அலிகர்
அலிகரில் இருந்து எனது தேடல் தொடங்கியது. அலிகர் என்றால் அலிகர் நகரமல்ல, அலிகர் பல்கலைக்கழகம்.
பல்கலைக்கழகத்திற்கு வெளியில் பாழடைந்த காட்டுப் பகுதி ஒன்றிருந்தது. சேதமடைந்த பழைய கோட்டையின் எச்சங்களாக சிறுசிறு சுவர்கள் கேட்பாரற்று இருந்தன. கோட்டைகளும் கல்லறைகளும் இந்திய நெடுஞ்சாலை மற்றும் புறவழிச்சாலையின் முகத்தை மறைக்கின்றன.
‘இந்த இடம் பேயடைந்தார் போல் உள்ளது’ என்று உடன்வந்தவர் சொன்னார்.
‘எப்படி?’ என்றேன்.
இடிந்த எச்சங்களைச் சுட்டிக்காட்டி, ‘அங்கு சத்தம் கேட்கிறது. அதுவொன்றே போதும். அவர்கள் அந்தச் சத்தத்திற்கு பகுத்தறிவான அறிவியல் காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்’ என்று தான் நம்புவதாகச் சொன்னார்.
அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு பகுத்தறிவான அறிவியல் காரணங்களை இந்தியா கண்டடைய முயற்சிக்கிறது என்று யாரேனும் எப்போதாவது சொல்வார்களா!
முதல் வேலையாக அந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர், சர் சையது அகமதின் கல்லறைக்குச் சென்றேன். இளஞ்சிவப்பு ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான வெள்ளை நிறக் கல்லறையின் முன் கிழக்கு – மேற்காக மரத்துண்டால் ஆன வேலைப்பாடுகள் வளாகத்தை நிறைத்திருந்தன.
அவர் இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவி 75 ஆண்டுகள் ஓடிவிட்டன. தற்கால இந்திய முஸ்லிம்கள் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள விரும்பினால், அவரைப் பற்றியும் அவர் எதற்காகக் குரல் கொடுத்தார் என்பதையும் தீவிரமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
சையது அகமதை போற்றுபவர்களைக் காட்டிலும் தூற்றுபவர்கள் அதிகமாக இருப்பது, அவரின் சமகாலத் தாக்கத்தை ஆழமாகப் பதிவு செய்கிறது, இனியும் பதிவு செய்யும். அவரைப் பற்றி மேம்போக்காகச் சொல்ல முயன்றால், இப்படித்தான் இருக்கும்.
இந்த நாட்டைப் பெரும்பாலும் முஸ்லிம்களிடமிருந்து ஆங்கிலேயர் கைப்பற்றியதால், பிரிட்டிஷ் இந்தியாவிற்கு இஸ்லாமியர்களைக் காட்டிலும் இந்துக்களின் ஆதரவு பெரிய அளவில் இருந்தது. இஸ்லாமியர்கள் தனித்து நின்றார்கள். இல்லையென்றால் சண்டைக் கோழி என்று கருதி அவர்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கலாம். ஆகையால் தங்கள் நாட்டு இந்துக்களை ஒப்பிடுகையில் நீண்ட காலத்திற்குப் பிறகே மேற்கின் கல்வியும், மேற்கின் தாக்கமும் அவர்களுக்கு வாய்த்தது.
19ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஓரளவு பகுத்தறிவு கொள்கை கொண்ட இஸ்லாமிய சீர்த்திருத்த இயக்கத்தை இஸ்லாமிய உலகில் ஜமாலுதீன் ஆஃப்கானியும், ஷேக் அப்துல்லும் தலைமை தாங்கி நடத்தினார்கள். இடத்திற்கும் மனிதர்களுக்கும் தகுந்தாற்போல் பலவிதமான அம்சங்களில் இந்த இயக்கம் கிளர்ச்சியூட்டியது. மேற்கின் கிறிஸ்தவ உலகத்தோடு சமாதானமாக ஒத்துப் போவதற்கு இஸ்லாமிய உலகில் முன்னெடுத்த முதல் முயற்சி இதுதான். இதில் சர் சையது அகமது இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார்.
இவர் 1817ஆம் ஆண்டு தில்லியில் பிறந்தவர். இவர் குடும்பம் பழங்கால முகலாய அரண்மனையோடு தொடர்புடையது. முகலாய அரசின் தரம் தாழ்ந்த ஆட்சியின் கசப்பான கடைசி நாட்கள் பற்றி இவருக்கு எல்லாம் அத்துப்படி என்று எல்லோருக்கும் தெரியும். கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கிலேயே ஆட்சியதிகாரம் பற்றியும் இவர் தெரிந்திருந்தார். முந்தைய ஆட்சியோடு ஒப்பிடுகையில் பெரிய அளவில் வித்தியாசமில்லை. கலகம் மூண்ட பிறகும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தார்.
சில ஆங்கிலேய எழுத்தாளர்களின் கருத்துப்படி பார்க்கையில் இந்தக் கலகம் ‘மிகவும் எதிர்பார்க்கப்பட்ட’ ஒன்றெனத் தெரிகிறது. ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாற்றை எழுதிய வின்சென்ட் ஸ்மித், சர் லெபல் கிரிஃப்பின் கலகத்திற்கு நன்றி சொல்வதை மேற்கோளிட்டு இதனால் ஏற்பட்ட மேம்பட்ட ஆட்சி மாற்றத்தை குறிப்பிடுகிறார்.
‘முன்னேற்றம் அடையாத, சுயநலம் மிக்க, வியாபார நோக்கிலான ஆட்சியதிகாரத்தைப் பரந்த நோக்கிலான அறிவுமைய ஆட்சியாக மாற்றியதில் கலகத்திற்கு முக்கிய பங்குண்டு.’ தான் பின்பற்றும் மாறுபட்ட கொள்கையிலும், அதனால் ஏற்படும் தோல்விகளிலும் இருந்து கற்றுக்கொள்வதற்கு இந்தியர்களிடம் நிறைய பாடங்கள் இருந்தன.
உண்மையில் கணிசமான அளவில் பார்த்தால், பழைய ஆட்சி முறைக்கும் புதிய ஆட்சி முறைக்கும் உண்டான முரண்பாடாகவே இந்தக் கலகத்தைப் பார்க்க வேண்டும். ஆனால் நாம் முன்பு கணித்ததுபோல் அல்லாமல் இன்னும் பல விஷயங்கள் பொதிந்திருக்கின்றன. இந்தியாவின் கடைசி படையெடுப்பாளரை நாட்டிலிருந்து துரத்துவதற்கு ஆசை முளைத்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
இருந்தாலும் இதைச் சுதந்திரத்திற்கான போராட்டம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் வெவ்வேறு காரணத்திற்காக கிளர்ச்சி செய்தார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் இருந்தன. ஆங்கிலேயரோடும் வம்புக்குச் சென்றனர்.
வெகுஜன மக்களைப் பொறுத்தவரையில் கிழக்கின் வழக்கமான ஒரு போர் முழுக்கம் எழும்பியது: ‘மதம் ஆபத்தில் உள்ளது.’ ஆனால் ஆபத்தில் இருப்பது ஒற்றை மதமல்ல. இந்துக்கள் ஆங்கிலேய கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் சமர் செய்தனர்; இஸ்லாமியர்கள் தங்கள் மதத்திற்காகச் சண்டை போட்டனர்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நல்வினைகளை ஏற்றுக்கொண்டாலும் அதன் மீதான காட்டமான விமரிசனத்தை தன் எழுத்துக்களில் பதிவு செய்தார், சையது அகமது. தான் ஆட்சி செய்யும் மக்களைப் பற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் பெரிதாகத் தெரிந்துகொள்ளவில்லை; முந்தைய இஸ்லாமிய ஆட்சியைக் காட்டிலும் உள்ளூர்வாசிகளோடு மிக சொற்பமாகவே இயைந்து போகிறது என்று வெளிப்படையாக எழுதினார். மேலும் அதன் அதிகாரப் போக்கு ஏகபோகமாக மலிந்து கிடந்தது. உள்ளூர்வாசிகளை கீழானவராக மதித்து, அற்ப மனிதராகவும் ஏற்றுக்கொள்ளாததைப் பதிவு செய்கிறார்.
அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் இந்துக்கள் ஆள்வதைக் காட்டிலும் ஆங்கிலேய ஆட்சியே மேலானதென்று கருதினார். இறுதியில் ஆங்கிலேயரின் கை ஓங்கும் என்று அவர் நினைத்தாரா என்பதைச் சொல்வது கடினம்.
இன்றைய காலக்கட்டம் போல் அறிவியல் ரீதியான உபகரணங்களைப் பயன்படுத்தாமல், வீரத்தையும் படையமைப்பையும் முன்னிறுத்தி அன்றைய போர்கள் இருந்தன. இது மேலோட்டமாக வரலாறு படிக்கும் சகலருக்கும் தெரிந்த விஷயம். ஆகவே இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து போராடியிருந்தால், ஆங்கிலேய அரசு அதைக் கையாள சிரமப்பட்டிருக்கும். இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒன்றுசேர்ந்து போராடினால்தான் பெரிய அளவிலான இயக்கத்தை வெற்றிப் பெற செய்ய முடியும் என்று சிப்பாய் கலகத்தின் தோல்வியில் இருந்து இந்திய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சர் சையது அகமது ஆங்கிலேயரின் பக்கம் சாய்ந்ததற்கு மேலுமொரு வரலாற்று உண்மை உள்ளது. அதைத் தத்துவார்த்த உண்மையென்றும் சொல்லலாம். கிழக்கின் பழமையான தத்துவங்களைக் காட்டிலும் மேற்கின் கிறிஸ்தவ உலகத்தோடு இஸ்லாமியர்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். கிழக்கு மற்றும் மேற்குலகின் சிந்தனை மரபு, கலாசாரம், தத்துவங்களை இணைக்கும் பாலமாக அவர்கள் செயல்பட்டார்கள். குறிப்பாக இடைக்காலத்தில் இருந்து நவீன காலம் வரை அதன் பங்கு உயர்ந்திருக்கிறது.
தன் சொந்த நாட்டில் இருக்கும்போது மேற்குவாசி ஒருவனுக்கு இஸ்லாமிய கருத்தாக்கம் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் கிழக்கு நோக்கி நகரும்போது, பண்டைய கிழக்குத் தேசத்தை காட்டிலும் முன்னிருந்த இஸ்லாமிய தேசத்தில் அதன் கருத்தாக்கம் செயல்முறையில் ஒத்துவருவதை அவன் நெருங்கிப் பார்க்கலாம். இதற்கும் எவ்வித ஏற்றத்தாழ்வுக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் வித்தியாசமானவர்கள், அவ்வளவுதான்.
கிழக்கின் மொழி மற்றும் சமயங்களை ஆய்வு செய்யும் ஆங்கிலேய ஆய்வாளர் ஒருவர், வைஸ்ராயின் மதிய விருந்தில் என்னிடம் ஒன்று சொன்னார்: ‘இஸ்லாம் மேற்கத்திய மதம். கிழக்கின் மக்கள் அதை கிழக்குமயமாக்கி விட்டனர்; கிறிஸ்தவம் கிழக்கின் மதம், மேற்கின் மக்கள் அதை மேற்குமயமாக்கி விட்டனர்.’
அவரின் அரசியல் சார்புக்கான காரணம் இதுதான். கல்வி ரீதியிலும் அவர் மேற்குலகையே சார்ந்திருந்தார். இந்திய முஸ்லிம்களை மேற்குமயப்படுத்த வேண்டுமென்று விரும்பியதோடு அதற்காகப் பல போராட்டங்களையும் இடர்களையும் சந்திந்து அலிகர் கல்லூரியை நிறுவியதன் மூலம் ஓரளவு வெற்றி கண்டார்.
இஸ்லாமிய அறிவுஜீவியும் சர் சையது அகமதின் விமர்சகருமான ஒருவர் பின்வருமாறு சொன்னார்:
‘அவர் மேற்கின் சாரத்தோடு ஒன்றிப்போய், இஸ்லாத்தைப் பகுத்தறிவோடு விளக்க முயன்றது உண்மைதான். ஏனெனில் அவர் காலத்தில் பகுத்தறிவுவாதம் மேலோங்கி இருந்தது. ஆனால் மரபுவழிப்பட்ட பழமைவாதிகளால் அவர் மிகவும் துன்புறுத்தப்பட்டார். இன்றைக்கு நாம் அறிந்ததைக் காட்டிலும் பல முரண்பாடுகளை அவர் எதிர்கொண்டிருப்பார் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் அதே சமயம் அலிகர் நிறுவனத்தின் சமய போதனையை மரபுவழிப்பட்ட பழமைவாதிகளின் கையில் ஒப்படைக்கும்போது அவர்களோடு சமரசம் அடைந்தார் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.
ஒருவேளை அவர் உண்மையிலேயே ‘இஸ்லாமியர்களின் மனத்தை சீர்திருத்த நினைத்திருந்தால்’ சமய வகுப்புகளைப் பழமைவாதிகளிடம் ஒப்படைத்து இளைஞர்களின் புத்தியில் மந்தமான கல்விக்கு இடந்தராமல், வேறு ஏதேனும் செய்திருப்பார். ஆனால் அவர் சீர்த்திருத்தம் வெறுமனே மேலோட்டமானது. மேற்கின் புறவயமான விஷயங்களையே திகைத்துப் போற்றினார்.
மேற்குலகின் நடத்தையை அழுத்தம் திருத்தமாக பின்பற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். இன்னும் புரியும்படிச் சொன்னால், மேற்குலகின் தத்துவங்களையும் உட்கட்டமைப்பையும் பின்பற்றுவதைக் காட்டிலும் முட்கரண்டியும் கத்தியும் வைத்து உணவு உண்ண கற்றுக்கொள்வதே உசிதம் என்று கருதினார். முஸ்லிம் உலகை மாற்றி அமைத்து நவீன உலகோடு ஒத்துப்போகும்படியான இஸ்லாத்தின் வாழ்வியல் கொள்கைகளை அவர் புதுப்பித்திருக்க வேண்டும்.
இதன் விளைவாக அலிகர் கல்லூரி தயாரித்து அனுப்பிய மாணவர்களைப் புறவயமாகப் பார்த்தால் நவீனமாக இருப்பார்கள், ஆனால் நெருங்கிச் சென்றால் அதீத பக்தியும் தேக்கநிலை மனமும் கொண்டிருப்பதை அறியலாம். அவர்களைப் பொறுத்தவரை மதம் என்பது மதவாதமாக இருந்தது என்பதை நான் சொல்லியே ஆகவேண்டும்.’
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.