Skip to content
Home » நான் கண்ட இந்தியா #21 – லாகூர்

நான் கண்ட இந்தியா #21 – லாகூர்

நான் கண்ட இந்தியா - லாகூர்

நாங்கள் இப்போது பஞ்சாபில் உள்ள லாகூரில் இருக்கிறோம். அது இஸ்லாமியர்களின் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதில் சந்தேகம் இல்லை. அங்கு எழுப்பப்படும் ‘அல்லாஹு அக்பர்’ என்ற குரல் இஸ்லாமியர்களுக்கு இடையிலான உணர்வின் வலிமையைக் காட்டுகிறது. தங்களுக்கு முன்பின் தெரியாத ஓர் அந்நியப் பெண்ணை வரவேற்பதற்காகச் சில ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர்.

ஒரு செல்வந்த நிலக்கிழாரின் விருந்தினராக நான் அழைக்கப்பட்டேன். எல்லையில்லாத அழகும் ஆடம்பரமும் நிரம்பி வழிந்தன. எப்போதும் போல நாற்கோண செவ்வக வடிவத்தில் வீட்டை அமைத்திருந்தனர். பளிங்குக் கற்களால் இழைத்த அறையில் ஒரு பிரமாதமான குளத்தை வடிவமைத்திருந்தனர். அதில் அங்குங்கு தாமரைப் பூத்திருப்பதையும் நடுவில் நீரூற்று அமைந்திருப்பதையும் பார்ப்பதற்குக் கலைப்பொருள் கண்காட்சி மாதிரி இருந்தது.

இந்திய இல்லங்களின் மரியாதைக்கும் விருந்தோம்பலுக்கும் ஏற்ப, அதன் வரவேற்பறையும் புல்வெளி தரையும் வந்து செல்பவர்களுக்கு வசதியாக எப்போதும் திறந்துவிடப்பட்டிருந்தன‌.

வீட்டுப் பெண்கள் எல்லோரும் புர்கா அணிவது கண்டிப்பான விதியாகப் பின்பற்றப்பட்டது. ஓர் உணவு வேளையில் ஆண்கள் இல்லாத சமயத்தில், நான் அவர்களைப் பார்த்தேன். மீத வேளைகளில் எல்லோரும் சேர்ந்து உணவு உண்டோம்; அதில் ஒவ்வொருவரும் என்னை வெவ்வேறு இடத்திற்கு அழைத்தனர்.

பேகம் ஷா நவாஸை நான் தினமும் சந்திந்தேன். அது என்னால் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று. லாகூர் பயணம் முழுக்க அவர்தான் என்னை உபசரித்துக் கொண்டார். எனது திட்டப் பணிகளில் பெண்சார்ந்த வேலைகளை அவர் ஒருங்கிணைத்தார். பஞ்சாபில் முஸ்லிம் பெண்களின் நிலை குறித்து நிறைய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

பர்தா அணிந்த இளம் பெண்கள் படிக்கும் கல்லூரியைப் பார்வையிடுதல்; மகளிர் சங்கம் ஏற்பாடும் செய்யும் தேநீர் விருந்துகளில் கலந்து கொள்ளுதல் போன்ற பெண் மைய சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சிவப்பு மற்றும் தங்கநிறத்தால் அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெரிய பட்டுக் கூடாரத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடம்பரமான கூட்டம் அது.

ஆங்கிலேயப் பெண்கள் உட்பட பல்வேறு இனத்தைச் சார்ந்த முந்நூறு பெண்கள் அவ்விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உலகெங்கிலும் உள்ள ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகச் சுலபத்தில் மனிதத்தைப் புரிந்துகொள்வதை நான் மீள ஒருமுறை சிந்தித்தேன். அவர்கள் ஏதேதோ விஷயத்தில் எத்தனை விசுவாசமாக இருந்தாலும், பாலின அடிப்படையில் எல்லோரும் ஒன்றுபோல் இருந்தனர்.

அங்கிருந்த உரையாளர்களுள் பள்ளிகளை ஆய்வுச் செய்யும் ஒரு பதான் இனப் பெண்மணி என் கவனத்தை ஈர்த்தார். முஸ்லிம் பெண்களில், இன்னும் குறிப்பாக எல்லையோர மாகாணங்களில் வசிக்கும் பெண்கள் அரசுப் பதவியில் இருப்பது அரிதான விஷயம்.

அங்குப் பரிமாறப்பட்ட இனிப்புப் பதார்த்தங்களைப் பார்க்கும்போது, லாகூரில் எல்லோரும் மனச்சாட்சியின் உறுத்தலின்றி வாழ்வதை உணரமுடிந்தது. நான் பார்த்தவரையில் வறுமைக்கும் ஆடம்பரத்திற்கும் மிக அரிதான வித்தியாசம் உடைய முதல் நகரம் லாகூர். இதுவரை பார்த்த நகரங்களில் லாகூர் மிகச் செழிப்பான ஊர் என்பது என் அசைக்கமுடியாத உணர்வு.

இவ்வூரைச் சுற்றியுள்ள கிராமங்களும் வசதியாக இருக்கின்றன. பஞ்சாப் மாகாணாத்தையும் அதில் இன்னும் குறிப்பாக லாகூர் நகரத்தையும் பொருளாதார நெருக்கடி கழுத்தைப் பிடிக்கும் சூழலில் கூட, மற்றெல்லா நகரத்தைக் காட்டிலும் லாகூர் மேம்பட்டு இருக்கிறது. எல்லோரும் நன்கு உணவு உண்டு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் உள்ளனர். இங்குள்ள மக்கள் மனித இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றனர் என்று சொன்னால் மிகையல்ல.

வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தேநீர் விருந்துக்கு மாணவிகள் சிலர் வந்தனர். அவர்கள் எல்லோரும் நல்ல உயரம். விளையாட்டில் ஈடுபடுவர் போலத் தெரிந்தனர். மற்றவரைக் காட்டிலும் மேலானவர் போல, சுய நம்பிக்கை மிகுந்து இருந்தனர். பர்தா அணிந்த பெண்களோடு பேசிப் பழக சிரமப்பட்டார்கள். இன்பக் கிளர்ச்சியூட்டும் இத்தனை அழகான இளம் பெண் கூட்டத்தை ஒருவர் காணவேண்டும் என்றால், அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்குத்தான் செல்ல வேண்டும்.

அவர்களுடைய சேலை என்பது மிதக்கும் திரைத் துணிபோலான ஒற்றைத் துணி. அதை உடலோடுச் சுற்றி அணிந்துகொள்வார்கள். சேலை அழகான ஆடைதான்‌. அதனால்தான் சுதந்திரப் பெண்களின் தேசிய உடையாக சேலை இருக்கிறது. ஆனால் நவீனத் தொழில் செய்யும் எந்தவொரு பெண்மணிக்கும் சேலை உகந்த ஆடையாக இருக்காது.

லாகூரில் உள்ள இஸ்லாமியப் பெண்கள் இறுக்கமான கால்சட்டை அணிகிறார்கள். அதற்கு பொத்தான் வைத்த பட்டு கெமிஸ் உடுத்துவதைப் பார்க்க, சீனப் பெண்களின் உடைபோல இருக்கிறது. தலையில் மெல்லிய துணியாலான முக்காடு அணிகின்றனர். அதன் எல்லா மூலையிலும் பூ வேலைபாடுகள் நிறைந்திருக்கின்றன.

இது எனக்கு மிகவும் நடைமுறைக்கு உகந்ததாகத் தோன்றியது. ஆனால் மற்றெந்த தேசத்து பெண்களிடமும் இல்லாத ஏதோ ஓர் அம்சம் பொருந்திய லாகூர் பெண்மணிதான் இதைத் துவங்கியிருக்க வேண்டும் என நான் ஒப்புக்கொண்டேன். இந்தப் பெண்கள் எல்லோரும் செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தான் சார்ந்த சமூகத்தின் மீது மட்டுமே இவர்களுக்கு அக்கறை உள்ளது போல் தெரிந்தது.

உணவு உண்ணும்போது பர்தா அணிந்த வீட்டுப் பெண்களை நான் சந்தித்தேன். என்னை விருந்துக்கு அழைத்தவரின் மனைவியர்களையும் அம்மாவையும் சந்தித்து உரையாடினேன். திடமான மூன்று தலைமுறையின் மூவிதமான எண்ணவோட்டங்களையும் வாழ்க்கை முறையையும் ஒருவர் அங்குப் பார்க்கலாம்.

பாட்டிமார்கள் பழைய பாரியம்பரியத்தில் ஊறிக் கிடந்தனர்; அம்மாக்கள் வீட்டில் அடைபட்டுக் கிடந்தாலும், பெண் கல்வியிலும் பர்தா துறந்த தங்கள் மகள்களின் நுனி நாக்கு ஆங்கிலத்திலும் லயித்துக் கிடந்தனர்; மகள்கள் முற்றிலுமாக விடுதலைப் பெற்ற தலைமுறையை அடையாளப்படுத்தினர்.

பேகம் ஷா நவாஸ் என்னை ஷாலிமர் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அது முகமதிய சுல்தான்கள் ஓய்வெடுக்கும் அரசுத் தோட்டம். ஷா நவாஸின் குடும்ப உறுப்பினர்கள் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கும் இந்தத் தோட்டத்திற்கும் அறங்காவலராக இருக்கின்றனர். தோட்டத்தில் இருக்கும் பளிங்கு நீரூற்றுகளும், அசாத்திய நீர் அமைப்புகளும் அழகில் வார்த்ததுபோல் இனிமையாக இருந்தன.

கீழை நாட்டின் கம்பளி விரிப்பு போல் விதவிதமான பூக்கள், கம்பீரமான மரங்கள் மற்றும் நடைபாதைகள். இருபாலருக்கும் தனித்தனி அறைகள் இருந்தன.

பேகம் ஷா நவாஸோடு சேர்ந்து நாங்கள் நிழலில் அமர்ந்தோம். லாகூரில் உள்ள இஸ்லாமியப் பெண்களின் நிலையை அவர் எனக்குச் சொல்லத் தொடங்கினார். லாகூரின் இஸ்லாமியப் பெண்கள், பொருளாதார அம்சத்திலும் வாரிசு உரிமையிலும் மரபுவழிப் பட்ட இஸ்லாமியச் சட்டத்திற்கு மாற்றாக பழைய இந்துச் சட்டங்களைப் பின்பற்றுவதாகச் சொன்னார்.

உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டேன். பழமைவாதம் பேசும் இந்திய முஸ்லிம்கள், மத விதிகளைப் பின்பற்றுவதாய் சொல்லப்படும்போது இந்த விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுபோக இந்த விஷயத்தில் இஸ்லாமியச் சட்டம், இந்து மத விதிகளைத் தாண்டி முற்போக்காக சமத்துவம் பேசுகையில் ஏன் இப்படி? இந்து மத விதிப்படி பெண்கள் வாரிசு அடிப்படையில் சொத்துரிமை கொண்டாட முடியாது.

சொத்துரிமைக்காக 170 முஸ்லிம் பெண்கள் கிறிஸ்தவ மதம் தழுவியதாக ஷா நவாஸ் சொன்னார்.‌ ஒவ்வொரு மதச் சமூகத்திற்கும் பிரத்தியேக குடும்ப விதிகள் உண்டு. அங்கிருந்து மாற்றுச் சமூகம் தழுவும்போது, சொத்துரிமைச் சட்டம் சேர்ந்துகொள்கிறது. தன் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு, இணக்கமான மாற்றுச் சமூக நம்பிக்கைகளைக் கைக்கொள்ளும் உரிமை எல்லோருக்கும் இயல்பாக வாய்க்க வேண்டும்.‌ ஆனால் இது பொருளாசைகளை மையமிட்டு நடந்தால், அருவருப்பாக இருக்கும். ஆண்கள் வேண்டுமென்றே இதில் பெண்களை வற்புறுத்தித் தள்ளுவது மேலும் அருவருப்பூட்டுகிறது.

அன்று மாலை லாகூர் நகராட்சி மன்றத்தில் நான் ஒரு கூட்டத்தில் பேசவிருந்தேன். கூட்டத்திற்கு சில நிமிடங்கள் முன்னதாக, முஸ்லிம் கல்லூரி உறுப்பினர்களோடு பேசவேண்டும். பத்து பன்னிரெண்டு பேர் இருப்பார்கள் என்று எண்ணினால் முந்நூறு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இஸ்லாமியச் சட்டம் பற்றி தான் அறிந்ததை என்னிடம் பேச முயன்றார்கள். துருக்கியில் ஏற்பட்டுள்ள நீதித் துறை சீர்திருத்தம் பற்றி விமர்சனம் வைத்தார்கள்.

லாகூர் இஸ்லாமியப் பெண்கள் பற்றி எனக்கு போதுமான தகவல் சொன்ன பேகம் ஷா நவாஸுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவளாவேன். நான் அதைப் பயன்படுத்திக் கொண்டேன். இடைமறித்தவர்களைக் கொஞ்சம் குழப்பினேன். ஆனால் எல்லோரும் என்னிடம் பேச ஆர்வமாக இருந்தனர்.

உரையாற்றி முடித்த பின்னர் ஜாவாவில் இருந்த வந்த மாணவர் ஒருவர், தங்கள் நாட்டில் ஆண்களும் பெண்களும் சமநிலை அடைந்துவிட்டதாகச் சொன்னார். மேலும் துருக்கியப் பெண்கள் கல்வியிலும் சமூகத்திலும் மாற்றம் அடைந்திருப்பதற்கு ஜாவா தேசம் ஆதரவளிக்கிறது என்றார். இது எனக்கு ஆறுதலாக இருந்தது. இப்போது துருக்கிப் பெண்கள் அனுபவிக்கும் சமவுரிமைக்காக பல்லாண்டுக் கணக்கான கடினப் போராட்டம் நடந்திருக்கிறது.

0

மற்ற எல்லா நகரங்களையும் விட, சிந்தனைப் போக்கு மற்றும் சமூகப் பிளவுகள் கொண்ட லாகூர் நகரை அளவிடுவதற்குக் கடினமாகத் தோன்றியது. இஸ்லாமியப் பெரும்பான்மை உள்ள நகரமென்றாலும், அவர்களுக்குள் நிறைய பிரிவுகள் இருந்தன. வைதீக கருத்துடையவரும் கருத்து வேறுபாடு உள்ளவரும் அங்கு எளிமையாகத் தென்படுவார்கள். ஆனால் புறவயமாகவேனும் அவர்களுக்குள் ஒரு பரஸ்பர மரியாதை இருந்தது.

லாகூர் அலுவலர்கள் சங்கம் சார்பாக இரவு விருந்து ஏற்பாடு செய்தனர். முதல் முறையாக அதில் உள்ளூர் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அலுவலர்கள் எல்லோரும் நேர்த்தியான கோட் அணிந்திருந்தனர். விருந்தினர்கள் உள்ளூர் ஆடை அணிந்திருந்தனர். உடையில் மட்டுமே அவர்களுக்குள் வேறுபாடு இருந்தது என்று சொல்ல முடியாது. அலுவலர் வர்க்கத்தை இந்தியர்கள் சரியாக கவனிக்கவில்லை என்று நான் அங்கு கண்டுகொண்டேன். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

அவர்கள் நன்கு பயிற்சி பெற்ற திறம் வாய்ந்தவர்கள். சுய ஆட்சி செய்ய விரும்பும் நாட்டிற்கு நன்கு பயிற்சி பெற்ற அதிகாரிகளின் தேவை அத்தியாவசியமானது. தங்கள் சொந்த நாட்டு மக்களே அவர்களை நம்பவில்லை என்றால், சுதந்திர இந்தியாவிற்கு உயிர்ப்போடு வேலைசெய்ய அவர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்? ஒரு சில நிமிடத்தில் அலுவலர் வர்க்கமே மொத்தமாக உடைந்துபோய், தான் தவறான இடத்தில் இருப்பதாக உணர்ந்தது.

0

பஞ்சாப்காரர்கள் காரசாரமானவர்கள், எப்போதும் மிகையாகப் பேசும் பண்புடையவர்கள் என்ற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் லாகூரில் பலதரப்பட்ட மக்கள் இருப்பதால், இவர்கள் இப்படித்தான் என்று பொதுவாக அடையாளப்படுத்த முடியாது. பல கோணங்களில் வெளிப்படுவார்கள். அரிதாகப் பேசிச் சிரிக்கும் தீவிரமான, ஆழ்ந்த சிந்தனையோட்டம் உடையவரும் தற்பெருமை பேசி, வம்பிழும்பவரும் இங்கு உண்டு.

இதை முன்னிறுத்தி ஒரு நியாயமான கருத்தை அமைதியான முறையில் வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இது உணர்ச்சிகரமான விரோதத்தைத் தூண்டவும், சிலரை கோபத்தின் விளிம்பிற்கு கொண்டுச் செல்லவும் வாய்ப்புண்டு. இருந்தாலும் சொல்கிறேன். இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் ஆட்சி அமைப்பது லேசுபட்ட காரியம் அல்ல.

லாகூரில் அடுத்தநிலை பெரும்பான்மையில் சீக்கிய மக்கள் இருக்கிறார்கள். கொள்கை ரீதியில் சீக்கிய மதம் இஸ்லாமிற்கு நெருங்கிய தொடர்புடையது. அதைப் பற்றி எல்லோருக்கும் ஒரு கருத்து உண்டு. இஸ்லாத்தின் பலம் மற்றும் சக்தியை சில இளம் முஸ்லிம்கள் சந்தேகிக்கத் தொடங்கியுள்ளது, அதன் ஊடுருவல் அறிகுறிகளுள் ஒன்று.

சீக்கிய மதம் இராமாநந்தரின் போதனைகளால் உருப்பெற்றது. 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தென்னிந்திய இந்துத் துறவி அவர். உருவ வழிபாட்டிற்கு எதிராகவும் சாதிமுறைக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.

நெசவு வேலை செய்யும் இஸ்லாமியர், அவரின் முக்கியமான சீடர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அவர் ஒரு கவிஞர் என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அவர்தான் கபீர். இந்த இயக்கத்தின் அருட்தந்தையாக நான் அவரைக் கருதுகிறேன். ஆனால் சீக்கிய மரபின் அசல் நிறுவனர் நானக் தான்.

இம்மரபின் இரண்டு அசாத்திய நம்பிக்கைகள்: ஓரிறைக் கொள்கை மற்றும் துறவுக்கு எதிரான நிலைப்பாடு. மக்கள் தெய்வ அவதாரங்களை நம்பக்கூடாது; சமூகத்தில் இருந்து விலகி வாழக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். சமூகத்திற்காக வாழ்ந்து, தன் சக மனிதர்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.

சீக்கிய மதத்தில் ஒன்பது குருக்கள் இருந்திருக்கிறார்கள். பத்தாவது குரு, முன்னோர்களின் போதனைகளை தொகுத்து ‘ஆதி கிரந்த்’ என்ற புத்தகத்தை எழுதினார். அது சீக்கியர்களின் குர்ஆனாக மாறியது.

சீக்கியர்கள் பெரும்பாலும் அந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் பின்பற்ற மாட்டார்கள். சீக்கிய மதத்தில் சாதி கிடையாது; உருவ வழிபாடு கிடையாது; உடன்கட்டை ஏறுதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு உண்டு; ஆண்கள் நிதானத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வாழ அறிவுறுத்துகிறது; மதுப் பழக்கம் வேண்டாமெனச் சுட்டுகிறது.

‘கிர்பன்’ எனப்படும் குறுவாள் சீக்கியர்களை ஒன்றிணைக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு சீக்கியரும் ‘சிங்’ என்று அழைக்கப்படுகின்றனர். சிங் என்றால் ‘சிங்கம்’ என்று பொருள். 1800இல் மீண்டும் உருவ வழிபாட்டிற்கு திரும்பியபோது, சீக்கிய மதத்தில் ஒரு சீர்த்திருத்த இயக்கம் உருவானது.

கோயிலுக்குள் வைத்த திருவுருவங்களை அவர்கள் தூக்கி எறிந்தார்கள். பதிலுக்கு அமிர்தசரஸில் கால்சா என்றொரு கல்லூரி தொடங்கி கல்வித் துறையில் வேலை செய்தார்கள். சீக்கியர்களின் தைரியத்தை சொல்லுக்குள் அடக்க முடியாது. இந்திய ராணுவத்தில் முக்கியத் தூணாக விளங்குகின்றனர்.

அனைத்துச் சாதி இயக்கங்களையும் அவர்கள் மறுத்தாலும், அவர்களே ஒரு தனி சாதியாக இயங்குகின்றனர். இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் நிறைய விஷயம் ஒத்துப்போவதால், அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சுமூகமாக ஒத்துப்போகலாம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் உண்மை அப்படியல்ல. இந்து, முஸ்லிம்களுக்கு அடுத்து எதிர்கால இந்தியாவில் சீக்கியர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கலாம்.

0

புவியியல் ரீதியில் மட்டுமின்றி அதன் சுபாவத்திலும் கூட லாகூர் நகரம் மேற்கு எல்லைக்கும் இந்தியாவுக்கும் மத்தியில்தான் அமைந்திருக்கிறது. அதன் சிந்தனை தனித்துவமானது. அடுத்ததாக நான் எல்லை மாகாணத்தின் உண்மையான ஆற்றலை வெளிப்படுத்தும் பெஷாவருக்குச் செல்லப்போகிறேன். நான் லாகூரில் இருந்து கிளம்பிச் சென்ற அந்த மாலைப் பொழுதில் ஓர் இன்பகரமான சம்பவம் நடந்தது. அதை இங்கு பதிவு செய்கிறேன்.

எனது லாகூர் பயணத்தை ஏற்பாடு செய்த சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் வீட்டில் அன்றைக்கு உணவு அருந்தினேன். அவர் ஒரு மருத்துவர். இரவு உணவுக்குப் பிறகு திடீரென அவர் காணாமல் போனார். திரும்பி வரும்போது அவர் கையில் சிறிய பச்சை நிற துணிக்கட்டு ஒன்று இருந்தது.

அவர் உயரமான மனிதர். அந்தச் சிறிய துணிக்கட்டை அத்தனைப் பவ்வியமாக கையிலிருத்தி நின்றார். அதை மேலும் பக்திச் சிரத்தையோடு எனது முட்டியில் வைத்தார். அதை என்னால் என்றுமே மறக்க முடியாது.

அது அவரின் பச்சிளங்குழந்தை. பிறந்து ஏழுநாள்தான் ஆகியுள்ளது. அதற்கு ‘ஹாலித்’ என்று என்னைப் பெயர் சூட்டச் சொன்னார். நான் அதன் முகத்தை ஊன்றிக் கவனித்தேன். உள்ளங்கையைவிட சிறிதாக இருந்தது.

காலைக் காற்று நீரின் மேற்பரப்பில் மூச்சுப் பிடிப்பதால் வாழ்க்கை அதன் இருண்ட, பட்டுப் போன்ற துயரங்களில் இருந்து விலகிச் சென்றது.

அந்தக் குழந்தையின் இமைப்பீலி கீழைத் தேய பெண்களைப் போல் நன்கு நீலமாக கரிய நிறத்தில் இருந்தது. பச்சைப் பட்டில் சுற்றியிருந்த அந்தச் சிறிய சித்திரம் என்னை அழ வைத்துவிட்டது. ஒரு விசித்திரமான வகையில் என்னை லாகூரோடு கட்டிப்போட்டது. அந்த ஊரில் இனி என்ன நடந்தாலும், அது ஹாலித் என்ற பெண்மணியை நிச்சயம் பாதிக்கும்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *