மகாத்மா காந்தியை முதன்முதலாகச் சந்திக்கக் கிளம்பினேன். அவர் இந்தியப் பண்பாட்டின் அடிநாதமாகவும் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதியாகவும் எனக்குத் தெரிந்தார். என் ஆழ்மன எதிர்பார்ப்புகள், அந்தப் பயணத்தை மேலும் உணர்ச்சிவயப்படுத்தின.
ஒரு சிறிய எரிபொருள் நிரப்புமிடத்தில் கொஞ்ச நேரம் காத்திருந்தோம். பேராசிரியர் மல்காணியை அங்குதான் சந்தித்தோம். அவர் இந்து சமூகத்தில் தீவிரமாகப் பணியாற்றிவரும் எழுத்தாளர். அத்தோடு தீண்டாமை ஒழிப்புச் சங்கத்தின் கூடுதல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்து மதம் பற்றி என் அப்போதைய புரிதல்களை அவர் கனிவாய் கேட்டுத் தெரிந்து கொண்டதால், உவப்பளிக்கக் கூடிய உதவிகரமான சந்திப்பாக அது இருந்தது.
பின்னர் ராஜ வீதியின் மரங்கள் அடர்ந்த சாலையில் எங்கள் கார் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. கப்பலில் பயணித்தபோது நான் கண்ட அதே இந்திய வானின் தெளிவான காட்சியை இப்போது பார்க்கிறேன். பாரசீக வானில் சீராக மெருகேற்றப்பட்டதைப் போல், இந்திய வானத்தின் ஒருபாதி பொன்னிறமாய் காட்சி தந்தது. மற்றொரு பாதியில் நீல நிற வானம் முழுக்க மிருதுவான வெண்ணிற மேகங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன.
அடர்ந்த மரங்களின் வலப்பக்கமாய் பார்த்தால், அரை நிர்வாண கோலத்தில் சிலர் இருந்தார்கள். பிணத்தை வெள்ளைத் துணியால் போர்த்தி, தோளில் சுமந்துகொண்டு போனார்கள். ஒரு ஏழையின் இறுதி ஊர்வலம் அது. எங்கள் கார் திறந்தவெளியில் இருந்த இரண்டுமாடிக் கட்டடத்தை நெருங்கியதும், நாங்கள் இறங்கிக் கொண்டோம். அந்த வீட்டின் மாடியில் காங்கிரஸ் கொடி பறந்தது.
நெடிய பரப்பை எதிர்கொண்டபடி அந்த வீட்டின் வாசற்கதவு பின்பக்கமாய் இருந்தது. தூரத்தில் நெருப்புமூட்டும் வெளிச்சமும், சில வெள்ளை நிறத்தினர் நடமாடுவதும் தென்பட்டன. வீட்டின் முன் விசாலமான தாழ்வாரம் இருந்தது. அங்கிருந்து மகாத்மா காந்தியின் அறை உட்பட, முதல் தளத்தில் உள்ள எல்லா அறைகளுக்கும் செல்லலாம். அவரின் அறை சற்றே பெரிதாக, கான்க்ரீட்டால் மெழுகப்பட்டிருந்தது. வாசலை அடுத்த மூலையில் ஒரு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. தரையில் மெத்தை பொருத்தப்பட்டு, பழங்கால துருக்கியில் பயன்படுத்துவது போன்ற உயரம் குறைந்த மேஜை ஒன்று இருந்தது. புத்தகங்களும் தாள்களும் மேஜை, மெத்தை முழுக்க சிதறிக்கிடந்தன. அந்த மெத்தையில் மகாத்மா காந்தி உட்கார்ந்திருந்தார்.
நான் பார்த்த இந்துக்களின் அதே முகம். ஆனால் மர்மமாகவோ புதிர் நிறைந்தோ இல்லை. இவரின் சாந்தமான, முக்கோண வடிவ, அடர்நிற முகத்தைக் காட்டிலும் வேறு எந்த முகமும் இத்தனை நேர்த்தியாக இருக்காது. பெரிய வாய். பெரும்பாலும் பற்கள் இல்லை. முன்வரிசையில் ஒரேயொரு பல் தொடுத்துக் கொண்டிருந்தது.
உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கிடந்தன. ஆனால் அது முரட்டுத்தனமாகவோ முதுமையை மறைக்கும் உத்தியாகவோ தெரியவில்லை. அவரின் நீண்ட மூக்கு உதடுவரை வளைந்திருந்தது. நகைச்சுவையாகப் பேசி எளிதில் மகிழ்ச்சி அடையும் மனிதராக இருப்பாரோ என எண்ணத் தூண்டியது.
முதலில், அவர் முகம் இறுக்கமாய் தெரிந்தது. குழிவிழுந்த கண்கள் நுட்பமாகவும் ஆழமாகவும் ஒருவகையில் மங்கோலிய முகங்களைப்போல், குறுகலாய் இருந்த நெற்றியை நோக்கிக் குவிந்ததுபோல் இருந்தன. ஆனால் இமை மூடித் திறப்பது மங்கோலிய பாணியில் அல்ல. உயர்ந்த புருவங்களை நோக்கி, மென்மையான இமைகள் மூடித் திறப்பது இந்துவுக்கே உரிய அசல் சுபாவம்.
தன் முகத்தை அவர் முன்னோக்கிக் குனிந்தபோது, வழுக்கைகூடிய தலையில் சுருள் விழுந்த ஒரு உச்சிக்குடுமியைப் பார்த்தேன். இது இந்துக்களின் புனிதமான பழக்கம் என்று நினைக்கிறேன். ஆனால் அனட்டோலியாவில் வசிக்கும் ஆண்கள், மழித்தெடுத்த தங்கள் தலையிலும் இதே மாதிரியான குடுமி ஒன்றைப் போட்டுக் கொள்கிறார்கள். இது அவர்களின் மத சம்பிரதாயத்துக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத ஒன்று. குனிந்த நிலையில் அவரைப் பார்க்கும்போது, செங்கிஸ்கானின் படமொன்று நினைவுக்கு வருகிறது. அதே வழுக்கைத் தலை, அதே உச்சிக்குடுமி, அதே குறுகலான மங்கோலிய நெற்றியின் சாயல் நிறைந்த முகம்.
இன்னொரு மூலையில் பெண்கள் பலர் ஒன்றுகூடி உட்கார்ந்திருந்தனர். பூமத்திய ரேகைக்கும் துருவத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல், இரண்டு மூலைக்கும் இடையே உணர்ச்சிவயமான பெரும் வேறுபாடு இருந்தது. பெண்கள் இருந்த பகுதியில் கும்மாளமும் உணர்சிமயமும் நிறைந்துகாணப்பட்டது. சிரித்து சிரித்து வயிறு புண்ணானதுபோல் சில பெண்களின் முகம் தென்பட்டது. ஆனால் காந்தி இருந்த மூலை, மத்தியதரைக்கடலில் வீசும் ரம்மியமான குளிர் காற்றுபோல மென்மையாய் இருந்தது.
‘அவர் ஒரு வசீகர ஆளுமை. அவருடன் நட்பு பாராட்டும் எவரும், தன் தெளிவான முடிவெடுக்கும் திறனை இழக்கிறார்கள். அவரைப் பற்றி அறிந்த ஒவ்வொருவரும், அவர் குறித்து மிகவும் உணர்ச்சி வயப்படுகிறார்கள். அவர்களிடம் அவர் குறித்த விமர்சனப்பூர்வமான பார்வை இருப்பதில்லை’ என்று காந்தி பற்றி ஆங்கிலேயர் உட்பட பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
‘இந்த மக்களை உணர்ச்சியால் வசீகரிக்க முடிகிறதென்றால், இவர்கள் உனர்ச்சிகளுக்கு அடிமைப்படக்கூடியவர்களாக உண்மைக்கு மாறாய் உணர்ச்சியைத் தேடுபவர்களாகவும் இருக்க வேண்டும்’ என்று நான் அங்கு உட்கார்ந்திருக்கையில் யோசித்தேன். எனக்குத் தெரிந்தவரை உணர்ச்சிவயப்படுபவர்களை ஈர்த்து, தன்னைச் சுற்றியொரு கற்பனையான மர்மத்தை உருவாக்க எந்த ஒன்றையும் செய்யாத எளிய மனிதராகவே மகாத்மா காந்தி இருந்தார். அவரின் மத இயல்பை மறுக்கமுடியாது. அவர் பேசும் சில உரைகளைக் கேட்டால், தேர்ந்த ஆன்மீகவாதியோ என்ற எண்ணம் மேலெழும்.
அவரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தீர்க்கமான மனதோடு நான் அங்கு சென்றேன். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கவில்லை. எனது ஐரோப்பிய பிரசாரங்கள் அடிப்படையிலன எவ்வித முன் அபிப்பிராயங்களுக்கும் இடங்கொடுக்கக்கூடாது எனத் தீர்மானித்திருந்தேன். இங்கிருப்பவர்கள் போல அனுதாபத்துக்கோ போற்றுதலுக்கோ ஆட்படக்கூடாது என்றும் முன்னெப்போதையும்விடத் திடமாகச் சொல்லிக்கொண்டேன்.
இருபதாம் நூற்றாண்டு வரலாற்றில், இவரொரு மிக முக்கிய ஆளுமை என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். முடிந்தவரை ஒவ்வொரு விஷயத்தையும் உண்மைக்கு நெருக்கமாக, நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று முடிவுசெய்தேன்.
நாங்கள் உரையாடுவதை, மகாதேவ் தேசாய் குறிப்பெடுக்கத் தொடங்கினார். தேசாய், காந்தியின் தனிப்பட்ட உதவியாளர். காந்தியோடு பேசிய அனைத்து உரையாடல்களும் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன. காந்திய இயக்கம் பற்றி பின்னர் பேசுகையில், நான் அவற்றை மேற்கோளிட்டு விவரிக்கிறேன்.
தேசாய் தன் சுயத்தைக் காட்டிக்கொள்ளாத, அடக்கமான மனிதர். குறிப்பெடுக்கையில் ஒன்றைக்கூட விட்டுவிடக்கூடாது என மிகக் கூர்மையாய் கவனித்தார். இந்த இயக்கத்தைத் தாண்டி அவருக்குத் தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது.
மகாதேவ் தேசாய் சற்றே உயரமான மனிதர். வயது நாற்பது இருக்கும். மென்மையான உதடுகளும், ஆன்ம ஒளிபொருந்திய கண்களும் வாய்த்த, சாதாரண மனிதர். அவரிடம் சமய பக்தி மேலோங்கியிருந்தாலும், எடுத்த காரியத்தை முழுமையாக முடிக்கும் பண்பாளர். சரியாகத் திட்டமிடாத பணிகளை அவரால் ஒருபோதும் செய்ய முடியாது. தன்னுடைய சக்திவாய்ந்த, உணர்ச்சிகரமான குணாம்சத்தால், சகலத்தையும் தன் கைக்குள் வைத்திருந்தார்.
மகாத்மா மீது அவர் கொண்டிருந்த போற்றுதலும், பக்தியும், அன்பும் முழுக்க முழுக்க விசுவாசம் சார்ந்தது. தன் எஜமானின் பின்னிருந்து, எப்போதும் அவர் அழைப்புக்காகக் காத்திருக்கிறார். கடந்த பதினாறு ஆண்டுகளாக, இந்த இயக்கத்தில் ரத்தமும் சதையுமாய் உழைத்து வருகிறார். சிறு வயதிலேயே துறவறத்தில் ஆசைகொண்டு மிகவும் குறுகலான கடினமான பாதையைத் தேர்ந்தவர்.
மகாத்மா காந்தியின் வாராந்திர பத்திரிகை ‘ஹரிஜன்’-ல் இவர் தான் மெய்ப்புத் திருத்துகிறார். செயலாளர் பணிகள் அனைத்தையும் செய்கிறார். சுத்தம் செய்வது, பாத்திரம் விளக்குவது உட்பட. இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, தூர கிழக்கு நாடுகள் என உலகம் முழுவதிலுமிருந்து ஆட்கள் வந்து போய்க்கொண்டே இருப்பார்கள். மகாத்மா காந்தியைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்படியான சூழலில் இருந்துகொண்டு தன் அறிவுஜீவிப் பணியை மட்டுமே செய்து வருவது மிகவும் கடினமானது. கடுமையாக ஒழுங்கு இருந்தால் ஒழிய அது சாத்தியமே இல்லை.
கதவு திறந்துகொண்டே இருந்தது. விதவிதமான ஆடைகள் அணிந்த மனிதர்கள் உள்ளே வந்து, கம்பளத்தின் விளிம்பில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தார்கள். பின்னர் ஒரு மூலையில், முட்டியில் கைவைத்து தியானம் செய்வதுபோல் உட்கார்ந்தார்கள். காங்கிரசின் சில பழக்கப்பட்ட முகங்கள் அதில் தெரிந்தன. முக்கிய அங்கத்தினர்களும் அறிவுஜீவிகளும் ஆன்மீகவாதிகளும் அங்கு வந்தார்கள்.
இப்படி வணங்கும் முறையை மேற்குலகக் கண்களில் பார்த்தால் அடிமைத்தனமாகத் தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. கிழக்கில் சமய ரீதியான நம்பிக்கைக்கு உரிய மனிதர்களை, இப்படித்தான் வணங்குகிறார்கள். நவீன அறிவியல், பொருள்முதல்வாத, மேற்கத்திய கல்விகளில் இருந்தும் இந்தப் பழக்க வழக்கம் தாக்குப்பிடித்திருப்பதுதான் ஆச்சரியம். இங்கு எல்லோரும் மகாத்மா காந்தி என்ற ஆளுமைக்குள் இரண்டறக் கலந்துள்ளனர். காந்தி சிறிதளவே பேசினார்.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.