நான் முதன்முதலில் கிராமத்தில் நுழைந்தபோது, இந்தியக் கிராமங்களின் விவரிக்காத முடியாத பஞ்சமும் பட்டினியும் அளவுக்கு மீறி விதந்து சொல்லப்பட்டதாய் தோன்றியது. குறுகலான அழுக்கடைந்த வீதிகளில் இருள் கவ்விய வீடுகள் இருப்பது கிழைத் தேசத்தில் சகஜமான ஒன்றுதான். கால்நடைகள் அவ்வளவாக இல்லை. இருந்த ஒன்றிரண்டும் உணவு போதாமல் வத்தலும் தொத்தலுமாய் உடல் மெலிந்து கிடந்தன. இந்தியாவில் மனிதர்கள்கூட இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.
ஆனால் இன்று அவர்கள் பண்டிகைப் போதையில் மிதந்து கொண்டிருந்தார்கள். குழி விழுந்த கன்னங்களோடும், தள்ளாடும் உடல்களோடும், வயது முதிர்ந்த பலவீனமான கிழவர்கள் கண்ணில் ஒளித்தெறிக்க உற்சாகத்தோடு காத்திருந்தார்கள்.
‘அவை எல்லாம் அரிஜன கிராமங்களா?’
‘இல்லை. அங்கு அரிஜனக் குடியிருப்பு ஒன்று இருக்கிறது.’
‘அப்போது எல்லா மக்களும் சேர்ந்து வசிக்கிறார்களா?’
‘உண்மையில் இங்குக் குடியேற விரும்பும் கிராமத் தொழிலாளர்கள் அதைத்தான் செய்ய முயல்கிறார்கள். பள்ளிக்கூடங்களைத் தாண்டி நிறைய சொல்லித்தர விரும்புகிறார்கள். ஏராளமான கிராமங்களில் கிணறு, தொட்டி, கோயில் என பொது இடங்களில் அனைவரும் புழங்குகிறார்கள். சமூகத்தில் எல்லாவித மக்களும் இங்கு சேர்ந்து வசிக்கிறார்கள்.’
கோயில் நுழைவு என்பது அசாத்திய காரியம் என்பதை நான் புரிந்துகொண்டேன். இந்தச் சட்டம் உயர் சாதி இந்துக்களுக்கு சாதகமாய் இருந்தது. அவர்கள் ஒருமனதாக முடிவெடிப்பதில்தான் அரிஜன மக்கள் கோவிலுக்குள் நுழைவது சாத்தியப்படும்.
நாற்கோண வடிவில் கட்டப்பட்ட ஒரு வீட்டின் மாடியில் மகாத்மா காந்தி உட்கார்ந்திருந்தார். கீழே இருந்த மக்கள் திரளை அங்கிருந்தபடி பார்த்தார். முதல் வரிசையில் குழந்தைகள் இருந்தார்கள். அருகில் இருந்த ஒருவரிடம் அமைதி இழந்தபடி, காந்தி எதையோ பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் குரலில் நடுக்கம் இல்லை, சீராக இருந்தது.
‘காந்தி ஏன் இத்தனைப் பரிதாபகரமாய், கிளர்ச்சி அடைந்தார்போல் காணப்படுகிறார்?’ என அருகில் இருந்தவரிடம் கேட்டேன்.
‘அந்த மனிதர் ஆரிய – சமாஜ் போதகரை கண்டபடி வசைபாடுகிறார். அதான் காந்தி இப்படி களேபரமாய் தெரிகிறார்’ என்றார்.
‘ஏன்?’
‘ஏனென்றால் அந்த மனிதர் கிராம மக்களிடையே குழப்பத்தை விதைக்கிறார்.’
காந்தி உரையாற்றி முடித்ததும், மக்கள் தாம் செய்து வைத்திருந்த விஷேசமான கைவினைப் பொருட்களை காந்தியிடம் காண்பிக்க கொண்டுவந்தார்கள். அதில் எல்லாவிதமான ஆடைகளும் இருந்தன. கால்மிதிகளும், தோலால் செய்யப்பட்ட பொருட்களும் நிறைய இருந்தன.
காந்தி இப்போது அவர்களின் பணிமனையைப் பார்வையிடச் சென்றார். அந்தக் கிராமங்களில் வாய்க்கும் நீர் வசதியைக் கருத்தில் கொண்டாலும், பணிமனைகள் மிகத் தூய்மையாக இருந்தன. கைராட்டையிலும் தறி இயந்திரத்திலும் வழக்கத்திற்கு மாறாய் அதிக நேரம் எடுத்துக் கொள்வார் என நினைத்தேன். ஆனால் என் கணிப்பு தவறாகிப்போனது. தோல் பதனிடுதலை அதிக நேரம் உற்றுப் பார்த்தார். அது முழுக்க முழுக்க அரிஜன மக்கள் செய்யும் வேலை.
அப்போது நான் அங்கிருந்து வெளியேறி, மூலையில் நின்றுகொண்டிருந்த முக்காடு அணிந்த பெண்கள் கூட்டத்தை நோக்கி நடந்தேன். அவர்கள் எல்லோரும் இந்துக்கள். இந்துக்களில் மிகக் குறிப்பாக இவர்கள் மட்டும்தான் முக்காடு அணிந்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் இவர்கள் மட்டும்தான் முக்காடு அணிந்து பார்த்திருக்கிறேன்.
எப்போதாவது அரிதாக முக்காடு பிரித்தாலும், யாரும் பார்ப்பதற்குள் மீண்டும் அணிந்து கொள்கிறார்கள். அப்படிப் பிரித்த ஒரு முக்காட்டிற்குள் முத்தான இரு கண்களைப் பார்த்தேன். பற்கள் வரிசையாய் இருந்தன. சமீபத்தில் பழுத்த மாம்பழம் போல் பளபளப்பான சருமம். இந்த அழகான அம்சங்கள் மீது அலை அலையாக சிரிப்பு பொலிந்தது. இவையெல்லாம் ஆரஞ்சு, சிகப்பு மற்றும் மஞ்சள் நிறம் போர்த்திய சேலை மடிப்பில் மறைந்து கிடந்தன. ஆனால் திடீரென்று எனக்கு அழைப்பு வந்துவிட்டது. அந்த இடத்தை விட்டு அவசர அவசரமாகச் சென்று விட்டேன்.
முதலில் மகாத்மா ஏன் இத்தனை சிரத்தையெடுத்து தோல் பதனிடும் தொழிலைப் புதுப்பிக்க விரும்புகிறார் என நான் தெரிந்துகொள்ள வேண்டும். உடன் வந்தவர் இதை பின்வருமாறு விளக்கினார்.
தீண்டாமைக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இனத் தூய்மையை உறுதி செய்ய, ஆரியப் படையெடுப்பாளர்கள் இந்தமுறையைத் துவக்கி வைத்தனர். ஒருவேளை பழங்குடியினரின் அடர்நிற சருமம், புதிதாக வந்தவர்களின் வெளிர் நிறத் தோலினால் கீழானதாய் மதிக்கப்பட்டு ஏதோ நடந்திருக்கலாம். நீக்ரோயிசத்திற்கு எதிராகப் போராடும் தென் அமெரிக்காவைச் சார்ந்த கறுப்பின மக்களும் வெள்ளையின மக்களின் இதே இனத்தூய்மை வாதத்தைதான் முன்னிறுத்துகின்றனர்.
ஆன்மத் தூய்மைக்கும் கல்வி கற்பதற்கும் இந்து பிராமணர்கள் ஏகபோக உரிமை கொண்டாடினர்கள். தங்களை பழங்குடியினர் உடல் ரீதியாக தீண்டினால், ஆன்மா அசுத்தமாகிவிடும் என்று ஒதுக்கி வைத்தனர். இறை நம்பிக்கையில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது. பிராமணர்கள் சைவ உணவு மட்டும் உண்ணுகிறார்கள். ஆனால் தீண்டத்தகாத மக்கள் மாமிசம் உண்பதோடு அழுகிப் போன பிணங்களின் இறைச்சியையும் உண்கிறார்கள்.
ஒருமுறை பேராசிரியர் மல்காணி என்னிடம் சொன்னார்: ‘பிறப்பு மற்றும் கல்வி அடிப்படையில் பிராமணர்கள் பெருமை பேசுவதை பௌத்தம் கைக்கொட்டிச் சிரித்தது. ஆனால் அது தொழில் அடிப்படையான மற்றொரு பெருமை பீத்தலை சமுகத்திற்கு அறிமுகப்படுத்தியது. மிருகவதை சம்பந்தப்பட்ட எல்லாத் தொழிலும் புனிதமற்றது என பௌத்தம் வரையறுத்தது. தோல் தொழிலாளர்களும், வேட்டைக்காரர்களும், கசாப்புகாரர்களும், மீனவர்களும், தாழ்ந்த குலத்தவர்களும் ஏற்கெனவே தீண்டத்தகாதவர் என அறிவிக்கப்பட்டனர்.’
உணவு பற்றிய விவாதத்தை நாம் இங்கே விட்டுவிடுவோம். சமூகத்தில் இரண்டு தொழில்கள் மிகக் கீழாக மதிக்கப்பட்டன. ஒன்று தோல் பதனிடுதல், மற்றொன்று தோட்டி வேலை செய்தல். ஒரு தோட்டி கழிப்பறையைச் சுத்தம் செய்து மனிதக் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். இது அரிஜனக்கே உண்டான பிரத்தியேக வேலை. இந்தியா முழுமையிலும் வடிகால் வசதிக்கான பெரிய அமைப்புகள் ஏற்படவில்லை. ஆகவே தோட்டிகளின் வேலை இன்றியமையாத ஒன்று. இந்த அரும்பாடான பணியை தலைமேல் போட்டுக்கொண்டு யார் செய்தாலும் புனிதர் பட்டம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமையே வேறு. தோட்டியாக இருப்பது அசிங்கத்திலும் அசிங்கமாய் பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக தோல் பதனிடும் தொழில் பற்றி பேசுவோம். அரிஜன்கள் துப்புரவு தொழிலை செய்துவந்த அளவிற்கு தோல் தொழிலில் ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவின் மதிப்புமிக்க கலைப் பொக்கிஷமாய், கைவினையின் தொழில்நுட்பத்தால் பல நாடுகளுக்கு ஏற்றுமதி கண்ட தோல் பொருட்கள் வியாபாரம் இன்று மங்கி விட்டது. ஆயிரக்கணக்கான தீண்டத்தகாத மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வறிய நிலைக்கு ஆட்பட்டுள்ளனர்.
இந்தச் சமயத்தில்தான் மகாத்மா காந்தி தோல் பதனிடும் தொழிலைப் புதுப்பித்து இந்தியாவுக்கும் அரிஜன்களுக்கும் உதவிகரமாய் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை எந்தத் தொழிலும் அசுத்தமானது கிடையாது. தீண்டத்தகாதவர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் காந்தி ஒருவரே திறமையாகச் செய்வார். எல்லா தொழிலையும் போற்றி மதித்து, அதற்கான மரியாதையை மீட்டுக்கொடுப்பதில் காந்தியம் செய்துவரும் வேலை, ஒரு முஸ்லிமாக என்னை பெருமளவு ஈர்க்கிறது. தொழில் பற்றி இஸ்லாமியப் படிப்பினைகளின் மூலம் இன்று வரை, ‘மனிதன் தன் தொழிலால் மதிக்கப்படுகிறான்’ என்ற வாசகத்தையே அறிந்து வந்திருக்கிறேன்.
தீண்டத்தகாதவர்கள் ஏன் தோல் பதனிடுதலை விட்டொழிப்பதற்குப் பதில் துப்புரவு வேலையை விட்டுக் கொடுக்கவில்லை என்று இன்னும் எனக்குப் புரியவில்லை. தீண்டத்தகாதவர்களை ஒருங்கிணைத்துப் போராடுவதற்கு, அவர்களுக்குள்ளாக ஒரு தலைவர் ஏற்பட்டிருந்தால் என்றைக்கோ இந்தமுறை அழிந்துபோயிருக்கும் என எனக்குத் தோன்றுகிறது.
‘எப்படி?’ என்று ஓர் இந்தியர் கேட்டார்.
‘ஒருவேளை முன்னூறு மில்லியன் மக்களின் கழிவுகளைச் சுத்தம் செய்யும் லட்சோப லட்சம் தீண்டத்தகாதவர்கள் ஒருங்கிணைந்துச் சென்று, ‘கனவான்களே, இனி உங்கள் கழிவை நீங்களே சுத்தம் செய்யுங்கள். நாங்கள் தொடமாட்டோம்’ என்று சொல்லியிருந்தால் போதும். அத்தகைய முழுமுதலான போராட்டம், சாதி இந்துக்களை இரண்டு விதமான முடிவெடிக்கச் சொல்லி உந்தியிருக்கும். ஒன்று, தங்கள் கழிவை தாங்களே அப்புறப்படுத்தி இத்தனை நாள் விதித்து வைத்த சட்டத்திட்டத்திற்கு ஆட்பட்டு அனைவரும் தீண்டத்தகாதவராய் மாறுதல். இல்லையென்றால், குவியல் குவியலான கழிவுகளுக்கு மத்தியில் யோசித்துப் பார்க்க முடியாதபடி வாழ முடிவெடுப்பது. இன்னுமொரு யோசனையும் உண்டு. இந்தியா முழுமைக்கும் வடிகால் அமைப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இதற்கு நெடுநாட்கள் ஆகும்.’
இதைச் சொன்னதும், ‘போராட்டம் நீடிக்கும்வரை அரிஜன்கள் உணவுக்கு என்ன செய்வார்கள்?’ என்றொரு இந்திய நண்பர் கேட்டார்.
‘இது நீண்ட காலம் நீடித்திருக்க முடியாது. சாதி இந்துக்கள் சீக்கிரமே சரணடைந்து இருப்பார்கள். அதைத்தாண்டி பிற தீண்டத்தகாதவர்களும், கசாப்புக்காரர்களும், தோல் பதனிடுபவர்களும், மீனவர்களும் தோட்டிகளுக்கு உணவு கொடுத்திருக்கலாம். எப்படியிருந்தாலும் ஒருவாரம் விரதத்தில் இருப்பது, சமூகத்தில் பெரும் அளவிலான மாற்றத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும். சாதி இந்துக்கள் அருவருப்பு எனக் கருதிய தன் சொந்தக் கழிவை கையாள்வதை, தீண்டத்தகாதவர்கள் திரும்பிப் பார்ப்பதாய் நினைத்துப் பாருங்கள்’ என்று சொன்னேன்.
‘ஆனால்’ என்று ஏதோ இழுத்தார். இந்த நண்பர் மகாத்மா காந்தியின் சீடர். ‘இது அவர்களைக் கொடுமைப்படுத்தி வம்புக்கு இழுப்பதுபோல் இருக்கிறது. நாம் இதைச் செய்யக்கூடாது’ என்றார்.
‘ஆனால்’ என்று இம்முறை நான் இழுத்தேன். ‘இதுவும் ஒத்துழையாமை இயக்கம் போன்றதுதானே? ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட, அமைதியான முறையில் ஒத்துழைக்காமல் இருந்து உரிமையையும் தன்மானத்தையும் மீட்டெடுப்பது எவ்வளவோ உயர்ந்த பணியாயிற்றே?’ என்றேன்.
எப்படியோ இந்தக் கிராமங்களிலாவது இந்துக்கள் சுய தியாகம் செய்துகொண்டு, தீண்டத்தகாதவர்களோடு ஒன்றுசேர்ந்து வாழ்கிறார்களே! தோலைக் கையிலெடுத்துக் கொண்டு மகாத்மா காந்தியே அரிஜன் மக்களிடம் ஒன்றாக அமர்ந்துபேசி அறிவுரை சொல்கிறார் என்றால், இந்தத் தொழில் இனியும் கீழானது அல்ல.
இறுதியாக விசாலமான கிராமப் பொது இடத்தில் ஒன்றுகூடினோம். மாவட்டத்தில் இருந்த கிராமத்தார் எல்லோரும் நிரம்பி வழிந்து அந்த இடமே மக்கள் கூட்டத்தில் வழிந்தது. நடுவில் சாணிக் குவியலும் மணல்மேடும் இருந்தது. இடத்தைச் சுற்றி தூசி வெள்ளம்.
மகாத்மா காந்தி லாவகமாய் மணல்மேட்டில் ஏறி உட்கார்ந்து மக்களிடம் உரையாற்றினார். அதற்கு அப்பறம் அங்கிருந்த கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்தோம். அது ஜன்னல் இல்லாத இருண்ட அறை. அடைத்து வைத்தார்போல் குழந்தைகள் நிரம்பி இருந்தார்கள்.
சிலர் தங்கள் புத்தகங்களை காந்தியிடம் காண்பித்தார்கள். காந்தி குழந்தைகளிடம் உரையாடினார். அவையெல்லாம் கைப்பட செய்த புத்தகம். தொடக்கக் கல்வி இவ்வளவு தூரம் நலிந்து போயிருக்கையில் இத்தனை ஆடம்பரமான பல்கலைக்கழகங்கள் எதற்கு என்ற கேள்வி எழும்பியது.
பசுமையான புல்வெளி தரையும், மெத்தப் படித்ததை உணர்த்தும் பேராசிரியர்களின் உயர் ரக ஆடையும் நிற ஒற்றுமையைத் தவிர அப்படியே ஐரோப்பிய நாட்டு பல்கலைக்கழகங்களை ஞாபகப்படுத்துகின்றன. அவை இந்தியாவிற்கு உதவி செய்திருக்கின்றன. மாற்றுக் கருத்து இல்லை. இனியும் உதவி செய்யும். ஆனால் இந்தக் இருட்டுக் குழிகளில் போராடி, மிகக் கொடுமையான துயரத்திலும், ஏதுமிலியாய் வாழ எத்தனிக்கப்பட்டாலும் தன் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க போராடிக் கொண்டிருக்கும் இந்தத் துணிச்சலான இந்துத் தொழிலாளிகள் எவ்வளவு பாராட்டிற்குரியவர்கள் என்று தோன்றுகிறது.
கைப்பட எழுதிய இந்தச் சிறிய புத்தகத்தின் கறைபடிந்த பக்கங்கள்தான் எத்தனைப் புனிதமானது. என்னால் இந்தக் கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை, ‘ஆங்கிலேயர்கள் தங்கள் முழு ஆற்றலையும் செலவு செய்து மேற்கின் நன்மைகளை (அதுவே சாபமாகவும் இருக்கிறது) இங்கு குவியலாய் குவித்து உயர் நடுத்தர மக்களின் வாழ்வை மேம்படுத்தாமல், உழைக்கும் சமூகமான விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருந்தால், இந்தியா எப்பேர்ப்பட்ட தேசமாய் இருந்திருக்கும்?’
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.