Skip to content
Home » நான் கண்ட இந்தியா #8 – ‘ரகுபதி ராகவ ராஜாராம்’

நான் கண்ட இந்தியா #8 – ‘ரகுபதி ராகவ ராஜாராம்’

காந்தி

சிலர் காந்தியின் ஆலோசனைக்காகவும், தன் புதிய முயற்சிக்கு ஆசிர்வாதம் பெறவும், தாங்கள் செய்யப்போவதை அவரிடம் சொல்லிப் போகவும் வந்திருந்தனர். அவரைச் சந்திப்பதற்கும் உரையாடுவதற்கும் எண்ணிலடங்காத காரணங்கள் இருந்தன. அவருக்குத் தெரியாமல் பெரும்பாலான இந்துக்களும் கணிசமான முஸ்லிம்களும் எதுவும் செய்ய முடியாது. மகாத்மா காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், இது அவரின் அரசியல் வாழ்க்கைக்குப் பொருந்தும்.

காந்தியிடம் ஆலோசிப்பதற்கான பொதுவான காரணம் அவரைச் சுற்றியுள்ள மாயமான ஆன்மிகத் தோற்றமோ தீர்க்கதரிசியாக முன்முடிவெடுக்கும் ஆற்றலோ எதுவாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அவரின் நேரமும் சக்தியும் அதிகமாக உறுஞ்சப்படுகின்றன. அவர் மிகவும் சிக்கனமாகப் பேசுவதுகூட, அன்றாடம் பேசி அலுத்துப்போனதன் அடையாளமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளரை அவர் வரவேற்க இருந்ததால் நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். தாழ்வாரத்தில் இறங்கி, கூட்டு வழிபாட்டில் அவரோடு கலந்துகொள்ளக் காத்திருந்தோம்.

டாக்டர் கியூர் படிகளில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஓர் இளம் செக் நாட்டு வானியல் அறிஞர். நட்சத்திரங்கள் வெண்மேங்களுக்கு இடையே கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன. வெள்ளைத் திரைச்சீலைக்கு அருகே நின்று இந்தியர்கள் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அங்கும் இங்கும் நடந்தார்கள்.

அந்த அறிஞர் தன் வசீகரமான குரலில் உணர்ச்சிப்பூர்வமாய் பேசத் தொடங்கினார். அவரின் முணுமுணுப்பில் ஆழமிருந்ததால் தூரம் தாண்டியும் என் காதில் கேட்டது. அவரின் உச்சரிப்பு தெளிவாக, தான் சொல்லப்போவதை அழுத்தமாக உணர்த்தும் தொனியில் இருந்தது. ராணுவ அதிகாரி படைவீரர்களுக்குக் கட்டளையிடும் ஒப்பீட்டை இது எனக்கு ஞாபகப்படுத்துகிறது.

‘லட்சோபலட்சம்… நினைத்தும் பார்க்கமுடியாத நீண்ட இடைவெளி… சொல்ல முடியாத நெடுந்தூரம்… எல்லையற்ற கணக்கு வழக்கு…’ என்று பிரபஞ்சத்தின் கால, தூரங்களை வைத்து ஆன்மிக அசைவுகளை அவர் விளக்க முயன்றார்.‌ இந்த அந்நியமான, நடுக்கமுற்ற முணுமுணுப்பை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.

இவ்வாறிருக்கையில் இடது பக்கம் விரிப்புகள் வீசப்பட்டன. ஆண்களும் பெண்களும் விரிப்புகளை நோக்கி நகர்ந்து, வரிசையாக உட்கார்ந்தனர். தாய்மார்கள் தங்கள் குழுந்தைகளை விரல் பிடித்து அழைத்தும், இடுப்பில் சுமந்தும் வழிபாடு நடக்கும் இடத்துக்குக் கூட்டி வந்தார்கள். கொஞ்ச நேரத்திலெல்லாம் அரை வட்ட வடிவத்தில் ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது.

எதிர்முனையில் சில கம்பளங்கள் விரிக்கப்பட்டன. வானம் பொன்னிறத்தில் இருந்து சிவப்பு நிறத்துக்கு மாறிவிட்டது. முன்னர் புகை விட்டுக்கொண்டிருந்த நெருப்பு, இப்போது இருளை உண்ணும் அக்னியாக ஆட்டம் போட்டது. நானும் அந்த விரிப்பில் உட்கார்ந்தபின், மணியடித்து ஒலி எழுப்பினர். தாழ்வாரப் படிகளில் இருந்து மெல்ல இறங்கிவந்த மகாத்மா, கூட்டத்தின் மத்தியில் வந்து உட்கார்ந்தார்.

குழந்தைகள் அங்கிங்கும் ஓடி கிசுகிசுத்தார்கள். தாய்மார்கள் அதட்டியும் விரல் பிடித்தும் அமைதிப்படுத்த முயன்றனர். அந்தச் சிறு குழந்தைகளின் மகிழ்ச்சியில் ஏதோ ஒன்று தொற்றிக்கொண்டது. பெரியவர்களைவிட அங்கு என்ன நடக்கப்போகிறது என்பதைக் குழந்தைகள் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள். மொத்தக் கூட்டமும் குழந்தைத்தனமான எளிமையுடன் மௌனமாக இருந்தது.

எனக்குப் பின்னால் ஒரு அம்மா தன் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார். மார்பிலிருந்து பாலை உறிஞ்சி, சப்புக் கொட்டி முழுங்கும் சத்தம் நன்றாகக் கேட்டது. எதிரிலிருந்து வயது முதிர்ந்த பண்டிதர், சித்தாரின் நரம்பை மீட்டினார். ஜாமியாவில் பார்த்த சில முகங்களை என்னால் இங்கு அடையாளம் காண முடிந்தது.

இந்த நேரத்தில் மகாத்மா காந்தியின் சலனமற்ற உடலுக்கு பதிலாய், அந்தச் சூழல்தான் கூட்டத்தை கட்டுப்படுத்தியது. அவரும் இதில் ஓர் அங்கம், அவ்வளவுதான். இருந்தாலும் நான் அவரைப் பார்த்தேன். சில விசித்திரமான ஒளிகளாலோ அல்லது அவரின் மெலிதான தோள்களாலோ, காந்தியின் ஆடை இரண்டுபக்க தோள்களிலும் கூர்மையாகச் சரிந்து நின்றது. அவரின் முழு உருவத்தையும் ஜியோமெட்ரிக்கல் வடிவங்களாக நான் பார்த்தேன். வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு, கூர்மையான தோள்களை உடைய, அசையாத புத்தரைப் போல் அவர் தெரித்தார்.

‘ரகுவார் தும்கோ மேரி லாஜ்…’ என்று சித்தாரை மீட்டிக்கொண்டே அந்தப் பண்டிதர் பாடினார். நரம்பின் இசையில் மொத்தக் கூட்டமும், அந்த ஒட்டுமொத்த இடமும், புத்தர்போல் காட்சிதந்த மகாத்மா காந்தியும் இரண்டறக் கலந்தார்கள். இப்படியொரு இசையை நான் என் வாழ்க்கையில் கேட்டதில்லை. பீத்தோவன் சில நேரங்களில் உயரத்தை அடைந்தாலும், அங்கு ஒருவர் உணர்ச்சியால் துன்புறுத்தப்படுவதில்லை. அது ஓர் அமைதியான அறிவாற்றலால் நிலைபெறுகிறது. இந்த ராகத்தில் உணர்ச்சியின் தொல்லை இல்லாததோடு, உடலில் இருந்து நம் ஆன்மா விடுபடுகிறது. ஆச்சரியம் கொள்ளத்தக்க ஆன்ம பேரானந்தத்தை அடையாமலேயே ஒருவரால் தன் உடலிலிருந்து விடுதலைப் பெற முடிகிறது. எல்லாவித தொல்லையிலிருந்தும் விடுபட்டு, கடந்தகாலத் துன்பங்களை மறந்து சுயநினைவற்று மகிழ்ச்சி கொள்ளத் தூண்டுகிறது.

இந்த ராகமும் பாடலும் மிகப் பழையவை. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துளசிதாசர் என்னும் இந்துக் கவிஞரால் இயற்றப்பட்டது. இதை எனக்கு மகாதேவ் தேசாய் மொழிபெயர்த்துச் சொன்னதும் மிகப் பரிச்சயமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுக்கு முன் தோன்றிய, இஸ்லாம் மார்க்கத்தின் மீட்புப் பிரார்த்தனையும் இதுபோலத்தான் இருக்கும்.

‘ஓ ரகுவரா! உனது அவமானம் எனக்கும் அவமானமே! நான் எப்பொழுதும் உன் பாதுகாப்பைத் தேடிச் சரணடைகிறேன். பலவீனமானவர்களைப் பாதுகாக்க நீ உற்ற துணையாய் இருக்கிறாய்! பாவிகளைக் காப்பாய் என்று உன்னைப்பற்றி சொல்கிறார்களே, நான் ஒரு பழம்பாவி. என் கப்பலை கரை சேர்க்க மாட்டாயா…’

இந்த வார்த்தைகள் இசையோடு பொருந்தவில்லை. ஆனால் அந்த ராகம் எல்லாத் துன்பங்களிலிருந்தும் ஒருவரை மீட்கிறது. மாலைநேரப் பிரார்த்தனையில் அங்கு சில பகவத் கீதை வசனங்கள் சொல்லப்படுகின்றன. அதே ரம்மியமான சூழலில் இந்தப் பாடலைக் கேட்கும்போது, சொல்லொணாத உணர்ச்சி பீறிட்டுக் கிளம்புகின்றன.

‘எவனொருவன் பற்றுகளில் இருந்து விடுபட்டு, எதற்கும் ஆசைப்படாமல், ‘நான்’, ‘எனது’ என்ற எண்ணங்களில் இருந்து விடுபடுகிறானோ அவனே சாந்தி அடைகிறான். கடலில் நீர் குறைந்து மீண்டும் நிறைத்தாலும் அவை வழிந்து போவதில்லை. அதுபோல ஏக்கங்கள் தணிந்து மீண்டும் நிரம்பினாலும், அதன் அளவை கட்டுப்படுத்தத் தெரிந்தவன் சாந்தி அடைகிறான்…’

அந்த ராகம் ஒலிக்கும்போது, எவனொருவனும் மற்றொரு உயிருக்கு தீங்கு நினைக்கவோ குறைபாடு காணுவோ முடியாது.

‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று பண்டிதர் பாட,
‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று மக்களும் பாடினர்.
‘பதித பாவன சீதாராம்’ என்று பண்டிதர் பாட,
‘பதித பாவன சீதாராம்’ என்று மீண்டும் மக்கள் பாடினர்.

அங்கு பலவிதமான இசைக்கருவிகள் இருந்தன. ஆண்கள் தாளத்துக்கு ஏற்ப விரலை முன்பின் ஆட்டி தொடையில் தட்டினார்கள். பெண்கள் இடம் வலமாகச் சுழன்று, உணர்ச்சிப் பொங்க நேர்த்தியாகப் பாடினார்கள். ‘ஜெய்ராய், ஜெய்ராம், ஜெய் ஜெய்ராம்’ என்று பண்டிதரும் மக்களும் ஒன்றுகூடி பாடி திடீரென நிறுத்தினர்.

சலசலப்போடு கூட்டம் எழுந்தது. கிசுகிசுக்கும் குழந்தைகளைப் பெண்கள் தூக்கினார்கள். ஆண்கள் ஆடையைச் சரி செய்தார்கள். காந்தி நகர்ந்து கொண்டிருக்கும் தாழ்வாரப் படிக்கட்டுகளை நோக்கி, எல்லோரும் வேகமாய்ப் பாய்ந்தார்கள். பெருகும் கூட்டத்தால் அவர் வழிமறிக்கப்பட்டார். தங்கள் குழந்தைகளை அவர் காலடியில் கிடத்தி ஆசிர்வாதம் வாங்க சில தாய்மார்கள் முயன்றார்கள். இன்னும் சிலர் குழந்தைக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்கும்படி அவரிடம் மன்றாடி நின்றார்கள்.

நாங்கள் வெட்டவெளியில் நின்றோம். மேகங்களில் இருந்து நிலா மேலெழும்பி வந்தது. இறுக்கமாய் கோட் அணிந்த ஜாமியா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் காந்தி தொப்பியில் நன்றாக அடையாளம் தெரிந்தார்கள். வஸ்திரம் அணிந்த வேறு சிலரையும் ஒருவாறு யூகித்து அடையாளம் காணலாம். இதுதான் இந்து – முஸ்லிம்களுக்கு இடையே உள்ள அடிப்படையான வித்தியாசம். இந்து மதத்துக்கு மிக நெடிய வரையறை இருப்பதால், எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் இஸ்லாம் நன்றாக வரையறுக்கப்பட்டது. மிகச் சிறியது.

‘நீங்கள் அப்படிச் சொல்லவில்லையே’ என்று தன் முழங்கால்களைத் தழுவி, பாதத்தில் முத்தமிடும் பெண்களை நோக்கி, ‘இப்போ… இப்போ… இப்போ… சொல்கிறேன்’ என்று காந்தி மறுத்துக் கொண்டிருந்தார். நான் நின்ற இடத்திலிருந்து பார்த்தால் அது அப்படித்தான் தெரிந்தது. காந்தி மகிழ்ந்தார். இருந்தாலும் மனித மனத்தில் குடிகொண்டுள்ள, குறிப்பாக இந்து சமயத்தில் ஆழ வேரூன்றியுள்ள உருவ வழிபாட்டை நிந்திப்பதற்காக அவர்களிடம் கடிந்துகொண்டிருக்கலாம்.

இது அனைத்து மத வழிபாட்டுக் கூட்டம். ஆனால் வழிபாட்டுக்கு முன்னரும் பின்னரும், தங்களின் தனித்த மத அடையாளங்களால் வேறுபட்டுத் தெரிந்தனர். எப்போதும்போல் இந்துக்கள் பெரும்பான்மையாகவும் முஸ்லிம்கள் குறைவாகவும் இருந்ததை சொல்லவேண்டியதில்லை. ஆனால் பண்டிதர் பாடத் தொடங்கியபோது, தங்களுக்குள் எவ்வித வேற்றுமையும் இல்லாதபடி ஒன்றுகூடி அமர்ந்தார்கள்.

நான் சொல்கிறேன் :

‘நாம் ஒன்றாக உணவு உண்டு, பாட்டு பாடி, சேர்ந்து விளையாடுவோம்; அதே சமயம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றுசேர்ந்து பிரார்த்தனை செய்வோம். அந்த ஒரு கணத்தில்தான், கையில் ஆயுதம் ஏந்தாமல் நாம் ஒன்று கூடுகிறோம். ஒன்றுகூடி பிரார்த்திப்பதால், நம் கவலையெல்லாம் ஒட்டுமொத்தமாய் அழிந்துவிடும்…’

இதை நான் உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு மாலையும் இதே பொன்னிற வானம் உருகி, மெல்ல மெல்ல நட்சத்திரங்கள் தோன்றி மேகத்தோடு கண்ணாமூச்சி ஆடும். புறப்படும்போது தீயின் நாக்குகள் இருளைத் தின்று தீர்ப்பதைப் பார்த்தோம். தீயின் கரும்புகை காற்றில் மிதிப்பதைப் போல், அவசர அவசரமாய் மக்கள் கூட்டம் வெளியேறிக் கொண்டிருந்தது.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *