Skip to content
Home » நான் கண்ட இந்தியா #27 – லக்னோ 3

நான் கண்ட இந்தியா #27 – லக்னோ 3

நான் கண்ட இந்தியா

திருவாளர் வாசிமிடம் கணிசமான நிலம் இருந்தது. ஆனால் அதிலிருந்து கடுகளவும் லாபமில்லை என்று அவர் சொல்லியிருந்தார். ஊருக்கு நடுவே சொத்து பத்தும், செழிப்பான வக்கீல் உத்தியோகமும் இல்லையென்றால் அவரின் குடும்பம் வறுமையால் மடிந்துபோயிருக்கும். நில உரிமையாளருக்கு பூமியால் ஏன் லாபம் உண்டாவதில்லை என்று எனக்கு இப்போதுவரை புரியவில்லை.

லக்னோவிற்கு அருகில் இருக்கும் சில கிராமங்களைக் காண எனக்கு வாய்ப்பு அமைந்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். சுற்றுப்புறத்தில் இருந்த கிராமங்கள் எல்லாம் வறுமையிலும் வறுமை பீடித்த ஊர்கள் என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்.

கிராமத்திற்குள் நுழைந்ததும் நான் காண விரும்பும் வீட்டைத் தேர்வு செய்யும்படி பேகம் வாசிம் சொன்னார். நுழைவாயிலில் இருந்த ஒரு சிறிய குடிசையைச் சுட்டிக் காட்டினேன். அந்த வீட்டுக்காரர் கதவருகில் நின்றுகொண்டு, வீட்டைச் சுற்றிக்காட்டும் ஆவலில் எங்களை முகமலர்ந்து வரவேற்றார். பேகமும் அவரும் பேசிக்கொண்டிதை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் போனாலும், நான் பார்த்த ஆயிரக்கணக்கான நபர்களில் இவர் ஒரு குறிப்பிடத்தகுந்த மனிதர் எனத் தோன்றியது.

நொடித்துப்போன பலகீனமான உடல். சராசரி வயது. மெலிந்த தேகத்தில் இடுப்புத் துண்டைத் தவிர வேறெந்த ஆடையும் இல்லை. அவரின் மொத்த எலும்பையும் அப்படியே எண்ணிவிடலாம். முட்டியெலும்பு உடல் எடையைத் தாங்கமுடியாமல் தள்ளாடியது. அவர் முகமும் சரிபாதி ஒடுங்கிப்போய் இருந்தது. கண்கள் பிதுங்கிக் கொண்டிருந்தது. இனம்புரியாத சோகமும் அயற்சியும் அவர் முகத்தில் அப்பிக்கிடந்தன.

ஒருவகையில் இது எனக்கு பழக்கப்பட்ட முகம். விதிவயப்பட்டு எல்லாம் எழுதி வைத்தார்போல் நிகழ்கிறது என நம்பும் கூட்டம் எப்படி இருக்குமென்று எனக்குத் தெரியும். தொடர்ந்து வரும் துன்பத்திற்கு என்றைக்கும் அழிவில்லை என உண்மை உணர்ந்த அக்கண்களில் அத்தனைப் பாவகரமான விரக்தியைப் பார்த்தேன்‌.

அவர் பேசும்போது குரல்வளை மேலும் கீழும் சென்றது. கரகரப்பும் சோர்வும் தங்கிய குரல். இதைப் புலம்பல் எனச் சொல்லமுடியாது. பிறரின் அனுதாபத்தை வென்றெடுத்து, அதன்மூலம் காசு பார்க்கும் நிலையை அவர் எப்போதோ கடந்துவிட்டார். குரலில் ஏற்பட்டுள்ள தொய்வும், மெலிந்த உடல்வாகும் நிரந்தர ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறி என்று தெளிவாகத் தெரிந்தது.

வீட்டிற்குள் சிறிய முற்றம். இருள் மங்கிய மூன்று அறைகள். முற்றத்தில் ஒரு பெண்மணி கந்தல் ஆடை உடுத்தி அமர்ந்திருந்தார். இடுப்புத் துண்டோடு இரண்டு சிறுவர்கள், தந்தைக்கு மாறில்லாமல் ஒன்றுபோல் உட்கார்ந்தினர். உண்டுமுடித்த செப்புத் தட்டுக்களை மூவரும் ஒன்றுசேர்ந்து துலக்கிக் கொண்டிருந்தனர்.

உணவு என்று சொல்லக்கூடிய எவ்விதப் பண்டத்தையும் ஆண்டுக்கணக்காக இக்குடும்பத்தினர் பார்த்ததில்லையோ என்று எனக்குத் தோன்றியது. வறுமை ஓடிய அந்த முகங்களில், சோகம் வழிந்தது. பசி என்கிற உணர்ச்சியைக்கூட இழந்துவிட்டனர். தொடர்ச்சியாக அரை வயிறுக்கு உண்டால் இத்தகைய கோளாறு ஏற்படுவது சாதாரணம். அவர்கள் வாழ்வையே சிதைத்துவிடும். எதிர்வரும் செயல்பாடுகளையும் எதிர்வினைகளையும் மந்தமாக்கும்.

இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரே பண்டம், இரண்டு செப்புத் தட்டுகள் மட்டுந்தான். அறை என்று சொல்லப்பட்ட திரைகளுக்குள் நுழைந்து பார்த்தேன். சாளரமோ, தரையோ இல்லை. வீட்டுச் சாமான்கள் ஒன்றையும் காணோம். படுப்பதற்கு மெத்தைகூட கிடையாது. சில வைக்கோல் புற்களைக் கத்தையாக்கி அதன்மேல் உறங்குகின்றனர். அவர்கள் அணிந்திருந்த கந்தல் உடைகளைத் தவிர்த்து, சொந்தமாக வேறெதுவும் இல்லை. நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்.

ஆன்மா பற்றியும் மனித உடல் சாராத ஏதேனும் பற்றியும் பேசுவது மிதமிஞ்சிய காரியம் என்று நான் சிந்திந்த சந்தர்ப்பங்கள் உண்டு. உலகின் புறவயப் பொருட்கள் மீது மர்மம் தோன்றும் போதெல்லாம் அவை சரியென்றே நான் நினைத்திருக்கிறேன். இம்முறை அந்த உணர்வு முழுமையடைகிறது.

தன் வாயிலிருந்து ஒற்றை வார்த்தை உதிர்ப்பதற்கே ஓராயிரம் முயற்சி செய்ய வேண்டியிருக்கையில், எங்கள்மீது கரிசனம் காட்டி, முன்பின் நடந்து வீட்டைச் சுற்றிக்காட்டி, நட்போடு பழகவேண்டி இந்த மனிதருக்கு என்ன இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டேன். நல்ல உணவிற்குப் பிறகு, அந்த வீட்டைக் காணச் செல்லும் யாராக இருந்தாலும் நிச்சயம் வெட்கப்படுவார்கள். உணவு பந்தியில் வயிறு புடைக்க உண்டுச் சென்றதை எண்ணி இன்றளவும் குற்றவுணர்வோடு இருக்கிறேன்.

அங்கிருந்து சிறு தொலைவில், அழுக்குப் படிந்த கிராமத்துக் குட்டை ஒன்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். எல்லோரும் ஆடையின்றி வீங்கிய வயிறோடு ஒருவிதத் தோல் நோயின் தாக்கத்தில் தென்பட்டனர். நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு மெலிந்த கால்கள். தளர்ந்துபோன ரப்பர் டியூப் போல தள்ளாடிச் சென்று மந்தமாக நகர்ந்தனர். முதுகு கூன் விழுந்திருந்தது. புதிதாக வந்தவர்கள் பற்றி அக்கறையின்றி விளையாட்டில் மும்முரமாக இருந்தனர்.

அங்கிருந்தவர்களுள் ஒரு குழந்தையின் தோற்றம் என்னை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. அதன் உருவத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு வயிறு உப்பியிருந்தது. எலும்புகளை அடிக்கிவைத்தார் போன்ற உடல். கால்களைப் புழுதியில் பரப்பி உட்கார்ந்து கொண்டு, அண்ணாந்து வானத்தைப் பார்த்தது. அதன் கண்கள் வசீகரமானவை. இமைப்பொழுதும் சுற்றத்தைப் பற்றிக் கவலையின்றி, வாழ்வின் முழுமையை உணர்ந்த பார்வை. அதன் வாழ்நாள் எண்ணப்படுகிறது என்றந்த பார்வைக்குத் தெரியும்.

மரணத்தின் விளிம்பிலிருக்கும் அந்த ஜீவராசி, அற்பமான ஒரு குழந்தை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை… எத்தனைக் கஷ்டம் வந்தாலும் அழுவதற்குக்கூடத் திராணியற்றுக் கிடந்தது. தான் வாழும் பகுதியில் சிரிப்பின் சத்தத்தைக்கூடக் கேட்டிராததால், அதன் சிரிப்பைப் பற்றி பேசுதவற்கு ஏதுமில்லை.

முதல் வீட்டைக் காட்டிலும் ஓரளவு நல்ல வீடுகளும் அங்கு இருந்தன. அப்படியென்றால் பெயரளவில் படுக்கைகளும் துணிமணிகளும் தட்டுமுட்டுச் சாமானங்களும் இருந்தன என்று பொருள். நன்கு வளப்பமாக காட்சியளித்த ஒரு வீட்டின் பின்புறத்தில் முற்றம் இருந்தது. அங்கு பாதி மறைக்கப்பட்ட ஒரு கட்டடத்தைப் பார்த்தேன். அதன் வெள்ளையடித்த சுவற்றில் தொன்மையான பாணியில் அழகானதொரு முன்மாதிரி முகத்தை வரைந்து வைத்திருந்தார்கள்.

நான் அதைப் பார்த்துகொண்டிருப்பதைக் கண்ட பெண்மணி ஒருவர் கூச்சலிட்டுக் கொண்டே ஓடிவந்து ஓவியத்தை மறைத்தபடி கண்முன் நின்றார். அந்த ஓவியத்தில் இருந்தது அவரின் வழிபடு கடவுள் என்றும் இஸ்லாமிய நாத்திகர் ஒருவர் அதைக் காண்பதை அவர் விரும்பவில்லை என்றும் பேகம் வாசிம் பின்னர் சொன்னார்.

0

நான் சார்ந்த மனித சமுதாயத்தின்மீது வெட்கப்படவும், வருத்தமடையவும் போதுமான கசந்த அனுபவங்களை அந்தக் கிராமம் எனக்கு வாரிக் கொடுத்தது. மனிதநேயத்தின்பால் உள்ள அத்தனை அன்பையும் துடைத்து எறிந்து, அதன்மேல் பரிதாபம் தோன்றியது. இந்தியாவில் எனக்குக் கிடைத்த ஆயிரக்கணக்கான அரவணைப்புகளையும் கண்டு களித்த அழகுக் காட்சிகளையும் தாண்டி, கிராமத்துக் குட்டையில் உட்கார்ந்துகொண்டு வெட்டவெளியை வெறித்துப் பார்த்த அந்தக் குழந்தையின் ஊடாக வழிந்தோடும் அந்தக் கிராமத்தின் சோகம் இன்னும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

0

இந்தியாவின் பெருவாரியான மனிதகுலம் இந்தத் தரத்தில் உழன்றுக் கொண்டிருக்கும்போது கம்யூனிசம், நேசனலிசம் என்ற பலவித ‘இசங்களைப்’ பேசுவது கேலிக்குரிய விஷயம். இந்தியாவின் முக்கிய நகரமான லக்னோவில் உள்ள இந்தச் சிக்கலைப் பற்றி நான் அறிந்துகொண்டது எத்தனை விசித்திரமாக இருக்கிறது!

புத்தகங்களில் படித்து, செவிவழியாகக் கேட்டதைத் தாண்டி பல கோணங்களில் இந்த விஷயம் பூதாகரமாக உருமாறியுள்ளது. 350 மில்லியன் மக்கள் தொகையுள்ள இந்தியாவில், குறைந்தது 90% மக்களின் வாழ்வியல் இது. 90% மக்களின் வாழ்க்கைத் தரம் நான் பார்த்த கிராமத்து வாழ்க்கைக்கு நிகராக இருந்தால், நிச்சயம் அது அந்நாட்டின் எதிர்காலத்திற்கு ஊறு விளைவிக்கும் பேராபத்தாக இருக்கும். ஒரு மேற்கத்திய பார்வையாளரைக் காட்டிலும், இந்த விஷயம் என்னை வெகுவாக பாதித்தது. கிழக்கின் வாழ்க்கைத்தரம், கிராமங்கள் என்னும் அச்சில்தான் இன்னும் சுழன்றுகொண்டு இருக்கிறது.

இந்தியா பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் தொடக்க நிலை வாசகருக்கு, அதன் கிராமப்புற வாழ்வியலை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:

இந்தியா முழுதும் பல்வேறு நிலவரி முறைகள் இருந்தாலும், ஜமீன்தாரியும் ரயத்துவாரியும் முதன்மையானவை. வட இந்தியாவில் நான் பார்த்த எல்லாக் கிராமங்களும் ஜமீன்தாரி முறையில் இயங்குபவை. அதில் விவசாயி குடியானவன் பொறுப்பில் உள்ளான். நிலத்திற்கு வாடகை கொடுக்கிறான், சில சந்தர்ப்பங்களில் உரிமை இன்றி வெளியேற்றப்படுகிறான். நிலம் ஜமீன்தாருக்குச் சொந்தம். அரசுக்கு அவர்தான் நிலவரி செலுத்துகிறார். ரஷ்யாவில் சீர்திருத்தத்திற்கு முந்தைய நிலவரி முறை இப்படித்தான் இருந்தது.

ஆட்சியாளர்கள் எல்லோரும் எப்பாடுபட்டாவது ஜமீன்தாரி முறையைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். நிலவரி வசூலிப்பதற்கு இந்த முறை எளிமையானது மட்டுமன்றி ஆட்சிமுறைக்குப் பெரிய மெனக்கெடல் இல்லையென்பதும் இதற்கு முதன்மையான காரணம். மேலும் ஒவ்வொரு படையெடுப்பும் புதிய நிலப்பிரபுக்களை உருவாக்குகிறது; அங்கு ஒரு சிறிய நிலம் கொண்ட சிறுபான்மையினர் உருவாகின்றனர். படையெடுப்பாளர்களுடன் ஒன்றுகூடி உறவுகளால் அவர்கள் பிணைக்கப்படுகிறார்கள்‌.

ஆனால் ஜமீன்தாரி முறை விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே ஜமீன்தார் என்ற இடைத்தரகரை நியமிக்கிறது. இது ஓர் எல்லையற்ற சிக்கலாக மாறிவிட்டது. நிலம் பல்வேறு கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. அதன் உட்கூறுகள் மீச்சிறு கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஓர் உரிமையாளர், ஒவ்வொரு பகுதியும் மற்றொரு பகுதியின் அங்கம்.

சில பகுதிகளில் 280க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையில் செயல்படுவதாக எனக்குச் சொன்னார்கள். இத்தனை இடத்தரகர்களும், நிலக்கிழார்களும் நிலத்தில் நேரடியாக செய்வதேதுமில்லை. தங்கள் நிலத்தை குத்தகைக்கு விட்டு, விவசாயிகளின் உழைப்பில் வாழ்கின்றனர். இந்தமுறையில் சுய விருப்பு வெறுப்பு கிடையாது. ஜமீன்தாரி சங்கியின் அடிமட்டத்தில் பிணைக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து பணத்தை வாங்கி, அதிலொரு பங்கை மேல்மட்டத்திலிருக்கும் அரசுக்கும் செலுத்துவது மட்டுமே ஜமீன்களின் வேலை.

உண்மையைச் சொல்வதென்றால், இந்த நிலத்திலிருந்து பெருவாரியான ஜமீன்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. விவசாயக் கூலிகள்தான் பட்டினிக்கு ஆட்படுகின்றனர். இவர்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு எண்ணிலடங்காத காரணங்கள் உண்டு.

(1) அபரிமிதமான நிலமும் குறைந்தபட்ச கூலியாட்களும் இருந்தபோது, நிலக்கூலி பெரிதாக இல்லை. ஆனால் கடந்த ஒன்றரை நூற்றாண்டில் கிராம மக்கள்தொகை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. 15 கோடியிலிருந்து 35 கோடிவரை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆக நிலத்தின் தேவை அதிகரித்திருப்பதால் அதற்கான கூலியும் விண்ணளவு உயர்ந்துள்ளது.

வாழ்க்கைத் தரமும் வசதி வாய்ப்புகளும் பெருகி வந்ததுதான் மக்கட்தொகை பெருக்கத்திற்குக் காரணமென்று எண்ணிவிடக்கூடாது. அவை தேவையுமல்ல. வாழ்க்கைத் தரம் எத்தனை மடங்கு கீழான நிலைக்குச் செல்கிறதோ, அதே விகிதத்தில் மக்கட்தொகை பெருகுவதை நீங்கள் காணமுடியும். இயந்திரமயமாக்கப்பட்ட நகரங்களில், இயல்பாகவே சேரிகளின் மக்கட்தொகை உயர்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. அப்படித்தான் இந்தியாவின் கிராமப்புற சேரி பகுதிகளில் கணிசமாக மக்கட்தொகை உயர்ந்திருக்கிறது.

(2) ஏறக்குறைய இந்தியாவின் அனைத்துத் தொழிற்சாலைகளும் கிராமப்புறப் பின்னணி கொண்டவை. இயந்திர உற்பத்தியால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மலிந்து கிடக்கும் பண்டங்களும் விரைவு இயந்திரங்களின் வருகையும் கிராமியத் தொழிற்சாலைகளுக்கு மரண சாசனம் எழுதியுள்ளன. அத்தோடு கிராமத்தானின் வாழ்வாதாரத்திலும் துண்டு விழுந்தது. இப்போதிருப்பதைக் காட்டிலும் இரண்டு மடங்கு நிலத்திற்கு அரைவாசி கூலி கொடுத்து மிச்ச வருவாயைக் கைவினைப் பொருட்கள் செய்து ஈட்டிக்கொண்டிருந்த 15 கோடி மக்கள், தற்போது 35 கோடியாக உயர்ந்த பின்னரும் அதே அளவு நிலத்தில் முன்பைக் காட்டிலும் இருமடங்கு கூலி கொடுத்து கூடுதல் வருவாய் இன்றி தவிக்கின்றனர்.

ஈட்டும் பணத்தை வாய்க்கும் வயித்துக்கும் படியளந்தால்கூட, நிலக்கூலி கொடுக்க தண்டல்காரரிடம்தான் பணம் பெற வேண்டும். உலகெங்கிலும் உள்ள தண்டல்காரர்கள் எல்லாம் பிணந்தின்னிகள் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியச் சமூகத்தில் மேற்கத்திய தாக்கம் குறுகிய காலத்தில் பல நன்மைகள் செய்திருந்தாலும், விவசாயக் கூலிகளுக்கு குறைவில்லாத துன்பங்களை வாரியிறைத்திருக்கிறது. ‘மேற்கத்திய ஆட்சியாளர்கள் தங்கள் முழு ஆற்றலையும், அறிவியல் நுட்பத்தையும் ஆளும் வர்க்கம் மற்றும் நடுத்தர குடும்பங்களின் ஏற்றத்திற்காகச் செலவு செய்யாமல், விவசாய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருந்தால் நாம் எத்தகைய இந்தியாவில் வாழ்ந்திருப்போம்?’ என்ற கேள்வி மீண்டும் காதில் ஒலிக்கிறது.

‘விவசாயிகளை நிர்வகிப்பதே ஆளும் அரசின் அடிப்படைக் கூறாக இருக்கவேண்டும் என்று எந்த அரசு நிர்ணயிக்கிறதோ, அதுவே இந்தியாவிற்கு நன்மை பயக்கும் அரசு’ என்று ‘கிழக்கிலும் மேற்கிலும் கிராமியச் சமூகங்கள்’ புத்தகத்தில் சர் ஹென்றி மெய்ன் சொல்கிறார்.

ஆனால் இந்தியாவிலும் இதர கீழைத் தேசங்களிலும் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டு ஆளும் அரசு எப்போதாவது அமைந்திருக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி அலையவேண்டாம். அதைப் புறமொதுக்கிவிட்டு இந்து, முஸ்லிம் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் வசூலிக்கப்படும் நிலவரி முறை பற்றி மற்றொரு சிக்கலுக்கு வருவோம்.

இந்தியாவில் நிலவரி முறை இந்துமதப் புனிதச் சட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. முஸ்லிம் ஆட்சியாளர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதைச் சிறிய மாறுதலோடு போற்றிப் பாதுகாக்கின்றனர். கூலிக்கு வேலை செய்யும் விவசாயிகள் நிலத்தில் மாறடித்து மகசூல் செய்து அதனொரு பங்கை ஆட்சியாளருக்கு வழங்கவேண்டும். மன்னனின் பங்கிலிருந்து நிலவரி முறை தொடங்குகிறது.

இந்து ஆட்சியாளர்களின் காலத்தில், மன்னனின் பங்கு ஆறில் ஒன்றாக இருந்தது. அவ்வளவு வேண்டுமென்று நிர்பந்தித்தார்கள். ஆனால் கிடைத்திருக்கும் சொற்பமான தரவுகளைக் கொண்டு பார்த்தால், ஆறில் ஒரு பங்கைக் காட்டிலும் பாதிக்குப் பாதி நிலவரி செலுத்தியது போலுள்ளது.

இஸ்லாமியத் தரவுகள் துல்லியமாக உள்ளன. ஒருபாதி, மூன்றிலொரு பங்கு எப்போதாவது நான்கிலொரு பங்கு என்று நிலையாக வசூலித்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சரிபாதியளவு வசூலிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கைவினைத் தொழில் செய்து, இப்போது கொடுப்பதைவிடப் பாதியளவு நிலக்கூலி கொடுத்து ஒருபாதி மகசூலை முகமதியர் ஆட்சிக்காலத்தில் செலுத்தியபோது இருந்த சுமை, இப்போதிருக்கும் மிதமிஞ்சிய கூலி உயர்வில் தகிக்க முடியாத பாரமாக எடைகூடியுள்ளது.

‘மக்கட்தொகை, பஞ்சம், வறட்சி’ என்ற கட்டுரையில் இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் பற்றித் தெளிவானதொரு சித்திரத்தை வெரா ஆன்ஸ்டி ஏற்படுத்துகிறார். சராசரி பருவங்கள் வாய்த்த 1919-1920ஆம் ஆண்டுகளைத் தன் ஆய்விற்கு உட்படுத்தியுள்ளார்.

ஓர் இந்தியன் ஒரு நாளைக்குச் சராசரியாக உட்கொள்ளும் உணவின் அளவு, வறட்சியான பஞ்ச காலத்தில் நிவாரணமாகப் பரிந்துரைக்கும் அளவினை ஒத்தது என்கிறார். ஆனால் பருவம் பொய்க்கும் காலத்தில், அதுவும் சரிவரப் பங்கிடப்படாமல் ஒருவருக்கு மிகுதியாகவும் ஒருவருக்கும் குறைச்சலாகவும் வாய்த்திருப்பதை வெரா ஆவணப்படுத்துகிறார்.

பருவம் பொய்த்த காலத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. உணவுப் பண்டங்களையும் சரியாக‌ப் பங்கிட்டு வருகின்றனர். எல்லையில் உள்ள சில கிராமங்கள் சரியான அளவில் தன்னிறைவோடு வாழ்கின்றன; செல்வத்தில் கொப்பளிக்கும் சீமான்களும் அங்கு உண்டு. எனவே லக்னோவிற்கு அருகில் நான் கண்ட கிராமத்தைக் காட்டிலும் இந்தியாவின் வேறெந்த கிராமத்து விவசாயிகளும் வறுமையின் மிகக் கொடிய அகோரப் பிடியில் வசிக்க முடியாது.

ஜமீன்தாரி முறை பின்பற்றிக் கொண்டிருக்கும் கிராமங்களின் இயல்பு நிலை இவ்வாறிருக்க, விவசாயிகளே நிலக்கிழாராக இருக்கும் ரயத்துவாரி முறை இதைவிட மேலானதாய் இருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்த்தேன். தெற்கில் ரயத்துவாரி முறை பின்பற்றப்படுவதாக எனக்குச் சொன்னார்கள். ஆனால் நான் அங்குச் சென்றதில்லை.

நான் கேட்டதையும் படித்ததையும் வைத்துப் பார்த்தால், நிலக்கூலி கொடுத்து விவசாயம் செய்பவர்களைக் காட்டிலும் ரயத்துவாரி விவசாயத்தில் பெரிதாக லாபம் இல்லை. ஒரு குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுமளவு போதுமான நிலம் அவர்களிடம் இருப்பதில்லை. ஆகையால் எல்லாவகையிலும் பஞ்சமும் பசியும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன…

கூலி வேலை செய்பவர்களைப் பின்வருமாறு பிரித்துப் பார்க்கலாம்:

  1. சொந்த நிலத்திலோ, வாடகை நிலத்திலோ விவசாயம் செய்பவர்கள் 55%
  2. நிலமில்லாத விவசாயக் கூலிகள், திறன்சாரா தொழிலாளிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் 30%
  3. தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மற்றும் கூலியாட்கள் 10%

முதலிரண்டு வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரம் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் கூலியாட்களும் இன்னும் மோசமான நிலையில் உள்ளனர். ஆகவே இந்தியாவின் 5% நடுத்தர வர்க்கத்தையும் ஆட்சியாளர்களையும் காப்பாற்றுவதற்காக 95% மக்கள் பஞ்சத்தில் வாழ்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

0

லக்னோவிற்குள் நுழையும் போதிருந்த மகிழ்ச்சியைவிட அந்நகரை விட்டு வெளியேறும்போது எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டேன். இந்தியாவின் அடர்ந்த பக்கங்களைப் பார்ப்பதற்கும் அதன் மக்களைப் புரிந்துகொள்வதற்கும், அன்பு செலுத்துவதற்கும் விதிவயத்தால் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *