Skip to content
Home » நான் கண்ட இந்தியா #28 – பனாரஸ் – 1

நான் கண்ட இந்தியா #28 – பனாரஸ் – 1

பனாரஸ் விஜயத்தில் ஓய்வெடுத்துச் சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுத்திருந்தேன். எனது பாதுகாப்புக்காக முஜீப் உடன் வந்திருந்தார். நாங்கள் அங்கு டாக்டர் பகவான் தாஸ் இல்லத்தில் தங்கினோம். அவரால் தில்லியை விட்டு வெளிவர முடியாததால், பனாரஸில் வசிக்கும் தன் பேரக்குழந்தைகளின் சம்மதம் கேட்டு ஒப்புதல் வழங்கினார்.

பகவான் தாஸ்கலாசாரப் பின்னணியில் அமைந்த முழுமையான இந்து குடும்பத்தில் தங்கும் என் துணிகரமான கன்னி முயற்சி இது. டாக்டர் பகவான் தாஸின் குடும்பம் அசல் இந்துக்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுபவர்கள். மனதளவில் நவீனமாக இருந்தாலும், இந்து மதத்தின் அனைத்துவித ஆச்சார அனுஷ்டானங்களையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தார்கள்.

மறுபடியும் என்னை முதன்முதலில் கவர்ந்தது அங்கிருந்த வீடுதான். ஆனால் அதை வீடுகள் என்றுதான் சொல்லவேண்டும். பெரிய தோட்டத்தில் வெவ்வேறு அளவிலான நான்கு தனித்தனி கட்டடங்கள் இருந்தன. அதைச் சுற்றி உயர்ந்த மதில் சுவர். நுழைவாயிலில் படர் தாவரங்கள் நிறைந்திருந்தன. அது விஸ்டீரியாவா? தோட்டம் முழுக்க இருந்தவை வேல மரங்கள் மட்டும்தானா? நுட்பமான தெளிந்த வாசனை வீசும் தோட்டத்து மலர்களின் நிறங்களும் பெயர்களும் என்னவாக இருக்கும்? இவை எதற்கும் எனக்குப் பதில் தெரியாது.

நான் அந்தத் தோட்டத்து வாயிற்கதவைக் கடந்த கணத்தில், என் இளமைப் பிராய தோட்டத்து நினைவுகள் மனத்தில் ஊர்ந்தன.‌ அது உண்மையா, ஞாபக மறதியா என்றெனக்குத் தெரியாது. ஆனால் தோட்டத்தில் இருந்தவை எல்லாம் வேல மரங்களாகவும், படர் தாவரங்கள் எல்லாம் விஸ்டீரியாவாகவும், பூக்களின் நிறமெல்லாம் பெஷிக்டாஷில் கண்ட என் பாட்டி வீட்டுத் தோட்டத்துப் பூக்களை ஞாபகப்படுத்தின.

கட்டடத்தின் முன்பாக இரண்டு மார்பிள் சிங்கங்கள் தன் பின்னங் கால்களை மடங்கி அமர்ந்திருந்தன. அதன் அபத்தமான சிரிப்புக்குள், அகலமாகப் பிளந்த வாயிலிருந்து நீரூற்று கிளம்பியது.

மத்தியில் இருந்த வீடு, டாக்டர் பகவான் தாஸின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் இடப்புறத்தில் இருந்த வீட்டில் அவரின் மகனும் பேத்தியும் வசித்து வந்தனர். பின்னாலிருந்த இரண்டு வீடுகளின் சாளரங்களையும் செடி கொடிகள் படர்ந்து மறைத்திருந்தன. அதிலொரு வீட்டை முஜீப் தங்குவதற்கு ஒதுக்கினார்கள். பகவான் தாஸின் நடு வீட்டில் யாருமில்லாத காரணத்தால், நான் அங்குத் தங்கிக்கொண்டேன். அந்த வீட்டில் சிறிய படுக்கையறை இருந்தது‌. ஒருபுறம் கதவிலிருந்து வராண்டாவிற்கான வழி செல்கிறது, மறுபுறம் கழிவறைக்கான நடைபாதை.

வீட்டின் சுகாதாரத்தைக் குறிப்பிடுகையில் ‘மரப்பலகையில் தேனை ஊற்றி நக்கலாம்’ என்று எங்கள் நாட்டில் சொல்வார்கள். அழுத்தித் தேய்த்து சுத்தமாகப் பளபளக்கும் அந்த அறையின் மூலை முடுக்குகளிலும், மண் தரையிலும், தரை விரிப்புகளிலும் நீங்கள் தேனை ஊற்றிச் சுவைக்காமல் இருக்க முடியாது. அந்த அளவு சுத்தம்.

எனது இளம் பிராய நினைவுகளை மீளவொரு முறை ஆழமாக உசுப்பிவிடுவதுபோல் அந்தச் சுழல் என்னை நிர்பந்தித்தது. கண்ணை மூடிக்கொண்டு அலமாரியில் உள்ள செம்புப் பாத்திரத்தைத் தடவிக் கொடுக்கும்போது, என் பாட்டி வீட்டிலிருந்த செம்புக் குவளையைத் தொட்டுப் பார்த்த திருப்தி ஏற்பட்டது.

லக்னோவில் இருந்து திரும்பும்போது, அங்கு ரசித்த கண்ணுக்கு அழகான பேகம்களைத் தவிர்த்து வேறெதுவும் நினைவுறுத்த வேண்டாம் என்று நான் விரும்பியதுபோல், இங்கிருந்து செல்லும்போது மனத்திற்கு நெருக்கமான இந்தச் சூழலை மட்டும் ஞாபகத்தில் கொண்டால் போதுமெனத் தோன்றியது.

மனிதர்களையும் அவர்கள் வாழ்வையும் தாங்கள் வசிக்கும் வீட்டிலிருந்து பிரிக்கமுடியாது என்றாலும், அவை வெறும் பின்னணி மட்டுந்தான். இந்திய வீடுகளில் ஆச்சரியமூட்டும் பல விஷயங்கள் உள்ளன. மனிதர்கள், விழாக்கள், சிந்தனைகள் என்று அதில் எது முக்கியமானது என உத்தேசித்து வாசகர்களுக்கு தெளிவுபட சொல்வது அவ்வளவு எளிதான வேலை அல்ல.

உடையிலும் பாவனையிலும் டாக்டர் பகவான் தாஸின் மகனைப் பார்ப்பதற்கு பூலாபாய் தேசாயின் அடர் வடிவமாகத் தெரிந்தார். சற்றே அந்நியமாக, பூலாபாயின் அதே குரலும் எளிமையும் இவரிடம் இருந்தது. தனது அறிவுப்பூர்வமான தந்தையின் தத்துவார்த்த முதுமையின் மேல் எவ்விதப் பாசாங்கும் இன்றி நேர்மையான அன்பு கொண்டிருந்தார்.

அவருடைய உள்ளார்ந்த அமைதியும் தங்குத் தடையற்ற பாசமும் சுற்றியுள்ளவர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்றால் மிகையாகாது. நாற்பது வயது மதிக்கத்தக்க இந்த மனிதர் இன்னும் தன் தந்தையின் சொல்பேச்சுக்கு அடங்கிச் செல்லும் சிறுபிள்ளையாகவே இருந்தார். தன் குழந்தைகளையும் அப்படியே வளர்த்தார்.

நடு வீட்டின் முகப்பில் இருந்த தாராளமான அறையிலிருந்து நடந்து சென்றால், குளமும் சிங்கங்களும் கூடிய தளத்தை அடையலாம். கதவின் ஓரமாய் சாளரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டால், இயற்கையான காற்றை சுவாசித்துக் கொண்டே பரிச்சயமான தோட்டத்தை வேடிக்கைப் பார்க்க முடியும்.

அறைகலன்கள் எல்லாம் உள்ளூர் பாணியில் அமைக்கப்பட்டிருந்தன. சிக்கனத்தோடு கூடிய அழகு. முதுகில்லாத நீண்ட இருக்கையும், அலமாரியில் கிடந்த பகவான் தாஸின் புத்தகங்களும், சுவற்றில் இருந்த அன்னி பெசண்ட்டின் உருவப்படமும் மேலும் பொலிவூட்டின. அன்னி பெசண்டின் உருவப்படம் என்னை அசௌகரியப்படுத்தியது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்து மதத்தின் சீர்திருத்த பணிகளும், அதன் சேவைகளும் ஏதோவொரு வகையில் அவரின் ஆளுமையோடு தொடர்பு கொண்டிருந்தது. நான் அந்த வீட்டிலிருந்தது எவ்வித மாற்றுச் சிந்தனைக்காகவும் அல்ல. பரிபூரண அமைதியும் நிம்மதியும் வேண்டித்தான் அங்குச் சென்றேன்.

ஆனால் அதைக் காரணம்காட்டி, அன்னி பெசண்ட் மீதுள்ள போற்றுதலையும் மரியாதையையும் ஓரங்கட்ட முடியாது. மனிதப் பிறவிகளில் அவர் ஒரு புயலாகத் தோன்றினார். அன்னி பெசண்ட்டுக்கு எத்தனை முகங்கள்! தத்துவார்த்த, அறிவார்ந்த, அரசியல், மர்மம் நிறைந்த பெண்மணி.

சீர்த்திருத்த நாட்களின் இளமைக் காலத்தில் தன் வியத்தகு செயல்களால் எல்லோரையும் பிரமிக்க வைத்தார். தன் ஆளுமையைப் பதிவு செய்தார். இந்துக்களின் அனைத்துச் செயல்களுக்கும் கூடவே நின்றார். அவை எத்தனை விசித்திரமாக, பகுத்தறிவற்ற செயலாக இருந்தாலும் அவருக்குப் பரவாயில்லை.

மேற்கத்திய கலாசாரத்தால் அழிந்துவரும் இந்து மதப் பழக்க வழக்கங்களின் பண்டைய சின்னங்களை சுட்டிக்காட்டி புதுப்பிக்க, அவர் எப்போதும் அங்கு வீற்றிருந்தார். ‘எங்கள் நாகரிகத்தின் மீதும் மக்கட் கூட்டத்தின் மீதும் நம்பிக்கை ஊட்டியவர்’ என்று சில இந்துக்கள் நினைவு கூர்வார்கள். ‘அவர் எங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருந்தவர். மக்கள் மனத்தை பெருமிதத்தால் நிறைத்து, அபத்தமான தடைகளையும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கடந்துவர முடியாமல் அங்கியே நிற்கும்படி செய்தவர்’ என்று வேறு சிலர் சொல்வார்கள்.

0

தோட்டத்தில் ஒரே குழப்பமாக இருந்தது. பாபு சிவ பிரசாத் என்னைப் பார்த்து போக வந்திருப்பதாக முஜீப் வந்து சொன்னார். சிறையில் இருந்தபோது அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அப்போதிருந்தே அவரால் சரிவர நடக்க முடியாது.

நான் எழுந்து பார்த்தபோது, பல்லக்கை ஏந்தி வந்த இரண்டு பேர், தரையில் இறக்கி வைத்து நகர்ந்தார்கள். அதிலிருந்து திடகாத்திரமான மனிதர் ஒருவர் இரண்டு குச்சிகளை ஊன்றிக்கொண்டு வெளியே வந்தார். சிங்கம் போன்ற முகம்; நீண்டு வளர்ந்த வெள்ளைத் தாடி. பார்ப்பதற்கு பழங்கால ரட்சகர் போலத் தெரிந்தார்.

தாராள மனம், வலிமையான உடல், சகிப்புத்தன்மை தாங்கிய சரீரம். ஆனால் அவரை முதல் தடவை பார்க்கும் ஒருவர், வேறெதுவும் பார்க்க முடியாமல் அவரின் கண்களால் மயங்கிப் போய்விடுவார். அடர் நிறம், குழந்தை போன்ற குதூகலம் நிறைந்த கண்ணியமான மனிதர்.

பாபு சிவ பிரசாத் ஒரு கோடீஸ்வரர் என்றெனக்குச் சொல்லியிருந்தார்கள். ஆனால் உடையிலும் நடத்தையிலும் அவர் ஓர் ஏழை இந்தியராக வாழ்ந்தார். பழங்கால கல்வி நிறுவனங்களைச் செப்பனிடுவதற்கும், புதிய நிறுவனங்களை நிர்மாணிப்பதற்கும் தன் பணத்தை விரயம் செய்தார். இதற்காகத் தன் பிரம்மாண்ட வீடுகளையும் விட்டுக் கொடுத்தார்.

மக்களுக்கான அறக்கட்டளைச் சொத்துபோல் தன் ஆஸ்தியைச் செலவு செய்தார். அவரின் உடைமை எல்லாம் மக்களுக்கும் அவருக்கும் பொதுவானவை. நடக்குமென்று நம்பமுடியாதவற்றை நிறைவேற்றிக் காட்டுவதில் வல்லவர். ஜூல்ஸ் வெர்ன் தனது ஓய்வுகாலத்தில் விமானங்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் கனவு கண்டது போல, பாபு சிவ பிரசாத் ஒன்றிணைந்த பிரம்மாண்ட இந்தியாவை கனவு கண்டார்.

இவையெல்லாம் மாயாஜால எதார்த்தமாக இருந்தாலும், ஜூல்ஸ் வெர்னின் கற்பனைகள் உண்மையானதுபோல் இவையும் உண்மையாகாது என்பதற்கு என்ன சாத்தியம் இருக்கிறது? ஒற்றைத் தெய்வத்தின் கற்பனை ஆற்றலால்தானே ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உருவானது? மனித ஆற்றலின் கற்பனையால்தானே பூமியில் நிலையில்லாத மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன?

பாபு சிவ பிரசாத்தால் ஒருங்கிணைந்த இந்தியாவை எவ்வாறு உருவாக்க முடியும்? விடுதலைக்கு ஒரே தடையாக இருப்பது, மக்களிடம் உள்ள பிரிவினைதான். இந்தப் பிரிவினைக்குக் காரணம் மத வேறுபாடின்றி வேறல்ல என்று அவர் நம்பினார். குழந்தைபோன்ற எதார்த்தத்தாலும், நேரடி செயல்முறைகளாலும் இந்தக் குறைகளை நீக்க முயன்றார். ஆனால் எப்படி?

மதத்தால் பிரிவினை உண்டாகுமென்றால், அதே மதத்தை வைத்து ஒற்றுமை உண்டாக்கப் பாடுபட்டார். ஆகவே பனாரஸில் ஓர் ஆலயம் அமைக்க முயன்றார். அதில் கடவுளர் உருவங்களே கிடையாது. அதற்குப் பதிலாக இந்திய நாட்டின் உருவப்படம் மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டது. மார்பிள் கல்லின் மேல் இந்திய மலைகளும் நதிகளும் குளங்களும் நகரங்களும் செதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

எனது பயணத்தின்போதுதான் அக்கோயிலின் திருப்பணி நடந்துகொண்டிருந்தது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த ஓவியர்களும் கலைஞர்களும் தங்கள் புதிய கடவுளின் திருவுருவத்தை மார்பிள் கல்லில் செதுக்கிக் கொண்டிருந்தனர். தினந்தோறும் நான்மறைகள் ஓதப்பட்டன. பொது வழிபாட்டிற்காகச் செயல்முறைக்கு வருமுன் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், யூதர்கள் என்று சகலரும் தங்கள் வேத நூலை வாசித்து இறைவன் உருவத்தை பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முயற்சியின் மதிப்பை உண்மையானது, தனித்துவமானது என்று மதிப்பிட முடியாது. ஏனெனில் இது தனித்துவமானது அல்ல. மேற்கத்தியர்களுக்கு இது கிழக்கின் நில வழிபாடு போலவும், புவியியல் தேசியவாத மதக் கட்டமைப்பின் குறியீடு போலவும் தோன்றும்.

புவியியல் குறியீட்டை இனவியல் குறியீட்டிலிருந்து நான் வேறுபடுத்திப் பார்க்கிறேன். அதற்குமொரு மர்மமான முக்கியத்துவம் உண்டு. ஆனால் பாபு சிவ பிரசாத்தின் புவியியல் தேசியவாதத்தை மதிப்பீடு செய்பவர்கள், இனவியல் தேசியவாதத்தைக் காட்டிலும் இது மேலானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இனவியல் தேசியவாதம் என்பது தனது சொந்த நாட்டையே கூறுபோட்டுப் பிரித்து, நிறமும் நிணமும் வெவ்வேறு நிறத்திலானவை என்று கூறி மாறுபட்டவரின் தொண்டையைக் கடித்துக் குதறும் மிருகத்தனமான செயல்முறை. பாபு சிவ பிரசாத்தின் நூதன வகை தேசியவாதத்தில், தாய் நாட்டின் மீது அன்பு கொண்டவர் யாராக இருந்தாலும், எந்நிறத்தில் இருந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்திருந்தாலும் அவருக்கு அங்கு வாழும் உரிமை உண்டு.

இந்தியாவின் வரலாற்றைப் படிப்பவர்கள் வேறெங்கோ கவனம் செலுத்துகிறார்கள். இது நாம் திரும்பத் திரும்ப அசைபோட்டுக் கொண்டிருக்கும் ஒரு பழைய திட்டம். இந்திய வரலாறு நெடுக ஏக்கத்தோடு காத்துக்கொண்டிருக்கும் தேடல்.

இந்தியாவின் மேற்பரப்பில் பல்வகைப்பட்ட மனிதர்களாய் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள். ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் அதன் அடியாழத்தில் ஒற்றுமைக்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏக்கத்தின் வெளிப்பாட்டை வரலாறு நெடுகிலும் எங்காவது ஒரு மூலையில் அரசியல் – சமூகச் செயல்பாட்டின்வழி எப்படியாவது வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்தியாவின் தலைசிறந்த முஸ்லிம் மன்னர்களுள் ஒருவர் அக்பர். அவரின் வழிபாட்டுக் கூடத்தில் அனைத்துச் சமூகத்தினரும் ஒரே கடவுளை ஒருங்கிணைந்து வழிபட்டதற்கான தடயங்கள் உள்ளன. கடவுளை உருவமற்றவராக அக்பர் முன்னிறுத்தினார். தானொரு முஸ்லிமாக வளர்த்தெடுக்கப் பட்டிருந்தாலும், அதற்குத் துரோகம் செய்து கட்சி மாறியதுபோல் இது தோன்றலாம்.

குறியீடுகளால் அடையாளம் காட்டமுடியாத கடவுளின் மேல் நம்பிக்கைக் கொண்டு, ஓரிறை வழிபாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். மதத்தைக் கைவிட நேரினும், எந்தவொரு முஸ்லிமாலும் இறைவனைப் பார்க்க முடியாது. ஆகவே இந்தியர்கள் அனைவரும் கண்ணுக்குப் புலப்படாத இறைவனை வழிபட வேண்டும். அவர்தான் அனைத்துச் சமூக மக்களையும் ஒன்றிணைக்கும் சங்கிலி.

ஆனால் அக்பர் தோற்றுப் போனார். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றைப் பற்றி இங்குப் பேசவேண்டாம். ஆனால் அதே திட்டம் நவீன காலத்தில் உதித்தது. இஸ்லாமியக் கவிஞர் முகமது இக்பால், தனது கவிதைகள் மூலம் மதம் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை வெளிக்கொண்டு வந்தார். பாபு சிவ பிரசாத்தின் திட்டங்களை முகமது இக்பாலின் ‘நியூ டெம்பிள்’ என்ற கவிதையின்மூலம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

ஆகவே பாபு சிவ பிரசாத்தின் ‘புதிய கோவில்’ கவிஞரின் மனத்தில் பதியமிட்ட கருத்துதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தானொரு இந்துவாக இருப்பதால், அப்பட்டமான ஒரு தெய்வத்தை முன்னிறுத்த வேண்டி பாபு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். அப்படித்தான் மர்மம் நிறைந்த மதம் சார்ந்த அரசியல் இயக்கத்தின்மூலம் நாம் இன்றைக்கு நேருக்கு நேர் எதிர்பட்டு நிற்கிறோம்.

நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும்போது, 1936ஆம் ஆண்டின் அக்டோபர் 31ஆம் தேதியிட்ட அரிஜன் இதழின் பிரதியொன்று என் கண்முன் இருக்கிறது. பாபு சிவ பிரசாத்தின் ‘புதிய கோவில்’ திறப்புவிழா பற்றியும் அனைத்து மத வழிபாட்டில் புதிய கடவுளின் வருகைப் பற்றியும் ஒரு கட்டுரை அதில் பிரசுரமாகியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை கடவுள் எவ்வித சம்பிரதாயங்களையும் எதிர்பார்பவர் அல்ல. அவருக்கென்று நில எல்லையும், குறியீடுகளும் கிடையாது. அவருக்குள் எல்லாம் இருந்தாலும், அவர் எதுவாகவும் இருப்பதில்லை. ஆனால் பாபு சிவ பிரசாத்தின் சந்தேகமற்ற நேர்மையும், நம்பிக்கையும், அன்பும் என்னைப் பலமாகத் தாக்கியது என்று நான் உறுதியாக ஒப்புக்கொள்ள வேண்டும். டாக்டர் பகவான் தாஸின் அறையில் கிடைத்த அதே அனுபவம்‌.

பனாரஸ் வீதியில் நூற்றுக்கணக்கான ஆலயங்களும், ஆயிரக்கணக்கான கடவுள்களும் வீற்றிருந்தால்கூட தன் நாட்டைச் சார்ந்த வேறொரு சமூகத்து இளைஞனால் உள்ளே நுழைந்து வேண்டுதல் வைக்க முடியாத பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு மத்தியில், அனைத்துச் சமூகத்தினரும் ஒன்றுசேர்ந்து மண்டியிட்டு பிரார்த்தனை செய்ய இப்போது ஓர் ஆலயம் கிடைத்திருக்கிறது.

தேசியவாதமோ பிற நம்பிக்கையோ, எவ்வித தத்துவத்திற்கும் ஆட்படாது அப்பழுக்கின்றிப் போற்றும் மகாத்மா காந்தியின் வீட்டிற்கு வெளியில் பேசும் வசனங்கள் இதைக்காட்டிலும் மேலானவை. பிற கொள்கையின் நிழல்கூட விழாதபடி, வழிபடுபவர்களைப் படைத்தவனோடு நேரடியாக உரையாடச் செய்யும் பண்டிதரின் மகிமையை என்னவென்று சொல்வது!

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *