இந்தியாவில் நீங்கள் அதிகம் கேள்விப்படும் சில சொற்கூறுகள் உள்ளன: வகுப்புவாதம், தேசியவாதம், சமூகவுடைமை. சலாம் இல்லத்தில் இருந்து ஒரே வாரத்தில் இந்தியப் பிரச்சினைகளையும் அதன் தாக்கங்களையும் ஒருவரால் தெரிந்துகொள்ள முடியும். சலாம் இல்லத்தில் இருந்து நான் அறிந்துகொண்டவற்றை உங்களுக்கு மிகச் சுருக்கமாக அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
வகுப்புவாதம் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால், எல்லாவற்றையும் தான் சார்ந்த சமூகத்தின் பார்வையில் இருந்து பார்ப்பது என்று பொருள் கொள்ளலாம். அதில் ஐந்து அம்சங்கள் உள்ளன. மதம், சமூகம், கலாசாரம், பொருளாதாரம், அரசியல். அதில் மதம்தான் மற்றெல்லாவற்றுக்கும் அடிப்படை.
இந்தியர்கள் எல்லோரும் இந்த ஐவகை அம்சங்களில் ஏதோ ஒரு சமூகத்தைச் சார்ந்திருக்கிறார்கள். சமூகத்தின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், அவர்களுக்குள் யார் பெரியவன் என்ற போராட்டம் பரஸ்பரம் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் இந்து, முஸ்லிம் என்ற இரு சமூகத்துக்கு இடையிலான போராட்டம்தான் வெளிப்படையாகத் தெரிகிறது. மற்றெல்லோரும் தங்களுக்குள்ளாகப் பேசி ஒருமித்த முடிவுக்கு வந்து இந்து முஸ்லிம் கருத்தாடலுக்கு ஏற்ப தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்.
இந்து முஸ்லிம் தத்துவங்களுக்குச் சம்பந்தப்படாத, அவர்கள் வாழ்வியலுக்குச் சம்பந்தப்படாத அந்நியர்களால் இந்தியா ஆளப்படும்வரை, கோடிட்டுக் காட்டும்படியான உட்பிரிவுகள் இங்கு அப்பட்டமாக நீடிக்கும். இரு சமூகத்துக்கும் இடையிலான சிக்கலான முரண்பட்ட முடிவுகளைக் கத்தரித்து வெளியேற்றி, சுமுக உடன்படுக்கை ஒன்றை அந்நிய ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.
நுணுக்கமாகப் பிளவுபட்டிருக்கும் இந்தச் சமூகங்களைப் பார்ப்பதற்கு தேசத்திற்குள் தனித்தனி தேசமாகத் தெரிந்தாலும், குறைந்த மக்கட்தொகை கொண்ட அகண்ட நிலப்பரப்பை ஆட்சி செய்ய விரும்பும் அந்நிய அதிகாரிகளுக்கு இது ஓர் ஏதுவான சூழல். இத்தகைய சூழலில் அந்நிய ஆட்சியின் இன்றியமையாதத் தன்மை நிலையானதாக மாறுகிறது.
ஆனால் இது அத்தனைச் சுலபமான காரியமல்ல. அசாதாரணத் தெளிவும், வளைந்து கொடுக்கும் நுட்பமும், போர்த் தந்திரமும், ஆளுமைத்திறனும் வானளாவிய அளவு தேவைப்படும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஈடில்லா வலிமை மற்றும் ஆளுமைத்திறனை இந்தப் பார்வையில் இருந்து இந்திய மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் சுதந்திர இந்தியா பற்றி இந்நாட்டவர்கள் சிந்திக்கும்போதே, மற்றொரு ‘சுமுக ஒப்பந்தம்’ கையெழுத்திடுவதற்கான தேவை குறித்தும் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் இதைத் திணிப்பதற்கோ, அந்நியர்கள் தலையீட்டால் நெறிப்படுத்துவதற்கோ விரும்பாமல், பரஸ்பர பேச்சுவார்த்தையில் சில பல தியாகங்களால் ஈடேற்ற வேண்டும் என்று கருதுகின்றனர்.
இந்திய சுயாட்சி பற்றிய முதல் கட்ட ஆசை, இந்நாட்டின் இருபெரும் சமூகங்களை அரசியல் ரீதியான விவகாரங்களில் ஒரு பொது முடிவுக்கு வரச்சொல்லி உந்துகிறது. ஆனால் எந்தவொரு அரசியல் விவகாரத்திற்குப் பின்னும் ஒரு பொருளாதாரப் பிரச்சினை உண்டு. வாக்காளர்கள் ஒன்றுசேர வேண்டுமா, பிரிந்திருக்க வேண்டுமா என்ற குழப்பத்தை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
உண்மையில் இது பணம் கொழிக்கும் எண்ணிலடங்காத பதவிகளை எந்தச் சமூகம் கைப்பற்றுவது என்ற பிரச்சினை. இதில் எங்கு தேசியவாதம் இருக்கிறது? இந்திய மரபில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், வகுப்புவாதத்தின் கண்ணாடிகளை ஒருவர் எப்போதும் அணிந்துகொள்ள வேண்டும். அது கடந்து வந்த பாதைகளை கவனமாகப் படித்து அறிய வேண்டும்.
1. வகுப்புவாதிகள் அனைவரும் தங்களை ஒரு தேசியவாதியாக இன்றைக்கு அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். பிளவுபட்டிருக்கும் இந்து முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுசேர்ந்து இந்தியச் சுதந்திரத்திற்கு குரல் கொடுப்பதை நாம் இப்படித்தான் பார்க்கவேண்டும். இல்லையென்றால் ஒற்றுமைக்குப் போராடுவதாய் அவர்கள் பாசாங்கு செய்யலாம். பெருந்திரளான மக்களிடம் சுதந்திர எண்ணம் வலுப்பெற்றுள்ளதால், குழப்பமாக இருந்தாலும் தலைவர்கள் அவ்வெண்ணத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
ஆனால் அதற்குள்ளும் சுதந்திர தேசத்தில் யார் ஆட்சியதிகாரத்தைப் பிடிப்பது என்ற போட்டி உள்ளது. வகுப்புவாதம் பற்றிய கருத்தாக்கம் மேலோங்கும் போதெல்லாம், அந்நிய ஆட்சியாளர்கள் கம்பளம் விரித்து வரவேற்கப்படுகிறார்கள். என்னதான் ‘சுமுக ஒப்பந்தங்களை’ இந்து முஸ்லிம் சமூகம் வரையறுத்து வைத்தாலும், அவையெல்லாம் தாற்காலிகத் தீர்வுதான். ஒருமித்த முடிவுகாணாத வரை, வலிமையான அந்நிய ஆட்சியாளர்கள் படையெடுத்து வந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு.
2. அடுத்ததாக தேசியவாதிகள். பெரும்பாலான மக்கள் தங்களை இப்படித்தான் அழைத்துக்கொள்கின்றனர். இதற்குள்ளிருக்கும் இந்து முஸ்லிம் உள்ளரசியல் வேறுபாடு சமீபத்தில்தான் சுமுகநிலை எட்டியிருக்கிறது. இப்போதெல்லாம் சந்தேகத்துக்குரிய விவகாரங்களில் தீவிரமாக ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். கடந்த காலத்திலும் இப்படி நிகழ்ந்ததுண்டு. ஆனால் பொருளாதார பார்வையில் சிக்கல் நீடிக்கிறது.
தேசியப் பொதுமொழி, எழுத்துரு போன்ற ஒற்றைக் கலாசாரப் போக்குகள் இன்னும் பேச்சளவில்தான் உள்ளன. இருந்தாலும் தேசியவாத இந்து முஸ்லிம்கள் மற்றவரது மதத்தைத் தீவிரமாக மதிக்கிறார்கள். இருவரும் தங்கள் மத நம்பிக்கைகளைப் பரிமாறாவிட்டாலும், மற்றவரின் மத நம்பிக்கைக்கு உரித்தான வாழ்வியல் அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.
தங்கள் சமூக மேம்பாட்டை விட்டொழித்து, தேசிய நலனே பிரதானம் என்று சிந்திக்கும் இங்கிலாந்து அல்லது பிரெஞ்சு நாட்டுக் குடிகள் போல் சுதந்திர இந்தியாவே எங்கள் லட்சியம் என்று சொல்லும் மூன்றாம் கட்சி ஏதும் இந்தியாவில் இருக்கிறதா? ஸ்காட்ச், வேல்ஸ், பிரிட்டன், பாஸ்க் என்று சிந்திக்காமல் மொத்தமாகச் சிந்திக்கும் இங்கிலாந்து பிரெஞ்சு போலான இந்தியச் சமூகங்கள் இங்கு உயிர்ப்போடு இருக்கின்றனவா? அது குறித்து எந்தவொரு செய்தியும் தெளிவாக இல்லை.
இந்திய சமூகவுடைமை சமீபத்தில் தோற்றம் கண்டிருந்தாலும், அதன் ஒரேயொரு அம்சமாவது இதன்போக்கில் உள்ளது. இத்தகைய சமூகவுடைமையில் இரட்டை அம்சங்கள் உண்டு:
1. முதல் வகை, புனித நூல்களில் எடுத்துரைக்கப்படும் சமூகவுடைமை. இந்து வேத நூல்கள் வகுப்பு அல்லது சாதி அடிப்படையில் ஆனவை. முஸ்லிம் நூல்கள் மேற்கத்திய சமூகவுடைமையின் நவீன மாதிரியைப் பின்பற்றுகின்றன. அதன் ஒருங்கிணைந்த ஜனநாயக இயல்பினால் அகில உலகில் இருக்கும் எவ்வித சக்தியாலும் இஸ்லாத்தை சாதி ரீதியான நாடாக மாற்ற முடியாது. இந்துக்கள் முதலாளித்துவ வகுப்பைக் கையிலெடுப்பதால், சமூகவுடைமைக் கொள்கையின்மீது இயல்பாகவே இஸ்லாமியர்கள் சாய்ந்துகொள்கின்றனர். ஆனால் இந்தியச் சமூகவுடைமை மதத்தைப் பின்பற்றி அதன் புனித நூல்களில் விளக்கம் தேடும்வரை, நவீனத்துவம் அடைந்த சர்வதேச உத்திகளுக்குள் நுழைய வழியில்லை.
2. இரண்டாவது வகை, மேற்கத்திய சிந்தனையாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும் உண்டானது. தொழில்துறைப் பற்றி அறிந்த நகர்ப்புற மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு உண்டு. முதலீட்டுக்கும் உழைப்புக்கும் இடையே சச்சரவு தோன்றும் போதும் இதற்கு நல்ல ஆதரவு இருக்கிறது.
இவ்வகை சமூகவுடைமையின் கருத்தாக்கங்கள் பண்டித ஜவாஹர்லால் நேருவின் பெயரால் துலக்கம் பெறுகின்றன. 1935இல் இந்து இளைஞர்களைவிட அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் ஜவாஹர்லால் நேருவைத் தங்கள் அரசியல் தலைவராய் பிரகடனப்படுத்தினர்.
சமூகவுடைமையை வகுப்புவாதம் மற்றும் தேசியவாதத்திற்கு மாற்றாக அடையாளப்படுத்தும் இந்தப் பார்வையை சலாம் இல்லத்தில் இருந்து தரிசிக்க முடியாது. ஜவாஹர்லால் நேரு என்ற தலைவர் அப்போது சிறையில் இருந்தார். தன் வாழ்வின் பெரும்பகுதியை அவர் சிறையில் கழிக்க நேர்ந்தது.
அவர் எழுதிய வரலாற்றுப் புத்தகங்கள் எல்லாம் நன்கு திட்டமிடப்பட்டு, வரலாற்று நிகழ்வுகளின் புறநிலைச் சுருக்கமாக அமைந்துள்ளன. அவரின் சகோதரி எனக்கு அந்தப் புத்தகங்களை அனுப்பி வைத்தார். அவரின் புகைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ஒல்லியான தெளிந்த முகம். சிந்தனைப் போக்குள்ள வசீகரக் கண்கள்.
ஒரு வருடத்திற்குப் பிறகு நான் அவரை பாரிஸில் நேரில் சந்தித்தேன். அதற்கடுத்த ஆண்டு அவருடைய வரலாற்றுப் புத்தகத்தை வாசித்தபோது, மிக உயர்ந்த மனிதராகத் தோன்றினார். இப்புத்தகத்தின் இறுதியில் விவரிக்கும் அளவில் தனக்கானதொரு மரபை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
சமூகவுடைமையின் மற்றொரு வடிவை முன்னிலைப்படுத்தும் டாக்டர் கான் சாகிப் அவர்களை சலாம் இல்லத்தில் வைத்து சந்தித்தேன். இந்தியாவின் எல்லைப்புறத்தில் ‘செஞ்சட்டை’ இயக்கம் நடத்தும் நன்கறிந்த அப்துல் கப்பார் கானின் சகோதரன் இவர். செஞ்சட்டை இயக்கத்தை அச்சுறுத்தலாக கருதிய இந்திய அரசாங்கம், அதனைக் கலைத்த கையோடு அப்துல் கப்பார் கானையும் சிறையில் வைத்தது.
டாக்டர் கான் சாகிப் அன்பான, அழகிய மனிதர். எப்போதும் ஒரு நீள வெள்ளைச் சட்டையும் காந்தி குல்லாவும் அணிந்திருப்பார். தங்களைப் பின்பற்றும் எல்லோரும் காந்தியவாதி மற்றும் சோசலிஸ்ட் என்று சொன்னார். அத்தோடு அவர்கள் அகிம்சைக் கொள்கையைக் கடைப்பிடித்தனர்.
0
நவீன இந்திய வாழ்க்கையை நான் வெகுவாக உள்வாங்கியிருக்கிறேன். மேற்குலகில் இந்தியா பற்றி வலிந்து சொல்லப்படும் அமானுஷ்ய விஷயங்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டேன். பிற அம்சங்களைக் காட்டிலும், இந்தியா பற்றி எதை நம்பவேண்டும் எதை நம்பக்கூடாது என்று தெளிவு கிடைத்திருக்கிறது. இதை இந்தியாவில் ஏற்பட்ட ஆரோக்கியமான குறியீடாகக் கருதுகிறேன்.
சமூக வாழ்க்கையில் இருந்து தன்னைப் புறமொதுக்கிக் கொண்டு துறவு வாழ்க்கை வாழும் இந்திய ஆடவர்களின் எண்ணிக்கை முன்புபோல் அல்லாமல் குறைந்துவிட்டது. குகைகளில் வாழ்ந்த மனிதருக்கும் தற்கால இந்தியருக்கும் பெருத்த வேறுபாடு தெரிகிறது.
இன்றும் துறவு மேற்கொள்கிறார்கள். ஆனால் உண்மைத் துறவிகள் ஞானம் அடையும்வரை மக்களோடு மக்களாக வாழ்ந்து, அவர்களுக்காகச் சேவை செய்ய வேண்டும். தீய மந்திரங்களும் அமானுஷ்ய சக்திகளும் இந்தியாவில் வலிமை குன்றி வருகிறதென தைரியமாகச் சொல்லலாம்.
சராசரி இந்தியனும் முக்கிய அறிவுஜீவிகளும் மதம் ஒரு செயல்பாட்டு கருவி என்று புரிந்திருக்கிறார்கள். சமூக வாழ்க்கையில் மனிதன் இடையறாது பங்குக் கொள்ள மதம் உதவி செய்கிறது என்பது அவர்கள் புரிதல். இருந்தாலும் மதம் பற்றிய எதிர்முறை எதிர்பார்ப்பும் அமானுஷ்ய அறிவும் முழுவதுமாக ஒழிந்தபாடில்லை. பின்வரும் கடிதத்தின் மூலம் நான் இதை உறுதியாக நம்புகிறேன்.
அன்பிற்குரிய அம்மையாரே,
எதிர்பாராத இடத்திலிருந்து இந்தக் கடிதம் வந்திருப்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படலாம். பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டிருக்கும், இறை போதையில் திளைக்கும் ஆன்மா ஒன்று உங்களுக்கு இந்தக் கடிதத்தை ஹரித்துவாருக்கு அருகிலிருக்கும் ரிஷிவாங்கில் இருந்து எழுதுகிறது. இந்தப் பிறவியில் அந்த ஆன்மாவிற்கு குருவோ சாதனமோ கிடையாது. இந்த ஆன்மாவோடு தொடர்பு கொண்ட பிரபலமான இந்துமதத் தத்துவ அறிஞர்கள், கடந்த நான்கு ஐந்து நூற்றாண்டுகளில் இப்படியொரு ஆன்மா இந்நாட்டில் பிறவியெடுத்ததில்லை என்று சொல்கிறார்கள். அதற்காக…
அந்தப் பெண்மணியின் அசாத்திய சக்திகளைப் பட்டியலிடும் மிச்சக் கடிதத்தை நான் அப்படியே விட்டுவிடுகிறேன். தான் உருவாக்கிய மன நிம்மதியில்லாத உலகில் இருந்து மனிதர்களைப் பிரிந்து செல்லும் ஆடவர்களோடு எனக்கு எவ்விதச் சண்டையும் இல்லை. வாழ்வின் மறைமுக அம்சங்களில் இருந்தும், எதிர்பாராத மனிதர்களின் குரோத இயல்பில் இருந்தும் விடுவித்துச் செல்ல எல்லோருக்கும் ஓர் ஏக்கம் இருக்கும்.
கண்ணியமிக்க மனிதர்கள் பலர் இவ்வுலகியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றால், அவர்கள் உயிரை விட்டு விலகுவதையும், சக உயிர்களுக்குச் செய்யும் கடமையிலிருந்து நழுவுவதாகவும் அதைக் கணிக்கிறார்கள். ஆனால் உலக வாழ்விலிருந்து விடுபட்ட பின்னரும் கவனம் ஈர்க்க விரும்புபவர்களை வீண் விளம்பரக்காரர் என்று சொல்வதைக் காட்டிலும் வேறெதுவும் தோணவில்லை.
சிலர் அசாதாரண வித்தைகள் செய்யும்படி தங்கள் உடலைப் பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் கழைக்கூத்தாடி என்று அழைக்கப்படுகிறார்கள். இடைக்காலத் துறவி ஒருவர் ஒற்றைத் தூணில் இருபது ஆண்டுகாலம் ஒரே காலில் நின்றதும், தன் அசாதாரண வாழ்வியல் முறைக்குப் பார்வையாளர்களை உள்ளிழுப்பதும் கழைக்கூத்தாடிகளாக சில பார்வையாளர்களை வசீகரப்படுத்தலாம்.
எனக்குக் கடிதம் அனுப்பிய பெண்மணி தன் பெயரோடு முழு முகவரியும் சேர்த்து அனுப்பியதால், இதையோர் அமானுஷ்ய கடிதம் என ஏற்றுக்கொள்ள முடியாது. மிகுந்த நம்பிக்கையோடு, தீர்க்கமாக எழுதியிருக்கும் பெண்மணியை சந்தேகிக்கும் உரிமை எனக்கு இல்லை.
ஓர் ஆணோ பெண்ணோ தன் சக உயிரினங்களை அவரவர் தலைவிதிக்கு ஏற்ப தந்திரமாகப் பாதியில் விட்டுச் செல்லும்போது, அதை முழுவதுமாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு தேவைப்படும் வழிகாட்டி அமைதியானவராக, குழம்பிப்போய் மன உளச்சல் அடையாதவராக, பிறரின் துன்ப வாழ்க்கையைப் பரிமாறுபவராக, வாழ்வின் ஆதிமுதல் அந்தம்வரை படித்துத் தேர்ந்தவராக ஓர் ஆன்மீக வெளிப்பாட்டாளராக விளங்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.