையும் அவர்பால் உள்ள சகோதரத்தன்மையையும் வெளிப்படுத்துவார். ஒருவேளை இவர் உலகின் விசுவாசம் மிக்க குடிமகனோ என்ற எண்ணம் தோன்றும்படி செய்துவிடுகிறார்.

காலை நேரங்களில் அரக்கப் பரக்க ஓடும்போது அவர் என்னைப் பார்ப்பதுண்டு. புதுப்புது சேலைகளை உடுத்திக்கொண்டு, அந்த நாளுக்கான பணிகளில் மும்முரமாக விழிப்போடு இருப்பார். சரோஜினியின் சமூகப் பணிகள், ஒரு வலிமை பொருந்திய ஆணைக்கூடச் சோர்வடையச் செய்யும். மங்கிய மாலை வேளையில் நேரம் தாழ்ந்து வருவார். நாங்கள் நெருப்பு மூட்டியதைச் சுற்றி ஒரு நாற்காலியில் அமைதியாக வந்து அமர்ந்து, காலணியை கழட்டிவிட்டு, வெறுங் கால்களோடு குளிர் காய்வார். அவரின் மொத்த உருவத்திலிருந்தும் இந்த நாளை திருப்திகரமாய் கழித்த நிம்மதி தெரியும். அடர்த்தியான இமைகளுக்கு உள்ளே, காப்பி நிறக் கண்கள் ஒளிர்விடும். இந்தியப் பெண்களின் கைகளுக்கு ஒரு விசேஷ குணம் இருக்கிறது. அதற்கு தனியே ஒரு மொழியுண்டு. சரோஜினியும் அப்படித்தான். தன் அடர்நிற கைகளை அங்குமிங்கும் ஆட்டி, சைகைகளால் ஏதேதோ புரியவைப்பார்.

பெரும்பாலும் மாலை நேரங்களில் அங்கத மனநிலையில் இருப்பார். இந்தியத் தலைவர்களின் வாழ்க்கையிலிருந்து ஒவ்வொரு காட்சியாக அரங்கேற்றுவார். அவர் அறியாமலேயே மனிதர்களையும் நிகழ்வுகளையும் விருப்பத்துக்கு ஏற்றவாறு கற்பனை செய்து கதை சொல்வார். சரோஜினி வேண்டுமென்றே பொய்யாகச் சொன்னார் என நான் சொல்லவில்லை. அது அவரின் கைத்தேர்ந்த நையாண்டித்தனமாகவே இருக்கவேண்டும்.

அந்த மாலை நேரங்களில் அவருக்கு நகைச்சுவை அவ்வளவாய் கைக்கொடுக்கவில்லை. நகைச்சுவையைக் குறைத்துக் கொண்டு, கற்பனையை ஏற்றிக் கொண்டார். மேலும் நகைச்சுவை உணர்வு உள்ள மக்கள், நிகழ்வுகளுக்கு அடிபணியும் போக்கைக் கொண்டுள்ளனர். ஆனால் சிகாகோவில் இருந்த நபர் சொன்னதைப் போல, சரோஜினிக்கு அடிபணியும் போக்கு கொஞ்சமும் கிடையாது. மாறாக மற்றவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர், அவர்.

ஒரு சர்வாதிகாரியின் அனைத்துவிதப் பண்புகளும் அவருக்கு இருந்தன. அதேநேரம் குறுகிய எண்ணம் கொள்வதிலிருந்து தடுக்கும்வகையில் அவரிடம் கலை மனமும் இருந்தது. அது மட்டும் இருந்திருக்கவில்லையென்றால் என்றைக்கோ ஒரு சர்வாதிகாரி ஆகியிருப்பார்.

சரோஜினி நாயுடு என்ற அரசியல்வாதியிடம், இந்தியா ஒரு நாடகக் கலைஞரை இழந்துவிட்டது என்று யோசித்திருக்கிறேன். இன்னும் ஒரே மேசையில் உட்கார்ந்துகொண்டு, நேரம் பிழியும் வேலைகளைப் பொறுமையாகக் கையாளுவது சரோஜினிக்கு விருப்பமான காரியம் அல்ல. தான் வழிநடத்தப்படும் வாழ்க்கையில் இருந்தே, சரோஜினி தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

காலை நேரங்களில், தன் நீண்ட முடியை விரித்தபடி சூரியக் கதகதப்பில் புல்வெளி மீது உட்கார்ந்து கொண்டிருப்பார். அவர் முன் எப்போதும் ஒரு சிறிய மேசை இருக்கும். அதில் கத்தை கத்தையாக புத்தகங்களும் சில வெள்ளைத்தாள்களும் இருக்கும். புத்தகங்களைக் கொஞ்சம் புரட்டுவார். பின்னர் அந்தத் தாளில் ஏதோ எழுதுவார். இடையில் வரும் இருபாலரிடமும் அவ்வப்போது பேச்சுக் கொடுப்பார்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் காணும் சரோஜினியைவிட சூரிய வெளிச்சத்தில் காணும் சரோஜினியிடம் நிறைய மாறுதல்கள் இருந்தன. தன்னை அடக்கிக் கொண்டவராகத் தெரிந்தார். அவரின் குரல் மென்மையாக இருந்தது. தன் விருந்தினர்கள் சுதந்திரமாகப் பேசிக்கொள்ளும் சுழலை உருவாக்க, தன்னால் முடிந்தவரை விலகியிருந்தார். ஒரு மகாராணி அரசவையைக் கையாளும் தொனியில், ராஜகம்பீரத்தோடு இதைச் செய்து முடித்தார்.

சரோஜினி இப்போது குத்தலாகப் பேசும் மனநிலையில் இல்லை. அதேநேரம் நகைச்சுவை உணர்வைக் கைவிடாதவராகவும் இருந்தார். சூரியக் கதகதப்பில் லயித்திருப்பதன் இன்பத்தை எதன் பொருட்டும் தியாகம் செய்ய விரும்பவில்லை. முந்தைய இரவில் அழிவு உண்டாக்கும் ஆக்ரோஷ தெய்வமாக, தன் சக தெய்வங்களையும், தேவிகளையும் புசித்து உண்ட அதே சரோஜினி தேவிதான் இன்று காலையில் கம்பீரம் பூத்த அமைதி பெண்மணியாய், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் ஆட்சியை நிலைநாட்ட விரும்புபவராக இருந்தார்.

சரோஜினியோடு சில இடங்களுக்குக் காலாற நடந்து சென்றபோது, மீண்டும் அவரின் மற்றொரு உருவத்தைக் கண்டேன். 1935ஆம் ஆண்டு இந்திய அரசியலில் ஏற்பட்ட குழு சமாச்சாரங்களை அதன் குட்டி குட்டி நுணுக்கங்கள் சொல்லி தெளிவான புரிதல் ஏற்படுத்தினார்.

என் மனம் விரும்பத்தக்க பேச்சாளர்கள் பட்டியலில், சரோஜினிக்கு என்றுமே முதலிடம். அவரின் பேச்சைக் கேட்க எவ்வளவு தூரம் சென்றாலும் தகும். அந்தப் பேச்சில் கவிதை நயம் இயல்பாக ஒட்டிக் கொள்வதால், உரை மென்மேலும் மெருகேற்றப்படுகிறது. தொடக்கவிழா, நினைவுவிழா என்று தொடர்ச்சியாக மக்களோடு புழங்குவதால், எந்தவொரு முன்தயாரிப்பும் அவருக்குத் தேவைப்படுவதில்லை. மீனுக்கு நீச்சல் அடிப்பது மாதிரி, சரோஜினிக்கு பேச்சுக் கலை!

அப்படி நிகழ்ந்த சம்பவம் ஒன்று என் ஞாபகத்துக்கு வருகிறது. அரபிக் – யூனியன் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவுக்குச் சென்றிருந்தோம். புதிய அரசியலமைப்புச் சட்டத்தில், மாநிலங்கள் இணைக்கப்பட வேண்டுமென்றும் – இணைக்கப்படக் கூடாதென்றும் சொல்லி ஆறு மாணவர்கள் பேசினார்கள். போட்டி நடுவர்கள் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஓரமாகச் சென்று ஆலோசனை செய்த நேரம் அது. அங்கிருந்த மாணவர்களும் பார்வையாளர்களும் சத்தம் எழுப்பி, விழா அரங்கை கதிகலங்க வைத்திருந்தார்கள். கூட்டத்தின் குரலை ஒடுக்க, சரோஜினி நாயுடு மேடைக்குச் சென்றார்.

மிகவும் சன்னமானகுரலில், மிதமான உருவகங்களோடு இயல்பான வார்த்தைகளில் தன் உரையைத் தொடங்கினார். குரல் மெள்ள மெள்ள உயர்ந்தது. வண்ண வண்ண விவரணைகளால் மென்மேலும் அலங்கரித்து அபாரமாகப் பேசி முடித்தார். வார்த்தைகளைத் தேடுவதில் அவருக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை. நீண்ட தொடர்களை சரளமாய் அசைபோட்டார். தன் உடலை வார்த்தைகளாலும் உருவங்களாலும் கட்டியெழுப்பினார். ஆகையால் பேச்சைத் தொடங்கும்போது குள்ளமாக இருந்தவர், முடிவை நெருங்கும்போது உயரமாகிக் கொண்டே போனார்.

உரை உச்சம் அடையும்போது, தன் நுனி விரலில் நின்றுகொண்டு கால் அங்குல அளவு உயர்ந்து காட்டுவது, வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உளவியல் ரீதியாக நம் மனதின் உள்ளே அவர் உயர்வதை உணர செய்கிறது. சரோஜினி பேசியது துளியும் ஞாபகத்தில் இல்லை என்றாலும், அங்கிருந்த இளைஞர்களைப் போல நானும் வலுவாய் ஈரக்கப்பட்டேன். இந்த வார்த்தை ஜாலமும், அதனைப் பயன்படுத்தத் தெரிந்த கலை நேர்த்தியுமே 20 ஆண்டுகளாக இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிமாறாமல் பயணப்படுத்தியிருக்கிறது.

நாட்டின் ஒரு மூலையில் இருந்து மறு மூலையில் வசிக்கும் குடிமக்களுக்கு, சுதந்திர இந்தியாவின் மீது ஆர்வமூட்டி அதற்குப் போராடும் நெஞ்சுரத்தை வார்த்தைக் கணைகளால் வாரி வழங்குகிறார். எந்த வகையில் சுதந்திரம் பெறவேண்டும், அதற்கு இந்திய சமூகம் எப்படி தயாராக வேண்டும் என்பது அவரது பேச்சுக்கு அவசியமில்லை. சுதந்திர விதையை ஆதியில் ஊன்றியவர் சரோஜினி. அவர் இல்லாத நவீன இந்தியாவை நினைத்தும் பார்க்க முடியாது. ஷேக்ஸ்பியரின் இந்த வரிகளை நினைவுகூராமல், என்னால் சரோஜினியை கற்பனைக் கூட செய்ய முடியாது:

‘வயது அவரை வாடச்செய்யவில்லை, பழக்கத்தின் பாசி
எல்லையில்லா பன்மைத்துவத்தை மூடிவிடல்லை’.

தேநீர் அருந்தும் வேளையில், தன் பெண் நண்பர்கள் சூழ வரவேற்பறையில் அமர்ந்திருப்பார். வெவ்வேறு சமய நம்பிக்கை உடையவர்களும், எல்லா வகுப்பினர்களும் ஒன்றாக அமர்ந்து பேச அந்தக் களம் இடங்கொடுக்கும். ஒருவர் அங்கு நியூ யார்க் மற்றும் லண்டன் நகரப் பெண்களை எளிதில் பார்க்கமுடியும். சூரியக் குடைக்கு உட்பட்ட எல்லா விஷயங்களையும் அங்கு அலசி ஆராய்வார்கள். பெரும்பாலும் பெண்ணிய சிந்தனை உடையவர்கள் அதிகமாக வருவார்கள்; அதைப்பற்றி எந்தவொரு புரிதல் இல்லாதவர்களும் அங்கு ஒன்றுகூடுவார்கள். சமூகச் செயற்பாட்டாளர்களும், ஆசிரியர்களும், க்ளப்களைச் சேர்ந்த பெண்களும் அந்த இடத்தை நிறைத்திருந்தார்கள். அதில் சில பெண்மணிகளை நான் இங்கு சொல்கிறேன்:

பேகம் ஷாநவாஸ். நல்ல உயரமான பெண்மணி. பேசுவதற்கும் பழகுவதற்கும் ஏற்ற பண்பாளர். சர்வதேச மாநாடுகள், பெண்ணியம் என்று வழக்கமான அறிமுகங்களை அவர் ஏற்படுத்தினார். கடைசியாக நடந்த லண்டன் வட்ட மேசை மாநாட்டில், இஸ்லாமிய சமூகத்தின் பெண் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். அவர் சார்ந்த எல்லா செய்திகளும் நம்பகமாகக் கிடைக்கின்றன. இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பிக்கை இருந்தாலும், அவருக்கு குறுகிய மனோபாவம் கிடையாது. தீவிரமான தேசபக்தி இருந்தது. இந்தியப் பெண்கள்தான் இத்தேசத்தை ஒன்றிணைக்க முடியும் என நம்பினார். லண்டனிலிருந்து கப்பல் ஏறி இந்தியா வந்தபோது தான் காதுபடக் கேட்ட சில செய்திகளை என்னிடம் சொன்னார். அந்தச் செய்திகளால் காயம்பட்ட ஷாநவாஸ், தன் உதட்டைப் பிதுக்கிக்கொண்டுதான் அதை வெளிப்படுத்தினார்.

பெர்ஷியர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். அதிலொருவன் எங்களைச் சுட்டிக்காட்டி, ‘இதோ இங்கே சில இந்தியர்கள் இருக்கிறார்கள்’ என்றான். உடனே ஒரு பெண்மணி எங்களைத் திரும்பிப் பார்த்தார். அது ஒரு மலினமான பார்வை. ‘ஓ. அந்த அடிமை தேசமா!’ என்றவர் மீண்டும் அலாதி சோகத்தோடு, ‘அந்த அடிமை தேசமா!’ என அலறினார். தன் வாழ்நாளில் இந்தியா சுதந்திரம் அடையாவிட்டால் பேகம் ஷாநவாஸின் கருத்த விழிகள், அவர் இறந்த பின்னும் முழித்துக் கொண்டிருக்கும் எனத் தோன்றுகிறது.

அடுத்ததாக பேகம் ரஃபி. இவரும் ஒரு இஸ்லாமியப் பெண். பேகம் ஷாநவாஸின் குட்டையான அடர் நிற தோற்றம்தான் இவருடையதும். இவரால் ஆங்கில வார்த்தைகளை மிகச் சரியாகப் பிரயோகித்து கருத்துரையாட முடிந்தது. வார்த்தைகளோடு அதற்கான வீரியத்தையும் தன் உடல்மொழியில் கொண்டுவருகிறார். அவரைப் பற்றி எல்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் நேர்மையான, சுறுசுறுப்புமிக்க, சுயநலமற்ற பெண்மணி. தில்லியில் உள்ள எல்லா க்ளப்களிலும் அவர் உறுப்பினராக இருக்கிறார்.

திருமதி. ருஸ்தொமோஜி, ஒரு பார்ஸியப் பெண்மணி. அமெரிக்கச் சாயலில் நளினமாக உடை அணிந்திருந்தார். பரிசுத்தமான மென்மை போர்த்திய அவர் உருவத்துக்குள் நம்பத்தகுந்த கடினமான ஒன்றை சுவீகரித்திருக்கிறார். தான் நம்பும் ஒரு விஷயத்துக்காக, மலையளவு சோதனை வந்தாலும் எதிர்கொள்ளும் திராணி உடையவர்.

திருமதி ஆஷப் அலி, அழகான இந்து பெண். அவருடைய கணவன் ஒரு இஸ்லாமியர். அவளுடைய செயல்படுகள் அவள் பிறந்த வர்க்கத்தைத் தாண்டிச் செல்பவையாக இருக்கின்றன. அந்தச் சிறு வயதுப் பெண் அவரைப் போன்ற பிறரைவிட நிகழ்கால யதார்த்தங்களில் கால் ஊன்றியிருந்தார். மேட்டுக்குடி சமூகத்தில் உழைப்பதைவிட, சமூக சேவை அமைப்புகளே அவளைப் பெரிதும் ஈர்த்தன.

அவள் எனக்கு துள்ளியோடும் மான் குட்டிகளை நினைவுப்படுத்துகிறாள். இது தன் கொள்கையை மீறி, குறிப்பாக இந்தியாவில் வேறு மதத்தினரைத் திருமணம் செய்யும் வலிநிறைந்த பாதையைக் குறிக்கிறது. அவளையும் அவளைப் போன்ற எண்ணற்றோர்களையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக! இந்த முரண்பாடுகளை முட்டித் தவிர்த்து, சமத்துவப் பாலம் அமைக்க முயலவேண்டும். ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்துக்குப் பயணப்படுவது அத்தனை எளிதான காரியம் அல்ல. மிகுந்த தைரியமும் எதிர்ப்பை மீறும் அபார சக்தியும் வேண்டும்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *