Skip to content
Home » நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2

சில இந்தியப் பெண்கள்

மகாத்மா காந்தியின் முகாமிலிருந்து சில பெண்களும் சிறுமிகளும் வந்திருந்தார்கள். காந்தி அப்போது வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள தில்லி வந்திருந்தார். அவரைச் சுற்றிலும் உற்சாகம் பொங்கும் இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் பேச்சில் அத்தனை சுவாரஸ்யம் இருந்தது.

சிலர் இன்னும் தங்கள் பாதையை கண்டுபிடிக்க முடியாமல் முட்டி மோதினார்கள். அது மகாத்மா வகுத்த பாதையாகவே இருக்க வேண்டுமா என்ன? அந்தக் குறுகிய சாலையிலிருந்து வெளியே வரக்கூடாதா? கைப்பட செய்த பண்டங்களைத்தான் பிரயோகிக்க வேண்டுமா? இயந்திரங்களால் செய்தது என்றால் ஏற்கக் கூடாதா? தங்கள் பாதையைச் சரியாகத் தேர்ந்தவர்கள் பெரிதாக சோபித்துப் போகவில்லை. பலத்தின் அடையாளமாக மிளிர்ந்தார்கள்.

அடர்நிறப் பெண்ணொருத்தி கண்ணில் தீப்பொறி தெறிக்க என்னை நோக்கி வந்தாள். கைத்தறியில் நெய்த அழகான சேலையை உடுத்தியிருந்தாள். அவள் என்னைப் பார்க்க வருவது சாதாரண விஷயமல்ல. ஆரிய சமாஜ் இயக்கத்தில் ஒரு முக்கியத் தலைவராய் இருந்த அவளுடைய தாத்தாவை, மதக் கலவரம் ஒன்றில் முஸல்மான்கள் கொன்றுவிட்டார்கள். அப்படிப்பட்ட பெண்ணொருத்தி, என்னைப்போன்ற ஒரு முஸ்லிம் பெண்ணைச் சந்திக்க வருவது ஆச்சரியமான விஷயம்தானே?

அவளிடம் இதைச் சொல்ல நான் ஏங்கிக் கொண்டிருந்தேன். ‘நல்ல காரியம் செய்தாய், பெண்ணே. உன்னுடைய தாத்தா எங்கிருந்தாலும் மகிழ்ச்சி அடைவார். உன் கோபக் கோடாரிகளை இன்றே புதைத்துவிடு. முஸல்மானோ, இந்துவோ நீ இந்நாட்டின் பிரஜை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வு.’

எனக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் சென்றேன். அங்கிருந்த மாதர் சங்கங்களில் பேசினேன். லேடி இர்வின் கல்லூரிக்கு மட்டுமே என்னால் போதுமான நேரத்தைச் செலவிட முடிந்தது. அது மிக முக்கியமான கல்லூரி என்பதால் அல்ல, அதுவே முதல் முறையாக அமைந்தது. லேடி இர்வின் மிக வசீகரமான, திறன்மிக்க பெண்மணி. இந்தியப் பெண்களுக்கு அவர்மீது அசைக்க முடியாத அன்பு இருந்தது.

அந்தக் கல்லூரி உள்நாட்டு அறிவியலுக்குப் பிரசித்தி பெற்றது. சாதாரண மாணவர்களைத் தாண்டி, திருமணம் முடித்த ஏராளமான பெண்கள் சிறப்பு வகுப்புகளுக்கு வந்தார்கள். இது ஒரு நடுத்தர – மேல் தட்டு நிறுவனம் என்பதால், ஆசிரியர்களும் பல்வேறு பிண்ணனியில் இருந்து வந்திருந்தனர். அந்தக் கல்லூரியின் முதல்வர் பார்ஸி சமூகத்துப் பெண். அமெரிக்கர்களும் கிறிஸ்தவச் சமயப் பெண்மணிகளும் அங்கு ஆசிரியராய் பணிபுரிந்தார்கள். அங்கு உணவுமுறை பற்றி ஆழமான சிந்தனை வலியுறுத்தப்பட்டது. இது எனக்கு அமெரிக்காவை நினைவூட்டுகிறது. இந்தியாவில் இதற்குள்ள முக்கியத்துவம் எனக்கு அப்போது புரியவில்லை.

தவிர்க்க முடியாத பல முக்கியக் கலந்துரையாடலுக்குப் பின்னர், இஸ்லாம் பெண்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்துகொண்டேன். இந்தியா பற்றிய வறுமைப்பாடுகளை நேருக்கு நேர் சந்திக்காமல், அங்கு பரிமாறப்பட்ட கேக்குகளின் ருசியை விலை அறியாமல் சுவைத்தேன். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு விவசாயக் குடும்பம் எத்தனை வேளை உணவு உண்ணலாம் என்பதை நான் சிந்திக்கவில்லை.

தேநீர் பரிமாறப்பட்டது. இஸ்லாமியப் பெண்கள் பாடல் ஒப்புவித்தார்கள். இந்துக் குழந்தைகள் நடனமாடினார்கள். அந்த ஒப்புயர்வான நடனக் காட்சிகள் இன்னும் மனதில் நிற்கின்றன. ஒரு மெலிந்த இந்துப் பெண், கோப்ரா பாம்பைப் போல வளைந்து நெளிந்து சுருண்டாள். கணுக்காலில் அணிந்திருந்த சத்தமான கொலுசின் சத்தம், அவள் உடலோடு சேர்ந்து நாட்டியமாடியது.

இப்போது ஓர் இந்தியப் பெண் எப்படிக் குளிப்பாள் என்று எனக்குத் தெரியும். கறுத்துப்போன மெலிந்த கைகளில் லாவகமாக தண்ணீர் சொறிந்து, உடலை முன் பின்னாக வளைத்து மெல்லமாகத் தேய்த்து குளிப்பது அவர்கள் வழக்கம்.

லேடி ஹார்டிங் கல்லூரிக்கு நான் செல்லாத போதும், அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி அது. அதன் சில மாணவிகள் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களும் நமது நாட்டுக் குழந்தைகளைப் போலவே யதார்த்தமான சாமர்த்திய குணம் கொண்டவர்கள் எனப் பேச்சுக் கொடுத்த கொஞ்ச நேரத்தில் புரிந்தது.

என் முதல் உரையை அங்குள்ள சங்கத்தில் வாசித்தேன். சமூக அடுக்கின் எல்லா வகுப்பைச் சார்ந்த பெண்களும் அதில் கலந்து கொண்டார்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் குறைவு. ஆண்களே இல்லாததால், எல்லாம் புர்கா அணிந்த முகமாய் இருந்தது. அவர்கள் தங்களின் சொந்த சங்கத்தில், ஒரு விஷேசமான நாளைக் கொண்டாட விரும்பினார்கள்.

புர்கா சங்கத்தின் பொழுதுபோக்கு அம்சங்களை இந்துப் பெண்களும் விரும்பிக் களித்தார்கள். என்னை புர்கா சங்கத்தோடு இணைத்தவர், பேகம் முகமது அலி. அவரின் காலம் சென்ற கணவர், இஸ்லாமிய அரசியல் தலைவராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். பேகம், தன் கணவரின் கொள்கைகளுக்கு ஏற்ற பாத்திரமாகத் திகழ்ந்தார். அவரைப் போன்றதொரு திடமானப் பெண்மணியை தேடினாலும் பார்க்க முடியாது.

28 ஆண்டுகளுக்கு முன்பு தன்னைத் தேச கடமைகளுக்காக அர்ப்பணித்துக் கொண்ட துருக்கி நாட்டுப் பெண்களைப் போல அவர் என் கண்களுக்குத் தெரிந்தார். அவசரப் படமாட்டார். பொறுமைசாலி. தனக்கேற்ற நேரத்தில் தான் பெற விரும்பும் மாற்றத்தை மெல்லமாக அடைய விரும்பினார். ஒரு முஸல்மான் பெண் தான் செய்ய விரும்புவதை, புர்காவுக்குள் இருந்தே செய்ய வேண்டும் என்றார்.

அவளின் எண்ணவோட்டத்தில் ஆண் மைய சிந்தனை குடிகொண்டிருந்தது. தானும் புர்கா அணிந்துகொண்டு, 1908ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த துருக்கி நாட்டு மத்திய வர்க்கப் பெண்களைப் போல் நாட்களைக் கழித்தாள்.

ஜாமியா பல்கலைக்கழகக் கருத்தரங்க அறையில் இரண்டுவிதமான பெண் பார்வையாளர்கள் இருந்தார்கள். ஒரு சாரார் ஆண்களோடு சேர்ந்து ஒரே மேஜையிலும், மற்றொரு சாரார் மெலிசான திரைக்கு அப்பால் ஆண்களைவிட்டுத் தனித்தும் இருந்தார்கள். ஆனால் பேகம் முகமது அலி இவ்விரண்டிலும் அமரவில்லை. பின்னாலிருந்த மேடையில் தனியாக உட்கார்ந்திருந்தார். அவரைத் தடை மீறும் பெண்ணென்றோ, எல்லைக்குள் வாழும் பெண்ணென்றோ அடையாளப்படுத்த முடியாது. இரண்டிற்கும் மத்தியில் இருந்தார். அவரின் இருக்கை தேர்வை வைத்தே, நவீன இந்தியாவில் அவர் பெற்றிருக்கும் இடத்தையும் – அவரின் கொள்கையையும் புரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.

புர்கா சங்கத்தைப் பார்க்கும்போது 28 ஆண்டுகளுக்கு முந்தைய துருக்கிதான் ஞாபகத்திற்கு வருகிறது. இவர்கள் அணியும் உடை விடுதலை சங்கத்தை நினைவூட்டினாலும், வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் வேறுமாதிரியானவை. தேசப் பணிகளில் இரண்டறக் கலக்க, நாங்கள் இனி புர்கா அணியப்போவதில்லை என மற்றவரிடம் சொல்கிறார்கள்.

தொழில்முறைப் பெண்கள் கலந்துகொண்டது நவீன காலத்தின் குறிப்பிடத்தகுந்த மாற்றம். ஆனால் அவர்கள் புர்கா சங்கத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். விடுதலைப் பிரகடனத்தை வெளிப்படுத்தும் முன்னர் அதன் நீல அகலங்களை அலசி ஆராயும் கடைசிக் கட்டத்தில் இவர்கள் நின்றுகொண்டிருப்பதாய் தோன்றியது. ஆனால் எந்தப் பெண்ணின் முகத்திலும், வழிவழியாக இருக்கும் ஆணாதிக்கக் கலாசாரத்தை மீறி திரைக்கு அப்பால் சரிசமமாய் ஒளிந்திருக்கும் விநோத உணர்வு தென்படவில்லை.

ஒருவேளை அப்படியிருந்தால், அது அந்தக் கொள்கையின் பால் அவர்களுக்கிருந்த நம்பிக்கையாய் இருக்கலாம். நான் பேசுவதைப் பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல், ‘புர்கா ஒழிப்பு நல்லதா, கெட்டதா?’ என்ற கேள்வியெழுப்பி நான் என்ன சொல்வேன் என்று ஆவலாய் எதிர்ப்பார்த்தார்கள்.

சங்க உறுப்பினர்கள் தங்களால் இயன்ற கொடை உதவிகளை செய்கிறார்கள். வாராந்திர அல்லது மாதாந்திரக் கூட்டங்களோடு சங்க செயல்பாடுகள் முடிந்துவிடுகின்றன. அதுவும் கேளிக்கை மிகுந்த உரையாடல்களாய் அவரவர்களுக்குள் முடிந்துவிடும்.

அங்கு வருபவர்களுக்கு தேநீரோடு சில இனிப்புப் பலகாரங்களும் கொடுக்கப்படும். சங்கத்திற்கு புறம்பான விவகாரமெனில், அவர்கள் பெரிதாய் ஆர்வம் காட்டுவதில்லை. ஜாமியா பல்கலையில் பார்த்த பெண்களைவிட, இவர்கள் பெரிதும் மாறுபட்டிருந்தார்கள்.

புர்கா அணிந்த பெண்கள், தங்களின் நேரத்தையும் பணத்தையும் ஆர்வத்தையும் கொஞ்சம் செலுத்தியிருந்தாலும்கூட, சமூகப் பணிகளில் இஸ்லாமியப் பெண்களைக் கலந்து கொள்ளச் செய்ய ஜாமியா மிகப்பெரிய பங்கெடுத்திருக்கும்.

‘பெரிய அளவிலான சமூகப் பணித் திட்டமொன்று பேச்சு வார்த்தையில் உள்ளது. இதை முனிசிபாலிட்டியோடு சேர்ந்து முடிக்கப் பார்க்கிறோம். இதன் முன்னணியில் மதம் மாறிய கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள். பார்ஸிக்களும், இந்துக்களும், குறைந்த அளவிலான இஸ்லாமியர்களும் அடுத்தடுத்த கட்டங்களில் இருக்கிறார்கள்’ என்றோர் இந்தியப் பெண் சொன்னாள்.

நான் இந்தக் குறையைப் பற்றி ஆழச் சிந்தித்தேன். இதே குறையைச் சுட்டிக்காட்டி இந்திய முஸ்லிம்கள் எண்ணற்ற கடிதங்களை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்களின் ஒட்டுமொத்த சுமையும் இதுதான், ‘கடவுளே! தயவு செய்து புர்காவிற்கு எதிராகப் பேசுங்கள். பெண்களின் எல்லாவித அடிமைத்தனத்திற்கு இதுவே மூலக்காரணம்…’ இவைபோல இன்னும் சில செய்திகள் சொன்னார்கள்.

முந்தைய தலைமுறையின் புர்கா கலாசாரத்தை நேரடியாக எதிர்க்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இளைய தலைமுறைக்கு உதவ வேண்டிய தேவை இல்லாதபோதும், அவர்களுக்காக மன்றாட விரும்புவதே என் நோக்கம். பார்வையாளர்களிடம் விசித்திரமாய் நான் அடையாளம் காணப்பட்டேன். ஆக்ரோஷம் பொங்க, மிக வெளிப்படையாய் என் சொந்த சகோதர சகோதரிகளிடம் பேசுவது போல உரையாடினேன்.

எல்லா நேரத்திலும் என் மனம் ஒற்றைச் சொல்லிக் கொண்டே இருந்தது. இந்த அரங்கத்தைச் சரிபாதியாகப் பிரித்து, கைத்தறி நெசவு இயந்திரங்களைப் பொருத்தி, நேரமொதுக்கும் பெண்களுக்கு வேலை – அறை ஒன்றை இங்கு தயார் செய்யலாம். குழந்தைகள் விளையாடுவதற்கு வெளியே உள்ள பூந்தோட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓய்வெடுக்கும் ஒன்றிருவர் குழந்தைகளை அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டால் போதும். இந்தத் திட்டத்தை ஏழைகளும் உடுத்த உடையில்லாத பெண்களும் பெருமளவில் வரவேற்பார்கள். சம்பாத்தியமாக பணம் காசு தராவிட்டாலும், உடுத்துவதற்கு உடையாவது மிஞ்சுகிறதே!

மாடியில் சிறிய அளவிலான ஒரு கிளினிக் தொடங்கலாம். முனிசிபாலிடி மருத்துவமனைக்குச் செல்ல மாட்டேன் என்று வீம்புப் பிடிக்கும் பழமை ஊறிய ஏழைகளும் நோயாளிகளும் இதைப் பயனுடையதாய் கருதுவார்கள்.‌ குழந்தை வளர்ப்பு பற்றி செயல்முறை வகுப்பெடுக்க பிரிதொரு ஏற்பாடு செய்யலாம். ஹூம், குழந்தை வளர்ப்பதில், கிழக்குவாசிகளுக்கு உள்ள அறியாமையை கடவுள்தான் அறிவார்!

நான் பேசிக்கொண்டு இருக்கும் இந்த இடத்தில், வயது முதிர்ந்த பெண்களுக்கு மாலை நேர வகுப்புகள் தொடங்கலாம். கல்லூரி படிப்பு முடித்த ஏராளமான முஸ்லிம் பெண்கள், இந்த வேலைக்கு தயாராய் இருக்கிறார்கள். ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று அவர்களை நோக்கி கேட்கிறேன். ‘இத்தனை அழகான ஆடை அணிந்துகொண்டு கற்பிக்கவோ, வேலை செய்யவோ, உதவி செய்யவோ முன்வராமல் வெறுமனே அமர்ந்து கொண்டு காலம் கழிப்பதால் என்ன பலன்?’. இத்தனை விலையுயர்ந்த உணவுகள் எதற்கு? ஜாமியாவில் படிக்கும் எண்ணற்ற ஏழைக் குழந்தைகளின் சாப்பாட்டு செலவைக் கணக்கிட்டு, அதற்காவது பிரயோஜனப்படுத்தலாம் அல்லவா?”

நான் பேசிய கடுஞ்சொற்களை, அவர்களின் சகோதரத்துவத்தாலும் அன்பு மிகுதியான பாசத்தாலும் கற்கண்டாய் ஏற்றுக் கொண்டார்கள். இறுதியாக சுவரில் அலங்கரிக்க என் புகைப்படம் ஒன்று வேண்டுமென கேட்டார்கள். பள்ளி ஆசிரியைப் போல் புன்முறுவல் பூத்த ஒரு படத்தை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு வந்தேன். நான் அன்று சொல்லத் தவறிய பல செய்திகளை, இன்றும் அந்தப் படம் அவர்களுக்கு ஞாபகப்படுத்தும் என நம்புகிறேன்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர். இதுவரை இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார். வரலாறும் இலக்கியமும் இவருடைய விருப்பத்துக்குரிய துறைகள்.View Author posts

1 thought on “நான் கண்ட இந்தியா #6 – சரோஜினி நாயுடுவும் சில இந்தியப் பெண்களும் #2”

  1. பெயரளவில் மட்டுமே நான் அறிந்திருந்த சரோஜினி தேவியின் சித்திரம் மிக நேர்த்தியாக வெளிப்பட்டது. நன்றிகள் உங்களுக்கு 🌹

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *