பெஷாவருக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒருவரை அதன் ஏற்ற இறக்கங்கள் பிரமிக்க வைக்கும். இந்தியாவின் குளிரும் நடுக்கமும் ரசிக்கும்படியானது. ரயிலில் இருந்து அதிகாலைக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அது அனடோலியன் பீடபூமியை நினைவூட்டியது. வறண்ட, சாம்பல் பூத்த கரடுமுரடான நிலம். பெஷாவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிய கணத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஒருவர் எளிதில் காணலாம்.
கரடுமுரடான பாறைகளின் பின்னணியில் மேலும் கீழும் அணிவகுத்துச் செல்லும் பட்டாலியன் வீரர்களுக்குள் ஏதோ ஒரு தனித்துவமான ஒற்றுமை இருந்தது. கட்டுமஸ்தான உடல். செதுக்கியெடுத்தது போல் கச்சிதமான உடற்கட்டு. மலைபோல எல்லையைக் காக்கும் வீரர்களை என்னால் உடனடியாக அடையாளம் காண முடிந்தது.
அவர்கள் முகபாவனையை உற்றுநோக்கும்போது போர்வீரரைப் போலவோ, சில வகைப்பட்ட ஆண் தலைவர்களைப் போலவோ ஒற்றைக் கருத்தும் ஒன்றுபோலான எண்ணவோட்டமும் உடையவர்கள் எனத் தோன்றியது. இதில் ஆச்சரியம் இல்லை. சமவெளிப் பகுதியில் வசிக்கும் மக்கள், எல்லைக் காக்கும் ராணுவ வீரரின் தோரணையில் ஒரு தலைவருக்கான மிடுக்கை உணர்கின்றனர்.
இத்தகைய நேர்மையான அதிகாரிகளைக் கையாள்வதில் உலகம் முழுவதும், ஏன் இந்தியாவில்கூடச் சிக்கல் உண்டு. ஆனால் இவர்கள் எல்லோரும் நேர்மைக்குப் பெயர் போனவர்கள். சுயமாகச் சிந்தித்து விரைந்து செயலாற்றும் தன்மையுடையவர்கள். மலைக்குக் கீழே வசிக்கும் பன்முகத்தன்மை வாய்ந்த பல இலட்சம் இந்தியர்களுக்கு முற்றிலும் மாறாக முரண்பட்டவர்கள்.
மறைந்த அப்துர் ரஹ்மான் குரேஷியின் குடும்பத்தினர் என்னை விருந்தினராக அழைத்திருந்தனர். நான் அந்த வீட்டைப் பார்ப்பதற்கு முன்பே, எனக்கு அது நன்கு பரிச்சயமாக இருந்தது. அங்கோராவில் தன் வீட்டைப் பற்றிய நினைவலைகள் எழுந்தபோது அப்துர் ரஹ்மான் அதுகுறித்து விவரித்திருக்கிறார்.
நன்கு மனதில் பதியும்படி ஆழமான குரலில் அவர் பகிர்ந்து கொண்ட நினைவுகள், அப்துர் ரஹ்மானின் குழந்தைப் பருவச் சித்திரங்களை கண்முன் நிறுத்தியது. அப்போதும் நான் அவற்றை ஞாபகத்தில் வைத்திருந்தேன். சிறு வயதில் தன் சகோதரர்களுடன் பூசலிட்டுக் கொண்ட செல்லச் சண்டைகளைப் பகிர்ந்தார். கள்ளங்கபடமில்லாத தன் மலைவாழ் மக்களின் இயற்கையை அதன்மூலம் தெரியப்படுத்தினார். சற்று அந்நியமான பாதுகாப்பு தொனியில் தன் சகோதரிகள் பற்றி சொன்னார். தன் செவிலி பற்றிப் பேசும்போது கரகரப்பும் மென்மையும் கலந்த அவர் குரலில் ஒரு வித ஏக்கம் தெரிந்தது.
அந்த வீடு இரண்டு தனித்தனிக் கட்டடங்களைக் கொண்டது. பெரும்பாலான இந்திய வீடுகளைப் போல் சதுர அமைப்பில் வீட்டின் நடுவே ஒரு முற்றம் இருந்தது. பெண்களுக்கு நான்கு மாடிகள் கொண்ட பெரிய கட்டடத்தை ஒதுக்கியிருந்தனர். எல்லையில்லாத அதன் படிக்கட்டுகளை ஏறி இறங்குவதற்கு ஒன்பது வயதுடைய அப்துர் ரஹ்மானின் தங்கை மகன் எப்போதும் உடனிருந்தான்.
நான்காவது மாடியில் ஒரு பெரிய அறையை எனக்கு ஒதுக்கியிருந்தனர். அதன் ஜன்னலில் இருந்து பார்த்தால் நான்கு மூலையிலும் உள்ள அறைகளின் வெளிச்சம் ஜன்னல் வழியாகத் ததும்பி முற்றத்தின் இருள் நிறைப்பதைப் பார்க்க முடியும்.
தங்கைகள், உறவினர்கள், மத்திய வயதினர், இளைஞர்கள் என மொத்த குடும்பமும் அங்கு ஒன்று கூடியிருந்தது. முதல் சந்திப்பு தீவிரமாக அமைந்தது.
எல்லைப்புறப் பெண்களும் தங்கள் ஆடவர்களைப் போல் தீவிரமாகவும் எளிமையாகவும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி கண்ணியத்தோடு இருந்தனர். இருந்தாலும் இறந்துபோன தன் பிரியத்திற்குரியவர்களை இனிக் காண மாட்டோமா என்ற ஏக்கம் அவர்கள் கண்ணில் தெரிந்தது. எனது வரவு அந்த ஏக்கத்தை மேலும் மிகுவித்திருந்தது என்று புரிந்துகொண்டேன்.
அவர்கள் கண்களுக்குள் அடக்கி வைக்கப்பட்ட கண்ணீர் துளிகள் இதயத்தில் கசிவதை ஒருவரால் உணர முடியும். அங்கிருந்தவர்களுள் அப்துர் ரஹ்மானைத் தெரிந்த ஒரே நபர் நான்தான். அவரின் விருப்பத்திற்குரிய நாட்டில் அவரோடு நான் பணிசெய்திருக்கிறேன். ஆகையால் அவர்களுள் ஒருவராக என்னை ஏற்றுக் கொண்டனர். வாய் திறந்து பேசுவதற்கு முன்பே, அவர்கள் எல்லோருக்கும் நான் மூத்த சகோதரி ஆகிவிட்டேன்.
சரளமாக ஆங்கிலம் பேசும் இளைய சகோதரி, என்னைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பேற்றுக் கொண்டாள். சத்தமில்லாமல் அறைக்குள் நுழைந்து என் பொருட்களை வரிசையாக முறைப்படுத்தி வைப்பதில் அவள் படு சாமர்த்தியக்காரி. கிழக்கின் குடும்பங்களில் எத்தனைப் பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தாலும், குடும்பத்தின் இளையவர்கள்தான் முதியவர்களுக்கு சேவகம் செய்கிறார்கள்.
அப்துர் ரஹ்மான் பெஷாவரை விட்டு வெளியேறியபோது இவள் குழந்தையாக இருந்திருக்க வேண்டும். ஆகையால் இவளுக்கு அவரை நினைவிருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இவளின் இளமைக் கால கற்பனைகளில் அப்துர் ரஹ்மான் ஒரு கதாநாயகனாக பிம்பம் எடுத்துள்ளார். அவர் சார்ந்த ஞாபகார்த்தங்களைப் போற்றி வழிபடுகிறாள். உணர்திறன், வலிமை, முதிர்ச்சி என்று எல்லாம் கலந்த கலவையாக வியக்கத்தக்க பழக்க வழக்கங்களை கைக்கொண்டிருக்கிறாள்.
அவளின் தாய்மொழியான பஷ்தூவுடன் ஆங்கிலம், உருது, பாரசீகம் போன்ற மொழிகளிலும் புலமை பெற்றிருந்தாள். பாரசீகத்தில் ஒரு கவிதை கூட எழுதினாள். இருபது வயது பெண்ணால் உணர்ந்து கொள்ள முடியாத பொருள் ஆழமிக்க கவிதை அது. அவள் பெயர் நாஸ் – பெர்வர் (கருணை பொழிபவர்) பெயருக்கேற்ற கருணையை அவளின் ஒவ்வொரு செய்கையும், ஒவ்வொரு வார்த்தையும் உணர்த்தின.
சராசரியான உயரம். மிகவும் சிவந்த தோல். தேன் நிறம் ஒத்த கண்கள். அவளின் வெள்ளை நிற முக்காடுக்குக் கீழிருந்து மிகவும் அழகான பட்டுப்போன்ற தலைமுடியின் நுனி மயிர்கள் அவளது உயர்ந்த நெற்றியை வருடியது. ஒவ்வொரு இரவும் நான் தூங்கச் செல்லும்போது, ஒவ்வொரு நாளும் நான் விடிகாலையில் துயில் எழும்போது தன் சாந்தமான குரலில் அவள் எப்போதும் ஒன்று கேட்பதுண்டு:
‘நான் உங்கள் முழங்கால்களை நீவிவிடவா?’
நான் அதை எப்போதும் மறுத்துள்ளேன். ஆனால் அந்தக் கேள்வியில் ஒரு முதிய பெண்ணுக்குத் தன்னைச் சேவையால் அர்ப்பணிக்கும் தொனி அவளிடம் தென்படும். அந்த அறையில் அடர் நிறத்திலான ஒரு நடுத்தரப் பெண்ணை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். கழிப்பறை மேஜைக்கு அருகில் நின்று என்னை பார்ப்பதும், இல்லாவிட்டால் வானத்தை வெறிக்கப் பார்ப்பதுமாக அடிக்கடி வந்துபோவார்.
அவரிடம் அப்துர் ரஹ்மானின் விநோத சாயல் இருந்தது. நிறம், வலிமை, உணர்திறன் என்று எல்லாவற்றிலும் ரஹ்மானை நினைவூட்டினார். ஆனால் அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
நாஸ்-பெர்வரிடம், ‘அவர் யார்?’ என்று கேட்டேன்.
‘அப்துர் ரஹ்மானின் செவிலி’ என்று சொன்னார்.
அங்கோராவின் கொடிய ராணுவ முகாமில் அந்த ஏழைச் சிறுவன் சொன்ன பெண்மணி இவராகத்தான் இருக்கும். இந்தப் பெண்மணி மனதில் தான் வளர்த்தெடுத்த அப்துர் ரஹ்மானின் நினைவுகளைத் தவிர வேறொன்றும் இல்லை. ஒரு நடைபிணமாக வாழ்ந்து வந்தார். அவர் அறையைக் கடந்து சென்றதும், நான் கிட்டத்தட்ட அழுதுவிட்டேன்.
பெண்கள் கட்டடத்திற்கு அருகிலேயே இரட்டை மாடிகள் கொண்ட வீடு ஒன்று தாராளமான இடத்தில் அமைந்திருந்தது. பூந்தொட்டிகளும் செடிகளும் அவ்வீட்டில் நிரம்பியிருந்தன. ஹராம் கதவிற்கு அடுத்த கதவின் வழியாக ஒருவரால் அங்கு செல்லமுடியும்.
மற்ற சகோதரர்கள் எல்லாம் வெளியில் சென்றுவிட்டதால், இருபது வயதுடைய யூனஸ் மட்டும் என்னை உபசரிக்கும் பொருட்டு அங்கிருந்தான். கம்பி போன்று மெலிதான உடல்வாகு கொண்ட அவன் கண்களில் வெளிப்படையான சிரிப்பு தெரிந்தது.
உண்மையிலேயே என்னை உபசரிக்க அழைத்தவர் சர் அப்துல் கய்யோம். அவரின் அழைப்பின் பெயரில்தான் பெஷாவர் கல்லூரியில் சிறப்புரை ஆற்ற பெஷாவர் நகரத்திற்கு வந்தேன். ஆனால் எப்படியோ அப்துர் ரஹ்மான் குடும்பத்தினரைச் சந்திக்க வேண்டியதாகிவிட்டது.
‘செஞ்சட்டை’ இயக்கத்தின் தலைவரான அப்துல் காஃபர் புரட்சிகர இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல் பெஷாவரின் சுதந்திர, சட்டப்பூர்வ, ஆங்கிலேய ஆதரவளிக்கும் அங்கத்தினரின் பிரதிநிதியாக அப்துல் கய்யோம் இருந்தார். இருந்தபோதும் எல்லைப்புற மாகாண மக்களைத் தனித்துக் காட்டியது எதுவென்றால், தங்களுக்குள் எத்தனை வேறுபாடு இருந்தாலும்; எதிர்கருத்துகள் எழுந்தாலும் நாமெல்லாம் எல்லைப்புற மாகாணத்தின் குழந்தைகள் என்ற ஒன்றிய எண்ணம் அவர்களுக்குள் ஊறிக்கிடந்தது.
பெஷாவரில் மட்டுந்தான் ஒரு சாரார் மற்றொரு சாரார் குறித்துக் காது கொடுத்துக் கேட்க முடியாத, கற்பனைக்குள் அடங்காமல் பேசும் பல கோள்மூட்டல்களை நாம் தவிர்க்க முடியும். சுமூக முடிவை எட்டும்வரை தங்களுக்குள் கோரமாகச் சண்டையிடும் இரு பிரிவினரையும் இங்கு எளிதாகக் காணலாம். ஆனால் ஓர் அந்நியருக்கு எதிராகச் சண்டையிடுவதென்றால், எல்லைபுற மாகாணத்தின் எந்தவொரு பிரிவினருக்கும் குரல் கொடுக்கும்படி ஒற்றுமையாக அணிதிரள்கிறார்கள்.
இந்த ஒற்றுமை மதம் கடந்தும் நீடிக்கிறது. 92% உள்ள முஸ்லிம்களுக்குள் மட்டுமன்றி 8% உள்ள இந்துக்களும் இதில் ஒன்றிணைந்து கொள்கின்றனர். இந்துக்கள் பெரும்பாலும் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களாக உள்ளனர்.
இந்தியாவின் மற்ற இடங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் பற்றி வெறுப்புடனும் ஏளனத்துடனும் பேசுகையில், பெஷாவர் வாசிகள் மட்டும்தான் அவர்கள்மீது கரிசனையோடு, பாசத்துடன் பேசினர்.
‘வங்கி இயந்திரம் இன்னும் சரிவர செயல்படத் தொடங்காத பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அந்த வெற்றிடத்தை நிறைக்கின்றனர்’ என்று அவர்கள் வேடிக்கையாகச் சொல்வார்கள். ‘வட்டிக்குப் பணம் தருபவன் இல்லை என்றால், பணத்தேவை உள்ளவன் எங்கு போவான்?’
அவர்கள் தொடர்ச்சியாகக் கடன் பெறுபவர்களா இல்லையா என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியாது. ஆனால் வட்டிக்குப் பணம் தரும் இந்து சமுதாய நண்பர்களின் பக்கம் என்றும் உறுதுணையாக இருக்க விரும்பினார்கள். பெஷாவாரிகளைச் சந்தித்து உரையாடியபோது மகாத்மா காந்தி ஏன் பெஷாவர்கள்மீது இத்தனைக் கருணையோடு இருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். இத்தனைக்கும் பெஷாவாரிகளைக் காண மகாத்மா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
எல்லை மாகாணத்தில் கவர்னர் பதவி குதிரைக் கொம்பாக இருந்தாலும், அதன்மீது ஆங்கிலேய அலுவலர்களுக்கு ஏன் இத்தனைப் பிரியம் என்று புரிந்துகொண்டேன். எல்லைப்புறத்தில் ஏதோவொரு எதார்த்தவாதம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் தீர்க்கமான முடிவெடுக்க அவர்களை உந்தித் தள்ளுகிறது. முடிவெடுத்த பின்னர் நசநசவென்று பேசாமல், எடுத்த முடிவில் விடாப்பிடியாக இருக்கச் சொல்லித் தருகிறது.
எல்லை மாகாணத்தில் எவரொருவரும் சுதந்திரம் பற்றியோ எதிர்கால விடுதலை பற்றியோ பேசுவதில்லை. இருந்தபோதும் ஒவ்வொரு மனிதரும் இங்கு முழுமுதல் சுதந்திர வாழ்க்கையை முன்னகர்த்தி வாழ்கிறார். யாரேனும் ஒருவர் தான் சங்கிலியில் பிணைக்கப்பட்டு வாழ்வதைப் பார்த்தாலும்கூட, மற்றவர்களெல்லாம் அதை உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
0
ஆண்கள் தங்கியிருக்கும் கட்டடத்தின் வரவேற்பறை செவ்வக வடிவத்தில் அமைந்திருந்தது. ஐரோப்பியப் பாணியில் அறைகலன்கள் பொருத்தப்பட்டிருந்தன.
சர் அப்துல் கய்யோம் பெரும்பாலும் அங்கு இருந்தார். அவருக்கு எழுபது வயதிருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் அது நம்பத் தகுந்ததாக இல்லை. நன்கு நிமிர்ந்த உருவம். அவர் முகத்தில் சுருக்கத்திற்கான அறிகுறிகள் கிடையாது. கறுத்த தாடி. ஆனால் இந்த அடையாளங்களை மட்டுமே வைத்து, ஒருவர் போராட்டங்கள் அற்ற வாழ்க்கையை வாழ்கிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
மூலையில் இருந்த சாய்வு நாற்காலியில் கழுகுபோல காட்சியளித்தபடி அமர்ந்திருந்தார். திடீரென அறைக்குள் பறந்துவிடுவாரா என்று பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் இருந்தது. அவர் அதிகம் பேசாவிட்டாலும் உரத்தக் குரலில் உரையாடினார்.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.