லக்னோ செல்லும் வழியில் சரோஜினி நாயுடு பற்றிய ஞாபகம் வந்தது. லக்னோ பற்றி பேச்செழும் போதெல்லாம் ஆச்சரியமாகத் தலையாட்டி, ‘ஆ, லக்னோ பேகம்கள், லக்னோ பேகம்கள்’ என்று துள்ளிக் குதிப்பார்.
‘ஏன், அவர்களுக்கு என்ன சரோஜினி?’ என்று கேட்டால், ‘நீங்கள் அவர்களைப் பார்த்ததில்லையா?’ என்று பதில் கேள்வி போடுவார்.
உண்மையில் நான் லக்னோ பேகம்களைப் பார்த்திருக்கிறேன். பேராசிரியர் முஜீப்பின் மனைவியும் லக்னோவாசிதான். அவர் வயது இருபதுகளில் இருந்தாலும், ஐம்பது வயதுப் பெண்மணி போல் தீவிரமாக இயங்கக் கூடியவர். முகத்தில் நிரந்தர ஓய்வு தங்கிய தேர்ந்த பொலிவு இருக்கும். அதிகம் பேசாத கம்பீரம் நிறைந்த பெண்மணி. நிச்சயம் அவள் அதீத அழகுதான். ஒருவேளை லக்னோவின் பேகம்கள் இப்படித்தான் இருப்பார்களா?
பேராசிரியர் முஜீப்பின் சகோதரியான என் குட்டித் தோழி ஷக்கீராவும் லக்னோதான். நாங்கள் அவளைக் குட்டி என்று அழைப்பது உயரக் குறைவால் அல்ல, அவள் நடந்துகொள்ளும் விதத்தால். சுட்டெரிக்கும் பார்வை கொண்ட சிறிய அழகி அவள். அசாத்தியமான புத்தசாலித்தனமும் விஷமம் நிறைந்த விளையாட்டுத்தனமும் கொண்டவள். உணர்ச்சித்திறம் கூடியவளாய் இருந்தாலும் அவளிடம் பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறமை இருந்ததை எல்லோரும் ஒப்புக்கொள்வர்.
எப்போதும் கவலையின்றி, தன்னைச் சுற்றி நிகழும் எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருப்பாள். தில்லியின் மாடமாளிகையில் இருந்து குடிசை வீடுவரை இவளுக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. ஒவ்வொரு நிகழ்வு பற்றியும் பக்கம் பக்கமாக விவரிப்பாள்.
ஆனால் அதை வெறுமனே கிசுகிசு என்று ஒதுக்கிவிட முடியாது. அதைச் சொல்வதில் அத்தனை நேர்த்தியும் அழகிய பாங்கும் வெளிப்படுத்துவாள். அவள் சிரிப்பு இருக்கிறதே, அதுபோன்ற சத்தமும் தரமான முகபாவனையும் வேறெங்கும் காணாதது. இதயத்தில் இருந்து மனப்பூர்வமாய் கனிவுடன் மெல்ல இதழ் விரித்து மெலிதாகச் சிரிப்பாள். இந்தச் சத்தம் அவள் பேசும் ஒலியா, சிரிக்கும் ஒலியா என்று அருகிலிருப்பவர்கள் குழம்பிப்போவார்கள். ஒருவேளை லக்னோவின் பேகம்கள் இந்த ரகமா?
அவர்கள் எப்படியிருந்தாலும் லக்னோ பற்றி நானொரு மனச்சித்திரம் வரைந்திருந்தேன். அழகான பேகம்களும் கலைஞர்களும் சூழ்ந்திருக்கும் வண்ண நகரமாக லக்னோவை நான் அடையாளம் கண்டேன். முகலாயச் சித்திரங்களும் கலைப் பொருட்களும் மலிந்து கிடக்கும் நகரம் லக்னோ. ‘லக்னோவிலும் ஹைதராபாத்திலும் அருங்காட்சியகக் கலாச்சாரம் நகரம் முழுக்க விரவியுள்ளது’ என்பதை சரோஜினி நாயுடு என்னிடம் சொல்லவில்லை.
நான் தங்கப் போகும் வீட்டிற்கு ‘டாலி பாக்’ என்று பெயர். (‘டாலியின் பூங்கா’ என்பது அதன் பொருள்) சென்றுபோன நாட்களில் இங்கிருந்த ஓர் அழகிய ஆங்கிலேயப் பெண்மணியின் நினைவாக இந்தப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். தற்போது முஜீப்பின் சகோதரர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகையால் அவரும் என்னுடன் வந்தார். லக்னோ பயணம் மகிழ்ச்சிகரமாகத் தொடங்கியது. முஜீப்பின் துணை மதிப்புமிக்கதாய் இருந்ததோடு மனநிறைவு அளித்தது.
இந்தியாவை உள்ளபடியே புரிந்துகொண்டதற்கு நான் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். மேலும் அவரைப் பார்ப்பதற்கு என் மகன்களில் ஒருவர் போல இருந்தது. ஆகையால் நான் அவரை என் ஆதர்ச இந்தியப் புதல்வனாய் தத்தெடுத்துக் கொண்டேன். முஜீப்பிற்கு லக்னோ பற்றி பெரிதாக உற்சாகம் இல்லை. ‘களையிழந்த பழைய நகரம்’ என்று அடிக்கடிச் சொல்வார். புதிய வாழ்வியல் முறைக்கு அகலப் பாய்ச்சல் கண்ட மற்றெந்த இந்திய நகரங்களைக் காட்டிலும் லக்னோ இதில் பாதுகாப்பாய் பின்தங்கியிருக்கிறது என்று அவர் சொன்ன குறிப்புகள்மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.
0
வீட்டின் ஆன்மா அதில் வசிப்பவர்களால் உருவாகிறது. ஒருவன் வசிக்கும் வீட்டைக் காண்பித்தால், அவன் எத்தகைய மனிதன் என்று என்னால் சொல்ல முடியும். ஆகையால்தான் நான் இங்கு வசித்த ஒவ்வொரு வீடும் இந்திய குணாதிசயத்தைக் கண்டுபிடிக்கும் புதிராக நீண்டுகொண்டே போகிறது. வாசிப்பவர்களும் புரிந்துகொள்ளட்டுமே என்று ஒவ்வொரு வீட்டைப் பற்றியும் விரிவாக எழுதுகிறேன்.
டாலி-பாக் வசதியான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒருபுறம் நன்கு வெட்டப்பட்டு, பசுமையாகப் பராமரிக்கப்படும் ஆங்கிலேயே புல்வெளி. மறுபுறம் சிறிய பூங்காவும், ரோஜா தோட்டமும் அமைந்திருந்தன. கட்டடங்களுக்குப் பின்னால் காய்கறி தோட்டம் இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன். கிழக்குப் புறமாக ரோஜா தோட்டத்தை எதிர்கொண்டபடி வீடு அமைந்திருந்தது.
வளைவை ஒட்டி நுழைவாயில் தொடங்கியது. கதவுக்குச் செல்லும் வழியில் கற்படிகள் இருந்தன. சௌகரியமான அறைகலன்களோடு நல்ல விஸ்தாரமான வரவேற்பறை எங்களை வரவேற்றது. சிறிய திரை கொண்டு உணவறையைத் தடுத்திருந்தார்கள். பல்வேறு குடும்பங்களைச் சார்ந்த அனைத்து வயதினரும் இணக்கமாக இன்புற்று வாழும் சுழலை அங்கு ஒருவரால் எளிதில் கிரகிக்க முடியும்.
அங்கு வசிப்பவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப அறைகலன்களை எங்கு வேண்டுமானாலும் பெயர்த்து மாற்றி அமைக்கலாம். அதற்கு முழு சுதந்திரம் இருந்தது. வரவேற்பறையின் மருங்கில் வராண்டா செல்லும் வழி அமைந்திருந்தது.
இடப்புறத்தில் எழுப்பியிருந்த சுழற்படிக்கட்டு மசூதியின் ஸ்தூபி போல் இருந்தது. அது மூன்றாவது மாடிக்கும் செல்லும் வழி. அதுவே இறுதி தளம். நான் தங்கப் போகும் அறை அங்குதான் இருந்தது. கொஞ்சம் முன்னேறி சென்றால் வெட்ட வெளியில் மாடித் தோட்டம் ஒன்று உண்டு. அங்கிருந்து பார்த்தால் ரோஜா தோட்டம் நன்றாகத் தெரியும். மாடித் தோட்டம் எனக்கு மிகுதியாகப் பிடித்திருந்தது. அங்கு லாவண்யமாக உட்கார்ந்து லக்னோ பற்றிக் கிசுகிசுக்கலாம். லக்னோ கவர்ச்சியான பார்வையைப் பறிக்கும் பேகம்கள் நிறைந்த நகரம் மட்டுமல்ல, தோட்டங்களும் பூங்காக்களும் நிறைந்த ரம்மியமான பசுமை நகரம்.
வீட்டைச் சுற்றி அங்கு வசிப்பவர்களிடம் நன்றாகப் பழகினால், ‘மேற்கத்தியவர்கள் இந்த வீட்டிற்கு வெகு காலத்திற்கு முன்பே வந்திருக்க வேண்டும்’ என்று எல்லோரும் சொல்வார்கள். ‘இங்குப் பின்பற்றப்படும் பழக்கவழக்கம் கடன்வாங்கப்பட்டது கிடையாது. தேவையற்ற அறைகலன்களால் அர்த்தமற்ற இடமடைப்பு ஏற்படுவதில்லை. கிழக்கத்தியர்களோடு ஒன்றுசேர்ந்து அவர்களுள் ஒருவராக மாறிவிட்டனர்.’
மூன்று தலைமுறைகளைச் சார்ந்த ஐம்பது பேராவது குறைந்தது அவ்வீட்டில் வசித்தார்கள். அதன் உரிமையாளர் திரு. வாசிம், முஜீப்பின் மூத்தச் சகோதரர். தன் சகோதரி ஷக்கீராவோடு ஒரு விஷயத்தில் இவர் ஒத்துப்போவார். சுற்றியுள்ள மனிதர்கள்மீது அதே அளவு அக்கறை உள்ளவர். நம்மை ஆச்சரியப்படுத்தவும் ஆச்சரியமூட்டவும் மெனக்கெடுபவர். இவரிடமும் அதே விஷமத்தனமான சிரிப்புச் சத்தம் இருந்தது.
இவர் ஒரு தலைசிறந்த வக்கீலாக, புகழ்பெற்ற வியாபாரியாக இருந்தாலும் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு குழந்தையைப் போல் எளிமையாகவும் மென்மையாகவும் நடந்துகொண்டார். அவரின் நடத்தையும் குரலின் தொனியும் இதனை அப்பட்டமாக்குகின்றன. தன் வயதொத்த நபரோடு பேசிச் சிரிப்பதுபோல், மிகுந்த கரிசனையோடு இவரிடம் இளைஞர்கள் பழகுகின்றனர்.
இவரின் தந்தை இதே வீட்டில் வசித்து வருகிறார். அவர் பழந்தலைமுறையைச் சார்ந்தவர். தன் குடும்பத் தலைவர் பொறுப்பை வாசிமிடம் ஒப்புடைத்துவிட்டதால், இனி வாசிம்தான் தலைவர். இனக்குழு போல் இயங்கிவரும் குடும்பத்தில் வாசிமை தலைவர் என்று சொல்வது, குடும்ப அடுக்கில் அவரின் தரமதிப்பைச் சொல்கிறது. மற்றபடி வீட்டிற்கும் வாசிமிற்கும் இல்லத்தரசியான பேகம் வாசிம் அவர்களும் அவ்வீட்டில் இருந்தார்.
முஜீப்பின் மூலம் அவர் தந்தையை நன்றாகத் தெரிந்துகொண்டேன். தன் தந்தையிடம் அர்ப்பணிப்போடு இருந்த அவர், அடிக்கடி அவரைப் பற்றிச் சொல்வார். தன் தள்ளாத வயதில் பார்வைக் குறைபாடும் மூப்பும் ஏறிக்கொண்டே செல்லும் சூழலில் கூட இளம் இந்தியா பிறப்பது பற்றி அவரின் தீராத ஆசை ஆச்சரியமூட்டியது.
இந்தியா பற்றிய விஷயங்களில் உணர்ச்சி கூடியவராக நடந்துகொண்டார். ஓர் இளம் தேச பக்தனைப் போல், எதிர்கால இந்தியா மீது நம்பிக்கை வைத்திருந்தார். கேத்தரின் மாயோ எழுதிய இந்தியா பற்றிய புத்தகத்தை வாசித்துவிட்டு கிளர்ச்சி அடைந்தவர், மாற்றத்திற்கான தேவையை முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறார்.
அவர் அறையை விட்டுச் சாமானியமாக வெளியே வர மாட்டார். ஆனால் அப்படியிருந்தும் தன் குடும்பப் புகைப்படத்தில் பெருந்தன்மையோடு என்னையும் சேர்த்துக் கொண்டார். நாற்பது வருடங்களுக்கு முந்தி இருந்த, உயர் தர துருக்கிக் குடும்பத்தின் படித்த இளைஞனுக்கான மிடுக்கை அவரிடம் கண்டேன். அவர் பலகீனமானவர். சுத்தமான ஐரோப்பிய ஆடைகளும் சிகப்பு நிற குல்லாவும் அணிந்திருந்தார். நேர்த்தியாகவும் சீராகவும் இருந்த அவர் கிழக்கு மற்றும் மேற்குலகின் கணவான்களைப் போல் கண்ணியத்துடன் இருந்தார்.
கால மாற்றத்தின் விளைவுகளை அவர் புரிந்து ஏற்றுக்கொண்டது எனக்குப் பெருவியப்பாக இருந்தது. அதன் கசப்பான முடிவுகளை வெறுத்தொதுக்காமல் உள்வாங்கிக் கொண்டார். ஆனால் அது காலவெளியின் மலிவான வெளிப்பாடாகவோ, அவரின் நயப்பு போதாமையாகவோ தெரியவில்லை.
அவருக்கு வழங்கப்படும் உயர்ந்த உபச்சாரங்களுக்கு அவரின் வயது மட்டுமே காரணமல்ல. பொதுவாக வயதைக் காரணம் காட்டி மரியாதை தருவது கிழக்கின் வாடிக்கையாக இருந்தாலும், இந்த விஷயத்தில் அவரின் குணாதிசயமும், பின் நிகழ்வை தீர்மானிக்கும் திறனும் முக்கியத்துவம் பெறுகின்றன. திரு. வாசிம் பொதுவெளியில் கட்டித் தழுவ பயங்கொள்ளும் ஒரே மனிதர் இவர்தான்.
பேகம் வாசிமின் அம்மா, அந்த முதியவர் சகோதரி. இங்கிருக்கும் ஒவ்வொருவரும் மற்றொருவர்க்கு மாமன் மகள், சித்தப்பா மகள், தங்கை, அக்கா, அண்ணன், தம்பி, மாமா, அத்தை என்று ஏதோவொரு வகையில் உறவுமுறை ஆனார்கள். பேகம் வாசிமின் அம்மாவும் அவர் தலைமுறையைச் சார்ந்தவர். ஆனால் அவர் காலத்தைச் சார்ந்தவர் அல்ல. தன் வாழ்நாள் முழுக்க ஒரு பதினைந்து வயது பெண்ணாகத்தான் அவரால் வாழ முடியும்.
மெலிந்த மூங்கில் போன்ற உருவம். வெடுக்கு வெடுக்கென்று விரைந்து நடந்து, தன் பேத்திகளைப் போல் சமர்த்தாக விரைந்து பதிலிறுப்பார். தளர்ந்த வெள்ளைக் கால்சட்டைகளை அணிவது அவரின் வழக்கமாக இருந்தது. அதற்கு இணையாக வெள்ளை நிற கெமிஸும் வெளிர் நிற துணியால் முக்காடும் அணிந்து கொள்வார். முக்காட்டில் இருந்து சாம்பல் நிற முடிகள் காற்றில் அசையும்.
அவர் முகம் சிறியது. கொஞ்சம் அகலமான நெற்றி. மென்மையான கன்னங்கள். முகம் முழுதும் சுருக்கம் விழுந்திருந்தாலும் தாடையிலும் கன்னத்திலும் இளமைப் பளிச்சிட்டு விளையாட்டாக மூக்கைச் சுருக்கும் குட்டிப் பெண்போலத் தோன்ற வைக்கிறது. நல்ல பிரகாசமான காப்பிக் கொட்டை நிற கண்கள். வீட்டின் ஒரு மூலையிலிருந்து மறுமூலைக்கு மாறி மாறி ஓடும் சுபாவம் உடையவர். உற்சாகத்தோடு பார்ப்பவர்களுக்குப் பரவசமூட்டும்படி நடந்துகொள்வார். இளைஞர்களும் முதியவர்களும் அவர் பின்னால் சென்று ஆரத் தழுவினார்கள். மனங் கவரும் குழந்தையைப் பார்த்து புன்னகை உதிர்ப்பது போன்றாவது நாம் இவரிடம் சிரிப்பைப் பரிமாறியிருப்போம்.
‘அம்மா, கவ்வாலி இன்றைக்கு எங்கே?’ என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் மருமகன் அந்தச் சிறிய முகத்தை அழுத்திப் பிடித்து, கைகளில் முத்தமிட்டுக் கேட்பார். கவ்வாலி என்பது இசைக் கலைஞர்களால் வாசிக்கப்படும் இஸ்லாமிய இசை வகை. அதை அவர் ஆத்மார்த்தமாக விரும்பினார். அவரின் ரத்தத்திலேயே இசை ஊறியுள்ளது. அவர் நடந்து செல்லும் அழகிலிருந்தே இதைக் கண்டுபிடித்துவிடலாம். அவர் எந்தவொரு இசைக் கூட்டத்தையும் தவறவிட்டதில்லை என்று சிலர் சொன்னார்கள்.
அடுத்த தலைமுறையில் இதுவரை பார்த்த இரண்டு முதியவர்களின் நேரடி வாரிசுகள் இருந்தன. பேகம் வாசிம் மற்றும் அவரது கணவர். வாசிமின் சகோதரன் மற்றும் அவரது தங்கை. பேகம் வாசிம் ஒரு குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக இருந்தாலும் கூட, அவளின் சகோதரர்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இளமைப் பீடித்த பேகம் வாசிமிடம் இருந்துதான் அவள் சகோதரர்களின் ஆளுமைத் தன்மையும் தேர்ந்த திறமைகளும் உருப்பெற்றிருக்க வேண்டும்.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.