Skip to content
Home » நான் கண்ட இந்தியா #13 – ஜாமியா உரைகள் 2 – பூலாபாய் தேசாய்

நான் கண்ட இந்தியா #13 – ஜாமியா உரைகள் 2 – பூலாபாய் தேசாய்

பூலாபாய் தேசாய்

இந்திய நாடாளுமன்றம் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை. இதைப் பார்க்கும்போது வெஸ்ட்மின்ஸ்டர்தான் நினைவுக்கு வருகிறது. இந்தியமயமாக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தின் மேல் பிரிட்டன் நாட்டின் மக்களவை உறுப்பினர்கள் கரிசனம் காட்ட என்ன காரணம்? ஒருவேளை அவர்கள் ‌இந்திய ஜனநாயகத்தின் முதல் வெளியாக நாடாளுமன்றத்தைப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இது தொடர்பாக பேசுகையில், ‘இது நாடாளுமன்றம் அல்ல, பொம்மலாட்ட அரங்கம். நூலைப் பிடித்து ஆட்டுபவர்கள், தங்கள் இஷ்டப்படி ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கிறார்கள்’ என்று நண்பர் ஒருவர் சொன்னார்.

ஆனால் பார்வையாளர் அரங்கில் அமர்ந்து, அங்கு நடக்கும் வாதப் பிரதிவாதங்களைப் பார்த்த பிறகு, அது பொம்மலாட்ட அரங்கம் அல்ல என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன். ஏனென்றால் இவர்கள் படு நேர்த்தியாக நடிக்கிறார்கள். இங்கிருந்த உறுப்பினர்களுக்கு சுய – எச்சரிக்கை உணர்வு இருப்பதாகத் தோன்றியது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறைகளைப் பார்த்து கலை நேர்த்தியுடன் அப்படியே மீட்டுருவாக்க முயல்கிறார்கள்.

சபாநாயகர் அணிந்திருக்கும் கவுன், அவர் தலைமேல் உள்ள போலி விக்; சாம்பல் நிற சூட் அணிந்த ஆளும்கட்சி உறுப்பினர்கள்; அவர்களுக்கு எதிர்ப்புறம் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள்; வகைவகையான ஆடை அணிந்த சிறுபான்மையின மக்கள் என ஆங்கிலேய நாடாளுமன்றத்தின் எல்லாவிதமான சிறப்பம்சங்களும் பொருந்தி மரியாதைக்குரிய கனவான்கள் அமர்ந்து இருந்தார்கள்.

இங்கிலாந்தின் வருத்தம் தோய்ந்த மக்களவையில் சோர்வடைந்து வீற்றிருக்கும் தைரியம் பொருந்திய உறுப்பினர்களைக் காட்டிலும், பிரகாசமான இந்த வட்ட வடிவ அறையின் கவர்ச்சியான உறுப்பினர்கள் வேறுபடுகிறார்கள். இருந்தாலும் இது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. இதில் உயிரோட்டம் இல்லை. நான் ஆர்வம் இழக்கிறேன். அங்கிருக்கும் உறுப்பினர்களின் கருஞ்சிவப்பு நிற சட்டையும், டர்பனும் கண்டு நேரம் ஓட்டினேன்.

அவர்கள் சத்தமில்லாமல் மெதுவாக நகர்ந்து, மேம்பட்ட பணிவுடன் குனிந்து, மேசையில் மண்டியிட்டுக் காகிதங்களை ஒப்படைத்தனர். இந்த நாடாளுமன்றக் காட்சிகளில்கூட ஜனநாயக அமைப்பின் இயங்குதல் இல்லை. மாறாக ராஜாவின் அரண்மனையில் பணியாட்கள் வேலை செய்வது போல் இருக்கிறது. சமத்துவம் அற்ற ஆழமான உணர்வு தோன்றும்படி, அங்கிருந்த சுற்று வெளியில் அடிமைத்தனம் மேலோங்கியிருந்தது. இவையெதுவும் அந்தச் சூழலோடு ஒத்துப்போகவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, லட்சக்கணக்கான மக்களின் தோள்களிலும் நெம்பமுடியாத முதுகுத்தண்டிலும்தான் ஜனநாயக உணர்வு வீற்றிருக்கிறது. அறிவாளிகளின் நடத்தையாலும், அரசியலமைப்பு முறைமையாலும் அது மாறுபடாது.

சிகப்புச் சீருடை அணிந்த நபர் ஒருவர் குனிந்து மண்டியிட்டு, எதிரே உள்ள மேசையில் ஒரு காகிதத்தை வைத்தார். தெளிவற்ற சாம்பல் நிற உருவமொன்று பேசுவதற்காக எழுந்தது. அது பூலாபாய் தேசாய். புதிய அரசியலமைப்புச் சட்டம் பற்றி காங்கிரஸின் பார்வையைச் சொல்ல அவர் தயாரானார்.

அவர் என்ன சொன்னார் என்பது இங்கு முக்கியம் அல்ல. ஆனால் எப்படி சொன்னார் என்பது முக்கியம்.‌ உலகிலுள்ள எந்த நாடாளுமன்றத்திலும் தன் கட்சி சார்ந்த பார்வையை இப்படியொருவர் எடுத்துக் கூறமாட்டாரா என்று அரசியல் கட்சிகள் ஏங்கும்படிப் பேசினார். இந்தியாவின் பார்வையைத் தன் பழக்கவழக்கங்களில் இருந்து மாறுபட்டுத் தெளிவாக விளக்கினார். இங்குள்ள பிரச்னைகள் பிரம்மாண்ட அளவில் தனித்து நிற்பதாய் உணர்த்தினார்.

அவர் பேச்சில் அரசியல்வாதியின் வாய்வீச்சு அலங்காரம் கிடையாது; வழக்கறிஞர்களின் தர்க்கமோ சட்ட நுணுக்கங்களோ கிடையாது. மாறாக, அவர் பாணி அவர் கையாண்ட உண்மைகளைப் போல் நச்சென்று இருந்தது. புது வகையான பேச்சு பாணிக்கு மகாத்மா காந்தி ஓர் உன்னத அடையாளமாகவும், பூலாபாய் தேசாய் மனங்கவரத்தக்க உதாரணமாகவும் விளங்கினார்கள்.‌ இந்தியர்கள் இதை ‘புனிதமான ஆங்கிலம்’ என்று மெச்சுகிறார்கள்.

‘அவர் எங்கள் நிலைமையைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்” என்று அருகிலிருந்த இந்தியர் ஒருவர் சொன்னார். ஆனால் உண்மை அதுவல்ல.‌ இந்தியாவைப் பற்றி சதா காலமும் அதீத மிகைப்படுத்தல்கள் உண்டாகி இருக்கின்றன.‌ சொற்பொழிவுகளிலும் மேடைப் பேச்சுகளிலும் சொல்லாட்சி அலங்காரங்களை உதறித் தள்ளினால், இந்தியா பற்றிய கள யதார்த்தம் புரிபடும். மேலும், மிதமான மற்றும் கண்ணியமான பாணியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் பூலாபாய் தேசாய் தன்னை உண்மையான உளவியல் நுண்ணறிவு கொண்டவர் என்று நிரூபித்தார். அவரின் உரை ஆங்கிலேயருக்குத் தயாரிக்கப்பட்டது. அதில் எதிரொலித்த தொனியும் மிகச்சரியாய் இருந்தது.

அவர் பேச்சில் முகஸ்துதி செய்யும் பழைய பாணியோ, கடல் அலைபோல் கர்ஜிக்கும் உரத்த சத்தமோ கிடையாது. கவித்துவமான பாணியும் அந்தப் பேச்சில் இல்லை. முகஸ்துதி செய்யும் பழைய பண்பை ஒழுக்கக் குணமாக இந்தியர்கள் கருதுகிறார்கள். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு இது அடிமைத்தனத்தின் அறிகுறியாய் தெரிந்தது. முதுகெலும்பு அற்ற செயலாய் பார்க்கப்பட்டது.

கீழைத்தேயப் பேச்சாளர்களின் பழமைப் பிடித்த சொல் அலங்கார உரைகளைக் கேட்டால், அவர்களை எட்டி உதைக்கத் தூண்டும் ஆங்கிலேயர்களின் அரிப்பெடுத்த கால்களை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியர்களின் இந்தப் புதிய வெளிப்பாடு, அவர்களிடம் சுய நம்பிக்கை மலர்ந்ததை உணர்த்துகிறது. ஆனால் இந்த வெளிப்பாட்டைப் பலவீனத்தின் அடையாளமாகக் கருதி, மீண்டும் ஆங்கிலேயர்கள் இதை வெறுக்கிறார்கள். உலகமே ரசிக்கும்படி கவிதைகளைப் புனைந்துவிட்டாலும் ஆங்கிலேயர்கள் அதைத் தனிமையில் மட்டுமே குதூகலிக்க விரும்புகிறார்கள். அரசியலில் கவித்துவமான பேச்சுக்கும், கவித்துவமான நடைமுறைக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

கொஞ்ச நாட்கள் கழித்து, லக்னோ பல்கலைக்கழக மாணவர்களிடம் பூலாபாய் தேசாய் மற்றொரு உரை ஆற்றினார். நான் இதைப் பற்றி புரிந்துகொண்டதால், மாணவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்ற சரியான தொனி அவருக்குத் தெரியும் என்று உணர்ந்தேன். அவர்தன் உரைக்கு ‘அறிவுஜீவிகளின் தோல்வி’ என்று பெயரிட்டிருந்தார்.

இந்திய அறிவாளிகள் பற்றி அவர் சொன்ன எல்லாக் கருத்துகளும் உலகெங்கிலும் உள்ள எல்லா அறிஞர்களுக்கும் பொருந்தும். அவர்கள் உதட்டளவில் யோசனைகளைச் சொல்வதோடு நின்றுகொள்வதால் தோற்றுப்போகிறார்கள். அந்த யோசனைகள் எல்லாம் நடைமுறைக்கு வரவேண்டும்.

ஈடு இணையற்ற இந்தியக் கலாசாரத்தின் பழம் புகழைத் தூண்டிவிடுவது போல் தன் உரையைத் தொடங்கினார். தன் சமகாலத்திய உலகக் கலாசாரங்கள் எல்லாம் அழிந்துபோனபோதும், இதுமட்டும் உயிர்ப்போடு இருக்க என்ன காரணம்? உலகின் மூன்றாந்தர நாடுகள் அடிமைப்பட்டுக் கிடப்பதை எடுத்துக்காட்டாய் எடுத்துக் கூறவா இந்தியா உயிர்ப்போடு இருக்கிறது? என்று பேசிய அவர் நவீன இந்தியாவின் அறிவுஜீவிகள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் என பலரை முன்னிறுத்தி அவர்களுக்கும் இந்திய பொதுமக்களுக்கும் உண்டான தொடர்பை விளக்க முயன்றார்.

‘மற்ற இனங்கள் தன் சுதந்திரத்திற்காகப் போராடுவதை விதந்து கூறி பெருமிதப்பட்டுப் படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கிய காலம் ஒன்று இருந்தது. நமது நாட்டு பல்கலைக்கழக, கல்லூரிகளைச் சார்ந்த ஆண் பெண் இருபாலர்களும் இதில் ஈடுபட்டிருந்தார்கள். இன்னும் அந்தக் காலம் நீடிக்கிறதோ என்று எண்ணி நான் வருத்தப்படுகிறேன்…’

‘இங்கிருக்கும் ஆண்களும் பெண்களும், பிரிட்டன் கவிஞர்கள் விடுதலைப் பற்றி எழுதிய உத்வேகம் ஊட்டும் கணிசமான பாடல்களை மனனம் செய்ய கூடியவர்கள். அதில் பைரன் எழுதிய ‘சில்லான் கோட்டை கைதி’ என்ற கவிதையும் அடக்கம்.’

‘இது வெறும் பாராட்டு அல்ல. சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் வாழ்க்கையை வாசிக்கும்போது, நாம் அவர்களின் தியாகத்தை எண்ணி உணர்ச்சி வயப்படுகிறோம். ஆனால் வேறு நாட்டவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடிய வரலாற்றை உணர்ச்சிபொங்க வாசித்து பெருமிதம் அடையும் நாம், வரலாற்றின் போக்கில் நமது நாடு எந்த நிலையில் இருக்கிறது என்று யோசிக்க தொடங்கி விட்டோமா?’

தான் முன்வைத்த கேள்விகளுக்கு எல்லாம் அவரே பதில் சொல்ல தொடங்கினார். இந்திய தேசாபிமானி ஒருவரிடம் இருந்து நான் கேட்ட மிகவும் கசப்பான வார்த்தை அது. ‘உங்களை ஆட்சிச் செய்ய வந்திருக்கும் அந்நிய நாட்டு கனவான்கள் எத்தனைப் பேர் என்று எண்ணியிருக்கிறீர்களா, (இதை சொல்வதில் தவறு இல்லை. இருந்தாலும் உங்கள் புரிதலுக்காக சொல்கிறேன்) 330 மில்லியன் எண்ணிக்கை உடைய நம்மை கால்நடையாக நினைத்திருந்தால் கூட, இன்னும் அதிகமான மேய்ப்பர்களை அனுப்பி வைத்திருப்பார்கள், இல்லையா?’ அவரது உரையில் தெறித்த ஒவ்வொரு வார்த்தையும் ஆங்கிலேய எண்ணவோட்டத்தின் சாட்சியாக இருந்தது.

நான் மகாத்மா காந்தியிடம் சென்று, ‘ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு செய்த மிகப் பெரிய பங்களிப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர் கொஞ்சமும் யோசிக்காமல், ‘தேசிய உணர்வு’ என்றார்.

இதே கேள்வியை சரோஜினி நாயுடுவிடம் கொஞ்சம் வேறு மாதிரி கேட்டேன். அப்போது நாங்கள் ஹுமாயூன் கல்லறையின் மாடியில் உட்கார்ந்திருந்தோம். வண்ணமயமான பதாகைகளை ஏந்திக் கொண்டு எங்களுக்குக் கீழே ஒரு கிராமம் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. ஆடம்பரமான ராஜ கல்லறையின் மேல் உட்கார்ந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டே சரோஜினி நாயுடு தன் காலணிகளைக் கழட்டி, வெறுங்கால்களை சூரிய ஒளியில் ஒளியில் காட்டி உஷ்ணம் ஏற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது நான் அவரைக் கேட்டேன், ‘முகமதியர்கள் இந்தியாவிற்கு என்ன செய்தார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு நீங்கும்போது எதை விட்டுச் செல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?’

‘ஒரு தேசத்தை’விட்டுச் செல்வார்கள் என்று சற்றும் தாமதிக்காமல் சொன்னார்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *