Skip to content
Home » நான் கண்ட இந்தியா #23 – பெஷாவர் 2

நான் கண்ட இந்தியா #23 – பெஷாவர் 2

பெஷாவர்

ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் வசிக்கும் எல்லைப்புற பழங்குடிகள் பற்றி நாங்கள் பேசினோம். சில பழங்குடியின அமைப்புகளுக்கு சர் அப்துல் கய்யோம் தலைமை தாங்குவதாக எனக்குச் சொன்னார்கள். அவர்கள் நிலமுறைமை பற்றி விவாதித்தோம். தங்கள் நிலத்தை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் மறுபங்கீடு செய்துகொள்கிறார்கள்.

ஐந்து வருடத்திற்குள் வாரிசுரிமையால் ஒருசிலரின் கைகளுக்குள் பெருவாரியான நிலப்பகுதி சென்று சேர்வதை, இந்த நடைமுறை தடுக்கிறது. அனைவருக்கும் சரிசமமான நிலம் சென்று சேரவேண்டும் என்பதே இவர்கள் கொள்கை. ஆகையால் குடும்பத்திற்கு ஒரு மூத்த உறுப்பினர் தாமாக முன்வந்து, அவசியம் இருந்தால் நிலத்தை மறுபங்கீட்டுச் செய்து ஊருக்குப் பொதுவாக எல்லாருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கிறார்.

“அவர்களின் நிர்வாகமுறை ஆச்சரியமூட்டக் கூடியது,” என்று அப்துல் கய்யோம் சொன்னார். போலீஸார் அமைப்பு இன்றியே பாதுகாப்பான, நேர்த்தியான சமூக ஒழுங்கை அவர்கள் ஒவ்வொருவரும் எங்கனம் கட்டிக் காக்கின்றனர் என்று மேலும் விளக்கினார். அனைவரும் ‘சுமூக ஒப்பந்தந்துடன்’ மற்றொருவரை அணுகுகின்றனர். இவர்கள் காகிதத்தில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொள்ளும்படியான ஒப்பந்ததாரர்கள் இல்லை.

ஒருவர் தன் எல்லையில் இருந்து மற்றொரு இனக்குழுப் பகுதிக்குள் பிரவேசிக்கும்போது அவருக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படுவது கிடையாது. பிற இனக்குழுவுடன் எல்லோரும் சமாதானமாக உறவாடுகின்றனர். போராக இருந்தாலும் சமாதானமாக இருந்தாலும் நேர்மைதான் இவர்கள் கொள்கை.

பெஷாவர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஹோல்ட்ஸ்வொர்த், மாலை நேரங்களில் பெரும்பாலும் அங்கு வருவார். அவர் கேட்டார்:

“கான் சாகிப், தனி ஒரு ஆளாக பழங்குடி கிராம எல்லையை என்னால் கடந்து செல்ல முடியுமா?”

சர்‌ அப்துல் கய்யோம் சாந்தமாக பதிலிறுத்தார்: “அது திறன் சார்ந்தது. நீங்கள் கடந்து செல்லும் குறிப்பிட்ட பழங்குடியின கிராமத்திற்கும் ஆங்கிலேயருக்கும் இடையிலான உறவை பொருத்து மாறுபடும். கிரைமியன் போர் நடந்து கொண்டிருக்கையில் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் ஆங்கிலேயர்கள் நண்பர்களாக இருந்தனர். அப்போது எந்தப் பழங்குடியின பகுதியிலும் அவர்கள் தாராளமாகப் பாதுகாப்போடு சென்று வரலாம். உங்களைப் பொறுத்தவரை, பெஷாவர் கல்லூரியின் முதல்வராக நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்களை எல்லோரும் அறிவர்.”

இருவரும் மாறி மாறி முறுவல் பூத்தனர். வெவ்வேறு காரணங்களுக்காக வியந்து போயினர். சாதாரணப் பழங்குடியின மக்களிடம் பெஷாவர் கல்லூரிக்கு இருக்கும் உயரிய மதிப்பை இதன்மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. கல்லூரி மைதானத்தில் பழங்குடியின மக்களின் கால்தடங்கள் அதிகம் பதிந்துபடுவதாய் சிலர் சொன்னார்கள். இரவில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். பகையாளி இருவர் இந்த இடத்தில் சந்தித்துக் கொண்டாலும், சண்டையிட்டுக் கொள்ள மாட்டார்களாம். அவர்களைப் பொறுத்தவரை இது மிகப் புனிதமான இடம்.

மாறுபட்ட இரு ஆடவர்கள் பேசிக் கொண்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதில் முதலாமவர் இறுக்கமாகப் பொத்தானிடப்பட்ட கறுப்பு கோட்டும் நீலநிற முகடு கொண்ட வெள்ளைத் தலைப்பாகையும் அணிந்த சர் அப்துல் கய்யோம். இரண்டாமவர் ஐரோப்பிய பாணியில் சாதாரண உடை உடுத்தியிருந்த டாக்டர் ஹோல்ட்ஸ்வொர்த். முன்னவர் சில பழங்குடி இனங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தினார். பின்னவர் உலகின் பெரும் சாம்ராஜ்யத்தை பிரதிநிதித்துவப் படுத்தினார். ஆனால் இருவரும் இதன் காரணமாக தாழ்வாகவோ, உயர்வாகவோ தங்களை கருதவில்லை.

இருவருமே ஒருவருக்கு ஒருவர் மனித சமத்துவம் பற்றிய புரிதலோடு இருந்தனர். மனிதனை மனிதனாகப் பாவித்தனர். எல்லையில் வசிக்கும் மக்களைப் பற்றி ஆங்கிலேயர்களின் புரிதலை இது எடுத்துக்காட்டுகிறது.

டாக்டர் ஹோல்ட்ஸ்வொர்த் இளைஞராக இருந்தாலும், தேர்ந்த கல்விமான். அவர் ஒரு சிறந்த ஆங்கிலேயர். ஹாரோவில் தலைவராகப் பணியாற்றி, சோசலிஸ்ட் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். ஆர்வமூட்டும் வகையில் பேசும் திறன் பெற்றிருந்தார். அழுத்தமான குணமும் அறிவுஜீவித்தனமான சிந்தனையோட்டமும் அவருக்கு வாய்த்திருந்தது.

எல்லையில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தன் உள்ளார்ந்த குணங்களால் இறுகப் பற்றிக் கொண்டு அரவணைப்பவர். கல்லூரி நிகழ்வு, மதிய விருந்தி, தேநீர் விருந்து என்று அவர் தலைமைத் தாங்கும் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து வருகிறேன். இந்த வீட்டில் கூட அவர்மீது மரியாதை உணர்வும் நட்புணர்வும் இருக்கிறது. ஒவ்வொரு சூழலிலும் தன் மக்களை எப்படி கையாள வேண்டும் என்ற சரியான உள்ளுணர்வும் தெளிந்த அறிவாற்றலும் உடையவராகத் தெரிகிறார்.

பெஷாவரில் மூன்று இரவு, இரண்டு பகல் தங்கியிருந்தேன். இருந்தாலும் பெஷாவாரிகளுடன் பலநாள் தங்கியது போன்ற உணர்வும், அவர்கள் எல்லோரும் என் சொந்த நாட்டு மக்கள் என்ற பிரம்மையும் தோன்றாமல் இல்லை. குறிப்பாக மாலை வேளையில் எல்லோரும் யூனஸின் அறையில் ஒன்றுகூடி உற்சாகமாகப் பேசி மகிழ்வோம். எல்லைப்புற மக்களின் வாழ்க்கை முறைகளை விவரிப்பதாக அது அமையும்.

குடும்ப உறுப்பினர்களைத் தாண்டி அறை முழுக்க வேற்று நபர்கள் அதிகம் இருந்தார்கள். மத்திய வயதினரும் இளைஞர்களும் அதில் அதிகம். இளைஞர்கள் பலர் ஐரோப்பிய ஆடைகளை உடுத்தியிருந்தனர். ஆனால் விஷேச நாட்களில் ஐரோப்பிய தொப்பிகளுக்கு மாற்றாக நீலநிற முகடு கொண்ட வெள்ளைத் தலைப்பாகைக்கு மாறிவிடுகின்றனர்.

முதியோர்கள் சாதாரண தலைப்பாகையோடு தளர்வான கால்சட்டைகளும் கோட்டும் அணிந்திருந்தனர். புறவய தோற்றத்திற்கு இவர்கள் அதிகம் அழுத்தம் தருவதில்லை என்று தெரிகிறது. ஆனால் ஐரோப்பிய ஆடையுடுத்தி இந்தியாவின் வேறெந்த மூலைக்குச் சென்றாலும் அவர்கள் வளர்ப்புமுறை பற்றியும் நகர்மயமாதல் பற்றியம் கருத்துச் சொல்லியிருப்பார்கள். இங்கு அது பற்றிய கவலையே கிடையாது.

முதியோர்கள் முன்னிலையில் மிக அரிதாகவே இளைஞர்கள் பேசுகின்றனர். சர் அப்துல் கய்யோம் சென்றபிறகு, அங்கிருந்த ஒவ்வொருவரும் கேள்விகளுக்கு ஏற்ப தன் தனித்த பதில்களை முன்வைப்பதை பார்க்கமுடிந்தது. நான் ஒன்றைத் தெளிவாக விளக்கிச் சொல்லவேண்டும். வெளிநாட்டில் பார்க்கும் யாரோ ஒருவரை மட்டும் கருத்தில்கொண்டு ஒட்டுமொத்த மக்களும் இப்படித்தான் என்ற முன்முடிவுக்கு எப்போதும் வந்துவிடக்கூடாது.

அங்கிருந்த இளைஞர்கள் எல்லோரும் ஒருகாலத்தில் அப்துர் ரஹ்மானின் நண்பர்களாக இருந்தவர்கள். அப்துர் ரஹ்மானுக்கும் இவர்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும், அவர் ஒருங்கிணைந்த மாகாணத்து ஆடவரை ஒத்திருந்தார். அவர் எப்போதும் மதத்தைப் பற்றியே பேசுவதோடு, அதன் அடிப்படையில்தான் எல்லாவற்றையும் நிர்ணயிப்பார்.

புத்திக் கூடியவரோ சராசரியோ, நான் சந்தித்த பெஷாவாரிகளுள் எத்தனை உறுதியான முஸ்லிமாக இருந்தாலும், அவர் என்னிடம் எப்போதும் மதம் பற்றி பேசியதில்லை.

வீட்டின் ஆண்கள் வசிக்கும் பகுதியில் நான் எனது உணவை உட்கொண்டேன். ஒவ்வொரு வேளையிலும் குறைந்தது இருபது ஆண்கள் இருப்பார்கள்‌. பணியாளர்கள் கையில் தண்ணீர் கிண்ணமும் துண்டும் இருக்கும். உணவருந்துபவர்கள் கையில் கவனமாக நீர் இரைத்து, கரங்களைச் சுத்தப்படுத்தி உணவு மேஜைக்கு அனுப்பி வைப்பார்கள்.

சிலர் முட்கரண்டியிலும், சிலர் வெறுங்கையிலும் உணவு உண்டார்கள். ஆடை விவகாரம்போல், உணவு உண்ணும் முறையிலும் அவரவர் சௌகரியம்தான். எனக்கு அருகில் எப்போதும் ஓர் அன்பிற்குரிய வயதான மனிதர் உட்காருவது வழக்கம்‌. அவரின் வெள்ளைத் தாடியும், பரிவான கண்களும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. உள்ளூர் தினசரி ஒன்றில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.

அந்தக் கூட்டத்திலேயே மூப்பு மிகுந்த மனிதராக இருந்தாலும், அவரின் சுறுசுறுப்பு மிகுந்த இளம் சிந்தனைகள் இன்றைக்கும் நாளைக்கும் பற்றியே சிந்திந்துக் கொண்டிருந்தன. இது முதற்கொண்டு தானொரு பெண்ணியவாதியாய் வெற்றியடையப் போவதாக என்னிடம் சொன்னார். அவர் வெளிப்படுத்திய விதம் எனக்குப் பிடித்திருந்தது.

இதுவெறும் வாய்ப் பேச்சுக்கு அல்ல. சில பல சமூகப் பரிசோதனைகளை அவதானித்து உணர்ந்து கொண்டே அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது.

0

யூனஸும் அவனது இரு நண்பர்களும் என்னை கைபர் கணவாய்க்கு அழைத்துச் சென்றனர். பெஷாவருக்கு வருகை தரும் ஒவ்வொரு பார்வையாளரும் விரும்பிச் செல்லும் இடம். இது பெஷாவாரிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. சரோஜினி நாயுடு இதை ‘விதிக்கப்பட்ட பாதை’ என்று சொன்னதை இளம் பெஷாவாரிகள் இன்னும் மறக்கவில்லை.

இதன் வழியாக உள்நுழைந்த இராணுவப் படைகள் இந்தியாவை வெற்றிப் பெற்று, அதன் உருவத்தையே மாற்றி விட்டன. என்னைப் பொறுத்தவரை, இந்தப் பெரிய கணவாயை படபடப்புக் கூடிய அஃப்ரிடி இனப் பழங்குடிச் சிறுமியின் பார்வையோடு ஒத்திசைந்து பார்க்கிறேன்.

என் வண்டிக்குப் பின்னால் இச்சகம் கேட்பது போல, மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும் துரத்திக் கொண்டே ஓடி வந்தார்கள். திடீரென டயர் பஞ்சர் ஆனது. பின்னால் ஓடிக் கொண்டு வந்த நான்கு குழந்தைகளுள், சிறுமியை மட்டும் என்னிடம் ஒருவர் தூக்கிக் கொண்டு வந்தார். மீதம் மூன்று சிறுவர்களும் எச்சரிக்கையாகப் பின்தொடர்ந்தனர்.

தங்கள் வெற்றுடல்மேல் தளர்வான கறுப்பு நிற கெமிஸ் உடுத்தியிருந்தனர். அந்தக் கெமிஸ் ஓட்டையில் அவர்கள் தோல் நன்றாகத் மினுமினுத்தது. அவர்கள் முகத்தில் எத்தனை அடுக்காக அழுக்குப் படிந்திருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. பிறந்ததில் இருந்தே அவர்கள் முகம் கழுவவில்லை என்று நான் நினைக்கிறேன்.

“இதோ சிறிய அஃப்ரிடியைப் பாருங்கள்” என்று உடன் இருந்தவர் சொன்னார். அவர் குரல் கேட்ட திசையில் திரும்பியதும், எனை நோக்கி ஒரு முகம் உயர்த்தப்படுவதைப் பார்த்தேன். கிரேக்க காலத்தில் புதை மண்டிய அரிய பொருளொன்றை அகழ்வாராய்ச்சியில் இருந்து தோண்டியெடுத்ததுபோல், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அழுக்கு மண்டிய ஒரு நுண்பொருளை அணுகுவது போலான உணர்வெய்தினேன்.

வெண் தண்ணீரில் குளிப்பாட்டி, அழுக்குத் தேய்த்து உள்ளே என்ன இருக்கிறது என்று துளாவி பார்க்கும் ஆர்வத்தை வேறெந்த மனிதர்களும் எனக்கு ஏற்படுத்தியதில்லை. அடுக்கடுக்கான அழுக்குகளைத் தாண்டியும் இயற்கை என்ன படைத்திருக்கிறது என்ற பிம்பத்தை நமக்கு இவை காட்டுகின்றன.

வசீகரமான நீலநிற கண்கள். அடர் நீளமான இமைப்பீலிகள். பொருத்தமான சிறிய மூக்கு. இவற்றைச் சுற்றி நுணக்கமாகச் செதுக்கியெடுத்த கன்னங்கள். ஒளிர்வற்ற மயிற் கற்றையை முடிச்சிட்டுப் பார்க்கையில் சேற்றுத் தண்ணீர் தேங்கியிருக்கும் தங்கத் திட்டுபோல தெரிகிறது. இவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள் மேலும் அப்பாவித்தனத்தோடு கரங்களை நீட்டி யாசகம் கேட்டு பயங்கர அழுக்கோடு இருந்தனர்.

அவள் வாயில் இருந்து உதிர்க்க முடிந்த ஒரே வார்த்தை, ‘கெவ்சர்’ என்ற அவள் பெயர் மட்டுந்தான். அதுவும் என் உடன் வந்தவர்களின் முயற்சியால் ஈடேறியது. அவளுக்குப் பணம் கொடுத்து, அன்பாகப் பேசினாலும் அவளைச் சிரிக்க வைக்க முடியவில்லை. அவள் முகம் சேற்றினால் மூடி, கடுகடுப்பாக இருந்தது. ஒவ்வொருவர் முகமாகப் பார்த்து, எதையோ சொல்ல வந்தவள்போல் முயற்சித்து, பின்னர் அதைத் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

அவளிடம் அரிதாக ஒரு வெள்ளை நிறப் பல்லை நீங்கள் பார்க்க நேர்ந்தாள், அவள் நகைக்கிறாள் என்று தவறாகக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். யாராலும் பழக்கப் படுத்த முடியாத விசித்திரமான விலங்கொன்றை நினைவூட்டுவதன் குறியீடு அது.

‘அஃப்ரிஸ்’ காட்டுவாழ் மக்கள் என்று நான் புரிந்துகொள்கிறேன். அவர்களின் குழந்தைகள் இயல்பு வாழ்க்கைக்கு சர்வ சாதாரணமாக திரும்பி, காட்டு மல்லிபோல் வாழ்வதாக நான் கருதுகிறேன்.

“இந்தக் குழந்தையின் அசாதாரண அழகிற்கு என்ன காரணம்?” என்று நான் கேட்டேன்.

“மாவீரன் அலெக்ஸாண்டர் படையில் இருந்த கட்டுமஸ்தான அழகு ஆண்வீரன்தான்” இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *