Skip to content
Home » நான் கண்ட இந்தியா #20 – துருக்கித் தொப்பி

நான் கண்ட இந்தியா #20 – துருக்கித் தொப்பி

துருக்கித் தொப்பி

அதெல்லாம் வெற்று வார்த்தைகள். சர் சையது அகமதின் கல்விக் கொள்கைகள் பழக்கவாத எதார்த்தத்தை முன்னிறுத்துகின்றன என்பதிலேயே எல்லாம் அடங்கிவிடும். தன் அரசியல் நிலைப்பாட்டில் ஆங்கிலேயர்களை ஓர் அறைகலனாகப் பயன்படுத்திக் கொண்டார். அவருக்கு முந்தைய காலம் வரை, ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு இடம் மறுக்கப்பட்டிருந்தது.

எல்லாவித உள்ளூர் பதவிகளையும் இந்துக்கள் கைப்பற்றிவிட்டார்கள். ஒருவேளை அவர்கள் மேற்கின் சாயலை முன்னதாகவே பின்பற்றத் தொடங்கியதால், அவர்கள் அந்தப் பதவிக்கு பழக்கப்பட்டிருக்கலாம். ஆங்கிலேய எஜமான்களுக்கு பணிவிடை செய்து, ஒத்துழைப்பு நல்கும் இஸ்லாமிய மாணவர்களைத்தான் அலிகர் நிறுவனத்தில் சர் சையது அகமது உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்.

‘மொழி விஷயத்தில் மற்றொரு சமாதானத்தை முன்னிறுத்துகிறார். இலக்கிய வட்டத்திலும் அறிவு வட்டத்திலும் அகமது ஒரு முக்கிய நபர். எண்ணற்ற கவிஞர்கள், கட்டுரையாளர்கள், சிந்தனையாளர்கள் எப்போதும் அவரை மொய்த்துக் கொண்டே இருப்பார்கள்‌. உருது உரைநடையின் நவீன வடிவத்தைக் கட்டமைத்ததிலும், புனைவின் புதிய பாதையை வடிவமைத்ததிலும் இவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனாலும் கூட அலிகரில் ஏன் உருது மொழியைப் பயிற்று மொழியாக அங்கீகரிக்கவில்லை?’

‘நவீன கல்வி முறையை உருது மொழியால் சமாளிக்க முடியும் தானே?’

‘சர்வதேச தொழில்நுட்ப கலைச்சொற்களைப் பாதுகாக்க முடிந்திருந்தால், நிச்சயம் முடியும்.’

‘சர் சையது அகமதின் இந்த முடிவிற்கு அவரின் ஆங்கிலேய நண்பர்கள் உதவி செய்திருப்பார்களா?’

‘என்னால் அதை சொல்ல முடியாது. ஆனால் அலிகரின் 75 ஆண்டுகால இணக்கவாத கல்வியோட்டத்தில், அந்நிறுவனம் உற்பத்திசெய்த அறிவுஜீவிகளை இரண்டு வகையாகப் பகுக்கலாம்:

(i) இஸ்லாத்தை ஒரு வாழ்க்கை நெறியாகப் பின்பற்றுவதில் அலட்சியம் கொண்டு, அதனை அரசியல் மையப்படுத்த ஆர்வம் கொண்டவர்கள்.1

(ii) ஆன்மிக நெறியிலும் தார்மிகக் கொள்கையிலும் மறுமலர்ச்சி சிந்தனை கொண்டவர்கள்.2

இவர்களுக்கு வெளியாட்களைப் பற்றி அக்கறை கிடையாது. இஸ்லாமின் அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டு ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கி, எதிர்கால இந்திய இஸ்லாமிய சமூகத்தை வளர்த்தெடுப்பதே இவர்கள் நோக்கம். இவர்கள் குர்ஆன் வசனங்களை அறிவியல் கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட முயற்சி செய்யவில்லை.

மேற்குலகின் பிரம்மாண்டச் சாதனைகளால் இவர்களை மூழ்கடிக்க முடியாது. இவர்களைப் பொறுத்தவரை மதம் ஒழுக்கத்திற்கான மார்க்கம். குவாண்டம் கொள்கையும் சார்புக் கோட்பாடும் குர்ஆன் விதிகளுக்கு உட்பட்டதா என்று விவாதிப்பதைக் காட்டிலும் எதிர்கால இந்தியக் குடிமக்களுக்கு இஸ்லாத்தின் கற்பிதங்களை எப்படி கொண்டுசெல்வது என்பதே இவர்கள் நோக்கம்.’

‘சர் சையது அகமது மட்டும் சமரசம் கொள்ளாமல் இருந்தால், நாம் இந்த லட்சியத்தை எப்போதோ அடைந்திருக்கலாம்’ என்று அந்த விமர்சகர் மேற்கொண்டு சொன்னார்.

‘நான் முன்பு சொன்னதுபோல, அரை நூற்றாண்டுக் காலமாக இஸ்லாமியர்கள் தெளிவான சித்தாந்தை பின்பற்றவும், நவீன முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைந்து வழிநடத்தவும் அவர் தடையாக இருக்கிறார்.’

சர் சையது அகமதை எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், இந்திய இஸ்லாமியச் சமூகத்தில் தேங்கி நின்ற நீர் குட்டையில் தூக்கியெறிப்பட்ட மாபெரும் பாறையாகத் தெரிந்தார். நீரலைகள் இன்னும் சலசலத்துக் கெண்டிருக்கின்றன. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த பாதையில் அவை நகர்வதில்லை. அவரின் தனிப்பட்ட நேரத்தில்கூட அவரை நேருக்கு நேர் சந்திக்க சிலர் அசௌகரியப்படுவார்கள். பெரும்பாலும் அவை அரசியல் சார்ந்த சந்திப்புகளாக அமையும்.

சையது அகமது ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்ததால், இந்தியாவுக்கு விடுதலைக் கோரும் காங்கிரஸ் இயக்கத்தில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்ளவதை அவர் விரும்பவில்லை. ஆனாலும் கூட தேச விடுதலையில் நம்பிக்கை கொண்ட பல மனிதர்கள் சையதோடு நட்புறவு கொண்டிருந்தனர். அதில் அசரத்தும் ஒருவர். ஒருங்கிணைந்த விடுதலைக்கு குரல் கொடுத்த முதல் நபர் அவர்.

மகாத்மா காந்தி தனது உரையில், ‘அசரத்தோடு[i] பேச்சுக் கொடுத்தால், என்னால் அன்றிரவு நிம்மதியாக தூங்க முடியாது’ என்று ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

அலிகரில் படிக்கும் 1100 மாணவர்களுக்கு முன்பு மேடையில் ஏறி உரை நிகழ்த்தும் எவரொருவரும் சர் சையது அகமதின் சீருடைத் தேர்வை மெச்சாமல் இருக்க முடியாது. தொண்டைவரை பொத்தானிடப்பட்ட இறுக்கமான கறுப்பு நிற அங்கி, வெள்ளை நிற கால்சட்டை, சிகப்பு நிற குல்லா அல்லது கறுப்புத் தொப்பி.

சையது அகமது ஏன் துருக்கிய பாணியிலான குல்லாவைத் தேர்ந்தெடுத்தார்? அவரைப் பொறுத்தவரை அவருக்கும் துருக்கியர்களுக்கும் இடையே அதிக பிணைப்பு இல்லை. மற்றெந்த இஸ்லாமியப் பிரதேசங்களைக் காட்டிலும் துருக்கியில் கட்டமைக்கப்பட்டுள்ள சமகாலப் புரட்சி இயக்கம் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குக் குறைவாகவே வேலை செய்கிறது. அந்தச் சமயத்தில் பிரெஞ்சு புரட்சியைப் பின்பற்றி மிக வேகமாக மேற்குமயமாகத் துடித்தது. ஆனால் துருக்கியின் தேசிய கலாச்சாரம் அதை நீர்த்துப் போகச் செய்தது.

பிரெஞ்சு தத்துவம் சராசரி இந்தியனுக்கும் சராசரி ஆங்கிலேயனுக்கும் சிறிதும் பொருந்தாது. சர் சையது அகமதும் கலீபா சுல்தானை உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் முறையான தலைவனாக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே சர் சையது அகமதின் கல்லூரிச் சீருடையில் உள்ள சிகப்பு நிறக் குல்லா வேறொரு விஷயத்தை அடையாளப்படுத்துகிறது.

ஒட்டுமொத்த முஸ்லிம் உலகத்தையும் காலனித்துவ ஆட்சிக்குள் கொண்டுவர முயன்றபோது, மேற்குலகை எதிர்த்து நின்ற இஸ்லாமியர்களின் ஒற்றை முகம் துருக்கி மட்டும்தான். காலவோட்டத்தில் துருக்கி தேசம் மேற்குமயமானாலும், தன் சொந்த விருப்பத்தின் பேரில் சையது அகமது முடிவெடுத்தார்.

சையது அகமதின் வகைமாதிரியிலான இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டாலும், அவசியமென்று கருதினாலும் உள்ளூர விடுதலை வேண்டுமென்ற ஓலம் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அவர்களின் பாதுகாப்பும் மகிழ்ச்சியும் சொந்த உழைப்பினால் ஈடேறப் போவதில்லை.

அவர்களின் மேற்குமயாகும் திட்டம் வெம்மையூட்டப்பட்ட கண்ணாடிக் கட்டடத்தில், செயற்கை வெளிச்சத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. புத்துணர்வூட்டும் இயற்கையான காற்றையும் வெளிச்சத்தையும் இந்தக் குல்லா அடையாளப்படுத்துகிறது. அந்தவகையில் குல்லாவுக்கான முக்கியத்துவம் மிகப் பரிதாபமூட்டும் குறியீடு.

அலிகரில் பாடம் சொல்லித்தரும் முறைமையில் ஆங்கிலேயப் பல்கலைக்கழகத்தின் தாக்கத்தை உணரமுடியும். மேற்கின் செவ்வியல் படைப்புகளுக்குப் பதிலாக கிழக்கின் பாடங்களை மாற்றி வைத்திருக்கின்றனர். புதிய ஆய்வுக்கூடங்கள், உள்ளூர் மற்றும் அயல்நாட்டுப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் நிறுவனங்கள் ஒரு புதிய நிலையை நிர்மாணிக்கின்றன. வருங்காலத்தில் இலக்கியத்தைக் காட்டிலும் அறிவியல் பாடம் உயர்ந்த இடத்தைப் பிடிக்கப் போகிறது.

மரபு நிகழ்ச்சிகளைப் பின்பற்றுவதிலும் ஆங்கிலேயப் பல்கலைக்கழகத்தின் அதே சாயல் தென்படுகிறது. எனக்கு அவர்கள் மாணவர் சங்கத்தின் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கினார்கள். உருது மொழியில் உரையாற்றினார்கள், உருது மொழியில் கவிதை வாசித்தார்கள். முதல்முறையாக பாரசீக மொழியைத் தாண்டி உருது மொழியின் இனிமையான ருசியை உணர்ந்தேன். அதன் ஒற்றுமையும் தைரியமும் பலமும் என்னை ஈர்த்தன.

நான் பேசுவதற்காக எழுந்தபோது என்மேல் பூக்கள் மழையாகப் பொழிந்தன. என்னால் கண், வாயைக் கூடத் திறக்க முடியவில்லை. இந்தப் பூமேகம் கொட்டித் தீர்த்ததும் நான் மேலே பார்த்தேன். கூரைமேல் இருந்த இரண்டு ஆடவர்கள், டன் கணக்கான பூவிதழ்களை கீழே கொட்டினார்கள். எளிமையான முதிய பெண்மணிக்கு இவையெல்லாம் அதிகப்படியான கவனிப்பு என்றாலும் பார்ப்பதற்கு அவை அழகாக இருந்தன.

விருந்தினர் வரவேற்பிலும், சம்பிரதாயத்திலும், கொண்டாட்டத்திலும் பூக்கள்தான் இந்தியாவை அழகு சேர்க்கின்றன. பூங்கொத்துகள், பூவிதழ் மழையென எல்லாவற்றையும் பூக்களால் செய்துவிடுகிறார்கள். ஆனால் இது மெல்லிய பெண்ணியல்பின் குறியீடு அல்ல. எல்லைப்புற மாகாணத்தில் வசிக்கும் கரடுமுரடானவர்களும் பூக்களால் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

எனக்கு எதிரிலுள்ள சுவற்றில், அமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் படங்களுக்கு மத்தியில் அப்துர்ரஹ்மான் குரேஷியின் உருவப் படமும் இருந்தது. ஒவ்வொரு உரையாளரும் மிகுந்த மரியாதையோடும் புனிதத்தன்மையோடும் அவரின் உருவப்படம் குறித்து பேசினார்கள். அப்துர்ரஹ்மான் குரேஷியின்[ii] மீதிருக்கும் அளவுகடந்த உணர்ச்சி, விரைந்து விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாடு.

இவர்கள் அப்துர்ரஹ்மானைக் கொண்டாடுவது துருக்கி மீதுள்ள கரிசனத்தால் அல்ல; மாறாக பெரும் போரில் அவர் சண்டையிட்ட வீரதீர காரணத்திற்கும் அல்ல. ஆட்சியதிகாரத்திற்கு எதிராக மக்களின் பக்கம் நின்று விடுதலைக்கு குரல் கொடுத்ததால்.

மாணவர்கள் என்னை அழைத்திருந்த தேநீர் விருந்தில் இஸ்லாமிய கலாசாரம் மற்றும் இந்து – முஸ்லிம் உறவுநிலை குறித்து விவாதித்தனர். நான் பார்த்தவரை, சில மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் தாழ்வு மனப்பான்மை இந்து – முஸ்லிம் புரிதல் ஏற்படுவதற்கு தடையாக இருக்கிறது.

இந்துக்களின் ஒருங்கிணைவால் இஸ்லாமிய அடையாளத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தை நான் கண்ட முதல் முஸ்லிம் மையம் அலிகர். ஆனால் இந்த வினோத உளவியலுக்கு இஸ்லாமியர்களை மட்டுமே குறைசொல்ல முடியாது. ஆனால் இது சாத்தியமென்று இஸ்லாமியர்கள் நம்புவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இத்தனைக்கும் இந்து மதத்தின் அசாதாரண சுவீகரத் தன்மையைத் தாண்டி, இந்து மத நிறுவனத்துக்குள் செல்லாத ஒரே மதம் இஸ்லாம் மட்டும்தான். இதை இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு இடையிலான மோதலின் அம்சமாகக் கருதலாம். இதை இரு தரப்பினரும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

 

___________

1. 1898இல் சு. நாத்வியும், அசரத்தும் சர் சையது அகமதின் சீர்திருத்த இயக்கத்தில் இளம் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி. சையது அகமது இறந்தபிறகு அவரின் அரசியல் பார்வையில் இருந்து மாறுபட்ட சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.
2. அப்துர்ரஹ்மான் குரேஷி பால்கன் போரின்போது செம்பிறைச் சங்கத்தின் இளம் உறுப்பினராக இருந்தவர். 1912க்கு பிறகு துருக்கியிலேயே தங்கி, அந்நாட்டு ராணுவத்தில் இணைந்துகொண்டார். பெரும் போரின்போது வெவ்வெறு எல்லைகளில் இருந்து சண்டையிட்டார். 1920இல் அங்காரா தேசிய போராட்டத்தில் கலந்துகொண்டு, தலைமை அலுவலகத்தில் என்னோடு வேலைக்குச் சேர்ந்தார். 1923இல் காபூலில் துருக்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1927ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்ம நபரால் / நபர்களால் கொலைசெய்யப்பட்டார். கொலைக்கான காரணமும், கொலை செய்தவர் விபரமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்துர்ரஹ்மான் தைரியமான, தேர்ந்த அலுவலர். மிக அன்பான மனிதர்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *