Skip to content
Home » நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

ஜாமியா

இவர்கள் சொல்லும் கதையில் ‘பயம்’ பற்றி எந்தவொரு விவரணையும் இல்லாதது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. பயத்தை எப்படிக் கையாள வேண்டுமென்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

மனித மாமிசம் தின்னும் அரக்கனின் படம் ஒன்று இங்கு இருந்தது. திகிலூட்டும் அந்தப் படத்தைக் கொண்டாட்டத்துக்குரிய ஒன்றாக ஜாமியாவில் படிக்கும் இளைஞன் ஒருவன் எள்ளி நகையாடிப் பார்க்கிறான். கீழைத்தேய இளைஞர்களின் மனப்பான்மை அச்சத்தைக் கடந்துவருவதை நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்க வேண்டும். வீடு, பள்ளிக்கூடம், சமூகம் என்று எல்லா இடங்களிலும் அச்சமூட்டியே பழக்கப்பட்ட வாழ்வியலின் வெளிப்பாடு இவர்கள்.

கண்ணுக்குப் புலப்படாத மந்திரக் கோலும், விஷேச சக்தியும் பிறப்பிலிருந்து இறப்புவரை இவர்களைப் பின்தொடர்கிறது. இந்தச் சிக்கலை ஜாமியா எப்படி எதிர்கொண்டது என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த ஜாமியாவின் தலைமையாசிரியர் டாக்டர் அக்பரின் வார்த்தைகளில் கேட்போம்:

‘குழந்தைகள் முதன்முதலாக இங்கு வரும்போது தங்கள் கரங்களை முகத்துக்கு நேராக ஒத்திக் கொண்டு பாதுகாப்பான சைகையின் மூலம் அணுகிதான் நம்மிடம் ஒன்றிரண்டு வார்த்தைகளைப் பேசுகிறார்கள். தன்னை ஆசிரியர் தண்டித்துவிடக்கூடாது என்று பெரும்பாலும் தவறுகளைத் தவிர்க்க முயல்கிறார்கள். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு வசைமொழிகளுக்கோ, மேலேறி நிற்பதற்கோ கொஞ்சமும் சங்கடமின்றி, இயல்பாக முகத்தைப் பார்த்து பேச பழகிவிடுகிறார்கள்.’

மேலே சொன்ன அந்தப் பாதுகாப்பு சைகையால் கீழைத்தேசம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. மீறினால் அடி உதைகளைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள் தொடங்கி, அந்நியப் படையெடுப்பாளர்கள்வரை எல்லாரும் ‘பயம்’காட்டித்தான் அதிகாரத்தை அறுவடை செய்திருக்கிறார்கள்.

அடி.. அடி.. அடி.. தடைகளைத் தகர்த்தெறிந்து அடி உதைகளுக்கு ஆட்படுவதும், வாய்ப்புக் கிடைக்கும்போது தானே அடி உதை வழங்குவதும்தான் இங்கு ஒரே தீர்வு‌. ‘அடி அல்லது அடி வாங்கு’ என்பதுதான் கிழக்கின் குழந்தைகளுக்குச் செயல்முறையில் சொல்லித்தந்த தத்துவமாக இருக்கவேண்டும். கீழைத்தேயம் முழுக்க மொத்தமாக ஒன்றுகூடி ஒழுக்கத்தையும் சுதந்திரத்தையும் கல்வியில் கடைப்பிடிக்காத பட்சத்தில், வாய்ப்புக் கிடைக்கும்போது கிழக்கின் கடந்த காலம் முழுமைக்குமாக அதன் ஆட்சியாளர்கள் மற்றும் அந்நியப் படையெடுப்பாளர்களுக்குப் பெருத்த இடியாக ஓர் எதிர்வினை தோன்றும்.

குழந்தைகளோடு ஒரு முழு மத்தியானத்தை செலவிட்டேன். அவர்கள் அமர்வறையில் அங்கு உட்கார்வதற்கென்று தளபாடங்கள் எதுவும் இல்லை. தரையில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் உட்பட எல்லா மாணவர்களும் தரையில்தான் உட்கார்ந்தனர். அங்கு பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண்கள் அதிகம். சராசரியாக எல்லாரும் ஒன்பதிலிருந்து பதினோரு வயதுவரை இருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் டாக்டர் ஜாகீர் உசேன் என்றால் அத்தனைப் பிரியம் என்று கண்கூடாகத் தெரிந்தது‌.

அவர் இருக்குமிடத்தை நோக்கிச் சிறுவர்கள் மெல்லமாகத் தவிழ்ந்து சென்றார்கள். அவர் ஒரு நீண்ட நெடிய மரம்போல தெரிந்தார். அவரைச் சுற்றி செடி கொடிகளாகக் குழந்தைகள் படர்ந்திருந்தார்கள். குழந்தைகள் அவர் கைகளை உத்துப் பார்த்தார்கள்; தங்கள் கரங்களால் அவர் மடியில் சாய்ந்துகொண்டார்கள். அவர் அதை அரவணைக்காமலும் உதறிவிடாமலும் மேற்கொண்டு தொடர்ந்தார். இதற்கு மாறாக அவரின் உடல், இடுப்பை வளைத்து சுற்றியிருக்கும் எல்லோரையும் அவர் பார்வைக்குள் கொண்டுவந்தது.

இதைப் பார்க்கும்போது ஹாம்ஸ்டெட்டில் இருக்கும் ஒரு டாக்சி டிரைவர் என் ஞாபகத்திற்கு வருகிறார். நான் அவரை இப்படித்தான் ஆர்வமாகக் கவனிப்பேன். உயிரினங்களிலேயே கூச்ச சுபாவம் மிகுந்த அணில் குட்டிகள் அவர் உடலில் ஏறி மைதானத்தில் ஆடுவதுபோல் ஓடித் திரியும். அப்போதெல்லாம், டாக்சி டிரைவரிடம் ஒரு மிகப்பெரிய கல்வியாளரை இந்த உலகம் இழந்துவிட்டதே என்று நான் யோசிப்பேன்.

அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், குழந்தைகளின் கேள்விகளையெல்லாம் டாக்டர் ஜாகீர் உசேன் மொழிபெயர்த்துச் சொன்னார். கிழக்கின் மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்கள் அறிவாளியாக இருக்கிறார்கள்.

‘நீங்கள் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்டேன்.

பெரும்பாலும் வணிகம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். சிலருக்கு மருத்துவர் ஆக ஆசை. அதிலொரு சிறுவனுக்கு கப்பலோட்ட வேண்டுமென்று ஆசையாம். ஆனால் அவன் கடலையே பார்த்ததில்லை. யாருக்கும் அலுவலராகவோ, போர்வீரனாகவோ ஆசை இல்லை. அதை ஒரு நல்ல குறியீடாக எடுத்துக் கொண்டேன்.

அவர்களின் மனம் கவர்ந்த ஆதர்ச நாயகன் யாரென்று கேட்டபோது இன்னும் நெகிழ்ந்து போனேன். இந்தியாவின் வரலாறு நெடுகிலும் முக்கியத்துவம் வாய்ந்த பல மன்னர்கள், போர் தளபதிகள் ஆட்சி செய்திருந்தாலும் அவர்களின் பெயரை எவரொருவரும் உச்சரிக்கவில்லை. நான்காவது கலீபாவான ஓமரின் பெயரை மட்டும் ஒரு சிலர் சொன்னார்கள். அவர்களுக்குத் தெரிந்த மிகச் சாதாரண மனிதர் அவர் என்பதுதான் அதற்கும் காரணம்.

ஆனால் அவர்களின் மனதிற்கு நெருக்கமான மனிதர், ஓர் இந்தியர். தன் நண்பனுக்காக உயிர் துறந்த இந்தியர். சாகும்வரை நண்பனுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னதை இங்கு பதிவு செய்யத் தகுந்ததாகக் கருதுகிறேன்.

இவர்கள் பாடல்களை ஒப்புவிக்கிறார்களா? பெரும்பாலும் இல்லை. பொது இடங்களில் பாடல்கள் ஒப்புவிக்க இவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை என்று டாக்டர் ஜாகீர் சொன்னார்‌.

அதான், இந்தியா முழுக்கவும் தேவைக்கு அதிகமான இளம் பேச்சாளர்களை பள்ளிக்கூடங்கள் வளர்த்து விட்டிருக்கிறதே? ஆனால் இவர்களுக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. அருகில் இருக்கும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கொரு நாடகத்தை வெட்டவெளியில் அரங்கேற்றிக் காட்டினார்கள்.

அந்தத் தோட்டம் மிகவும் வனப்பாக இருந்தது. பாதி புல்வெளி; பாதி கான்கிரீட் தரை. அங்கங்கு சில கொட்டகைகள் இருந்தன.‌ குளத்தைச் சுற்றி சில மரங்கள். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்குரிய பிராணிகளைச் சுட்டிக்காட்டி அதற்கு பிடித்த – பிடிக்காத விஷயங்களைப் பட்டியலிட்டார்கள். குரங்கு உட்பட அவர்கள் சொன்னதெல்லாம் இயல்பான வளர்ப்புப் பிராணிகள்தான்.

குளத்தைச் சுற்றி நாடகம் போட்டார்கள். எனக்குப் புரியாத உருது மொழியில் வசனங்கள் இருந்தன. ஆனால் அவர்களின் மிமிக்ரி திறன் பிரமாதமாக இருந்தது. ஒவ்வொருவரும் ஒரு மிருகத்தின் வேடம் ஏற்றிருந்தனர். தன்னைத் துரத்தி வரும் பெரிய மிருகத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள கிளைமீது தாவுதலால் எது குரங்கு என்று என்னால் சுலபத்தில் அடையாளம் காண முடிந்தது.

மறுகணமே குளத்தங்கரையில் இருந்து இரண்டு மனிதப் பறவைகள் பாடத் தொடங்கின. மனநிறைவாக இருந்தது. அவர்கள் இன்னும் சில நாடகங்கள் அரங்கேற்றினார்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் பார்வையாளர் இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். சுயத்தை உணர்வதற்கான மிகச் சிறந்த பரிசோதனை முறை இது.

இவர்களில் சிலர் சலாம் இல்லத்திற்கு அவ்வப்போது மூன்று நான்கு பேராக வந்து என்னைச் சந்தித்துப் போவார்கள். சுந்தரமான இளம்பெண் பிலிப்சன் அவர்களைப் பத்திரமாக அழைத்து வருவார். பிலிப்சன் ஜெர்மனியைச் சார்ந்தவர். இந்தக் குழந்தைகளுக்கு வெற்றிகரமாகப் பயிற்சி அளிப்பதில் அசாத்திய திறம் பெற்றிருந்தார்.

மாணவர்கள் மொத்தமாக எனது அறையில் அமைதியாக வீற்றிருப்பார்கள். கொஞ்ச நேரம் சொற்ப வார்த்தைகளில் பேசிக் கொள்வோம். அதுவும் புரியாது போனால், சைகைகளில் பேச முயற்சிப்போம். பின்னர் தங்களுக்குள் விளையாடத் தொடங்கிவிடுவார்கள். இந்தக் குழந்தைக் கூட்டத்திடம் தொழுகைக்கு நேரமாகிவிட்டது, விரைந்து வாருங்கள் என்று சொன்னால் போதும். விளையாட்டில் எத்தனை மும்முரமாக இருந்தாலும் தொட்டது விட்டபடி அப்படியே போட்டுவிட்டு தீவிரமாக ஆயத்தமாகிறார்கள். ஒரு பதான் சிறுவன், அந்தக் கூட்டத்தை வழிநடத்தி தொழுகைக்கு அழைத்துச் செல்கிறான்.

மாலை நேரத்தில் பேகம் அன்சாரியோடு சேர்ந்து கொள்கிறார்கள். இஸ்லாத்தில் ஆடவர் ஒருவர் தொழுகையை முன்னகர்த்திச் செல்ல வேண்டும் என்பதால் பதான் சிறுவன் அந்த வேலையில் ஈடுபடுகிறான். அன்றாடம் ஐந்து முறை கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இவர்களுக்குச் சமயப் பாடம் போதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களைப் பொறுத்தவரை வசனங்கள் ஒப்புவித்து, இஸ்லாத்தின் எளிய கட்டளைகளை மட்டும் பின்பற்றினால் போதும்.

இதுகுறித்து மத அபிப்பிராயங்களை முன் வைக்கும் கல்வியாளர் ஒருவரிடம் கேட்டால்:

‘இஸ்லாமிய வழிபாட்டுபடி எழுந்து குனிந்து முன் பின்னாக அசைந்து, தொழுகைக்கு முந்தி ஐந்து முறை நீராடி, உடல் முழுமையும் சுத்தப்படுத்துவதெல்லாம் முழுக்க முழுக்க சுகாதாரம் சம்பந்தப்பட்டது. இது அவர்களுக்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கற்றுத் தருகிறது. இது ஒரு ஒழுக்கமானச் செயல்’ என்று கூறுவார்.

மதச்சார்பற்ற கல்வியாளரின் பதில் பின்வருமாறு இருக்கும்:

‘அன்றாடம் குளித்து, விளையாடி, உடற்பயிற்சி செய்வதாலும் இதே பயன்தானே வரப்போகிறது?’

‘சரிதான். ஆனால் குறிப்பிட்ட வயதிற்குப் பின் விளையாடுவதும் உடற்பயிற்சி செய்வதும் நின்றுவிடும். வழிபாட்டு முறையில் தொய்வு இருக்காது. இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒருவரின் ஆரோக்கியமான உடல் நலத்தையும் நல்ல பழக்க வழக்கத்தையும் நீங்கள் மறுக்கிறீர்களா?’

‘நான் அதை மறுக்கவில்லை. ஆனால் உடல் அசைவுகளையும் வசன உச்சரிப்புகளையும் ஏன் மதத்தோடு ஒன்றுசேர்க்க வேண்டும்? (சில வசனங்களுக்கு பெரும்பாலும் அர்த்தம் தெரியாத நிலையில்) அதற்கான தார்மீக பொறுப்பு எங்கிருந்து வருகிறது?

‘கடவுளைத் தொடர்பு கொள்ளப் போகும் ஆசையில், பிரார்த்தனை செய்யும் குழந்தை எப்போதும் விழிப்புடன் இருக்கிறது. மதத்தைப் பின்பற்றுபவர் ஒழுக்கமாக நேர்த்தியுடன் நடந்துகொள்வார் என்ற கற்பிதத்தால் வழிபாட்டு முறைமைகளில் கலந்துகொள்கிறார். எந்த மதத்தோடும் ஒட்டாமல் மதச்சார்பின்மையைக் குழந்தைகளுக்குப் போதிப்பதால், அவர்கள் நடத்தையில் மிக அரிதாகவே பாதிப்பு ஏற்படுகிறது. நன்கு பக்குவம் பெற்ற பெரியவர்களும் மிக அரிதாக இதற்கு ஆட்படலாம். ஆனால் இவையெல்லாம் பிரத்தியேக சந்தர்ப்பங்களில் மட்டுந்தான் நடைபெறும். மற்றபடி சாதாரண மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கும் மீறி கடவுளை நம்ப வேண்டும். அவரின் மாற்றமுடியாத விதியில் நம்பிக்கை வைக்க வேண்டும்.’

இதைத்தான் ஜாமியா கல்வியாளர்கள் எப்போதும் சொல்கிறார்கள். இந்துமதக் கருத்தாக்கத்தின் வழியாக மகாத்மா காந்தியை இவர்கள் நெருங்குவதைப் பின்வரும் உரையாடல் மூலம் புரிந்துகொள்ளலாம். இந்த உரையாடல் மகாத்மா காந்திக்கும் சர்வதேசத் தன்னார்வ அமைப்பின் தலைவர் பியரி செரசோலுக்கும் இடையில் நிகழ்ந்தது. அவர் சுவிஸ் நாட்டைச் சார்ந்த அமைதி விரும்பி. வர்தாவில் மகாத்மா காந்தியைச் சந்தித்தபோதெல்லாம் தொடர்ச்சியாக பிரார்த்தனையில் கலந்து கொண்ட அவர் பின்வருமாறு சொல்கிறார்:

‘ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதைப் பார்க்கையில் எரிச்சலாக இருக்கிறது. ஒருவேளை என் கணித அறிவு இதற்கு இடையூறாக இருக்கலாம்.’

‘உங்கள் கணிதத்திலும் கூட தசம எண்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது அல்லவா?’ என்று மகாத்மா காந்தி சொன்னார்.

‘ஆனால் அதில் மீளும் ஒவ்வொரு எண்ணும் திட்டவட்டமான ஒரு புதிய உண்மையை எடுத்துரைக்கிறது.’

‘இங்கேயும் கூட மீள செய்யும் ஒவ்வொரு செய்கையும் ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் அதைத் திரும்பச் செய்யும்போது நீங்கள் கடவுளை நெருங்குகிறீர்கள்… நீங்கள் இங்கு பேசிக் கொண்டிருப்பது ஒரு கோட்பாட்டாளரிடம் அல்ல, தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் தன் கற்பிதங்களுக்கு ஏற்ப அனுபவித்து வாழ்ந்து வரும் ஒருவர். அவருக்கு அந்த வழக்கத்தை நிறுத்துவதைக் காட்டிலும் வாழ்வை முடித்துக் கொள்வது சுலபம். இது ஆன்மாவின் அத்தியாவசியத் தேவை.’

‘நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சராசரி மனிதனுக்கு இது ஒரு வெற்றுச் சூத்திரம் ஆகாதா?’

‘… மோசடிக்கு ஒத்துழைப்பது நல்ல விஷயம். பாசாங்குக்கு இங்குத் துளியும் இடமில்லை. ஆனால் பாசாங்கும் ஒழுக்கத்தின் குறியீடுதான். நயவஞ்சகர்கள் பத்தாயிரம் பேர் ஒன்றுகூடி லட்சக்கணக்கான இதயங்களை ஆற்றுப்படுத்துகிறார்கள். இது கட்டடத்திற்கு சாரம் கட்டுவதுபோல் அடிப்படையான விஷயம்.’

‘கட்டட வேலை முடிந்தபிறகு சாரத்தை அப்புறப்படுத்தவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?’

‘நிச்சயமாக. உடலில் ஒன்றுமில்லை என்றால் அது அப்புறப்படுத்தப்படும்.’

தான் ஒரு மதவாதியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த உரையாடலில் இருந்து இரண்டு அம்சங்களை ஜாமியாவின் கல்வியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

1. மனிதன் உயிர்வாழ்வதற்கு மதம் அத்தியாவசியமா?

தீர்க்கமாக வரலாறு கற்றவர்கள் எல்லோரும் அவசியம் என்றுதான் சொல்வார்கள். சோவியத் நாட்டினர் திட்டவட்டமாக நேர்மையான முறையில் கலகம் செய்து மதத்தைப் பகுத்தறிவாலும் சமூக விழுமியத்தாலும் வென்றெடுக்க முயன்று தோற்றுப் போனார்கள். மத வெறுப்படைந்த கம்யூனிஸ்ட்டுகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தனி வேர் பரப்புகின்றனர். மக்கட்திரளில், இன்னும் குறிப்பாக விவசாயச் சமூகத்தில் பெரிய மாறுதல் இல்லை. ஃபுலாப் மில்லர் எழுதிய ‘போல்ஷிவிசத்தின் மனமும் முகமும்’ என்ற நூலை வாசித்தால் விவசாயிகள் முன்பு கழுத்தில் சுமந்த சின்னத்திற்கு மாற்றாக இயந்திரத்தால் பெயிண்ட் பூசப்பட்ட மற்றொரு சின்னத்தை அணிந்திருப்பது தெரியும்.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பழைய தேவாலயங்கள் மக்கள் மனத்தை பூர்த்தி செய்ய தவறியபோது, புது வகையான மதங்கள் தோற்றம் பெற்றன. அவற்றுள் சில படு அபத்தம். பகுத்தறிவுவாதத்துக்குத் தாயகமான ஃபிரான்ஸ் நாட்டில் கூட தீய சக்தி வழிபாடும் மாந்திரீக வேலைகளும் தலைதூக்குகின்றன. மெத்தப் படித்த மேதாவிகளும், விஞ்ஞானிகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. இதன்மூலம் மனித வாழ்க்கைக்கு மதம் இன்றியமையாத தேவையென்று நம்புவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதை உணர்கிறோம்.

2. மனித இயல்பின் யதார்த்தத்தை கல்வியாளர்களால் மறுக்க முடியாது.

சிறார்களைப் பக்குவப்படுத்தி நெறி பிறழாமல் நடத்திச்செல்ல இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்ட சிந்தனை மரபைச் சார்ந்த கல்வியாளர்கள் சொல்கிறார்கள். மாற்று மரபைச் சார்ந்த பகுத்தறிவுவாதிகள், குடிமைச் சமூகத்திற்கான ஒட்டுமொத்த பயிற்சியால் அற நெறிகளைப் போதிக்கலாம் என்று அறிவிக்கிறார்கள். எல்லாவித சிந்தனை மரபினருக்குமான அனைத்துலக மாநாடு ஒன்றைக் கூட்டி, இதைப்பற்றி தீவிரமாக விவாதித்து, அதன் அனுபவ அறிக்கைகளை வெளியிட முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்.

எந்த மதம் உண்மையானது என்று மனிதர்கள் சண்டையிட்ட காலத்தை நாம் கடந்துவிட்டோம். இப்போது மதத்தின் மீது திட்டவட்டமான பொது அணுகுமுறை தேவைப்படும் காலம். இறை நம்பிக்கையில் இருந்துதான் எல்லாச் செயல்களும் உருப்பெறுகின்றன என்பதை நாம் நம்புகிறோமா இல்லையா? அதுதான் இப்போதைய கேள்வி.

இந்தக் கேள்வி தொடர்பான ஜாமியாவின் நடத்தைகளைப் பின்வருமாறு தொகுத்துச் சொல்லிவிடலாம்:

‘எங்கள் தெய்வக் கட்டளைகளால் தீர்த்து வைக்க முடியாத சிக்கலோ, அறநெறிப் பிரச்சினைகளோ எதுவும் கிடையாது. சுகாதாரம், கட்டுப்பாடு, ஆரோக்கிய விதிகள், நன்னடத்தை என்று இங்கு எல்லாம் உண்டு. சமத்துவ விதிகள் இங்குத் தெளிவாகப் பேசப்பட்டுள்ளன. என்றென்றைக்கும் உயிர்ப்புள்ள பொருளாதாரச் சீர்த்திருத்தத் திட்டங்கள் உள்ளன. இவையெல்லாம் அத்தியாவசியம் என்று குழந்தை மனதில் பதியமிட்டோம் என்றால், நாளை உதயமாகும் ஒரு சிறந்த உலகிற்கான உரமிட்ட திருப்தி தோன்றும்.’

0

இறுதியில் தில்லிக்குப் புறம்பாக ஜாமியாவின் உறுப்பினர்கள், ஒரு புதிய கட்டடத்திற்கான அஸ்திவாரக் கல் அமைப்பதற்கு ஒன்றுகூடி நின்றார்கள். நாளா நாளைக்கு புதுப்புது கட்டடங்கள் எழுப்புவதற்கு வசதியாக அவர்களிடம் கணிசமான நிலம் கையில் இருக்கிறது. இந்தக் கோலாகலமான கொண்டாட்டம் ஒரு பெரிய கூடாரத்தின்கீழ் நடைபெற்றது. டாக்டர் அன்சாரி தலைமையிலான இந்நிகழ்வில் முக்கியமான இந்து, முஸ்லிம் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

பெருவாரியான இந்துக்கள் அதிகம் நிதியளிப்பதைப் பார்த்தால், முன்னணி முஸ்லிம் தலைவர்களைக் காட்டிலும் ஜாமியாவின் கல்வி மதிப்பை இந்துத் தலைவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டதாய் தெரிகிறது. முஸ்லிம் சமூக மக்களும் தங்கள் அன்றாட செலவுகளை இறுக்கமாகப் பிடித்து வைத்து ஒன்றிரண்டு அணாக்களை ஜாமியாவின் கல்விக்காக வழங்குகிறார்கள்.

ஒரு சிறிய குழந்தை கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவைத் தொடங்கிவைத்தது. முதியவர்களுக்கு மத்தியில் மேடையில் நின்று கொண்டிருந்ததால், அக்குழந்தையின் முகம் அமைதியிழந்து காணப்பட்டது. மேடைக்கு எதிர்ப்புறம் என் இளைய நண்பர்கள் முகாமிட்டிருந்தனர். அடிக்கல் விழா உரையை கண்ணியத்தோடு செவிமடுத்து கவனித்தார்கள்.

ஆனால் நேரம் கடந்ததும் பொறுமையிழந்துபோய் தங்களுக்குள் பேசி கிசுகிசுத்தனர். அங்கிருந்த ஆசிரியரும் எல்லாம் தெரிந்தவர்போல், அதை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. ஏழு வயது சிறுமி ஒருத்தி மீண்டும் ஒழுங்குபட அமைதி ஏற்படுத்தினாள்.

அவள் பார்ப்பதற்கு நோஞ்சானாக இருந்தாள். கூர்மையான கறுத்த கண்கள், பளபளத்தன. விலா எலும்புகளுக்குள் கூரான முழங்கைகள் சிக்கிக்கொண்டதுபோல் இருந்தது. அவள் பேச்சுக்கு மறுபேச்சு இல்லாமல் கூட்டம் அமைதியானது. நவீன இந்தியப் பெண்ணின் உருவமாக நான் அவளை அடையாளம் காண்கிறேன். ஆண்களை நடத்தும் விதத்தில் அவள்‌ தன் உரிமைகளை நிலைநாட்டினாள்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *