Skip to content
Home » நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கில் நான்கு முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களில் டாக்டர் அன்சாரி பற்றி முன்பே சொல்லிவிட்டதால், இப்போது மௌலானா ஷௌகத் அலி பற்றிப் பார்ப்போம்.

மறைந்த முகமது அலியின் சகோதரர் இவர். கிலாபத் இயக்கத்தின் ஆதரவாளர். இந்து – முஸ்லிம் ஒற்றுமையிலும் இந்தியத் தேசியவாதத்திலும் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் இவையெல்லாம் அவரின் கடந்தகால வாழ்க்கை. நிகழ்காலத்தில் அவர் அரசியல் சார்பைப் புரிந்துகொள்ள மிகக் கடினமாய் இருந்தது. கிலாபத் இயக்கத்தின் தோல்வியால் மிகவும் மனம் வெதும்பிப் போயிருந்தார்.

ஆனால் அரசியலைத் தாண்டி இவர் ஒரு முக்கியமான, அனுதாபம் கொள்ளத்தக்க மனிதர். தன் பொதுமேடைப் பேச்சுகளால் லட்சக்கணக்கான மக்களைத் தன்வயப்படுத்தினார். அறிவார்ந்து பேசும் அதே நேரத்தில், உணர்ச்சியைத் தூண்டும் பிரமாதமான ஆற்றல் அவருக்கு இருந்தது.

எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் தன்பால் ஈர்க்கும் அபாரமான உடல்மொழி உள்ளவர். எல்லாவற்றிலும் நெடிய மனிதராகத் திகழ்ந்தார். ‘பெரிய அண்ணன்’ என்று அவர்கள் செல்லமாக அழைப்பதில் இருந்தே, இவருக்கு இருந்த பொறுப்புணர்வைப் புரிந்துகொள்ளலாம். பொல்லாத சிறுவனைப் போல் மின்னித் திரியும் கண்களும், படத்தில் காண்பது போல் ஈர்க்கக்கூடிய சாம்பல் நிற‌ தலைமுடியும், அடர்த்தியான நீண்ட தாடியும் வைத்திருந்தார். இவரின் குழப்பமான அரசியல் கொள்கையை உடுத்தியிருக்கும் ஆடையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

இறுக்கமான இந்தியக் கால்சட்டைக்கு நீளமான சட்டை உடுத்தியிருந்தது விகாரமாய் இருந்தது. கூடவே தளர்வான  அரேபிய மஷ்லாக்கும், துருக்கிய கல்பாக்கும் (உரோமத்தால் ஆன தொப்பி) அணிந்திருந்தார். இது 16 ஆண்டுகளுக்கு முன்பே மலையேறிப் போன ஃபேஷன். முழு உடையிலும் இந்திய, முஸ்லிம், அரேபிய மற்றும் துருக்கியக் கலாச்சாரம் எட்டிப்பார்க்கிறது. ஒருவகையில் இது ஒட்டுமொத்த இஸ்லாத்தின் பிரதிபலிப்பாகத் தெரிந்தாலும் இதில் அரசியல் யதார்த்தம் இல்லை.

மௌலானா ஷௌகத் அலிக்கு ஓர் அழகிய இளம் ஆங்கிலேய மனைவி இருந்தார். கேலிச் சித்திரங்களில் மௌலானாவை ஒரு பெரிய குழந்தையாகவும், அவரைச் சமாதானப்படுத்த அரசர் அவருக்கு அழகான பொம்மையொன்று கொடுப்பதாகவும் சித்திரித்திருந்தனர். அவர் விமர்சனங்களுக்குச் சட்டென்று பதில் சொல்லும் பாங்கில் நிறைய கதைகள் புழக்கத்தில் இருந்தன. அதில் கடைசியாக வந்த ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன்:

ஒருமுறை உயர்மட்ட ஆங்கிலேய அதிகாரி ஒருவர், ‘நீங்கள் உங்கள் மனைவியைத் துன்புறுத்துவதாய் கேள்விப்பட்டேனே’ என்று இவரிடம் சொல்லியிருக்கிறார். உடனே ஷௌகத் அலி அந்த ஆங்கிலேய அதிகாரியின் மனைவியைப் பார்த்து, ‘உங்கள் மரியாதை தாங்கிய கணவர், யார்  யாரோடு சண்டை போடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கிறார் போல’ என்று சொல்லிவிட்டார்.

மௌலானா சுலைமான் நத்வி பற்றியும் நான் கொஞ்சம் சொல்ல வேண்டும். வயதில் சிறியவர்தான். படித்த இஸ்லாமியர் போல் ஆடை உடுத்தியிருப்பார். அவரின் மனநலன் பற்றியும் உடல்நலன் பற்றியும் ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் ‘பிரமாதம்’ என்ற பதத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். துறவியைப் போல ஒடுங்கிப்போன வெளிர்ந்த முகத்தில் கறுத்த விழிகள் பதுங்கியிருக்கும். பெரும்பாலும் தன் பிணைக்கப்பட்ட கைகளை நோக்கி கீழ்ப்புறமாய் தலை தாழ்த்தி நின்று கொண்டிருப்பார்.

அப்படி இருந்தாலும், அவர் உடம்பு முழுக்க நகைச்சுவைத் துணுக்கு துள்ளி ஓடும். பேச்சில் நிதானமும் சிந்தனையில் தெளிவும் கொண்டிருப்பார். அவர் சொல்ல வேண்டியவற்றை எல்லாம் நிதான ஆற்றல் கைக்கொண்டு விடுகிறது. இந்திய அரசியலிலும் இந்தியா பற்றிய சிந்தனையிலும் சுலைமான் நத்வியின் பார்வை அசைக்கமுடியாதது.

மக்களிடம் நல்லதைச் சேர்க்க வேண்டுமென்று ஒவ்வொரு சொற்பொழிவிலும் பெருமுயற்சி மேற்கொள்கிறார். இவரின் எல்லா உரைகளும் உருது மொழியில் அமைகின்றன. பாமரர்களைக் காட்டிலும் படித்த மேதைகளிடம் அதிகமாய் வாதிட விரும்புகிறார். அதற்கு ஒரு காரணம் உண்டு. இவருக்கு உள்ளூர் சொற்பொழிவாளர்களைப் போல் ஊதாரித்தனமாய் வார்த்தைகளை அள்ளி வீசி மேடையை அலங்கரிக்கப் பிடிக்காது.  அவர்களை முஹர்ரம் மாத கூலியாட்களோடு ஒப்பிடுகிறார்.

(நபியின் பேரக் குழந்தைகளான ஹசனும் ஹுசேனும், முஹர்ரம் மாதத்தில் வரும் கெர்பேலாவில் இறந்து போனார்கள். இஸ்லாமியர்களுக்கு இது துக்கம் நிறைந்த மாதம். குறிப்பாக ஷியா முஸ்லிம்கள் இந்த மாதத்தைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். துக்கப்பட்டு கண்ணீர் சிந்திப் புலம்ப, காசு கொடுத்து ஆட்களைப் பணிக்கு அமர்த்துகிறார்கள்).

அலிகர் கல்லூரியின் நிறுவனரான சர் சையது அஹமதின் தலைமையில் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அப்போது அந்தப் புகழ் வெளிச்சத்தில் பிரபலம் அடைந்தவர்தான் மௌலானா சுலைமான் நத்வி. கடந்த நூற்றாண்டின் மத்தியில் அந்தக் கல்லூரி நிர்மாணிக்கப்பட்டு, சையது அகமதால் எண்ணத்திலும் எழுத்திலும் தலைசிறந்த முசல்மான் அறிஞர்கள் உருவானார்கள். இப்போது 60 வயதை நெருங்கியவர் போல் தோன்றினாலும், 1898இல் சர் சையது அகமது இறந்தபோது இயக்கத்திலேயே வயது குறைந்த இளைஞராய் சுலைமான் இருந்திருப்பார்.

தன் தலைவரைப் போல் அல்லாமல், அரசியலில் இஸ்லாமிய எல்லைகளைத் தாண்டிப் பயணிக்கிறார். உலக  இஸ்லாமியர்களின் கலாச்சாரப் பாடங்களை உணர்ந்து கொள்பவராகவும் ஒருகாலத்தில் கிலாபத் இயக்கத்தின் உறுதியான ஆதரவாளராகவும் திகழ்ந்ததால், தற்போது தேசியவாதியாக இந்து – முஸ்லிம் கூட்டுறவிற்கு ஒத்துழைப்பு தருகிறார்.

அறிவுத் தளத்தில் இவருடைய இருப்பை முக்கியமானதாகக் கருதவேண்டும். ‘முகமதின் வாழ்க்கை’ என்றொரு புத்தகத்தைத் தேர்ந்த இஸ்லாமிய அறிஞர் ஷிப்லியின் துணையோடு எழுதி முடித்தார். ஷிப்லி இறந்தபிறகு இந்தப் புத்தகம் துருக்கியிலும் பெர்சிய மொழியிலும் பெயர்க்கப்பட்டது. லக்னோவில் செயல்பட்டுவரும் ‘நட்வாட்டில் – உலேமா’ என்றொரு இயக்கத்தின் முக்கிய உறுப்பினராய் சுலைமான் திகழ்கிறார். நவீன வாழ்க்கையில் மதபோதனைகள் வழங்க இந்த இயக்கம் முயற்சி செய்து வருகிறது.

சீர்திருத்தம் குறித்து இவர் வைத்திருக்கும் அபிப்பிராயம் இந்து சீர்திருத்தவாதிகளை ஒத்திருக்கிறது. இஸ்லாமிய வேதங்களில் வாழ்வை மாற்றுவதற்கான எல்லா ஷரத்துகளும் உள்ளன.  மற்ற இஸ்லாமிய சிந்தனையாளர்களைக் காட்டிலும் ஆழ யோசித்து, இஸ்லாமிய நாடுகளில் தேவாலயங்களும் அரசும் பிரிந்திருக்க வேண்டும் என்கிறார். ஆனால் இதைத் தன்னிச்சையாக இஸ்லாமிய நாடுகள் மேற்கொள்ளாமல், இஸ்லாமிய அமைப்புகளின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது இவரின் முழுமுதலான கருத்தாக இருக்கிறது.

கடைசியாக சர் முகமது இக்பால் பற்றிச் சொல்லிவிட்டு, செல்வாக்கு மிகுந்த இஸ்லாமியர் பற்றிய என் நெடிய விவரிப்பை முடித்துக் கொள்கிறேன். அவர் ஒரு மகா கவிஞர். தேர்ந்த சிந்தனைவாதி. இவரின் மூதாதையர்கள் பிராமணர்களாக இருந்தாலும், இக்பால் ஆசாரமான முஸ்லிமாக வளர்ந்தார். அறிவுஜீவித் தனமாய் சிந்திப்பதையே தன் பழக்க வழக்கமாய் கொண்டிருக்கிறார்.

இந்தியத் தத்துவங்களை விரும்பிப் படிக்கும் இவர்,  இந்தியாவைப்பற்றி கிடைக்கும் சின்னச் சின்னத் துணுக்குகளையும் எழுதி வைக்கிறார்.

‘அரசியலில், இக்பால் பல கட்டங்களைத் தாண்டியிருக்கிறார்’ என்றொரு அறிவுஜீவி சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. தேசியவாதமும் தூய்மையும் எளிமையும் தனியொரு மதமாகவே வளர்ச்சிபெற்றது. இந்த நிலையை ‘புதிய கோயில்’ என்றொரு பாடல் எடுத்துரைக்கிறது:

‘பிராமணனே, நான் உண்மையைச் சொன்னால்,
நீ  கோபித்துக்கொள்ள மாட்டாயே?
கோயிலில் இருக்கும் உங்கள் சிலைகளுக்கெல்லாம் வயதாகிவிட்டது.
உங்கள் மக்களோடு விரோதம் கொள்ளும்படி பகையுணர்வைத்
தூண்டிவிட, இந்தச் சிலைகள் பாடம் புகட்டுகின்றன.
நமது கடவுள் வம்பு செய்யவும் சண்டையிடவுமே
போதகர்களுக்குக் கற்றுத் தருகிறார்.
இதையெல்லாம் கண்டு நான் விரக்தி  தாங்காமல்,
கோயிலிலிருந்தும் மசூதியிலிருந்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
கல் உருவங்களில் நீங்கள் கடவுளைக் கற்பனை செய்தீர்கள்,
ஆனால் எனக்கு என் தேசத்தின் ஒவ்வொரு துகள்களிலும்
கடவுளை உணர முடிகிறது!’

தேசபக்தி மிகுந்த இஸ்லாமியரும் இந்துவும் இந்த வரிகளை மேற்கோள் காட்டினார்கள். ஆனால் அவர்கள் இக்பால் மீது செலுத்தியிருந்த அரசியல் செல்வாக்கு மேற்கண்ட பாடலோடு முடிந்துவிட்டது.

முதல் பாடலைப் போல் அல்லாமல், இரண்டாவது பாடலில் நெடி கொஞ்சம் குறைவுதான். புவியியல் எல்லைகொண்ட மதங்களை அவரால் ஒப்புக் கொள்ளமுடியவில்லை. மதம் உயிரற்ற ஜடத்திற்குப் பதில், உயிருள்ள மனிதர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். தீவிரமான தனிப்பட்ட போராட்டமாய் நாம் இதைப் பார்க்க வேண்டும்.

‘ஆண்கள் வயிறு முட்டக் குடித்தும்
மதுக்கிண்ணம் இன்னும் மிச்சமிருக்கிறது,
நேற்றைய நாட்கள் மறைந்துபோய்,
நாளைய தினம் கண்முன் தோன்றுகிறது.
சமூக வாழ்க்கை மீண்டும் வட்டமிட்டு அதே
பாதையில் நிரந்தரமாய் சுற்றுகிறது,
தனியொரு நபர் வரலாம் போகலாம்;
சமூகம் பின்பற்றும் அந்தத் தனியொரு நபர்,
பயணியாய் நம் வாழ்வில் வந்த அந்நியர்தான்.’

இஸ்லாமியர் மனநிலையைப் புரிந்துகொள்ள முகமது இக்பால் ஏன் தீவிர தேசியப் பார்வையிலிருந்து உடனடியாகப்  பின்வாங்கினார் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் எந்தவித அரசியல் நம்பிக்கையில் மனம் வைத்திருந்தாலும், இறுதியாக ஒரே ஒரு கடவுளுக்குத்தான் விசுவாசமாய் இருக்கிறார்கள். அவரைப் பொருள்வயப்படுத்தி உருவம் கொடுக்க முடியாது.

இந்தக் கருத்தை பிரெஞ்சு குடியிருப்பின், ‘ஃபிரென்ட் பாப்புலெய்ர்’ அமைப்பைச் சார்ந்த இஸ்லாமிய உறுப்பினர்கள் நன்றாக விளக்கினார்கள். தங்கள் அரசியல் ஆதரவை வெளிப்படுத்த, இடதுசாரி தோழர்களைப் போல் தங்கள் முஷ்டியை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். ஆனால் அதில் சிறு மாற்றம் இருந்தது.‌ ஆட்காட்டி விரலும் இப்போது வானை நோக்கி உயர்ந்தது. ‘கடவுள் கிடையாது, ஆனால் அவர் ஒருவர்தான் . . .’ என்று சைகையால் உணர்த்தினார்கள். எல்லா நிலப்பரப்புகளையும் தாண்டி, அனைத்திற்கும் அப்பாற்பட்டவராய் கடவுள் இருக்கிறார் என்பது பொருள்.

* படம்: மௌலானா ஷௌகத் அலி, சர் சையது அஹமத், சர் முகமது இக்பால்

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *